345 புனித தோமையார் மலங்கரை கத்தோலிக்க தேவாலயம், கோயிக்கல்தோப்பு

    

புனித தோமையார் மலங்கரை கத்தோலிக்க தேவாலயம்.

இடம் : கோயிக்கல்தோப்பு, காஞ்சாம்புறம் (PO).

மாவட்டம் : கன்னியாகுமரி

மறை மாவட்டம் : மார்த்தாண்டம்

நிலை : பங்குத்தளம்

பங்குத்தந்தை : அருட்தந்தை அஜீஸ் குமார்

ஞாயிறு திருப்பலி : காலை 09.00 மணிக்கு, புதன் மாலை 06.00 மணிக்கு திருப்பலி, 07.00 மணிக்கு நவநாள்.

குடும்பங்கள் : 210
அருள் வாழ்வியங்கள் : 7

திருவிழா : ஜூலை 03-ஆம் தேதி.

வழித்தடம் : மார்த்தாண்டத்திலிருந்து பேருந்துகள் தடம் எண் 83B, 82B

மண்ணின் மைந்தர்கள் :

1.அருட்தந்தை பெர்னார்ட் நடுத்தேரி
2. அருட்தந்தை ஷிஜூ ஜோஸ்

1.அருட்சகோதரி சோனியா ஜோஸ்பின்
2.அருட்சகோதரி செறாபின் மரியா
3.அருட்சகோதரி ஹன்னா
4.அருட்சகோதரி செலின் ஜோஸ்
5.அருட்சகோதரி சோபியா ஜோஸ்பின்

வரலாறு :

"நீங்கள் உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெற்றுக் கொள்பவர் மீட்பு பெறுவர் " (மாற் 16: 16,17)

ஆண்டுகள் இரண்டாயிரம் கடந்தாலும் ஆண்டவரின் வார்த்தை மாறாது. பாரதத்தின் படைப்புகளுக்கு பரமனின் செய்தியை பறைசாற்ற வந்த புனித தோமையார் கி.பி 52- இல் கேரளா வந்தார். புனித தோமையார் மரபில் வந்த அருட்தந்தை தோமா பணிக்கர் 1962-இல் கோயிக்கல்தோப்பு வந்தார்.

கடந்த ஐம்பதாண்டுகளுக்கு முன் ஆலங்கோடு பகுதியை மையம் கொண்ட கோயிக்கல்தோப்பு பருத்திவிளை, பிலாங்காலை, நடுத்தேரி, நெல்லிக்காவிளை, மாவிளை, ஆலம்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் பெரும்பாலும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி வறுமையில் வாழ்ந்து வந்தனர். இவர்கள் கிறிஸ்துவை அறியாதிருந்தனர். இந்த காலகட்டத்தில் 1962-ஆம் ஆண்டு அருட்தந்தை ஹைமண்ட் அவர்களின் அறிவுரையின் பெயரில் அருட்சகோதரிகள் அகஸ்டினாள் மற்றும் கேன்றில்டா ஆகியோர் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு சென்று மக்களின் வீடுகளை சந்தித்து, அவர்களுடன் உறவாடி, நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்து வந்தனர். பின்னர் இவர்களை ஏற்றுக் கொண்ட இல்லங்களில் செபம் செய்யத் தொடங்கினர். இவர்களுடன் சில பெண்களும் செபிக்க செல்லத் துவங்கினர். இவ்வாறு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்ட மக்கள் திருமுழுக்கு பெற விரும்பினர்.

இவ்வேளையில் கோயிக்கல்தோப்பில் ஆலயம் கட்ட இப்பகுதியை சார்ந்த நல்லுள்ளம் கொண்ட பலரிடம் நன்கொடை பெறப்பட்டு 1962 -இல் புலையன்சரல் என்ற இடத்தில் ஓலைக்குடில் கட்டி செபம் செய்து வந்தனர். ஒருசிலர் திருமுழுக்கு பெற்றனர்.

அருட்தந்தை தாமஸ் பணிக்கர் :

மலங்கரை சிறியன் கத்தோலிக்க சபையின் கீழ் கோயிக்கல்தோப்பு புனித தோமையார் பெயரில் புதிய ஆலயம் உதயமாகவும், ஆலயத்தை வழிநடத்த வேண்டிய பொறுப்பும் அருட்தந்தை தாமஸ் பணிக்கர் அவர்களிடம் வழங்கப் பட்டது.

அருட்தந்தை தாமஸ் பணிக்கர் அவர்கள் கிராத்தூரில் தங்கியிருந்து பாலவிளை, புஷ்பகிரி, கோயிக்கல்தோப்பு முதலிய இடங்களில் உள்ள ஆலயங்களில் திருப்பலி நிறைவேற்றி வந்தார்கள்.

