06 ஜெயராக்கினி அன்னை ஆலயம், ஆத்தூர்


ஜெயராக்கினி அன்னை ஆலயம்.

இடம் : ஆத்தூர், சேலம் - 636 102

 மாவட்டம் : சேலம்
 மறைமாவட்டம் : சேலம்
 மறைவட்டம் : ஆத்தூர்

 நிலை : பங்குத்தளம் 

 கிளைப்பங்குகள் : 
1. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், #தாண்டவராயபுரம் 
2. புனித வனத்து சின்னப்பர் ஆலயம், சின்னப்பநகர் 
3. புனித அந்தோணியார் ஆலயம், கல்லாங்குத்து 
4. புனித அந்தோணியார் ஆலயம், சொக்கநாதபுரம் 
5. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், ராமநாயக்கன்பாளையம்
6. புனித அந்தோணியார் ஆலயம், தென்னங்குடிப்பாளையம் 

ஆலயம் இல்லாத ஊர் : 
7. காட்டுக்கோட்டை 

பங்குத்தந்தை : அருட்பணி. I. கிரகோரி ராஜன்

உதவிப்பங்குத்தந்தை : அருட்பணி. ஆரோக்கியராஜ், CSC

குடும்பங்கள் : 625
அன்பியங்கள் : 19

திருவழிபாட்டு நேரங்கள் : 

ஞாயிறு : காலை 06.15 மணிக்கு மற்றும் காலை 08.15 மணிக்கு திருப்பலி

திங்கள், செவ்வாய், புதன், வெள்ளி : காலை 06.15 மணிக்கு திருப்பலி

வியாழன் : மாலை 06.15 மணிக்கு அற்புத குழந்தை இயேசு நவநாள் திருப்பலி

வெள்ளி : காலை 05.45 மணிக்கு இறைஇரக்க நற்கருணை ஆராதனை

சனி : மாலை 06.15 மணிக்கு இடைவிடா சகாயமாதா நவநாள் திருப்பலி தொடர்ந்து நற்கருணை ஆராதனை

மாதத்தின் முதல் வெள்ளி : மாலை 06.00 மணிக்கு திருமணி ஆராதனை

மாதத்தின் முதல் சனி : மாலை 06.00 மணிக்கு திருத்தேர் பவனி, செபமாலை, புனித ஜெயராக்கினி அன்னையிடம் நலம்நாடுவோருக்கான சிறப்பு திருப்பலி மற்றும் நற்கருணை ஆராதனை முடிவில் அன்பின் விருந்து

பங்குத்திருவிழா : ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி முதல் 15ம் தேதி வரை

ஆத்தூர் மண்ணின் இறையழைத்தல்கள் : 

1. அருட்பணி. அதிரூபன், மாதா தொலைக்காட்சி
2. அருட்பணி. A. ஜான் போஸ்கோ பால், பங்குத்தந்தை, ஜான்சன்பேட்டை, சேலம் மறைமாவட்டம்
3. அருட்பணி. A. ஜேக்கப், மறைமாவட்ட பொருளாளர், சேலம் மறைமாவட்டம்
4. அருட்பணி. V. ஜெய் பெர்னார்ட் ஜோசப், பங்குத்தந்தை, சிலுவைகிரி, சேலம் மறைமாவட்டம்
5. அருட்பணி. அலெக்ஸ், HGN, அமெரிக்கா
6. அருட்பணி. A. பிரகாஷ், பங்குத்தந்தை, RC பேட்டப்பாளையம், சேலம் மறைமாவட்டம்
7. அருட்பணி. மரிய ஜோசப், MSFS, ஆஸ்திரேலியா
8. அருட்சகோதரர். சார்லஸ்
9. அருட்சகோதரர். பிரான்சிஸ் சேவியர்
10. அருட்சகோதரர். ரெக்ஸ், நல்லாயன் குருமடம், கோவை மறைமாவட்டம்

ஆத்தூர் மண்ணின் அருட்சகோதரிகள்:

1. அருட்சகோதரி. மார்டினா, Cluny
2. அருட்சகோதரி. ஏஞ்சல், Cluny
3. அருட்சகோதரி.‌ பனிமேரி, Cluny
4. அருட்சகோதரி.‌ ஆனி ஜாய்ஸ், SMMI
5. அருட்சகோதரி.‌ ஸ்டெல்லா, SMMI
6. அருட்சகோதரி. தூயமேரி, SMMI
7. அருட்சகோதரி. லீமாரோஸ், SMMI
8. அருட்சகோதரி. ஜான்சி ராணி, SMMI
9. அருட்சகோதரி. ஹெலன் வின்சி, DMI
10. அருட்சகோதரி. ரோஸ்லின் மேரி, DMI
11. அருட்சகோதரி. இம்மாகுலேட் லாரன்ஸ், CIC

வழித்தடம் : ஆத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து 100 மீ தொலைவில் புனித ஜெயராக்கினி அன்னை ஆலயம் அமைந்துள்ளது.


