141 புனித பெரிய அந்தோணியார் திருத்தலம், கிழக்கு மாரம்பாடி


புனித பெரிய அந்தோணியார் திருத்தலம்

இடம் : கிழக்கு மாரம்பாடி

மாவட்டம் : திண்டுக்கல்
மறை மாவட்டம் : திண்டுக்கல்

திருத்தந்தை : பிரான்சிஸ்
ஆயர் : மேதகு P. தாமஸ் பால்சாமி
பங்குத்தந்தை : அருட்பணி அருள் ஜெயசீலன்.

நிலை : திருத்தலம்

கிளைகள் :
1.கனக்கப்பிள்ளையூர்
2. பெரிய குளத்துப்பட்டி கிழக்கு
3. அந்தோணியார்புரம்
4. தோப்பூர்
5. கோட்டமந்தை
6. சவரியார் பட்டி
7. நல்லமனார் கோட்டை
8. சின்னழகன்பட்டி
9. காமனம்பட்டி
10. சரளைமேடு.

குடும்பங்கள் : 600

ஞாயிறு திருப்பலி : காலை 08.00 மணிக்கு
செவ்வாய்கிழமை இரவு 07.00 மணிக்கு நவநாள் திருப்பலி
மற்ற நாட்களில் தினமும் இரவு 07.00 மணிக்கு திருப்பலி.

திருவிழா : ஜனவரி 16,17,18 ஆகிய மூன்று நாட்கள்.

கிழக்கு மாரம்பாடி தலத்திருச்சபை வரலாறு :

பொன்னி நதியாம் காவிரியாற்றின் வளமான வயல்வெளிகளில் தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்த இம் மக்கள் வீரமாமுனிவரால் மணப்பாறை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளுக்கு சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் அழைத்து வரப்பட்டனர்.

குதிரை வீரர்களாக இருந்த இம்மக்கள், குதிரைகள் தங்கும் இடமான பட்டி (லாயம்) என்ற புனைப்பெயரை தம் ஊர்களின் பின்னொட்டு பெயர்களாக சேர்த்து அழைக்கலாயினர். எனவே தான் கல்பாளையத்தான்பட்டி, புதுப்பட்டி, கொசவப்பட்டி, பஞ்சம்பட்டி என்ற ஊர் பெயர்கள் வழக்கத்தில் உள்ளது. திண்டுக்கல் சுற்றுவட்டாரத்தில் தங்கிய இம்மக்கள், தாமரைப்பாடி, முள்ளிப்பாடியிலும் தங்கி ஆங்கிலேயர் காலத்தில் வரி வசூல் செய்யும் பணியைச் (கர்ணம், முனுசீப்) செய்து வந்தனர். தங்கள் பணியின் நிமித்தமாக கோட்டைமாரம்பாடி, வேடசந்தூர் பகுதிகள் வழியாக கரூர் வரை சென்று வந்துள்ளனர்.

கோட்டைமாரம்பாடி பகுதி ஆற்றங்கரை ஓரமான கரைகளில் தவச தானியங்கள் (தவசம் - புல்கள் மூலம் கிடைக்கும் தானிய வகைகள்) விளையும் வளமான இடமாக இருந்துள்ளது. முள்ளிப்பாடியிலிருந்து வந்த மக்கள் ஏற்கனவே கிறிஸ்தவர்களாக மாறியிருந்தனர். இவர்களில் சாமிமுத்து (மூத்த அண்ணன்), சின்னமுத்து (நடுவில் பிறந்தவர்), மதலைமுத்து (கடைசியாகப் பிறந்தவர்) மற்றும் ஒரு சகோதரி ஆகிய நான்கு பேர் கோட்டைமாரம்பாடிக்கு வந்தனர்.

அண்ணன் சாமிமுத்து தங்கிய இடம் சாமிமுத்தன்பட்டி (தற்போதைய கிழக்கு மாரம்பாடி) என்றும், தம்பி சின்னமுத்து தங்கிய இடம் சின்னமுத்தன்பட்டி (மாரம்பாடி) என்றும், மதலைமுத்து எருமை வியாபாரத்திற்காக சென்று தங்கிய இடம் கேரளா பாலக்காடு பகுதியில் உள்ள எருமை நாயக்கன் பாளையம் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

சாமிமுத்தன்பட்டியில் மாமுனிவர் புனித பெரிய அந்தோணியாருக்கு அழகிய பீடங்களுடன் கூடிய ஆலயம் அமைத்து இறைவழிபாடு நடத்தி வந்துள்ளார்கள். அப்போது 25 குடும்பங்களும் 105 கிறிஸ்தவ மக்களும் வசித்து வந்தனர்.

முன்னோர்கள் கட்டிய ஆலயம் பழுதடைந்த நிலையில் இருந்ததால், ஆலயத்தை கட்டிக் கொடுக்கும்படி திண்டுக்கல் மறை மாவட்டத்தின் ஆயர் மேதகு அந்தோணி பாப்புசாமி அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆயர் அவர்களின் அனுமதியின்படி 2009 ம் ஆண்டு பழைய ஆலயத்தை இடித்து புதிய ஆலயம் கட்ட அனுமதி அளித்தார்கள். 05-02-2010 அன்று பொங்கல் வைத்து, நன்றி திருப்பலி நிறைவேற்றி பழைய ஆலயத்திற்கு விடை கொடுத்தனர். ஊர் பெரியதனக்காரர்கள் ஊர்மக்கள் அனைவரும் இணைந்து ஆலயக்கட்டுமானப் பணிகளுக்காக பல்வேறு குழுக்கள் அமைத்து நன்கொடைகள் சேகரித்து 07-02-2010 அன்று ஆலய கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டது.

