540 திருச்சிலுவை ஆலயம், கீழமணக்குடி

            

திருச்சிலுவை ஆலயம்

இடம் : கீழமணக்குடி

மாவட்டம் : கன்னியாகுமரி

மறை மாவட்டம் : கோட்டாறு

மறை வட்டம் : கன்னியாகுமரி 

நிலை : பங்குத்தளம் 

பங்குத்தந்தை : அருள்பணி. ஜாண் பெனிட்டோ

திருத்தொண்டர் : சகோ. கிளாரட்

குடும்பங்கள் : 733

ஆண்கள் : 1111

பெண்கள் : 1155

மக்கள் தொகை : 2266

அன்பியங்கள் : 19

ஞாயிறு திருப்பலி : காலை 07.00 மணிக்கு 

திங்கள், செவ்வாய், சனி திருப்பலி : காலை 06.30 மணிக்கு 

புதன் மாலை 06.00 மணி : சகாய மாதா நவநாள் திருப்பலி, ஒப்புரவு அருட்சாதனம். 

வியாழன் மாலை 06.00 மணி : குழந்தை இயேசு நவநாள் திருப்பலி. 

வெள்ளி காலை 06.30 மணி : திருப்பலி  (பழைய ஆலயம்) 

மாதத்தின் முதல் வெள்ளி காலை 07.30 மணி : நோயாளிகளுக்கு நற்கருணை வழங்கப்படும். 

மாலை 06.30 மணி : இறைஇரக்க ஜெபமாலை, நற்செய்தி கொண்டாட்டம், குணமளிக்கும் நற்கருணை வழிபாடு. 

மாதத்தின் கடைசி சனி மாலை 06.30 மணி : சிறப்பு நன்றி திருப்பலி, சகாயத் தாயின் தங்கத் தேர்பவனி, திருச்செபமாலை, குணமளிக்கும் நற்கருணை ஆசீர். 

திருவிழா : கிறிஸ்து பிறப்பு விழா வார வெள்ளிக்கிழமை துவங்கி பத்து நாட்கள் நடைபெறும்.


மண்ணின் மைந்தர்கள் :

மண்ணின் அருட்பணியாளர்கள்

1. அருள்பணி. மைக்கேல்ராஜ்

2. ஆயர். ஸ்டீபன் அந்தோனி (தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர்) 

3. அருள்பணி. டேவிட் யோபு 

4. அருள்பணி. சகாயராஜ் 

5. அருள்பணி மோசஸ் சகாயராஜ் 

6. அருள்பணி. ஜாண் பேப்டீஸ்ட் 

7. அருள்பணி. டன்ஸ்டன் 

8. அருள்பணி. லயோலா ஆன்றனி 

9. அருள்பணி. சகாய அருள் தேவ் 

10. அருள்பணி. ரொனால்டு ரெக்ஸ் 

11. அருள்பணி. நெல்சன் 

12. அருள்பணி. நேவிஸ் 

மண்ணின் அருட்சகோதரிகள்:

1. அருட்சகோதரி. சகாயமேரி 

2. அருட்சகோதரி. ஜோஸ்லின் 

3. அருட்சகோதரி. மேரிராஜம் 

4. அருட்சகோதரி. இஸிதோரா மேரி சகாய பிரின்ஸி 

5. அருட்சகோதரி. சகாய ரஜிலா

6. அருட்சகோதரி. மரிய தங்கம் 

7. அருட்சகோதரி. ஆரோக்கிய மேரி 

8. அருட்சகோதரி. யூஜின் மேரி

9. அருட்சகோதரி. சகாய விஜிலா 

10. அருட்சகோதரி. கிறிஸ்டின் மேரி

11. அருட்சகோதரி. ஆன்ட்ரியா 

12. அருட்சகோதரி. சகாய சர்மிளா 

13. அருட்சகோதரி. ரெஜி 

14. அருட்சகோதரி. பெனிற்றா 

15. அருட்சகோதரி. ஆரோக்கிய ஹெர்மா கில்டா 

16. அருட்சகோதரி. ஹேஸ்லின் ஜூலியட் 

17. அருட்சகோதரி. சகாயமேரி 

18. அருட்சகோதரி. பிரிவிதா.


வழித்தடம் : நாகர்கோவில் -கோட்டார் -பறக் கை விலக்கு -தெங்கம்புதூர்  -புத்தளம் -கீழமணக்குடி

பேருந்து எண் : 2, 2F, 2K,2L, நீரோடி.