ஆலய வரலாறு: 

கல்வராயன் மலைத்தொடரில் உற்பத்தியாகி கிழக்கு நோக்கி பாயும் வசிஷ்ட நதியின் தென்கரையில் ஆத்தூர் நகரம் அமைந்துள்ளது. ஆற்று + ஓரம் + ஊர் என்று பொருள்பட முற்காலத்தில் ஆற்றூர் என அழைக்கப்பட்ட இந்நகரம் ஆத்தூர் என மருவியுள்ளது. கி.பி. 1872ம் ஆண்டில் அருட்பணி. காந்தி என்பவர் கோட்டப்பாளையத்திலிருந்து வந்து கோனேரிப்பட்டியில் தங்கிக்கொண்டு ஆத்தூர் பகுதிகளில் நற்செய்தியை அறிவித்து ஏறக்குறைய 1500 பேருக்கு திருமுழுக்கு கொடுத்துள்ளார். அவர் 1873ம் ஆண்டு வசிஷ்ட நதியின் பள்ளத்தாக்கில் (நரசிங்கபுரம்) ஆலயம் ஒன்றை கட்டினார். எனவே, அதுவரை இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்த சிற்றாலயம் கைவிடப்பட்டது. 

1878ம் ஆண்டு ஏற்பட்ட கடும் பஞ்சத்தின் காரணமாக, குருக்களிடமிருந்து உதவி பெறும் பொருட்டு பலர் கிறிஸ்துவ மறையில் சேர்ந்தனர். ஆனால், நாளடைவில் ஒரு சிலரைத் தவிர பலர் தங்கள் பழைய வழிபாட்டிற்கே திரும்பி விட்டனர். காக்காவேரி, சேலம் மற்றும் கோனேரிப்பட்டியின் கிளைப்பங்காக இருந்து செயல்பட்டு வந்த ஆத்தூர், கி.பி. 1880ம் ஆண்டு பாண்டிச்சேரி மறைமாவட்டத்தின் கீழ் கோனேரிப்பட்டி பங்கிலிருந்து பிரிந்து தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. அருட்பணி. காந்தி அடிகளுக்கு உதவியாக இருந்த அருட்பணி. ஜீஸ்ஸே அவர்கள் இப்பங்கின் முதல் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார். இவர் புதிய கிறிஸ்துவர்களை விசுவாசத்தில் நிலைநிறுத்த பெரிதும் பாடுபட்டார்.

இந்து மதத்திலிருந்து கிறிஸ்துவ மறையில் சேர்ந்து, பின்பு குருவான அருட்பணி. லாசர் அவர்கள் ஏழைகளுக்கு பெரிதும் உதவி செய்து வந்தார். ஆத்தூரில் ஒரு பகுதி அவர் பெயரால் லாசர்பேட்டை என்று அழைக்கப்படுகிறது. தற்போது அப்பகுதி ராணிப்பேட்டை என்று அழைக்கப்படுகிறது. 1900ம் ஆண்டில் ஆத்தூர் பங்கானது, பாண்டிச்சேரி உயர் மறைமாவட்ட பகுதியிலிருந்து புதிதாக உருவான கும்பகோணம் மறைமாவட்டத்தின் கீழ் வந்தது. 1930ம் ஆண்டு புதிதாக சேலம் மறைமாவட்டம் உருவான போது ஆத்தூர் பங்கானது சேலம் மறைமாவட்டத்தின் ஒரு பகுதியானது. 

பாரீஸ் வேதபோதகர்களில் கடைசியான குருவாக ஆத்தூரில் பணியாற்றி பெயரும் புகழும் பெற்றவர் ஏழைகளின் நண்பர் அருட்பணி. J. கிராவியே அடிகளார் ஆவார். 06.08.1970 அன்று அருட்பணி. J. கிராவியே அடிகளார் அவர்கள் மணிவிழுந்தான் காலனியில் முன்னாள் இராணுவ வீரர்கள் நிலம் வாங்கி குடியேறியதால், அங்கு ஒரு ஆலயம் கட்டினார். 1977ம் ஆண்டில் இவரது இறப்புக்குப் பின் இவரது உடலை ஆத்தூர் ஆலயத்தின் அருகிலேயே அடக்கம் செய்தனர். 

