582 அன்னை ஜெயராக்கினி ஆலயம், ஓமலூர்

     

அன்னை ஜெயராக்கினி ஆலயம் 

இடம் : நாரணம்பாளையம், ஓமலூர் தாலுக்கா, 636309 

மாவட்டம் : சேலம் 

மறைமாவட்டம் : சேலம் 

மறைவட்டம் : மேட்டூர் 

நிலை : பங்குத்தளம் 

கிளைப்பங்கு : பெரியார் பல்கலைக்கழகம் (TNHB) 

பங்குத்தந்தை : அருள்பணி. N. அருள்சுந்தர்

குடும்பங்கள் : 250

அன்பியங்கள் : 9

வழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு திருப்பலி : காலை 07.00 மணி

வாரநாட்களில் திருப்பலி : மாலை 06.30 மணி

மாதத்தின் முதல் சனி : அன்னை ஜெயராக்கினி அருளகத்தில் மாலை 06.30 மணிக்கு சிறப்பு திருப்பலி. 

நற்கருணை ஆராதனை : மாதத்தின் முதல் வெள்ளி மாலை 07.00 மணி. 

ஜெபமாலை : தினமும் மாலை 06.00 மணி. 

அன்னையின் பெருவிழா நிகழ்வுகள் :

ஜனவரி 25 -ம் தேதி கொடியேற்றம். 

பிப்ரவரி 2ஆம் தேதி அன்னையின் பெருவிழா :

காலை 08.15 மணிக்கு மெழுகுதிரி பவனி. 

காலை 08.30 மணிக்கு ஆடம்பர கூட்டுப்பாடற்பலி. 

மாலை 06.30 மணிக்கு திருப்பலி, வேண்டுதல் தேர்பவனி 

இரவு 12.30 மணிக்கு அன்னையின் அலங்காரத் தேர்பவனி. 

பிப்ரவரி 3ஆம் தேதி:

காலை 07.00 மணிக்கு நன்றித் திருப்பலி 

இரவு 08.00 மணிக்கு அன்னையின் கொடியிறக்கம். 

பங்கில் நடைபெறுகின்ற பிற திருவிழாக்கள் :

புனித அந்தோனியார் திருவிழா : 

ஜனவரி 17ஆம் தேதி. மாலை 05.30 மணிக்கு பொங்கல். ஆடு, மாடுகள், வாகனங்கள் மந்திரிக்கப்படும். மாலை 06.00 மணிக்கு திருப்பலி, மாலை 07.00 மணிக்கு புனித அந்தோனியார் தேர்பவனி. 

வணக்கமாதா திருவிழா : மே 31ஆம் தேதி அன்னை மரியாளின் மாதமாம் மே மாதம் 1 ம் தேதி முதல் 31 ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் மாலை 06.00 மணிக்கு ஜெபமாலை, வணக்கமாதா பிரார்த்தனை மற்றும் திருப்பலி. மே 31 -ம் தேதி மாலை 06.00 மணிக்கு சிறப்பு திருப்பலி, தொடர்ந்து அன்னையின் தேர் ஊரைச்சுற்றி பவனி வரும். 

ஆரோக்கிய அன்னை திருவிழா : செப்டம்பர் 8ஆம் தேதி

மாலை 06.00 மணிக்கு சிறப்பு திருப்பலி தொடர்ந்து அன்னையின் தேர்பவனி ஊரைச் சுற்றி பவனி வரும். 

இம் மண்ணின் அருள்பணியாளர்கள்:

1. அருள்பணி. D. M சவரிமுத்து (late) 

2. அருள்பணி. S. அருளப்பன் 

3. அருள்பணி. Dr. S. இம்மானுவேல் 

4. அருள்பணி. M. கிறிஸ்துராஜ் 

இம் மண்ணின் அருள்சகோதரிகள் :

