994 புனித ஜெபமாலை அன்னை ஆலயம், மேலப்பெருவிளை

     

புனித ஜெபமாலை அன்னை ஆலயம்

இடம்: மேலப்பெருவிளை, ஆசாரிபள்ளம் அஞ்சல்

மாவட்டம்: கன்னியாகுமரி

மறைமாவட்டம்: கோட்டார்

மறைவட்டம்: கோட்டார்

நிலை: பங்குத்தளம்

பங்குத்தந்தை அருள்பணி. K. மரிய தாஸ் 

குடும்பங்கள்: 400

ஞாயிறு திருப்பலி காலை 06:00 மணி

நாள்தோறும் காலை 06:00 மணி திருப்பலி

திங்கள், புதன், வெள்ளி திருப்பலி மாலை 06:00 மணி 

திருவிழா: அக்டோபர் மாதம் 07-ம் தேதியை மையமாகக் கொண்டு 10 நாட்கள் 

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. ஜேம்ஸ்

2. அருட்சகோதரி. ஜெர்த்ரூத் மேரி

3. அருட்சகோதரி. ரோஸ்மேரி

வழித்தடம்: நாகர்கோவில் -ஆசாரிபள்ளம் -மேலப்பெருவிளை

Location map:  Melaperuvilai Church of Our Lady of Rosary

https://maps.app.goo.gl/ngZMPXEv62WdKoWc6

வரலாறு:

அக்கம் பக்கம் ஊர்களில் ஆலயம் இல்லாத காலக்கட்டத்தில், பெருவிளை ஆலயத்தில் இறைமக்கள் பெருவாரியாகக் கூடி, திருவிழாக்களை பெருவிழாக்களாகக் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

மறைசாட்சி புனித தேவசகாயம், பட்ட வேப்பமரத்தில் கட்டி அடிக்கப்பட்ட அந்த கீழபெருவிளைக்கு மேற்கே, இந்த பெருவிளை அமைந்துள்ளதால் காலப்போக்கில் மேலப்பெருவிளை என்பது இதனுடைய காரணப் பெயர் ஆயிற்று. பங்கின் பாதுகாவலி செபமாலை அன்னையைத் தேடி, பல இடங்களில் இருந்து மக்கள் வந்து வழிபாடு செலுத்தி நோய்களிலிருந்து விடுபட்டும், இறையாசீரும் பெற்றுச்

செல்கிறார்கள்.

அதன் காரணமாக நேர்ச்சைகளும், காணிக்கைகளும் செலுத்துகின்றனர். மேலப்பெருவிளையின் சிறப்பு என்னவென்றால், ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரியிலிருந்து சுமார் - 1 கிமீ தூரத்தில் வட மேற்கு திசையில் அமைந்திருப்பதாகும்.

அன்னை ரோசாரி:

பதினெட்டாம் நூற்றாண்டில் ஊரின் மையப்பகுதியில் ரோசாரி மாதா பெயரில் சிற்றாலயம் ஒன்று அமைக்கப்பட்டது. அந்த இடத்தில் தான் பழைய கல்லறைத் தோட்டம் இருந்தது. அன்னை ரோசாரி அந்த ஆலயத்தில் ஜாதி மதங்களைக் கடந்து, ஊர் மக்கள் அனைவருக்கும் அருள் வழங்குகிற பாதுகாவலியானாள். ரோசாரி என்ற சொல்லுக்கு ஜெபமாலை என்று பொருள். எனவேதான் அழகு தமிழில் மாதாவை செபமாலை மாதா என்று நாம் அழைத்து வருகின்றோம். இன்று காணப்படுகின்ற ஆலயம் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் சிற்றாலயம் இருந்த அதே இடத்தில் கட்டப்பட்டதாகும்.

ஆலய முகப்புப் பணிகள் 04.06.1941 அன்று துவக்கப்பட்டு, 10.10.1941 அன்று நிறைவு பெற்றது.

1990 ஆம் ஆண்டு மேலப்பெருவிளை தனிப் பங்காக உயர்த்தப்பட்டது. 

பெருவிளையின் கிளைப் பங்காக  இருந்த பல பங்குகள், தற்பொழுது தனிப் பங்குகளாக செயல்பட்டு வருகிறது.

சலேட் மாதா கெபி:

கல்வியிலும், பொருளாதாரத்திலும் மக்கள் பின் தங்கியிருந்த அந்த காலக்கட்டத்தில், வறுமையின் எல்லை வானளாவிக் கொண்டிருந்தது. மருத்துவம் என்பது ஏழை எளிய மக்களுக்கு எட்டாத கனியாக அன்று இருந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னால் காலரா, வைசூரி, வாந்திபேதி போன்ற கொடிய நோய்களுக்கு மேலப்பெருவிளை ஊரில் பலியானவர்கள் பலர். அபயக்குரல்கள் பலவும் அன்னை சலேட் மாதா பெயரில் என்ற கட்டளை பலருடைய கனவில் வந்தது. அன்னையிடமிருந்து பிறப்பிக்கப்பட்ட ஆலய வளாகத்தின் தென் மேற்கு மூலையில் கட்டப்பட்டது தான் சலேட்மாதா கெபி. குண்டுவன் பாறை என்ற இடத்திலிருந்து குண்டுக்கற்களை தலைமேல் சுமந்து வந்து, கூலி வாங்காமல் அன்று வாழ்ந்த ஆன்றோர் அந்தக் கெபியை கட்டினார்கள். ஊர் மக்களை உலுக்கிப் போட்ட அந்த கொடிய நோய்களானது, அந்த கெபி கட்டப்பட்ட பின்னர் முற்றிலும் அடங்கிப்போயிற்று.