அருட்பணி. R. சேவியர் (1978-1981) அவர்களின் பணிக்காலத்தில் 15.01.1980 அன்று புதிய புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பாதி அளவில் கட்டுமான பணிகள் நடந்து, பிறகு வந்த அருட்பணி. T. ஜெகநாதன் (1981-1983) அவர்களின் முயற்சியால் ஆலயத்தின் மேல்மட்டங்களை எழுப்பி, அருட்பணி. M. S. ஜோசப் (1983-1987) அவர்களின் அயராத முயற்சியினால் கருங்கல்லாலான ஆலயம் அழகுற கட்டிமுடிக்கப்பட்டு, 01.04.1987 அன்று அன்றைய சேலம் மறைமாவட்ட ஆயர் மேதகு. மைக்கேல் போஸ்கோ துரைசாமி ஆண்டகை அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. 

அருட்பணி. I.  மரியசூசை (1996-2003) அவர்களின் பணிக்காலத்தில் ஆலயத்திற்கு முன்புறம் பங்குத்தந்தை இல்லம் கட்டிமுடிக்கப்பட்டு, 14.08.2001 அன்று அர்ச்சிக்கப்பட்டது.

எடப்பாடி பங்கு, ரெட்டியூரிலிருந்து சில கிறிஸ்தவக் குடும்பங்கள் 1968ம் ஆண்டில் ஊனத்தூரில் குடியேறினார்கள். அவர்களின் ஆன்மீகத் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு அருட்பணி. R. சேவியர் அவர்களால் 1980ம் ஆண்டு ஒரு சிற்றாலயம் கட்டப்பட்டது. கல்லாங்குத்து பகுதியில் வாழும் கிறிஸ்துவ மக்களின் ஆன்மீக தேவையை பூர்த்தி செய்ய அருட்பணி. I. மரியசூசை அவர்களின் முயற்சியால் புனித அந்தோணியார் குருசடி கட்டப்பட்டு 01.01.2001 அன்று அர்ச்சிக்கப்பட்டது. தாண்டவராயபுரம் என்னும் மிக்கேபிலியூரில் புனித ஆரோக்கிய அன்னையை பாதுகாவலியாகக் கொண்டு அருட்பணி. I. மரியசூசை அவர்களால் ஒரு ஆலயம் கட்டப்பட்டு 14.09.2001 அன்று அர்ச்சிக்கப்பட்டது. 

பல கிளைப்பங்குகளைக் கொண்டு பரந்து கிடந்த ஆத்தூர் புனித ஜெயராக்கினி அன்னை ஆலயப் பங்கிலிருந்து தலைவாசல் புனித சூசையப்பர் ஆலயம் என்னும் புதிய பங்கானது 2004ம் ஆண்டு அன்றைய சேலம் மறைமாவட்ட ஆயர் மேதகு செ. சிங்கராயன் அவர்களால் அறிவிக்கப்பட்டது. புதிய பங்கின் முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. அருள் பிரான்சிஸ் சேவியர் அவர்கள் பொறுப்பேற்று பங்கை சிறப்பாக வழிநடத்தியதுடன், பங்குத்தந்தை இல்லமும், புதிய ஆலயமும் கட்டப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.

அருட்பணி. இருதயசெல்வம் (2003-2008) அவர்களின் பணிக்காலத்தில் ஆலய வளாகத்தில் இயேசுவின் 14 நிலை சிலுவைப்பாடுகளை தியானிக்கும் வகையில் சிலுவைப்பாதை நிலைகள் கட்டப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.

இந்த ஆலயத்தின் வெள்ளிவிழா நினைவாக அன்றைய பங்குத்தந்தை அருட்பணி. M. சாலமோன் ராஜ் அவர்களின் முயற்சியாலும் நன்கொடையாளர்களின் முயற்சியாலும் சேலம் மறைமாவட்டத்தில் இரண்டாவது நற்கருணை ஆராதனை ஆலயம் கட்டப்பட்டு 15.09.2011 அன்று மேதகு ஆயர் செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. மேலும், ஆலயத்தின் முன்புறம் புனித ஆரோக்கிய அன்னை கெபி கட்டப்பட்டு 29.04.2012 அன்று தருமபுரி மறைமாவட்ட ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

அருட்பணி. அருள் பிரான்சிஸ் சேவியர் (2013-2018) அவர்களின் பணிக்காலத்தில் ஆலய வளாகத்தில் புதிய கொடிக்கம்பம் நிறுவப்பட்டு மேதகு ஆயர் செ‌. சிங்கராயன் அவர்களின் ஆசியுடன் மறைமாவட்ட முதன்மை குரு அருட்பணி. S. ஜான் ஜோசப் அவர்களால் 06.08.2017 அன்று அர்ச்சிக்கப்பட்டது. மேலும், ஆலயத்தைச் சுற்றிலும் தரைப்பகுதியில் கல்தளம் அமைக்கப்பட்டது.