5. அருள்சகோதரி. S. புஷ்பா 

6. அருள்சகோதரி. M. கேத்ரின் மேரி

7. அருள்சகோதரி. M. நிர்மலா மேரி 

8. அருள்சகோதரி. M. பிரிஜித் மேரி 

9. அருள்சகோதரி. A. விமலா அந்தோணி 

10. அருள்சகோதரி. N. அனிதா ஆரோக்கியமேரி

11. அருள்சகோதரி. A. ஜெயராணி 

12. அருள்சகோதரி. A. ஸ்டெல்லா மேரி 

13. அருள்சகோதரி. N. கிரேஸி

Facebook ID : Annai Jeyarakkni Church Naranampalayam Salem

YouTube : Annai Jeyarakkni Church Naranampalayam

வழித்தடம் :  சேலம் -பெங்களூரு நெடுஞ்சாலையில் ஓமலூர் சுங்கச்சாவடியின் வலதுபுறத்தில் 5கி.மீ தொலைவில் நாரணம்பாளையம் உள்ளது.

Location map : https://maps.google.com/?cid=14553008762651100023

ஆலய வரலாறு :

தென்னிந்தியாவில் தன்னிகரில்லாத தனிச் சிறப்புகளுடன் திகழும் தமிழகத்தின், கொங்குநாட்டில் இருப்பது, சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓமலூர் வட்டமாகும். இவ்வட்டத்தில் சேர்வராயன் மலையில் மலைவளமும், கிழக்கு சரபங்கநதியின் நீர்வளமும் சூழ சுமார் 400 ஆண்டுகளாக கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் வாழ்ந்து வரும் பகுதிதான் நாரணம்பாளையம் புதூர் ஆகும். 

கி. பி 1623 ல் தத்துவ போதகர் இராபர்ட் தே நோபிலி அவர்கள், திருச்சியிலிருந்து, சேந்தமங்கலம் வழியாக சேலம் வந்து தங்கி மறைப்பணியாற்றி பலரை கிறிஸ்தவர்களாக்கினார். கி.பி 1625 ல் சேலத்திலிருந்து தாரமங்கலம் அருகிலுள்ள மாரமங்கலத்திற்கு வந்தார். அங்கு 10 ஆண்டுகள் இம்மானுவேல் மார்ட்டின் அடிகளார் மற்றும் அந்துவான் தெவிக்கோ அடிகளாருடன் தங்கி பணிசெய்த போது, நாரணம்பாளையம் என்னும் இவ்வூருக்கு இராபர்ட் தே நோபிலி கால்நடையாகவே வருகைதந்து கிறிஸ்தவ விசுவாசத்திற்கு வித்திட்டதாக அறிய முடிகிறது. 

கி.பி 1679 ம் ஆண்டு அருள்பணி. ரோட்ரிக்ஸ் அவர்கள் அணைக்கரைப்பாளையம் (எடப்பாடி) பங்குத்தந்தையாக இருந்த போது, இவ்வூர் எடப்பாடி பங்கில் இணைந்து இருந்தது. அப்போது ஒரு கீற்றுக் கொட்டகை அமைத்து வழிபாடுகள் செய்து வந்தனர். பின்னர் 18 ம் நூற்றாண்டின் துவக்கத்தில் மதுரையை தலைமையிடமாகக் கொண்ட இயேசுசபை குருக்கள் R.C செட்டிப்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு இங்கு பணி செய்துள்ளனர். தொடர்ந்து புதுவை மறைமாநில வேதபோதகச் சபை குருக்களால் கண்காணிக்கப்பட்டு வந்துள்ளது. 

கி.பி 1865 ம் ஆண்டு அருள்பணி. வெர்டியர் பங்குத்தந்தையாக இருந்து போது, ஓடு வேய்ந்த ஆலயம் ஊர் மக்களால் கட்டப்பட்டது. ஆண்டுதோறும் ஜனவரி 20 ம் தேதி செபஸ்தியார் பண்டிகையை ஊர் விருந்து வைத்து கொண்டாடி, ஊரைச்சுற்றி செபஸ்தியார் தேர் ஊர்வலம் நடைபெற்றுள்ளது. 

புதுவை மறைமாநில வேதபோதக சபை குருக்களால் இவ்வூர் நிர்வகிக்கப்பட்டு வந்ததால், இங்கு கட்டப்பட்ட ஆலயத்திலும் ஜெயராக்கினி அன்னையை பாதுகாவலியாக வைத்துள்ளனர். 