அருட்சகோதரிகள் மக்களை அதிகமாக சந்தித்து ஜெபம் செய்வதுடன் வறுமையில் வாடியவர்களுக்கு பசிபோக்க உணவு பொருட்கள் வழங்கினர். இவர்களின் தன்னலமற்ற அணுகுமுறையால் பலர் ஆலயம் வரத் தொடங்கினர். 1963-இல் ஏராளமானோர் திருமுழுக்கு பெற்றனர். இறை மக்களின் எண்ணிக்கை பெருகியதால் நிலையான ஆலயம் கட்ட தீர்மானித்து, கோயிக்கல்தோப்பு பகுதியை சேர்ந்த ஒருவரிடமிருந்து ஏழு சென்ட் நிலம் வாங்கினர்.

பின்னர் மேதகு பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ் ஆண்டகையின் செயலாளர் பேரருட்தந்தை குருவிளை அவர்களால் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் பணிகள் துவங்கியது. சில வருடங்களில் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 1960 -இல் புதிய ஆலயத்தில் ஆராதனை தொடங்கியது. ஆலயத்திற்கருகில் மேலும் நிலங்கள் வாங்கப்பட்டு இருபுறங்களிலும் தென்னை மரங்கள் நடப்பட்டது. அருட்தந்தை தோமஸ் பணிக்கர் 1967 வரை கிராத்தூரிலிருந்து இப்பகுதிக்கு மிதிவண்டியில் வருகை தந்து இறைப்பணியாற்றி ஏராளமான மக்களின் வாழ்வை வளம் பெறச் செய்ததால் வலியபணிக்கர் என்று மக்களால் அன்புடன் அழைக்கப் பட்டார்.

அருட்தந்தை டேனியல் தோட்டம் (1967-1968):

அருட்தந்தை ஜோசுவா தாழையத்தில் (1968-1969) :

அருட்தந்தை P. G தாமஸ் பணிக்கர் (1969-1975) :

1970-ல் மறைக்கல்வி வகுப்புகள் ஆரம்பித்தார். மரியாயின் சேனையின் வழியாக வீடு சந்தித்தல், நோயாளிகளை மருத்துவமனையில் சந்தித்தல், ஏழைகளுக்கு உதவுவது போன்ற காரியங்களை செய்தார். இவருடைய காலத்தில் விவசாயத்தை மேம்படுத்த நடுத்தேரியிலிருந்து வலியகுளம் வரை பொதுமக்களோடு இணைந்து இணைப்பு சாலை வெட்டப்பட்டது. இப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு கோதுமையும் எண்ணெயும் ஊதியமாக வழங்கப்பட்டது.

தொடர்ந்து சில மாதங்கள் அருட்தந்தை சக்கரியா குழிபறம்பில் அவர்கள் வழிநடத்தினார்.

அருட்தந்தை ஜோசப் புத்தன்குளம் (1976-1979) :

நோயுற்றவர்கள் மருத்துவ வசதிகள் பெற மினி ஹெல்த் சென்டர் துவக்கப்பட்டது. இடைப்பட்ட சில நாட்களுக்கு அருட்தந்தை தோமஸ் இளையத் பணியாற்றினார்.

அருட்தந்தை ஜான் C. புத்தன்வீடு (1980-1982) :

அருட்தந்தை அகஸ்டின் விரிப்பேல் (1982-1987) :

1986 -இல் புனித வின்சென்ட் தே பவுல் சபை துவக்கப்பட்டது.

அருட்தந்தை பிலிப் தயானந்த் (1987-1992) :

இவரது காலத்தில் முதன்முதலாக தமிழில் திருப்பலி நிறைவேற்றப் பட்டது. பங்குப்பேரவை அமைக்கப் பட்டது. வாரத்தில் ஞாயிறு தவிர இடை நாட்களில் திருப்பலி நிறைவேற்றினார். பங்கு மக்களை சிறப்பாக வழிநடத்தி ஆலயத்திற்கு வராமலிருந்தவர்களையும் வரச் செய்தார். பின்னர் சில மாதங்கள் அருட்தந்தை பிரான்சிஸ் பணியாற்றினார்.

அருட்தந்தை G. வர்க்கீஸ் (1993-1997) :

1996 -இல் மலங்கரை கத்தோலிக்க இளைஞர் இயக்கம் துவக்கப்பட்டது. மாதா குருசடி கட்டப்பட்டது. நிலங்கள் வாங்கப்பட்டன. கலைக்கூடம் கட்டப்பட்டது.

அருட்தந்தை ஸ்காரியா கொச்சு முறிப்பேல் (1997-2002) :

சிறார் இயக்கம், கோல்பின் இயக்கம் துவக்கப்பட்டது. மதிற்சுவர் கட்டப்பட்டது. அருட்தந்தையவர்களின் சிறப்பான ஆன்மீக வழிகாட்டுதலில் நான்கு பேர் இறையழைத்தல் பெற்றனர்.