Location map : Holy Cross Church, Keelamanakudy https://maps.app.goo.gl/nCm7jsJUgbuoc33x9


வரலாறு :

இந்தியத் திருநாட்டின் தென்கோடி முனையாம் கன்னியாகுமரி கடற்கரையின் மேற்கே, 7 கி.மீ தொலைவில் அரபிக்கடலோரம் அமைந்திருக்கும் கடற்கரை ஊர் தான் செண்பகராமன் புத்தன்துறையாகிய கீழமணக்குடி எனும் அழகிய ஊர். 

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் கீழமணக்குடி பகுதி குடியிருப்புகளற்ற வெற்று நிலமாகவே இருந்தது. சுமார் 475 ஆண்டுகளுக்கு முன்னர் செண்பகராமன் என்ற அரசர் குடும்பத்துடன் இப்பகுதிக்கு ஓய்வெடுக்க வருவதுண்டு. அவரது நினைவாக இவ்வூர் "செண்பகராமன் புத்தன்துறை" எனும் பெயர் பெற்றது. 

செண்பகராமன் அரசருக்கு பின்னர், செட்டியார் தமது குடும்பத்துடன் தற்போது மாமரித்தெரு என அழைக்கப்படும் பகுதியில் குடியேறினர். அவரது பெயரைத் தாங்கியே செட்டியார் கிணறும் இருந்தது. இக்காலகட்டத்தில் மேலும் ஒருசில குடும்பங்கள் இங்கே வாழ்ந்து வந்தன. 

கி.பி 1544 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் புனித பிரான்சிஸ் சவேரியார் வழியாக கன்னியாகுமரி முதல் இனையம் வரை 15 கடற்கரை ஊர்களில் உள்ள சுமார் 10000 மக்கள் திருமுழுக்குப் பெற்றனர். 

புனிதரின் கையால் திருமுழுக்குப் பெற்ற ஊர்களான மணக்குடி -யிலிருந்து ஏழு தட்டுமடிக்காரர்களும் மற்றும் பள்ளம் ஊரிலிருந்தும் சில தட்டுமடிக்காரர்களும் தங்கள் குடும்பத்துடன் கி.பி 1550 ம் ஆண்டில் இங்கு வந்து குடியேறினார்கள். இதனைத் தொடர்ந்து இவ்வூரில் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இவர்கள் தொடக்க காலத்தில் திருப்பலிக்கு மணக்குடி ஊருக்கு சென்று வந்தனர். அந்த காலகட்டத்தில் கேரளா மாநிலம் கொல்லத்தில் இருந்து அருட்தந்தையர்கள் வரும் போது திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது. தொடக்கத்தில் கன்னியாகுமரி ஆலயத்திற்கு திருப்பலிக்கு சென்று வந்த தாமரைக்குளம் பகுதியை சுற்றியுள்ள மக்கள் 1600 ஆம் ஆண்டுக்குப் பிறகு மணக்குடிக்கு வந்து பங்கேற்றனர்.  

இவர்கள் மழைக்காலங்களில்  மணக்குடி மக்களின் உதவியுடன் வள்ளங்களில் (படகு) ஆற்றைக் கடந்து வந்து இணைந்து திருப்பலி சிறப்பித்து சென்றது குறிப்பிடத்தக்கது. 

கீழமணக்குடி பெயர்க்காரணம்:

கி.பி 1650 க்குப் பிறகு இவ்வூரில் தங்கியிருந்து தொழில் செய்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவே, ஓலையால் வேயப்பட்ட ஆலயம் அமைத்து இங்கு திருவழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தது. மணக்குடியிலிருந்து குருவானவர் இங்கு வந்து திருப்பலி நிறைவேற்றினார். அருட்பணியாளர்கள் இங்கு வரும் போது கீழூருக்கு (கீழ்+ஊர்) செல்கிறேன் என்ற வார்த்தைகள், மக்களாலும் பேசப்பட்டு வந்ததால் இவ்வூர் கீழவூர் என்றும் "கீழமணக்குடி" என்றும் பெயர் பெற்றது. அரசு ஆவணங்களில் இன்றும் செண்பகராமன் புத்தன்துறை கீழமணக்குடி என்றே குறிப்பிடப்பட்டு வருகிறது. 

