524 புனித அந்தோணியார் ஆலயம், ஜான்சன்பேட்டை


புனித அந்தோணியார் ஆலயம்
இடம் : ஜான்சன்பேட்டை

மாவட்டம் : சேலம்
மறைமாவட்டம் : சேலம்
மறைவட்டம் : சேலம்

நிலை : பங்குத்தளம்

பங்குத்தந்தை : அருட்பணி. ஜான்போஸ்கோ பால்

குடும்பங்கள் : 650
அன்பியங்கள் : 34

திருப்பலி நேரங்கள் :

ஞாயிறு : காலை 07.00 மணி, காலை 10.00 மணி, மாலை 06.30 மணிக்கும் திருப்பலி.

வாரநாட்கள் : காலை 06.30 மணிக்கு திருப்பலி

செவ்வாய் : காலை 11.30 மணிக்கு புனித அந்தோணியார் நவநாள் திருப்பலி, நற்கருணை ஆராதனை. மாலை 06.30 மணிக்கு திருப்பலிமற்றும் நற்கருணை ஆராதனை.

சனி : மாலை 06.30 மணிக்கு புனித மரியன்னை நவநாள், திருப்பலி.

மாதத்தின் முதல் செவ்வாய் : காலை 11.00 மணிக்கு நவநாள் திருப்பலி, நற்கருணை ஆராதனை. மாலை 06.30 மணிக்கு திருப்பலி, நற்கருணை ஆராதனை.

மாதத்தின் முதல் வெள்ளி : மாலை 06.30 மணிக்கு திருப்பலி, நற்கருணை ஆராதனை மற்றும் திரு இருதய ஆண்டவர் தேர்பவனி.

மாதத்தின் முதல் சனி : மாலை 06.30 மணிக்கு திருப்பலி, புனித மரியன்னையின் தேர்பவனி.

திருவிழா : ஜூன் மாதம் 1ம் தேதி கொடியேற்றம், தொடர்ந்து 12 நாட்கள் நவநாள், ஜூன் 13ம் தேதி புனித அந்தோணியார் பெருவிழா.

மண்ணின் இறையழைத்தல்கள்:
1. மேதகு ஆயர் அந்தோணிசாமி, கம்போடியா மறைமாவட்ட ஆயர்
2. அருட்பணி. பன்னீர்செல்வம்
3. அருட்பணி. சுரேஷ்
4. அருட்பணி. மர்பி செபாஸ்டின்
5. அருட்சகோதரி. லூர்துமேரி
6. அருட்சகோதரி. அல்போன்ஸ்
7. அருட்சகோதரி. இம்மாகுலா

மண்ணின் மைந்தர்கள் (பயிற்சியில்)
1. சகோதரி. நித்யாமேரி
2. சகோதரர். அருளானந்தம்
3. சகோதரர். தினேஷ்
4. சகோதரர். நவீன்

வழித்தடம் : சேலத்திலிருந்து அஸ்தம்பட்டி வழியாக 3கி.மீ தொலைவில் ஜான்சன்பேட்டை உள்ளது.

Location map : St. Antony’s Shrine Court Rd, Narasus, Johnsonpet,
https://maps.google.com/?cid=6880217251661678406

ஆலய வரலாறு :

சேலம் மறைமாவட்டத்தில் புகழ்பெற்ற ஆலயமாக விளங்கும் ஜான்சன்பேட்டை புனித அந்தோணியார் ஆலயமானது, கிழக்கில் பொன்னம்மாபேட்டை முதல் மேற்கில் அஸ்தம்பட்டி வரை, வடக்கில் ஏற்காடு மலையடிவாரம் முதல் தெற்கில் சேலம் -ஆத்தூர் பிரதான சாலை வரை பரந்து விரிந்து சிறப்பு பெற்று விளங்குகிறது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் திரு. ஜான்சன் என்ற மாவட்ட ஆட்சியர் அவர்களால், குமாரசாமிப்பட்டியில் வசித்த மக்களுக்கு ஓரிடம் வழங்கப்பட்டது. அந்த இடம் தான் இன்று ஜான்சன்பேட்டையாக மாறியுள்ளது.

