828 புனித அந்தோனியார் ஆலயம், அமராவதிவிளை

      

புனித அந்தோனியார் ஆலயம்

இடம்: அமராவதிவிளை

மாவட்டம்: கன்னியாகுமரி

மறைமாவட்டம்: கோட்டார்

மறைவட்டம்: தேவசகாயம் மவுண்ட்

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்கு: புனித அந்தோனியார் ஆலயம், மருங்கூர்

பங்குத்தந்தை அருட்பணி. பிரான்சிஸ் M. போர்ஜியா

குடும்பங்கள்: 120

அன்பியங்கள்: 6

வழிபாட்டு நேரங்கள்

ஞாயிறு திருப்பலி காலை 07:30 மணி

திங்கள், வெள்ளி திருப்பலி மாலை 06:00 மணி

செவ்வாய், வியாழன், சனி திருப்பலி காலை 06:00 மணி

புதன் மாலை 05:30 மணி  நவநாள் திருப்பலி (புனித சகாய மாதா சிற்றாலயம், அமராவதிவிளை)

திருவிழா: மே மாதம் இரண்டாம் வெள்ளி ஆரம்பித்து பத்து நாட்கள்

புலிமலை சகாய மாதா சிற்றாலயத்தில் செப்டம்பர் மாதம் நான்காம் வெள்ளி ஆரம்பித்து, மூன்று நாட்கள் 

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி.‌ ஆன்றனி ஸ்டார்லின், OMD

2. அருட்பணி. ஆன்றனி பிரான்சிஸ், OMD

3. அருட்பணி. ரவி காட்சன் கென்னடி, Diocese of Kottar 

4. அருட்சகோதரி. ஞானபிரகாசி, SAT Vijayawada

5. அருட்சகோதரி. பவுலின் மேரி, SAT

6. அருட்சகோதரி.‌ விர்ஜின் விமலா பாய், SAT

7. அருட்சகோதரி. வர்க்கீஸ், Sacred Heart

8. அருட்சகோதரி. டெய்சி, CTC

9. அருட்சகோதரி. சகாய டாணி, CTC

10. அருட்சகோதரி. ரமிலா, SAT

11. அருட்சகோதரி.  கிறிஸ்டின் பெனி, CTC

வரலாறு:

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், நாற்புறமும் எழில் கொஞ்சும் வயல்வெளிகளும், ஆறுகளும், குன்றுகளும் கொண்ட அழகிய ஊர் அமராவதிவிளை. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே கத்தோலிக்க, தென்னிந்திய திருச்சபை மற்றும் இந்து சமய மக்களை ஒருங்கே கொண்ட ஊர். 

விவசாயம், மலையில் உள்ள சுக்குநாரிப்பூ (தருவை) வியாபாரம், ஆடு மேய்த்தல் ஆகியன இவ்வூர் மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விளங்கியது. அக்காலத்தில் சுமார் 50 கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பங்களே இங்கு வாழ்ந்து வந்தனர். இராமனாதிச்சன்புதூர் பங்கின் கீழ் அமராவதிவிளை செயல்பட்டு வந்தது. அருட்பணி.‌ இக்னேஷியஸ் அடிகளார் அவர்களால் 08.09.1943 அன்று, அமராவதிவிளையில் ஓடு வேய்ந்த சிறிய அளவிலான புனித அந்தோனியார் ஆலயம் கட்டப்பட்டது.‌ ஒருசில ஆண்டுகளுக்குப் பிறகு மக்களின் ஒத்துழைப்புடனும், நன்கொடையாளர்களின் உதவியுடனும், அருகில் உள்ள வயல்வெளி நிலத்தையும் வாங்கி, சிலுவை வடிவில்  ஆலயம் கட்டப்பட்டது.‌ இந்த ஆலயமானது ஓட்டுக்கூரை வேயப்பட்டு, கோபுரம் இல்லாமல் இருந்தது.‌

இதனிடையே புனித அந்தோனியார் இவ்வூரில் கொள்ளை நோய்களைப் போக்கி புதுமைகள் பலபுரிந்து வந்தார்.‌ கார்த்திகை மாதத்தில் இவ்வூர் மக்கள் புனித அந்தோனியார் சுரூபத்தை சிறிய சப்பரத்தில் வைத்து ஊர் முழுவதும் சுற்றி ஜெபம் செய்து வந்தனர். 