ஓலையால் வேயப்பட்ட ஆலயமானது, தற்போதைய ஆலயத்திற்கு தெற்கே அமைந்திருந்தது. கி.பி 1750 ஆம் ஆண்டில் பழைய ஆலயத்தின் தென்மேற்குப் பகுதியில் கல்லறைத் தோட்டம் ஏற்படுத்தப் பட்டது. இதன் மேற்குப் பகுதியில் ஓலையால் வேயப்பட்ட கிறிஸ்து அரசர் குருசடியும் இருந்தது. 

வெளிநாட்டிலிருந்து இங்கு பணிசெய்ய வந்து 11.04.1830 ல்  இறந்து போன திரு. மார்சலின் என்பவரின் கல்லறையும், 01.06.1900 இறந்து போன அம்காலி- யின் (அரச குடும்பத்தைச் சேர்ந்த திரு. மேசர் அவர்களின் மகள்) கல்லறையும், திரு. பேதுரு கணக்கப்பிள்ளையும் இங்கு அடக்கம் செய்யப் பட்டுள்ளனர். இக்கல்லறைகள் ஆலய தலைவாசல் பகுதியில் இன்றும் காணப்படுகிறது. 

கி.பி 1770 -1785 களில் வள்ளல் செண்பகராமனின் ஆட்சியின் போது போர் தளபதியாக இருந்த மேஜர் எபிரேம் என்பவர் ஓலை ஆலயத்தை மாற்றி, கடற்கரையில் வெட்டியெடுக்கப்பட்ட கற்களால் சிறிய ஆலயம் அமைத்தார். 

கீழமணக்குடியில் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, ஏறத்தாழ 155 ஆண்டுகளுக்குப் பிறகு அப்போதைய கல்லறைத் தோட்டம் மற்றும் கிறிஸ்து அரசர் குருசடி ஆகிய பகுதிகளை உள்ளடக்கி பெரிய ஆலயம் கட்ட தீர்மானிக்கப் பட்டது. ஆகவே ஊரின் கிழக்குப் பக்கம் தற்போது காணப்படும் கல்லறைத் தோட்டம் மாற்றப் பட்டது. 1950 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் கல்லறைத் தோட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. 

அப்போதைய கணக்கப்பிள்ளை திரு. மலையப்பன் (அந்தோனிபிள்ளை) திட்டமிடப்பட்ட ஆலயத்தை வடிவமைக்க, அருட்பணி. தாமஸ் பெர்னாண்டோ அவர்கள் 10.01.1941 அன்று ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார். அருட்பணி. பெஞ்சமின் வாஸ் பணிக்காலத்தில் ஆலயப் பணிகள் நிறைவு பெற்று 27.01.1951 கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு ஆஞ்ஞிசாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. 

கி.பி 1960 ஆம் ஆண்டு வரை கீழமணக்குடி, மணக்குடி பங்கின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்தது. தென்தாமரைக்குளமும் மணக்குடியின் கிளைப்பங்காக இருந்து வந்தது.

1960 ல் கீழமணக்குடி தனிப்பங்காக உயர்த்தப்பட்டு, தென்தாமரைக்குளம் இதன் கிளைப் பங்காக ஆனது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. அகஸ்டின் பெர்னாண்டோ அவர்கள் பொறுப்பேற்றார்கள். 1974 ல் தென்தாமரைக்குளம் தனிப் பங்கானது.

ஆலயத்தின் 50 -வது ஆண்டு விழா நினைவாக பலிபீடம் பளிங்கு கற்களால் புதுப்பிக்கப்பட்டு 29.12.2000 அன்று கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு லியோன் அ. தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. பொன்விழா திருப்பலி அப்போதைய கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் நிறைவேற்றப் பட்டது. 

26.12.2004 அன்று ஏற்பட்ட சுனாமி பேரலையில் கீழமணக்குடி ஊர் வெகுவாக பாதிக்கப்பட்டது. ஏராளமான உயர்ச்சேதமும் பொருட்சேதங்களும் ஏற்பட்டன. 49 பேர்கள் இறந்தனர். ஏராளமான வீடுகள் கடலில் இழுத்து செல்லப் பட்டன. இருப்பினும் ஆலயத்தின் பீடம் மற்றும் மண்டபம் நிலைகுலையாமல் நின்றன. பாதிக்கப்பட்ட கீழமணக்குடி மக்களுக்கு, தென்தாமரைகுளம் பங்கு மக்கள் அடைக்கலம் கொடுத்து கவனித்தனர். பல அமைப்புகளின் உதவியால் ஊர் புதிய முகம் பெற்றது. எல்லா மக்களுக்கும் புதிய வீடுகள், சொந்த நிலம், ஊர் முழுவதும் சாலைகள், திருமணமண்டபம் என புதுப்பொலிவு உருவானது. பழைய திருச்சிலுவை ஆலயம் பழையபடி புதுப்பிக்கப்பட்டது. 