முதலில் இங்கு குடியிருந்த 6 கிறிஸ்தவ குடும்பங்களுக்காக ஆலயம் கட்ட இடம் ஒதுக்கப் பட்டது. ஓலைக் கொட்டகை ஆலயம் அமைத்து தூத்துக்குடி மறைமாவட்டத்தைச் சேர்ந்த திரு. துரைசாமி அவர்கள் கொண்டு வந்த புனித அந்தோணியார் சுரூபத்தை வைத்து இறைவனிடம் ஜெபித்து வந்தனர்.

1933 ஆம் ஆண்டு முதல் ஜான்சன்பேட்டை, செவ்வாப்பேட்டை ஆலயத்தின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்தது. காலத்தின் தேவைக்கேற்ப அருட்பணி. உர்மாண்ட் அவர்களால் ஒரு சிறு ஆலயம் எழுப்பப்பட்டு, ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது.

1953 ஆம் ஆண்டு செவ்வாப்பேட்டை பங்கிலிருந்து, அரிசிப்பாளையம் பிரிக்கப்பட்டு தனிப்பங்கான போது, மேதகு ஆயர் செல்வநாதர் அவர்களால் ஜான்சன்பேட்டையானது, அரிசிப்பாளையத்தின் கிளைப் பங்காக மாற்றப்பட்டது.

ஜான்சன்பேட்டையின் ஆன்மீகத் தேவையை நிறைவேற்றும் பொருட்டு 1954 ஆம் ஆண்டில் சேலம் மறைமாவட்ட பொருளர் அருட்பணி. S. C. செபாஸ்டியன் நியமிக்கப் பட்டார்.

தற்போதைய ஆலயத்திற்கு 12.06.1972 அன்று அப்போதைய ஆயர் மேதகு V. S. செல்வநாதர் ஆண்டகை அவர்களால் அடிக்கல் போடப்பட்டு, பணிகள் நிறைவு பெற்று 19.03.1975 அன்று அப்போதைய ஆயர் மேதகு மைக்கேல் போஸ்கோ துரைசாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டு, ஜான்சன்பேட்டையை தனிப்பங்காக உயர்த்தினார். அருட்பணி. பால் அந்தோணிசாமி முதல் பங்குத்தந்தையாக நியமிக்கப் பட்டார்.

சேலம் ஆயர் இல்லம் இவ்வாலயத்திற்கு அருகே இருப்பதால், ஆயர் அவர்களும், மற்றும் பல அருட்தந்தையர்களும் அவ்வப்போது இங்கு வந்து திருப்பலி நிறைவேற்றி வந்தனர்.

அருட்பணி. K. P. ஜோக்கிம் பணிக்காலத்தில் 08.07.1982 அன்று பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டது.

1988 ல் அருட்பணி. M. S. ஜோசப் அவர்களால் பங்குப் பேரவை தோற்றுவிக்கப் பட்டது.

அனைவரின் ஒத்துழைப்புடன் சமுதாயக்கூடம் கட்டப்பட்டு 13.06.1994 அன்று மேதகு ஆயர் மைக்கேல் போஸ்கோ துரைசாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

திருத்தொண்டர் ராயப்பன் அவர்கள் 1960-1994 வரை இங்கு பணிபுரிந்த பங்குத்தந்தையர்களுக்கு உதவியாகவும், மக்களின் ஆன்மீகத் தேவைகள் நிறைவேற்றவும் உறுதுணையாக இருந்தார்.

அருட்பணி. பீட்டர் பிரான்சிஸ் பணிக்காலத்தில் புனித அந்தோணியார் மழலையர் பள்ளி தொடங்கப்பட்டது. மேலும் ஆலயத்தின் முன்புறம் புனித அந்தோணியாரின் புதுமைகள் வடிவமைக்கப்பட்டது.