இன்றைய பங்குத்தந்தை அருட்பணி. I. கிரகோரி ராஜன் அவர்களின் முயற்சியால் 2020ம் ஆண்டு St. Mary's Public School (CBSE) துவங்கப்பட்டது. ஆலயத்தின் பாதுகாப்பு நலன்கருதி CCTV கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஆலய‌ நுழைவாயிலில் மேடை விரிவுபடுத்தப்பட்டது. கழிவறைகள் புதுப்பிக்கப்பட்டது. கிளைப்பங்கான சின்னப்பநகர் சிற்றாலயத்தில் சுற்று கம்பி வேலி அமைக்கப்பட்டது. கிளைப்பங்கான தாண்டவராயபுரம் சிற்றாலய கோபுரத்தில் LED சிலுவை அமைக்கப்பட்டது. மேலும், ஆன்மீகப் பாதையில் வளர்ந்து வருகிறது ஆத்தூர் இறைசமூகம். 

ஆத்தூர் பங்கின் கல்வி நிறுவனங்கள் : 

1. புனித மரியாள் அரசு உதவி பெறும் RC நடுநிலைப்பள்ளி 
2. புனித மரியாள் பொதுப்பள்ளி
3. புனித சூசையப்பர் துவக்கப்பள்ளி - புனித சூசையப்பர் சபை கன்னியர்கள் நிர்வாகம்

ஆத்தூர் பங்கின் இல்லங்கள் மற்றும் மருந்தகம் : 

1. புனித சூசையப்பர் கன்னியர் இல்லம்
2. புனித சூசையப்பர் மருத்துவமனை - புனித சூசையப்பர் சபை கன்னியர்கள் நிர்வாகம்

பங்கில் செயல்படும் பக்தசபைகள் : 

1. பங்குப்பேரவை
2. வின்சென்ட் தே பவுல் சபை
3. மரியாயின் சேனை
4. பாலர்சபை
5. ஜெயமாதா செபக்குழு
6. இளையோர் குழு
7. பாடற்குழு
8. பீடச்சிறுவர்கள் குழு
9. சேரா கிளப்

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் : 

1. அருட்பணி. ஜீஸ்ஸே (1880)
2. அருட்பணி. தேவசகாயம் (1881-1884)
3. அருட்பணி. பால் (1884-1900)
4. அருட்பணி. புஞ்சியேர் லூயிஸ் (1900-1908)
5. அருட்பணி. மத்தேயு (1908-1910)
6. அருட்பணி. இஞ்ஞாசி (1910-1913)
7. அருட்பணி. தெஃப்ஞி லியோன் (1913)
8. அருட்பணி. லிஜோன் பெர்னாண்தூ (1914-1928)
9. அருட்பணி. ஆண்ட்ரூ ஜீஸ்ஸோ (1928-1929)
10. அருட்பணி. ராபெர்த் தேயல் (1930)
11. அருட்பணி. புரூன் (1931-1934)
12. அருட்பணி. நலே (1934-1945)
13. அருட்பணி. ஜார்ஜ் எடத்திப்பரம்பில் (1945-1957)
14. அருட்பணி. உர்மாண்ட் (1957-1961)
15. அருட்பணி. J. கிராவியே (1961-1976)
16. அருட்பணி. M. ஞானப்பிரகாசம் (1976-1978)
17. அருட்பணி. R. சேவியர் (1978-1981)
18. அருட்பணி. T. ஜெகநாதன் (1981-1983)
19. அருட்பணி. M. S. ஜோசப் (1983-1987)
20. அருட்பணி. S. ஆரோக்கியசாமி (1987-1992)
21. அருட்பணி. S. ஜான் ஜோசப் (1992-1996)
22. அருட்பணி. I. மரியசூசை (1996-2003)
23. அருட்பணி. S. இருதயசெல்வம் (2003-2008)
24. அருட்பணி. M. சாலமோன் ராஜ் (2008-2013)
25. அருட்பணி. அருள் பிரான்சிஸ் சேவியர் (2013-2018)
26. அருட்பணி. I. கிரகோரி ராஜன் (2018 முதல் தற்போது வரை...)

Church Address : St. Mary's Church, Attur, Salem - 636 102
YouTube Channel ID : St. Mary's Church, Attur

தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி. I. கிரகோரி ராஜன் அவர்கள்

விண்ணைத் தொடும் கோபுரமும் நற்கருணை ஆண்டவரின் இறையருளும் நிறைந்த ஆத்தூர் புனித ஜெயராக்கினி அன்னை ஆலயம் வாருங்கள்!....

இடைவிடாது இறைவனிடம் மன்றாடி ஜெயராக்கினி அன்னை வழியாக இறைவனின் இறையாசீரை பெற்றுச் செல்லுங்கள்!!....