பின்னர் எழில்மிகு புதிய ஆலயம் கட்டப்பட்டு 23.12.2009 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. 

தற்போதைய பங்குத்தந்தை அருள்தந்தை ஜாண் பெனிட்டோ அவர்களின் முயற்சியில்  ஊரின் எல்லையின் கடற்கரையில் அமைந்துள்ள புனித அந்தோனியார் குருசடி பீடத்தின் பின்புறத்தில் 12.06.2018-ல் அந்தோனியாரின் 13  புதுமைகள் அடங்கிய கலைவேலைப்பாடும், 13.09.2019 அன்று பழைய ஆலயப்பீடத்திலும், 27.12.2019 அன்று புதிய ஆலய பீடத்திலும் கலை வேலைப்பாடுகளுடன் கூடிய வர்ணம் தீட்டப்பட்டு ஆலய பீடம் புது பொலிவுடன் காட்சியளிக்கின்றது.

புனித அந்தோணியார் பள்ளிக்கூடம் :

ஊரின் வளர்ச்சிக்காக புனித அந்தோனியார் துவக்கப் பள்ளி 14.12.1885 அன்று தொடங்கப்பட்டு, 14.12.1985 அன்று நடுநிலைப் பள்ளியாக உயர்த்தப் பட்டது. கீழமணக்குடி பங்கின் வளர்ச்சியில் இப்பள்ளி பெரும் பங்கு வகிக்கிறது. மேலும் 2017 ஆம் ஆண்டு Kindergarten துவக்கப்பட்டது. 

தற்போதைய பங்குத்தந்தை அருள்தந்தை ஜாண் பெனிட்டோ அவர்களின் முயற்சியால்  2018-2019-ம் கல்வி ஆண்டில் பள்ளிக்கூடம் முழுவதும் வர்ணம் பூசப்பட்டு, காம்பவுண்டு சுவரில் மாணாக்கர்களின் பாடம் தொடர்பான ஆர்ட் வேலைப்பாடுகள் செய்து, பள்ளி நுழைவாயிலும் புதிதாக கட்டப்பட்டு புதிய கதவும் போடப்பட்டது. 2019-ம் கல்வி ஆண்டில் மாணாக்கர்கள் எளிதாக கல்வி கற்க smart class வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 2018-ம் கல்வி ஆண்டிலிருந்து அரசு சம்பளம் பெறாத சிறப்பு ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்து மாணாக்கர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. மேலும் மாணாக்கர்களின் திறமை வளர்ப்புக்காக செஸ், பரதம்,கராத்தே, களரி, நடனம், விளையாட்டு பயிற்சிகள், பேச்சு மற்றும் எழுத்து பயிற்சி, கணிணி பயிற்சி ஆகியவைகள் புதிதாக ஆரம்ப்பிக்கப்பட்டு பள்ளி முன்னேற்ற பாதையில் சென்றுகொண்டிருக்கின்றது. மாணாக்கர்களின் எண்ணிக்கையும் மக்களின் ஒத்துழைப்பால் அதிகரித்துள்ளது.

புனித மிக்கேல் அதிதூதர் குருசடி :

1916 -ஆம் ஆண்டில் தூய மிக்கேல் அதிதூதர் குருசடி கட்டப்பட்டது. அருட்பணி. புஷ்பராஜ் பணிக்காலத்தில் பழைய குருசடி மாற்றப்பட்டு புதிதாக கட்டப்பட்டு, 19.05.2014 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. 

புனித அந்தோனியார் குருசடி :

ஊரின் கிழக்குப் பக்கம் புனித அந்தோனியார் குருசடி 1996 ஆம் ஆண்டு அருட்பணி. பெர்க்மான்ஸ் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு, அருட்பணி. லாரன்ஸ் பணிக்காலத்தில் நிறைவு பெற்றது. மீண்டும் விரிவுபடுத்தப்பட்டு 13.06.2015 அன்று அருட்பணி. மைக்கேல் ராஜ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. 