ஜெயராக்கினி அன்னை சுரூபமானது பிரான்ஸ் நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டு, சூரமங்கலம் இரயில் நிலையத்திலிருந்து ஊர் மக்களால் கால்நடையாக தூக்கி வருகிற வேளையில், அசுத்த ஆவி பிடித்தவர்கள் எங்களை எரிப்பதற்கு ஒரு சக்தி வந்து விட்டதே என்று அலறியடித்து ஓடியதாக முன்னோர்கள் பக்தியுடன் தெரிவிக்கின்றனர். 

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆலயத்தின் தெற்குப் பகுதியில் இருந்த குடிசைகள் தீ விபத்துக்கு உள்ளாயின. அந்த தீயானது ஊருக்குள் பரவாத வண்ணம் ஊர் மக்கள் மாதாவிடம் மண்டியிட்டு மன்றாட அத்தீயானது ஊருக்குள் பரவவில்லை. 

இவ்வூருக்கு கோடியூர், விரியூர், வாணியம்பாடி, பூலாப்பட்டி போன்ற பல்வேறு ஊர்களிலிருந்தும் மக்கள் குடிபெயர்ந்து வந்துள்ளார்கள். கி.பி 1919 முதல் கி.பி 1930 வரை பணியாற்றிய அருள்பணி. போன்னபோந்து அவர்களின் பணிக்காலத்தில் ஆலயத்தின் நீளத்தை 30 அடி முழமாக நீட்டினார். 

அருள்பணி. வச்சோன் அவர்கள் பணிக்காலத்தில் ஆலயமும் நிலமும் மேதகு ஆயர் ஹென்றி புரூனியர் அவர்களுக்கு கிரயம் செய்து கொடுக்கப் பட்டது. 

ஜனவரி 25 ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து பிப்ரவரி 2 ம் தேதி காணிக்கை மாதா திருநாளை, ஜெயராக்கினி அன்னை திருநாளாக கொண்டாடி வந்துள்ளனர். 

பிப்ரவரி 2 ம் தேதி நடைபெறும் தேர் பவனியாக ஊர் வீதிகளில் வரும் போது, மக்கள் குடும்பத்துடன் கூடி ஒவ்வொரு வீட்டிலும் மெழுகுவர்த்தி ஏந்தி மாதாவை வேண்டுவது வழக்கம். அனைவரும் வேண்டுதல் செய்த பிறகு தேருக்கு தண்ணீர் ஊற்றுவார்கள். 

இவ்வூரில் இருந்துபலர் சேலம், சாமிநாதபுரம் லீபஜார், பள்ளப்பட்டி, ஆத்தூர்; தருமபுரி மாவட்டத்தில் உள்ள சேசுராஜபுரம், கேத்தம்பட்டி, பூலாப்பட்டி, கோம்பை ஆகிய ஊர்களுக்கும்; கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒட்டர்தொட்டி, மார்ட்டள்ளி, சந்தனபாளையம், மரியமங்கலம், தோமையார்பாளையம், கொள்ளேகால், ஜாகிரி சிக்மங்களூர், போன்ற இடங்களுக்கும் குடிபெயர்ந்துள்ளனர். 

1973 ஆம் ஆண்டு 27 அடி உயரம் கொண்ட நான்கு சக்கரங்களைக் கொண்ட தேர் ஒன்று ஊர் மக்களால் செய்யப்பட்டது. 

மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே புதிய ஆலயம் கட்ட மக்கள் விரும்பினர். அப்போதைய பங்குத்தந்தை அருள்பணி. அந்தோனி மரிய ஜோசப் அவர்களின் சீரிய முயற்சியால் ஊர் மக்கள் ஒன்றிணைந்து நிதி சேகரித்து 29.09.1996 அன்று 1ஏக்கர் 10சென்ட் நிலம் 

(இதில் திருமதி. அந்தோணியம்மாள் க/பெ திரு. மரியநாயகம் ஆசிரியர் அவர்கள் 20 சென்ட் நிலத்தையும், திரு. எம் அந்தோணி ஆசிரியர் அவர்கள் 15 சென்ட் நிலத்தையும் தானமாக வழங்கினர்.) 