06 06.1997 அன்று இவ்வாலயத்தின் ஒரு பகுதியாக விளங்கிய வீராணம் பகுதி பிரிக்கப்பட்டு, உடையாப்பட்டி என்ற தனிப்பங்காக அப்போதைய ஆயர் மேதகு மைக்கேல் போஸ்கோ துரைசாமி அவர்களால் நிறுவப்பட்டது.

01.06.2000 அன்று ஆலய முற்றத்தில் புனித அந்தோணியார் குருசடி கட்டப்பட்டு அர்ச்சிக்கப் பட்டது.

13.06.2002 அன்று குருக்கள் இல்லத்தின் மேல்மாடி கட்டப்பட்டு அருட்பணி. D. ஜெகநாதன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

புனித அந்தோணியாரின் புதுமைகளும் அற்புதங்களும் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வந்ததால், தொடர்ந்து பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் ஆலயத்தை புதுப்பித்தும், இறைமக்களின் தேவைகளுக்கேற்ப வசதிகளும் செய்யப்பட்டு வந்தன.

வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நண்பகல் 11.30 மணிக்கு புனித அந்தோணியார் நவநாளுடன் கூடிய குணமளிக்கும் திருப்பலி நடைபெறுகிறது. இதனை அப்போதைய பங்குத்தந்தை அருட்பணி. மதலைமுத்து மற்றும் முன்னாள் உதவிப் பங்குத்தந்தை அருட்பணி. அருள் பிரான்சிஸ் சேவியர் அவர்களும் இதனை ஆரம்பித்து வைத்து மக்களின் விசுவாசத்தை அதிகரித்தனர்.

குழந்தை பாக்கியம், காணாமற்போன பணம், பொருட்கள் திரும்பக் கிடைப்பது, திருமண வரன் அமைவது என்று பல்வேறு வேண்டுதல்கள் புனிதரின் இறைவனிடம் செபித்து பெற்றுக் கொள்கின்றனர்.

அருட்பணி. மதலைமுத்து மற்றும் அருட்பணி. சின்னப்பன் சகாயராஜ் ஆகியோரின் முயற்சியாலும், பங்கு மக்களின் ஒத்துழைப்பு மற்றும் நிதியுதவியுடன் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, உள் அலங்காரம் செய்யப்பட்ட மேற்கூரையும், புனிதரின் திருப்பண்டமும் வைக்கப்பட்ட புதிய பீடமும் 16.01.2005 அன்று மேதகு ஆயர் செ. சிங்கராயர் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

அருட்பணி. ஜேக்கப் அவர்களின் பணிக்காலத்தில் மணிக்கூண்டு கட்டப்பட்டு 22.05.2007 அன்று மேதகு ஆயர் செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

அருட்பணி. மரிய சூசை பணிக்காலத்தில் ஏற்காடு அடிவாரம், கொண்டநாயக்கன்பட்டி, கோரிமேடு ஆகிய பகுதிகளை ஒன்றிணைத்து சின்னகொள்ளப்பட்டி தூய சகாய மாதா பங்கு உருவாக்கப்பட்டது.

தொடர்ந்து பணியாற்றிய அருட்பணி. பிலவேந்திரம் பணிக்காலத்தில் தவக்காலத்தில் ஆன்மீகப் பயணம் அழைத்துச் செல்லத் துவங்கினார்.

மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே ஆலயத்தை விரிவாக்கம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, 22.01.2014 அன்று மேதகு ஆயர் அவர்கள் விரிவாக்கப் பணியை துவக்கி வைத்தார். பங்கு மக்களின் அயராத உழைப்பு மற்றும் நிதியுதவியுடன், அருட்தந்தையர்களின் வழிகாட்டுதலுடன் கட்டப்பட்டு 23.04.2016 அன்று மேதகு ஆயர் செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

இன்றைய பங்குத்தந்தை அருட்பணி. ஜான்போஸ்கோ பால் அவர்களின் முயற்சியால் ஆலயத்தின் வளாகத்தில் தரைத்தளமும், புதிய கொடிக்கம்பமும் நிறுவப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது. இளையோர்குழு ஆரம்பிக்கப்பட்டது. மேலும் ஆலயம் அழகுபடுத்தப் பட்டது.