தூய லூர்து மாதா கெபி :

புதிய ஆலயத்திற்கு எதிர்புறம் மரியாயின் சேனையினரின் முயற்சியால் லூர்து மாதா கெபி கட்டப்பட்டு, 08.09.2010 அன்று அருட்பணி. ஜாண் பேப்ஸ்டிக் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. இந்த கெபியில் லூர்து மாதா மரத்திலிருந்து காட்சி கொடுப்பது போல தத்ரூபமாக பீட அமைப்பு ஆமைக்கப் பட்டுள்ளது. 

தொழில்கள் :

கீழமணக்குடியில் வாழ்ந்த முன்னோர்களின் முதன்மையான வேலையாக மீன்பிடித் தொழில் இருந்தது. மேலும் உப்பளத்தில் இருந்து வரும் உப்பு மூட்டைகளை, பொழிமுகத்தின் கரையில் (ஆறும் கடலும் சங்கமிக்கும் முகத்துவாரம்) இருந்து கடலிலே தோணிக்கு  ஏற்றி செல்வதும் முன்னோர்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்தது. 

காயலில், மீன், நண்டு, இரால் பிடிப்பதும் முக்கிய வேலையாகும். மீன்வளத்துறை அமைச்சராக மாண்புமிகு லூர்தம்மாள் சைமன் அவர்கள் இருந்த போது, இங்கு மீன்பண்ணை அமைக்கப்பட்டு, அதனை பராமரிக்கும் வேலையையும் செய்து வந்தனர். அம்பர்சர்க்கார், கைராட்டு மூலம் பஞ்சுகளிலில் இருந்து நூல் நூற்றல் மற்றும் கையினால் மால் பிடித்து வலை பின்னுவதையும் முக்கிய கைத்தொழிலாகக் கொண்டிருந்தனர். 

காயல் :

கீழமணக்குடி மக்களின் முக்கியமான மீன்பிடித் தொழிலுக்கு கடலுக்கு செல்ல அடிப்படையாக இருப்பது காயல். சாலையிலிருந்து காயலுக்கு செல்லும் வழி பட்டா பூமியாகும். ஆகவே காயலுக்கு பக்கத்தில் ஏழரை சென்ட் பட்டா நிலத்தை, பங்கு மக்கள் மற்றும் மீனவர் முன்னேற்ற சங்கத்தின் உதவியுடன் பங்குப்பேரவை  02.07.2005 அன்று விலைக்கு வாங்கி, காயலுக்கு செல்லும் உரிமையை நிலைநாட்டி, அந்த இடத்தில் மீன் ஏலம் போட தளமும் அமைக்கப் பட்டு, 28.03.2016 முதல் இவ்விடத்தில் மீன் ஏலம் போடப்படுகிறது. 

பிரான்சிஸ்கன் மரியாளின் ஊழியர் சபை அருட்சகோதரிகள்:

கீழமணக்குடி பங்கு மக்களின் நீண்ட நாள் கனவு இங்கு கன்னியர் இல்லம் அமைய வேண்டும் என்பதாகும். இந்த FSM அருட்சகோதரிகள் வரவால் கனவு நிறைவேறியது. புனித பிரான்சிஸ்கன் மரியாளின் ஊழியர் சபை பிரான்ஸ் நாட்டில் உருவானதாகும். இன்று பல்வேறு இடங்களில் இந்த அருட்சகோதரிகள் தங்களுடைய ஆன்மீகப் பணியை செய்து வருகிறார்கள். கோட்டாறு மறைமாவட்டத்தில் புனித பிரான்சிஸ்கன் மரியாளின் ஊழியர் சபை, கீழமணக்குடி பங்கில் மட்டும் தான் அமைந்துள்ளது என்பது  கீழமணக்குடி பங்கிற்கு பெருமையாகும்.

16.08.2016 அன்று FSM அருட்சகோதரிகள் கீழமணக்குடி பங்கில் காலடி வைத்தார்கள். 06.11.2017 அன்று தங்களுக்கென்று ஒரு அன்பு இல்லம் ஒன்றை கட்டி, தங்கள் பணியை இன்னும் விரிவாக்கம் செய்தார்கள். அருட்சகோதரிகள் பங்குப் பணி மற்றும் கல்விப்பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின்  தாரகமந்திரமாக இரக்கத்தோடு வாழ்வதும், இரக்கத்தை கொடுப்பதும் ஆகும். இங்கு மூன்று அருட்சகோதரிகள் இருக்கின்றார்கள். அருட்சகோதரி. சந்திரா இல்ல தலைவியாகவும், அருட்சகோதரி. மேரி டட்லி பள்ளியில் ஆசிரியையாகவும் தலைமை ஆசிரியராகவும், அருட்சகோதரி பார்த்தோ பங்கு களப்பணியாளராகவும் இப்பங்கில் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். 