அன்றைய ஆயர் மேதகு மைக்கேல் போஸ்கோ துரைசாமி அவர்களின் பெயருக்கு கிரயம் செய்தனர். 

07.10.1997 அன்று மேதகு ஆயர் மைக்கேல் போஸ்கோ துரைசாமி அவர்களால் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 

ஆலயம் கட்ட கடைக்கால் அமைக்கும் பணியை ஊர் மக்களே ஒன்றிணைந்து ஊதியம் பெறாமல் செய்தனர். ஆலயத்திற்கு தேவையான அனைத்து கிரில் வேலைகளையும் ஆல்பர்ட் என்ஜினீயரிங் வர்க்ஸ் திரு. கே. சுந்தர்ராஜ் அவர்கள் இலவசமாக செய்து கொடுத்தார். ஆலய கோபுரம் அமைக்கும் செலவை திரு. சந்தியாகு ஆசிரியர் -இருதயமேரி குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டனர். ஆலய வளாகத்தை சமப்படுத்த தேவையான மண்ணை திரு. M. தொபியாஸ் அவர்கள் தமது நிலத்தில் இருந்து இலவசமாக வழங்கினார். ஆலய வளாகத்தை சமப்படுத்த மக்கள் இரவு பகலாக பாடுபட்டு உழைத்தனர். பங்கின் இளைஞர்கள், பெரியவர்கள், ஊர் மக்கள், மற்றும் அப்போது புதிகாக ஆயராக பொறுப்பேற்ற மேதகு செ. சிங்கராயன் அவர்களின் ஒத்துழைப்புடன் ஆலயம் கட்டப்பட்டு 25.03.2001 அன்று ஆயர் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது. அருள்பணி. A.M.A இருதயநாதன் அவர்கள் பங்கின் பரிபாலகராக தங்கி பணியாற்றினார். 

அருள்பணி. D. A. பிரான்சிஸ் அவர்களின் சீரிய முயற்சியாலும் மக்களின் நன்கொடைகளாலும் 30.03.2007 அன்று 43 சென்ட் நிலம் வாங்கப்பட்டது. 

10.06.2007 அன்று தனிப் பங்காக உயர்த்தப் பட்டு முதல் பங்குத்தந்தையாக அருள்பணி. A. X. இருதயம் அவர்கள் பணிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றினார். 

அருள்பணி. R. பிரான்சிஸ் பணிக்காலத்தில் தேர் கொட்டகை அமைக்கப் பட்டது. 

திரு. A. சக்கரையாஸ் -கார்மல்மேரி குடும்பத்தினர் தங்கள் சொந்த செலவில்  அழகிய மணிக்கோபுரம் கட்டிக் கொடுத்தனர். இதனை 02.02.2009 அன்று மேதகு ஆயர் செ. சிங்கராயன் அவர்கள் அர்ச்சித்து திறந்து வைத்தார். இதில் உள்ள 86கிலோ மணியானது திரு. M. அம்புரோஸ் ஆசிரியர் அவர்களால் வாங்கித் தரப்பட்டது. 

அருள்பணி. A. சகாயராஜ் பணிக்காலத்தில் ஆலயத்தின் ஒரு பகுதிக்கு சுற்றுச் சுவரும், அன்னை ஜெயராக்கினி தொடக்கப்பள்ளிக்கு பள்ளிக்கு சுற்றுச்சுவரும், கூடுதலாக இரண்டு வகுப்பறைகளும் கட்டப்பட்டன. 

அருள்பணி. S. சவரி பணிக்காலத்தில் ஆலயத்தின் முன்புறம் சுற்றுசுவர் கட்டினார். மேலும் பழைய ஆலயத்தை அகற்றி விட்டு அன்னை ஜெயராக்கினிக்கு எழில்மிகு அருளகம் ஒன்றை எழுப்பினார். 

அருள்பணி. S. செபாஸ்டின் பணிக்காலத்தில் ஆலய பீடத்தை நவீன கலை வண்ணங்களுடன் மாற்றியமைக்கும் பணிகளை மேற்கொண்டார். 