காலங்கள் நகர்ந்தன... மக்களின் பொருளாதாரம் உயர்ந்தது.... இறைமக்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. ஆகவே அப்போதைய பங்குத்தந்தை அருட்பணி. தாமஸ் பெர்னாண்டோ அவர்களின் ஒப்புதலுடன்  புதிய கோபுரம் கட்டப்பட்டு, 08.11.1975 அன்று மேதகு ஆயர் ஆரோக்கிய சாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. 

இளைஞர் இயக்கத்தினர் முயற்சியால் 10.08.1999 அன்று புனித மிக்கேல் அதிதூதர் குருசடி கட்டப்பட்டது.

புதிய ஆலயம் கட்ட வேண்டும் என்ற மக்களின் எண்ணத்திற்கேற்ப, அருட்பணி. போர்ஜியா பணிக்காலத்தில் மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் தற்போதைய ஆலயத்திற்கு 28.04.2001 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.‌ தொடர்ந்து பணியாற்றிய அருட்பணி. ஆஞ்சலோ அவர்களின் முயற்சியால், மக்களின் ஒத்துழைப்புடன் ஆலயமானது அழகுற கட்டப்பட்டு 10.05.2002 அன்று மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. 

அருட்பணி. அருள்சீலன் பணிக்காலத்தில் கலையரங்கம் கட்டப்பட்டது.‌

10.05.2014 அன்று வெண்கல கொடிமரம் வைக்கப்பட்டது.

15.05.2016 அன்று அமராவதிவிளை தனிப் பங்காக உயர்த்தப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. ஜோசப் ரொமால்ட் அவர்கள் பொறுப்பேற்று வழிநடத்தினார்.

புலிமலை சகாய மாதா சிற்றாலயம்:

1974 ஆம் ஆண்டு மலையில் மாடு மேய்க்க சென்ற மக்கள் கண்ட அதிசய காட்சி... மலையின் உயரமான இடத்தில் புதற்களுக்கிடையே சில இந்து சமய சிலைகள் காணப்பட்டன. அதற்கு கீழே சுமார் 15 அடி ஆழ பள்ளத்தில் உருளை வடிவில் கற்சிலை ஒன்று தலைகீழாக மண்ணில் புதைந்து கிடந்தது. உடனே மக்கள் அதனை தோண்டி எடுத்து பார்த்த போது அது அழகே உருவான சகாய மாதாவின் கற்சிலையாக இருந்தது. இத்தகவலை மக்கள் ஊருக்குள் வந்து தெரிவிக்க, பல ஊர் மக்களும் இதனை எடுத்துக் கொள்ள போட்டி போட்டுக் கொண்டனர்.‌ 

உடனே அமராவதிவிளை ஆலயத்தில் இதனைக் குறித்து விவாதித்து, சகாய மாதா சுரூபத்தை இங்கு எடுத்து வருவது என தீர்மானித்தனர். மலையின் மீதிருந்து சுமார் 500 மீட்டர் உயரத்தில் இருந்து மிகவும் சிரமப்பட்டு இழுத்து வரப்பட்டு, மாட்டு வண்டியில் அமராவதிவிளைக்கு கொண்டு வந்தனர்.‌ அமராவதிவிளையில் இருந்த சிறிய மலையில்  ஓலைக்குடில் அமைத்து  சகாய மாதாவின் கல் சுரூபத்தை வைத்து மக்கள் வழிபட்டு வந்தனர். குழந்தை பாக்கியம், உடற்சுகம், திருமண வரன்கள் என்று பல்வேறு புதுமைகள் இங்கு நடந்து வந்ததால் மக்கள் இங்கு ஒரு சிறிய சிற்றாலயத்தை எழுப்பி, அப்போதைய பங்குத்தந்தை அருட்பணி. சேவியர் ராஜமணி அவர்களால் 04.11.1979 அன்று அர்ச்சிக்கப்பட்டது. சகாய மாதாவின் அற்புதங்கள் அதிகரிக்கவே, "புலிமலை சகாய மாதா சிற்றாலயம்" என்னும் பெயர் எங்கும் பரவ ஆரம்பித்தது.