தனிச்சிறப்பு :

சகாயத்தாயின் அற்புதமான சொரூபம்  ஆலயத்தில் அமைந்துள்ளது. தற்போதைய பங்குத்தந்தை  அருட்தந்தை. ஜாண் பெனிட்டோ அவர்கள், 02.01.2018 அன்று பங்குத் திருவிழா நடைபெற்ற போது புதிய ஆலயத்தில்  இடைவிடா தாயின் சுரூபம் நிறுவி, புதிய நவநாள் புத்தகம் வெளியிட்டு நவநாளும் ஆரம்பிக்கப்பட்டது. நாடிவரும் கோடி மக்களுக்கு கோடான கோடி நன்மைகள் செய்ய தேடிவரும் இடைவிடா சகாய தாய்க்கு வாரத்தின் மையமான புதன்கிழமையில் நவநாள் வழிபாடு செய்ய பங்கு மக்கள் மகிழ்ச்சியோடு சக்திவாய்ந்த இடைவிடா சகாய தாயின் உருவத்தை அமைத்து நவ நாள் வழிபாடும் நடைபெறுகிறது. நம்பிக்கையிலும் நட்பிலும் நல்ல வாழ்விலும் கீழமணக்குடி மக்கள் தன்னிகரில்லா வளர்ச்சியடைய முன்னோக்கி நடைபயில, இடைவிடா சகாயத் தாய் கீழமணக்குடி மக்களின் வாழ்விலும் பங்கு சமூகத்திலும் செய்த எல்லா நலன்களுக்காக சொல்லும் நன்றியின் ஆரம்ப வழிபாடுதான் இந்தப் புனிதமான நவநாள் வழிபாடு ஆகும். ஏராளமான மக்கள் மறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் அன்னையை தரிசித்து நலம் பெற்று செல்வதும், புதன்கிழமைகளில் இவ்வாலயம் மக்களால் நிரம்பி வழிந்தோடுவதும் குறிப்பிடத் தக்கது. 

மேலும் மாதத்தின் கடைசி சனிக்கிழமை மாலையில் நடைபெறும் சகாய அன்னைக்கு ஒப்புக்கொடுக்கும் நன்றி திருப்பலியும், தொடர்ந்து ஆலயத்தை சுற்றி நடைபெறும் சகாய அன்னையின் சப்பர பவனியும், குணமளிக்கும் வழிபாடும், நற்கருணை ஆசீரும் இவ்வாலயத்தில் தனிச் சிறப்புக்கு ஒரு காரணமாகும்.

24.09.2017 -முதல் இன்று வரை....


பங்கின் ஆன்மீக மற்றும் முக்கிய பொது  வளர்ச்சிப்பணிகள்:

24.09.2017- திருமண மண்டப விரிவாக்க கட்டடம் திறப்பு 

06.10.2017- இறை இரக்க செபமாலை மற்றும் முதல் வெள்ளி வழிபாடு ஆரம்பம்.

22.10.2017- மாபெரும் விவிலிய கண்காட்சி அறிமுகம் ஆரம்பம்

01.11.2017- சுனாமி நினைவுத் தூண் திறப்பு.

02.01.2018- புதிய சகாய அன்னையின் சுரூபம் மற்றும் புதிய கூண்டு மந்திரிக்கப்பட்டது.

15.01.2018- ஆலய வளாகத்தில் 19 அன்பியங்களும் பொங்கலிட, தமிழ் பண்பாடு முறையில் பொங்கல் திருப்பலி அறிமுகப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டது.

31.01.2018- சகாய மாதா நவநாள் முன்னிட்டு திருப்பணி பொருட்கள் விற்பனை அறிமுகம் செய்யப்பட்டது.

10.02.2018 - கீழமணக்குடி யில் சரக்குப் பெட்டக மாற்று முனைய திட்ட எதிர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

14.02.2018- பங்கில் புற்றுநோயை உள்ளவர்களுக்காக சிறப்பு தவக்கால உண்டியல் அறிமுகப்படுத்தி உதவி செய்யப்பட்டது.