ஜாதி மத பாகுபாடுடன் இல்லாமல், உள்ளூர் மக்களும் வெளியூர் மக்களும் இங்கே வந்து ஜெபிப்பதால், மத நல்லிணக்கத்தின் நாயகியாக திகளுகின்ற இந்த சலேட் அன்னை செய்து வருகின்ற அற்புதங்கள்

ஏராளம் ஏராளம்.

மனதுருகி வேண்டுகின்ற மக்களுக்கு வேண்டும் வரம் வேண்டிய நேரத்தில் கிடைக்கிறது. திருமணம், குழந்தைப்பேறு, வேலைவாய்ப்பு, நோய் நொடிகளிலிருந்தும், தீய ஆவியின் தொல்லைகளிலிருந்தும் விடுதலை போன்ற வேண்டுதல்கள் மிக விரைவில் நிறைவேறுகின்றன. குடும்ப சமாதானம், அன்பு உறவு, அமைதியான வாழ்வு என அன்னையின் அருளால் அன்றாடம் நடந்தேறுகின்ற அற்புதங்களை சொல்லில் அடங்காது.

மாதத்தின் ஒவ்வொரு 19-ம் தேதியும் சலேட் அன்னை காட்சி கொடுத்த நாளாக கொண்டாடப்பட்டு, மாலை 6.00 மணிக்கு ஜெபமாலையும், ஒப்புரவு அருட்சாதனமும் 7.00 மணிக்கு நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து சிற்றுண்டியும் வழங்கப்படுகிறது.

திருஇருதய நாதர் பொத்தை குருசடி:

மேலப்பெருவிளையின் மேற்கு எல்லைக் கோட்டை உறுதிப்படுத்திக் கொண்டுள்ள இந்த பொத்தை, ஒரு அழகான சிறிய மலைக்குன்று.

மேலப்பெருவிளை மாதாக்கோயில் வகை என்று ஆன்றோரால் ஆவணப் படுத்தப்பட்டுள்ள இந்தக் குன்றும், அதன் நாற்புற சமதள பகுதிகளும் சேர்ந்து, சுமார் எட்டு ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடம், மருத நிலப்பாங்கை மாற்றமின்றி பிரதிபலித்த வண்ணம் உள்ளது.

நற்கனி தரும் மரங்களும், குளம் குட்டைகளும், பயிர் பச்சைகளும் புடைசூழ வந்து திருஇருதய நாதருக்கு பொத்தை ஒன்றை மெத்தையாக்கியுள்ளதோ என எண்ணத் தோன்றும் இயற்கை காட்சிகள்!

இந்த பொத்தை குன்றின்மேல் மூதாதையர்கள் திரு இருதய நாதர் பெயரில் எழுப்பியிருந்த குருசடி சேதப்படுத்தப்பட்டும், சிதிலப்பட்டும் போனதை தொடர்ந்து, பங்கு மக்களால் அந்த குருசடி 1978-ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது. இந்தக் குன்றின் உச்சியில் ஏறி குருசடியின் பக்கத்தில் உட்கார்ந்து ஜெபிக்கும் போது, கடவுளின் கட்டளைகளை பெற்றுக்கொள்ள மோயீசன் ஏறிவந்த அந்த சீனாய் மலையும், ஆண்டவர் இயேசு தமது இறைவார்த்தையை வெளிப்படுத்திய அந்த தாபோர் மலையும், அவர் பாடுகள் பட்டு மரித்த அந்த கல்வாரி மலையும், கண்முன் தோன்றி நம்மை நமக்குள் சுய தரிசனப்படுத்திக் கொண்டு ஆத்மாவை சுத்தப் படுத்திக் கொள்ள முடிகிறது என்ற நம்பிக்கையுடம் வருகை தருகின்ற மக்கள் பலர்.

இந்த குன்றின் மேல் உள்ள குருசடியில் எண்ணெய் பூசுவது, பால் ஊற்றுவது, பாதார்த்தங்கள் பரிமாறுவதும் என ஜாதி மதம் பாராமல் ஒவ்வொரு நாளும் மக்கள் அங்கே செய்த வருகின்ற ஆரவாரமற்ற ஆன்மீக நற்செயல்களை பாராட்ட கடமைப்பட்ட நாம், அந்த குருசடிக்கு தேவையான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் விதத்தில் இறைவனை மன்றாடி வேண்டுவோம்.

பங்கின் சபைகள் மற்றும் இயக்கங்கள்:

1. திருவழிபாட்டுக் குழு

2. பீடச்சிறுவர்கள்

3. பாலர்சபை மற்றும் சிறுவழி இயக்கம்

4. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்

5. இளையோர் இயக்கம்

6. பாடகற்குழு

7. மரியாயின் சேனையர்

8. கிராம முன்னேற்ற சங்கம்

9. புனித வின்சென்ட் தே பவுல் சபை

10. புனித மிக்கேல் அதிதூதர் நற்பணி மன்றம்

11. மறைக்கல்வி

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை K. மரியதாஸ் அவர்கள். 

கூடுதல் தகவல்கள்: கோட்டாறு மறைமாவட்ட பவளவிழா மலர் (1930-2005).