169 உலக மீட்பர் பேராலயம், திருச்சி


உலக மீட்பர் பேராலயம்

இடம் : பாலக்கரை திருச்சி

மாவட்டம் : திருச்சி
மறை மாவட்டம் : திருச்சி

நிலை : பேராலயம்
அன்பியங்கள் : 32

வழிபாட்டு நேரங்கள் :

Daily:
Morning 06.15 – Mass

Evening 06.15 – Mass

Wednesdays :
Morning 05.00 – Mass / Novena

Morning 06.15 – Mass

Morning 11.00 – Mass / Novena

Evening 04.15 – Novena

Evening 05.15 – Novena ( Malayalam )

Evening 06.15 – Novena

First Friday
Afternoon 03.00 Mass

Sundays
Morning 06.00 – Mass

Morning 07.15 – Mass ( Malayalam )

Morning 08.15 – Mass

Morning 11.15 – Mass ( English )

Evening 06.15 – Mass

வரலாறு :

தமிழகத்தில் வேளாங்கண்ணி பசிலிக்கா, சென்னை சாந்தோம் புனித தோமையார் பசிலிக்கா, தூத்துக்குடி புனித பனிமயமாதா பசிலிக்கா, தஞ்சை அருகே உள்ள பூண்டி மாதா பசிலிக்கா ஆகியவை இருந்தன. இந்த வரிசையில் 5வதாக திருச்சியின் நூறாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பாலக்கரை சகாயமாதா உலக மீட்பா் பேராலயம் பசிலிக்கா அந்தஸ்து பெற்றது.

17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மதுரையை மையமாகக் கொண்டு கிறித்தவ மறையைப் பரப்பும் பணியை மேலைநாட்டு இயேசு சபையினர் மேற்கொண்டனர். அந்த முயற்சியின் பயனாக உருவான கோவில்களுள் ஒன்று "உலக இரட்சகர் பெருங்கோவில்" ஆகும். திருச்சி பகுதியில் முதல் கிறித்தவ சபை 1616இல் தோன்றியது.

ஐரோப்பிய மறைபரப்புநர் மதுரை நாயக்க மன்னர்களின் ஆதரவைப் பெற்றனர். மதுரை மறைபரப்பு மாநிலத்தில் பணிபுரிந்த பல குருக்களுள் "தத்துவ போதகர்" என்ற சிறப்புப் பெயர் பெற்ற இராபர்ட் தெ நோபிலி மற்றும் வீரமாமுனிவர் போன்றோர் அடங்குவர்.

திருச்சி நகரத்தைச் சார்ந்த பல பகுதிகளும் மதுரை மறைமாநிலத்தின் கீழ் இருந்த போது பாலக்கரை, தர்மநாதபுரம், வரகனேரி போன்ற இடங்களில் கிறித்தவ சமூகங்கள் எழுந்தன. உலக இரட்சகர் கோவில் கட்டப்படுவதற்கு முன்னரே அப்பகுதியில் சுமார் 7500 கிறித்தவர்கள் இருந்தனர். அவர்கள் திருச்சி மறைமாவட்டக் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வந்தனர். அருகிலிருந்த வியாகுல மாதா கோவில் அப்பொழுது போர்த்துகீசிய ஆதரவாக்கத்தின் (Portuguese Padroado) கீழ் இருந்ததால் அங்கு வழிபட மக்கள் செல்லவில்லை.

பாலக்கரை பகுதியில் வாழ்ந்த கிறித்தவ மக்களுக்கு ஒரு வழிபாட்டிடம் தேவை என்பதை உணர்ந்த ஆயர் அலெக்சிஸ் கனோஸ், சே.ச., புதிய கோவில் கட்டடத்திற்கான அடிக்கல்லை 1880, பெப்ருவரி 9ஆம் நாள் நாட்டினார்.

ஆங்கிலேயர் ஆதிக்கம் இருந்த காலத்தில் திவான் கஞ்சமலை என்பவர் அப்போதைய காலகட்டத்தில் அருட்குரு.கோரிஸ் அடிகளாருக்கு நன்றி கடனாக பாலக்கரை எடத்தெரு பகுதியில் ஒரு இடத்தை வழங்கினார்.

அந்த இடத்தில் கடந்த 1880ம் ஆண்டு பிப்.9-ம் தேதி அருட்குருகனேஸ் அடிகள் என்பவரால் இந்த ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆலய பணிகள் சுமார் ஒன்றரை ஆண்டு காலம் வடிவமைக்கப்பட்டு 1881ம் ஆண்டு ஜுன் 29-ம் தேதி அப்போதைய பாண்டிச்சேரி பேராயராக இருந்த லூயினென் அவர்களால் ஆலயம் திறந்து வைக்கப்பட்டது. ஆலயம் எட்டு பட்டை அமைப்புடன் கூடிய ஐந்து அடுக்குகளை கொண்டதாய் 128 அடி உயரம் 192 அடி நீளம், 55 அடி அகலமும் கொண்டதாகவும் பிரான்ஸ் நாட்டின் கொதிக் பாணியில் சுதைசெங்கற்களாலேயே மத்திய கால கட்டிட கலை நுணுக்கத்துடன் கானேன் சகோதரர்களால் வடிவமைக்கப்பட்டது. ஆலயத்தின் முதல் பங்கு குருவாக ஜார்ஜ் போரன்ஸ், எட்வர்ட் புரோக்ளின் ஆகியோர் அமர்த்தப்பட்டனர். அதன் பிறகு 1886ம் ஆண்டு திருச்சி மறைமாவட்டம் உதயமான பிறகு பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஆந்திரே பணியாற்றினார்.