09.03.2018- தவக்காலத்தில் 40 மணி நேர ஆராதனை புதிதாக ஆரம்பிக்கப்பட்டது.

22.03.2018- போர்ச்சுக்கல் நாட்டில் இருந்து மாதா சுரூபம் கொண்டுவந்து சிறப்பு வழிபாடு ஒருநாள் முழுவதும் நடைபெற்றது.

07.04.2018- கீழமணக்குடி கடற்கரையில் சரக்குப் பெட்டக முனையம் திட்ட எதிர்ப்புப் போராட்டம் கடலிலும் கரையிலும் நடைபெற்றது.

01.05.2018- மே மாத வணக்க சிறப்பு வழிபாடு அறிமுகம் ஆரம்பம்.

10.06.2018- புனித அந்தோணியார்  குருசடியில் புதிய சுரூபம் வைக்கப்பட்டது.

01.10.2018- அகில உலக மூத்த குடிமக்கள் தினம் அறிமுக விழா.

01.11.2018- முதியோர் உணவு திட்டம் அறிமுகம் ஆரம்பம்.

17.01.2019- பங்கின் மண்ணின் மைந்தர் அருட்பணி. ஸ்டீபன் அந்தோனி அவர்கள் உரோமையில் திருத்தந்தையால் மாலை 04.30 மணிக்கு ஆயராக அறிவிக்கப்பட்ட நாள்.

24.02.2019- மண்ணின் மைந்தர் மேதகு ஆயர். ஸ்டீபன் அந்தோனி அவர்கள் தூத்துக்குடி மறைமாவட்டதிற்காக புதிய ஆயராக குருத்துவ திரு நிலைப்பாடு நடைபெற்ற நாள்.

03.06.2019- பங்கு மக்களால் பள்ளிக்கு முதல் முதலாக கல்விசீர் வழங்கிய நாள்.

06.06.2019- மேலமணக்குடி கீழமணக்குடி இடையேயுள்ள தூண்டில் வளைவு நீட்டுதல் திட்டம் பற்றிய ஆலோசனை  கூட்டம் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடைபெற்றது.

01.12.2019- புதிய பங்குப்பேரவை கூட்ட அரங்கம் திறப்பு விழா.

29.12.2019- OMI சபையிலிருந்து திருத்தொண்டர் அருண் கிளாரட்  அவர்கள் பங்கிற்கு  பணியாற்ற மறைமாவட்டத்தில் இருந்து வருகை தந்தார்கள்.

15.03.2020- மண்டபத்தில் புதிய கழிப்பறைகள் கட்டப்பட்டது.


பங்கில் அடிக்கடி நடைபெறும் நிகழ்வுகள்:

கீழமணக்குடி பங்கில் ஒவ்வொரு மாதமும் மறைக்கல்வி மன்றம், அன்பிய ஒருங்கிணைப்பு, பக்த சபை ஒருங்கிணைப்பு ஆகியோர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் நடைபெறுகிறது. 

ஒவ்வொரு பக்த சபையினர்கள் தங்களுடைய விழாக்களை கொண்டாடுவதற்கு முந்தைய வாரத்தில் சிறப்பு பயிற்சிகள் தியானங்கள் அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

மக்கள் ஆரோக்கியமாக வாழ மருத்துவ முகாம்கள் அவ்வப்பொழுது பங்கில் நடைபெறுகிறது.

சிறார்கள், இளம் கிறிஸ்தவ மாணாக்கர்கள், இளையோர் மற்றும் இளம்பெண்கள் ஆகியோர் மீது சிறப்பு கவனம் எடுத்து பயிற்சிகளும் பங்கு சார்பாக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்க கூடிய மாணாக்கர்களுக்கு எதிர்கால வழிகாட்டுதல் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

பங்கின் சுற்றுப்புற சுகாதாரம் தூய்மை மற்றும் சமூக பொருளாதார அரசியல் விழிப்புணர்வு மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கான பயிற்சிகள் ஹீல் இயக்கத்தினரால் கொடுக்கப்படுகிறது.

 பங்கு திருவிழாவை முன்னிட்டு சிறார்கள் இளையோர்கள் பெரியவர்கள் என்று ஒரு நாள் சிறப்பு தியானம் நடைபெறுகிறது.