பங்கில் உள்ள கல்விக்கூடங்கள், இல்லங்கள் மற்றும் நிறுவனங்கள் :
1. St. Antony nursary primary school
2. St. Paul primary school
3. St. Paul higher secondary school
4. புனித தெரசாள் குழந்தைகள் இல்லம்
5. கர்தினால் கிரான் உள்விடுதி
6. புனித தெரசாள் தொழிற்பயிற்சி நிலையம்

ஜான்சன்பேட்டை பங்கில் உள்ள பக்தசபைகள் :
1. பங்குப்பேரவை
2. புனித வின்சென்ட் தே பவுல் சபை
3. மரியாயின் சேனை
4. பரிசுத்த ஆவி செபக்குழு
5. பாடகற்குழு
6. பீடச்சிறுவர்கள் இயக்கம்
7. பாலர்சபை
8. மறைக்கல்வி மன்றம்
9. கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கம்.
10. இளையோர் குழு.

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:
1. அருட்தந்தை. பால் அந்தோணிசாமி (1975-1981)
2. அருட்தந்தை. K. P. ஜோவாக்கிம் (1981-1987)
3. அருட்தந்தை. M. S. ஜோசப் (1987-1990)
4. அருட்தந்தை. M. செல்வம் (1990-1991)
5. அருட்தந்தை. M. சூசை (1991-1992)
6. அருட்தந்தை. S. தியோடர் செல்வராஜ் (1992-1994)
7. அருட்தந்தை. A. பீட்டர் பிரான்சிஸ் (1994-1998)
8. அருட்தந்தை. T. ஜெகநாதன் (1998-2003)
9. அருட்தந்தை. T. மதலைமுத்து (2003-2005)
10. அருட்பணி. A. ஜேக்கப் (2005-2007)
11. அருட்பணி. T. தாமஸ் மாணிக்கம் (2007-2008)
12. அருட்பணி. M. ஞானப்பிரகாசம் (2008-2009)
13. அருட்பணி. I. மரிய சூசை (2009-2011)
14. அருட்பணி. பிலவேந்திரம் (2011-2016)
15. அருட்பணி. ஜான் போஸ்கோ பால் (2016 முதல் தற்போது வரை.)

உதவிப் பங்குத்தந்தையர்கள்:
1. அருட்பணி. ராயப்பன் (1969-1990)
2. அருட்பணி. வேதமுத்து ஜார்ஜ் (200-2002)
3. அருட்பணி. அருள் பிரான்சிஸ் சேவியர் (2003-2004)
4. அருட்பணி. C. சகாயராஜ் (2004-2005)
5. திருத்தொண்டர். ஆசீர்வாதம் (2009-2014)
6. அருட்பணி. V. G. போஸ், சே. ச (2014-2015)
7. அருட்பணி. பவுல்ராஜ் O.S.F.S (2015-2016)

நாள்தோறும் புனித அந்தோணியாரின் பரிந்துரையால் எண்ணிலடங்கா புதுமைகளும், அதிசயங்களும் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. ஏராளமான இறைமக்கள் வந்து திருப்பலியில் பங்கேற்று, புனித அந்தோணியார் வழியாக இறைவனின் அருளாசீரை பெற்றுச்செல்கின்றன.ஜான்சன் மாநகரின் பாதுகாவலராக விளங்கும் கோடி அற்புதரான புனித அந்தோணியாரின் புதுமைகளை காண! பெற்றிட!! விரைந்து வாருங்கள்!!! புனித அந்தோணியாரின் வழியாக உயிர்த்த ஆண்டவரின் ஆசீரைப் பெற்றுச் செல்லுங்கள்!!!

தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி. ஜான்போஸ்கோ பால் அவர்கள் மற்றும் முன்னாள் பங்குத்தந்தை அருட்பணி. பிலவேந்திரம் அவர்கள்.

புகைப்படங்கள் : பங்கு ஆலய இளைஞர்.