இதைத் தொடர்ந்து சேசு சபைக்குழுக்களின் நிர்வாகத்தின் கீழ் வந்தது. இந்த பேராலயத்தில் இரண்டு மணிகள் உள்ளன. அதில் ஒன்று 2 டன் எடையும், மற்றொன்று ஒரு டன் எடையும் கொண்டதாகும். இந்த ஒரு டன் எடை கொண்ட ஆலய மணியை கடந்த 1881ம் ஆண்டு நீதிபதியாக பணியாற்றிய வுட்ரூப் என்பவர் அன்பளிப்பாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு காலகட்டத்தில் இந்த ஆலயத்தின் பங்கு எல்லைகள் கிழக்கில் மஞ்சத்திடல் பாலம், மேற்கே பாலக்கரை ரயில்வே லைன், வடக்கே காவிரி ஆற்றுப்பாலம், தெற்கில் உய்யக்கொண்டான் திருமலை ஆற்றுப்பாலம் வரை இருந்தது. ஆனால் தற்போது கிழக்கே பால்பண்ணை ரவுண்டானா, மேற்கே பாலக்கரை ரயில்வே லைன், வடக்கே இ.பி.ரோடு. தெற்கே உய்யக்கொண்டான் ஆற்றுப்பாலம் வரையில் உள்ளது. பேராலயத்தின் கட்டுப்பாட்டில் பல சிறப்புமிக்க தொண்டுகள் காலங்காலமாக நடந்து வருகிறது.

கொல்லக்குடி சூசையாப்பிள்ளை என்பவரின் சிந்தனையால் ஆலய வளாகத்தில் அன்னச்சத்திரம் ஒன்று வடிவமைக்கப்பட்டு நாள்தோறும் 35 ஏழைகளுக்கு இலவச மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் ஏழைப் பெண்களின் வாழ்க்கைதரம் உயரவேண்டும் என்ற உயரிய நோக்கோடு கடந்த 1966ம் ஆண்டு தையல் பயிற்சி நிலையம் நிறுவப்பட்டு தையல் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இன்று வரை ஆயிரக்கணக்கான ஏழைப் பெண்கள் தையல் பயிற்சி பெற்றுள்ளனர். பேராலயத்தின் கட்டுப்பாட்டில் நடுநிலைப்பள்ளியாக ஆரம்பிக்கப்பட்ட உலகமீட்பர் பள்ளி 1908ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. மேலும் 1884ம் ஆண்டு உலக மீட்பர் ஆண்கள் நடுநிலைப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. திருச்சி நகரத்தில் உள்ள மக்களும் பணி ஓய்வு பெற்றவர்களும் பயன்பெறும் வகையில் மனச்சுமைகளை மறந்து சந்தோஷத்துடன் காலத்தை கழிக்க கடந்த 1904ம் ஆண்டு கத்தோலிக்க கிளப் தொடங்கப்பட்டு இன்றளவும் செயல்பட்டு வருகிறது.

ஒரு பேராலயம் பசிலிக்காவாக தரம் உயர்வதற்கு சம்பத்தப்பட்ட பேராலயத்தில் பல அதிசயங்கள் ஆதாரத்துடன் நடந்திருக்க வேண்டும். அந்தவகையில் திருச்சி மக்கள் இந்த தேவாலய பிரார்த்தனைகளுக்கு வந்து நம்பவே முடியாத வகையில் பல பலன்களை தொடர்ந்து பெற்று வருவதால் கடந்த ஆண்டு சகாயமாதா திருத்தலம் பசிலிக்கா அந்தஸ்து பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இவ்வாலயம் பசிலிக்காவாக உயர்த்த அருட்திரு. கபிரியேல் அடிகளார் அவர்கள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார்கள்.

சமீப காலங்களில் பௌர்ணமி ஜெபம் பிரசித்தி பெற்றதாக கருதப்படுகிறது. இந்த ஜெபத்தில் அந்த பகுதி மக்கள் மட்டுமல்லாது வெளிமாவட்டங்களில் இருந்தும் மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்று வருகின்றனர்.

1957ஆம் ஆண்டு உலக இரட்சகர் கோவிலில் இடைவிடா சகாய மாதா பக்தி வளரத் தொடங்கியது. அருள்திரு ஏ. தாமசு என்பவர் பங்குத்தந்தையாகப் பணிபுரிந்த அந்தக் காலக்கட்டத்தில் உலக இரட்சகர் சபையைச் சார்ந்த அருள்திரு ஃபிரான்சிசு என்பவர் பங்குத் தளத்தில் இடைவிடா சகாய மாதா நவநாள் பக்திமுயற்சியை அறிமுகப்படுத்தினார்.

அப்பக்தி முயற்சி இன்றுவரை சிறப்பாகத் தொடர்கிறது. நவநாளில் பல நூறு மக்கள், கிறித்தவரும் கிறித்தவரல்லாதவர்களுமாகக் கலந்துகொண்டு அன்னையின் அருளை இறைஞ்சுகின்றனர். வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் இந்த நவநாளும் செபங்களும் நிகழ்கின்றன. எனவே சிலவேளைகளில் இக்கோவிலை "இடைவிடா சகாயமாதா கோவில்" என்னும் பெயர்கொண்டே அழைக்கின்றனர்.