ஒவ்வொரு வருடமும் பங்கு குடும்ப விழா எடுக்கின்ற பொழுது விழா நினைவு திட்டமாக ஊரில் ஏதாவது ஒரு வளர்ச்சிப்பணிகள் நடைபெறும்.


பங்கில் செயல்படும் பக்த சபை சங்க இயக்கங்கள் :

1. பங்கு மேய்ப்புப் பணி பேரவை

2. நிதிக்குழு

3. மறைக்கல்வி மன்றம்

4. திருவழிப்பாட்டுகுழு

5. பாடகற்குழு 

6. பீடப்பூக்கள்

7. சிறார் இயக்கம்

8. இளங்கிறிஸ்தவ மாணாக்கர் இயக்கம் 

9. தூய மிக்கேல் அதிதூதர் இளையோர் இயக்கம் 

10. தூய மிக்கேல் அதிதூதர் இளம்பெண்கள் இயக்கம்

11. கோல்பிங் இயக்கம்

12. சாந்தி தான் இயக்கம்

13. பெண்கள் இயக்கம்

14. நற்கருணை சபை

15. சூசையப்பர் சபை 16. பிரான்சிஸ்கன் மூன்றாம் சபை 

17. மரியாயின் சேனை (ஆண்கள்) 

18. மரியாயின் சேனை (பெண்கள்)

19. புனித வின்சென்ட் தே-பவுல் சபை

20. கிறிஸ்தவ வாழ்வு சமூகம் (ஆண்கள்) 

21. கிறிஸ்தவ வாழ்வு சமூகம் (பெண்கள்)

22. மீனவர் சங்கம்

23. சிபிடி சங்கம் 

24. குடும்ப நல பணிக்குழு

25. இறைஇரக்க பணிக்குழு

26. அன்பியங்கள் 

27. அன்பிய ஒருங்கிணைப்பு 

28. பக்த சபை ஒருங்கிணைப்பு

29. புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளி

30. கல்விக்குழு

31. பிரான்சிஸ்கன் மரியாளின் ஊழியர் சபை அருட்சகோதரிகள்.


பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. அருட்பணி. அகஸ்டின் பெர்னாண்டோ (1960-1961)

2. அருட்பணி. ஸ்டீபன் (1961-1965)

3. அருட்பணி. மரியதாசன் (1965 -08.06.1971)

4. அருட்பணி. வென்சஸ்லாஸ் (08.06.1971- 27.05.1974)

5. அருட்பணி. மெல்கியாஸ் 27.05.1974

6. அருட்பணி. மாசில்லாமணி 15.01.1980

7. அருட்பணி. பிரான்சிஸ் போர்ஜியா (15.01.1980- 17.05.1982)

8. அருட்பணி. வென்சஸ்லாஸ் (17.05.1982 -10.05.1986)

9. அருட்பணி. சிறில் பெர்னாண்டோ (10.05.1986 -24.05.1987)

10. அருட்பணி. மேரி ஜாண் (24.05.1987 -24.05.1988)

11. அருட்பணி. மரிய சூசை 26.05.1989

12. அருட்பணி. சேவியர் ராஜா (26.05.1989 -28.05.1992)

13. அருட்பணி. பெர்க்மான்ஸ் (28.05.1992 -30.05.1997)

14. அருட்பணி. வின்சென்ட் (30.05.1997 -19.11.1997)

15. அருட்பணி. லாரன்ஸ் (19.11.1997 -18.05.2002)

16. அருட்பணி. விமல்ராஜ் 18.05.2002

17. அருட்பணி. பீட்டர் அமல்ராஜ் (13.09.2005- 06.06.2006)

18. அருட்பணி. பாபு ஜாண் (06.06.2006 -28.05.2009)

19. அருட்பணி. புஷ்பராஜ் (28.05.2009- 13.05.2014)

20. அருட்பணி. அலோசியஸ் மரிய பென்சிகர் (14.05.2014 -24.09.2017)

21. அருட்பணி. ஜாண் பெனிட்டோ (24.09.2017 முதல் தற்போது வரை...)


பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்ட கீழமணக்குடி ஆலயத்திற்கு பல பகுதிகளிலும் இருந்தும் ஏராளமான இறை மக்கள் வந்து ஜெபித்து நலம் பெற்றுச் செல்கின்றனர். வாருங்கள் பரிசுத்த திருச்சிலவையின் ஆசீர் பெற்றுச் செல்லுங்கள்... 

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருள்பணி. ஜாண் பெனிட்டோ அவர்கள்.