ஆலய பீடத்தின் அடிப்பகுதியில் தாங்கள் விளைவித்த கருஞ்சோளம், சாமை, கேழ்வரகு, குதிரைவாலி, திணை போன்ற தானியங்கள் முன்னோர்களால் வைக்கப்பட்டிருந்தது. 05-02-2010 அன்று பழைய ஆலயம் இடித்து கட்ட முயன்ற போது மேற்சொன்ன தவசங்கள் கண்டுபிடிக்கப் பட்டு மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டு புதிய ஆலயம் கட்டப்பட்டது.

11-07-2010 ஞாயிறன்று மேற்கூரை கான்கிரீட் அமைக்கப்பட்டது. 28-12-2010 அன்று திண்டுக்கல் மறை மாவட்டம் உதயமான (28-12-2003 ல்) அதே நாளில், திண்டுக்கல் மறை மாவட்ட முதல் ஆயர் மேதகு அந்தோணி பாப்புசாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

06-05-2012 அன்று புதிய ஆலயப் பணிகள் முழுமையாக நிறைவுபெற்று ஆயர் மேதகு அந்தோணி பாப்புசாமி அவர்களால் திறப்புவிழா காணப் பட்டது. பேரருட்பணி ஜெயராஜ் அவர்கள் மாரம்பாடியின் பங்குத்தந்தையாகவும், மறை வட்ட அதிபராகவும் அப்போது இருந்தார்கள்.

சாமிமுத்தன்பட்டி (கிழக்கு மாரம்பாடி), மாரம்பாடியிலிருந்து பிரிந்து தனிப்பங்காக இயங்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை திண்டுக்கல் மறை மாவட்டம் ஏற்றுக்கொண்டது. அதன் அடிப்படையில் குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின் பேரருட்பணி ஜோசப் செல்வராஜ் அவர்களுடைய பணிக்கால கட்டத்தில் 07-06-2017 புதன்கிழமையன்று திண்டுக்கல் மறை மாவட்டத்தின் 50 வது பங்காக சாமிமுத்தன்பட்டி என்று அழைக்கப்பட்ட இந்த கிராமம் கிழக்கு மாரம்பாடி என்ற பெயரில் புனித பெரிய அந்தோணியார் ஐ பாதுகாவலராகக் கொண்டு புதிய பங்காக உதயமானது. கிழக்கு மாரம்பாடி பங்கின் முதல் பங்குத்தந்தையாக அருட்பணி அருள் ஜெயசீலன் அவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

இந்த புதிய ஆலயமும் புதிய பங்கும் உதயமாவதற்கு அயராது பாடுபட்டு உழைத்த அந்நாள் மற்றும் இந்நாள் ஊர் பெரியதனக்காரர்கள், ஊர்மக்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், குழந்தைகள் மற்றும் நல்மனம் கொண்ட நன்கொடையாளர்கள் அனைவரையும் கிழக்கு மாரம்பாடி தலத்திருச்சபை நன்றியுடன் நினைவு கூருகின்றது.

தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி அருள் ஜெயசீலன் அவர்கள், பங்கின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார்கள். ஆரம்ப பள்ளி துவக்கப் பட்டு குழந்தைகள் ஆங்கில மொழி அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ள, ஓய்வு பெற்ற ஆங்கில பேராசிரியர்களை பணியில் அமர்த்தி சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். மேலும் பங்குப்பணியாளர் இல்லமானது பங்குத்தந்தை அருள் ஜெயசீலன் அவர்கள் முயற்சியால் பல இடங்களில் இருந்தும் நன்கொடைகள் திரட்டப் பட்டு விரைவாக நடந்து வருகின்றன.

இவ்வாலய திருவிழாவின் போது மக்கள் அங்கப் பிரதட்சணம் என்ற உருள்நேர்ச்சைக் கடனை செலுத்துவது மற்ற ஆலயங்களில் இல்லாத தனிச்சிறப்பு. மேலும் ஆலயத் திருவிழாவின் போது நடத்தப்படுகின்ற தேர் பவனியில் பல ஊர்களில் இருந்தும் திரளாக மக்கள் கலந்து கொள்வார்கள். இவர்களுக்கு வேண்டிய வசதிகள் அனைத்தும் பங்கு மக்களால் சிறப்பாக செய்யப் படுகின்றது.

வருகின்ற 2019 ம் ஆண்டு திருவிழாவில் பயன்படுத்துவதற்காக பல்வேறு மரத்தாலான மிகப்பெரிய அழகிய தேர் அமைக்கும் பணிகள் பங்கு மக்களின் மிகுந்த ஒத்துழைப்புடன் விரைவாக நடந்து வருகின்றது. . விவசாயத்தை முக்கிய தொழிலாகக் கொண்ட கிழக்கு மாரம்பாடி மக்கள் திருவிழாவின் 2வது நாளை தங்கள் கால்நடைகள் விழாவாகக் கொண்டாடுவது தனிச் சிறப்பு வாய்ந்த செயல் ஆகும்.

(ஆலய வரலாறு, பங்கின் குடும்பக் கையேடு புத்தகத்திலிருந்து எடுக்கப் பட்டு பதிவு செய்துள்ளோம். இதற்கு உதவி செய்த பங்குத்தந்தை அருட்பணி அருள் ஜெயசீலன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..