காலை முதல் மாலை வரை மக்கள் இங்கு வந்து ஜெபிக்க ஆரம்பித்தனர். மழை மற்றும் கடும் வெயில் காலங்களில் இங்கு வந்து ஜெபிக்க போதிய இடவசதி  இல்லாததால், இளைஞர்களின் ஒத்துழைப்புடன் 1995 ஆம் ஆண்டு இந்த சிற்றாலயத்தை சுற்றிலும் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டது.

அருட்பணி.‌ வென்சஸ்லாஸ், அருட்பணி. ஜோசப் காலின்ஸ் ஆகியோர் பணிக்காலத்தில் சிற்றாலயத்தின் மேற்பரப்பு விரிவாக்கப் பணிகள் செய்யப்பட்டது. அருட்பணி. சேவியர் சுந்தர் பணிக்காலத்தில், கட்டிடத் தொழிலாளர் சங்கத்தின் உதவியுடன் தற்போது காணப்படும் புதிய அழகான சகாய மாதா சிற்றாலயத்திற்கு 10.05.2014 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டிடத் தொழிலாளர் சங்கத்தின் உழைப்பாலும், ஊர் மக்களின் ஒத்துழைப்பாலும், பல பகுதிகளில் உள்ள இறைமக்களின் நன்கொடைகளாலும், பணிகள் ஆரம்பித்து ஆறு மாதத்தில் நிறைவு பெற்று 28.11.2014 அன்று  அர்ச்சிக்கப்பட்டது.‌

பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:

1. பங்கு அருட்பணிப் பேரவை

2. அன்பியங்கள்

3. மறைக்கல்வி

4. புனித வின்சென்ட் தே பவுல் சபை

5. மரியாயின் சேனை

6. பெண்கள் கிராம முன்னேற்ற சங்கம்

7. கத்தோலிக்க சேவா சங்கம்

8. கட்டிட தொழிலாளர் சங்கம்

9. பாலர் சபை

10. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்

11. சிறுவழி இயக்கம் 

12. இளைஞர் இயக்கம்

13. கல்விக்குழு

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

இராமனாதிச்சன்புதூர் பங்கின் கீழ்:

1. அருட்பணி. தாமஸ் பெர்னாண்டோ

2. அருட்பணி. சேவியர் ராஜமணி

3. அருட்பணி.‌ அம்புரோஸ்

4. அருட்பணி. ஜேம்ஸ்

5. அருட்பணி.‌ அமலநாதன்

6. அருட்பணி. அமல்ராஜ்

7. அருட்பணி.‌ பிரான்சிஸ் போர்ஜியா

8. அருட்பணி.‌ ஆஞ்சலோ

9. அருட்பணி. வென்சஸ்லாஸ்

10. அருட்பணி.‌ ஜோசப் காலின்ஸ்

11. அருட்பணி. அருள்சீலன்

12. அருட்பணி.‌ சேவியர் சுந்தர்

13. அருட்பணி. மைக்கேல் ராஜ்

அமராவதிவிளை தனிப்பங்கான பின்னர் பணியாற்றியவர்கள்:

1. அருட்பணி. ஜோசப் ரொமால்ட்

2. அருட்பணி. அந்தோனியப்பன்

3. அருட்பணி. J. செல்வராஜ்

4. அருட்பணி. பிரான்சிஸ்  M. போர்ஜியா

வழித்தடம்: நாகர்கோவில் -ராஜாவூர் வழித்தடத்தில், மருங்கூரில் இருந்து 1.5கி.மீ தொலைவில் அமராவதிவிளை அமைந்துள்ளது.

Location map: https://g.co/kgs/yWm2rC

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: ஆலய நிர்வாகம்