தற்போதைய பங்குத்தந்தை அருள்பணி. N. அருள் சுந்தர் அவர்கள், ஆலய பீடப்பணிகளை தொடர்ந்து மக்களின் ஒத்துழைப்புடன் செய்து வருகின்றார்.

ஜெயராக்கினி நிதியுதவி துவக்கப்பள்ளி:

17.04.1936 ல் துவக்கப் பள்ளியாக தொடங்கப்பட்டு, தற்போது 84 ஆண்டுகளாக சிறப்புற இயங்கி வருகிறது. திரு. S. சந்தியாகு அவர்கள் தலையாசிரியராக இருந்த போது ஐந்து ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளியாக உயர்த்தினார். 

ஷூவென்ஸ்டாட் மரியாளின் சகோதரிகள் இல்லம்:

1926 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட்ட இந்த சபையானது, தற்போது சுமார் 3000 அருள்சகோதரிகளைக் கொண்டு உலகம் முழுவதும் பணியாற்றி வருகின்றனர். 1985 லிருந்து இச்சபை சகோதரிகள் ஜெர்மனியிலிருந்து இந்தியா வந்து கேரளாவிலும், பின்னர் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திராவிலும் பணியாற்றத் தொடங்கினர். 

2008 ஆம் ஆண்டு முதல் சேலத்தில் தமிழ் சகோதரிகள் பணியைத் தொடங்கி, 2014 ஆம் ஆண்டு முதல் நாரணம்பாளையம் கிராமத்தில் இறைப்பணியாற்றி வருகின்றனர். புதிய கன்னியர் இல்லமானது 20.08.2016 அன்று மேதகு ஆயர் செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது. 

ஆலய உபதேசியார்:

திரு. S. சந்தியாகு, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். ஆலய உபதேசியாராக தமது 94 வயதிலும் சிறப்பாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

பங்கின் பங்கேற்பு அமைப்புகள் :

1. மரியாயின் சேனை 

2. புனித வின்சென்ட் தே பவுல் சபை 

3. மறைக்கல்வி மன்றம் 

4. பாடகற்குழு 

5. இளையோர் குழு.  

பங்கில் உள்ள அன்பியங்கள் :

1. புனித சவேரியார் அன்பியம் 

2. புனித ஆரோக்கிய மாதா அன்பியம் 

3. புனித பெரியநாயகி மாதா அன்பியம் 

4. புனித ஜெயராக்கினி மாதா அன்பியம் 

5. புனித அல்போன்சா அன்பியம் 

6. புனித அன்னை தெரசா அன்பியம் 

7. புனித அந்தோனியார் அன்பியம் 

8. புனித குழந்தை தெரசாள் அன்பியம் 

9. புனித அசிசியார் அன்பியம் 

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. அருள்பணி. A. X. இருதயம் (2007-2009)

2. அருள்பணி. R. பிரான்சிஸ் (2009-2010)

3. அருள்பணி. A. சகாயராஜ் (2010-2013)

4. அருள்பணி. S. சவரி (2013-2018)

5. அருள்பணி. S. செபாஸ்டின் (2018-2020)

6. அருள்பணி. N. அருள் சுந்தர் (2020 முதல் தற்போது..) 

ஜெயராக்கினி அன்னைக்கு சமர்ப்பணம்🙏

அருள்மிகப் பெற்ற ஜெயராக்கினி தாயே வாழ்க! 

கடவுளின் அருள் இரக்கத்கை நாங்கள் கண்டடைய 

ஆவியின் வல்லமை எங்கள் மேல் நிழலிட 

ஆசீர் பெற்ற வாழ்க்கை எங்களுக்கு அமைத்திட! 

அரும்பெரும் செயல்கள் எங்கள் வாழ்வில் வளப்படுத்திட

மன்றாடி அருளும் ஜெயராக்கினி தாயே! 

தகவல்கள் & புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருள்பணி. N. அருள்சுந்தர்

திரு. S. அருள் ரொசாரியோ (HM) 

செல்வன். A. ரஸ்கின்.