அருட்தந்தை கீ வர்க்கீஸ் சாங்கெத் (2002-2007):

07-12-2002 ல் பங்கில் வைத்து, மண்ணின் மைந்தன் அருட்தந்தை பெர்னார்ட் நடுத்தேரி அவர்கள் மேதகு ஆயர் யூகானோன் மார் கிறிஸோஸ்தம் அவர்களால் குருவாக திருநிலைப் படுத்தப் பட்டார்.

பாலர் சபை துவக்கப்பட்டது. 2006 ல் அருட்சகோதரி சோனியா ஜோஸ்பின் அவர்களும், 2007 -ல் அருட்சகோதரி செறாபின் மரியா அவர்களும், 2008 -ல் அருட்சகோதரி ஹன்னா அவர்களும் மேதகு ஆயர் யூகானோன் மார்அ கிறிஸோஸ்தம் அவர்கள் அருட்சகோதரிகளாக திருநிலைப் படுத்தினார். கோயிக்கல்தோப்பை சேர்ந்த சில நல்லுள்ளங்கள் ஆலயத்திற்கு இலவசமாக நிலங்கள் கொடுத்தனர்.

2008-ஆம் ஆண்டு தற்போதைய ஆயர் அருட்தந்தை வின்சென்ட் அவர்கள் சில காலம் பங்குத்தந்தையாக பணியாற்றினார். வீட்டு கூட்டங்கள் நடத்துவதற்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

அருட்தந்தை தேவதாஸ் (2008-2010) :

அருள் வாழ்வியங்கள் (அன்பியம்) துவக்கப்பட்டது. புதிய ஆலயம் கட்டுவதற்காக திட்டமிடப் பட்டது. 2009-ல் விழுதுகள் கலைக்கூடம் துவக்கப்பட்டு, நலிந்து கொண்டிருக்கும் கிராமியக் கலைகளுக்கு புத்துயிரூட்டப் பட்டது.

அருட்தந்தை ஜோஸ்பின் ராஜ் (2010-2012) :

ஜூபிலி கொண்டாட திட்டமிடப்பட்டது. 2010 -இல் அருட்சகோதரி செலின் ஜோஸ் அவர்களும், 2011 அருட்சகோதரி சோபியா ஜோஸ்பின் அவர்களும் மேதகு ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் அவர்களால் அருட்சகோதரிகளாக திருநிலைப் படுத்தப் பட்டனர்.

அருட்தந்தை ஜெரோம் (2012-2013):

பத்து அம்ச திட்டங்களுடன் 50 ஆண்டு ஜூபிலி கொண்டாடப் பட்டது. ஜூபிலி நினைவாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விருது கொடுத்து கவுரவிக்கப் பட்டது. சமூக சேவையாக அருட்தந்தையுடன் இணைந்து வலியகுளம் தூர்வாரப் பட்டது. அருட்தந்தை ஏசுதாஸ் அவர்கள் சில மாதங்கள் பணிபுரிந்தார்கள்.

அருட்தந்தை ஸ்டீபன் செம்பகத்தோப்பு (2013- 2016)

ஜூபிலி விழா நிறைவு விழா கொண்டாடப் பட்டது. அருள் வாழ்வியங்கள் விரிவுபடுத்தப் பட்டது. விவசாயத்தை மேம்படுத்தினார். 04-06-2016 அன்று மலங்கரை கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் மேதகு மோரன் மார் பெசோலியஸ் கிளிமிஸ் காதோலிகோஸ் ஆண்டகை அவர்கள் தலைமையில், மண்ணின் மைந்தன் அருட்தந்தை ஷிஜூ ஜோஸ் அவர்களின் நன்றி திருப்பலி நிறைவேற்றப் பட்டு, புதிய ஆலயத்திற்கான அடிக்கல் போடப் பட்டது.

அருட்தந்தை ஜோஸ் பிரைட் (6மாதங்கள்) பணியாற்றினார்கள்.

அருட்தந்தை அஜீஸ் குமார் (2017 முதல் தற்போது வரை....) :
அருட்தந்தை அஜீஸ் அவர்கள் பங்குத்தந்தையாக பொறுப்பேற்று புதிய ஆலய கட்டுமானப் பணிகளை சிறப்பாக நடத்தி வருகின்றார்கள். மேலும் மக்களின் ஆன்மீக வாழ்வை ஆழப்படுத்தும் விதமாக பல்வேறு நல்ல பல இறைவிருப்ப திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

தகவல்கள் : பங்குத்தந்தை அருட்தந்தை அஜீஸ் குமார் அவர்கள்.