396 நல்லாயன் ஆலயம், வெள்ளியாவிளை


நல்லாயன் ஆலயம்.

🐏இடம் : வெள்ளியாவிளை.

🔴மாவட்டம் : கன்னியாகுமரி
🔴மறை மாவட்டம் : குழித்துறை
🔴மறை வட்டம் : மாத்திரவிளை

✳️நிலை : பங்குத்தளம்
✳️கிளைப்பங்கு : இல்லை

💐பங்குத்தந்தை அருட்பணி S. வின்சென்ட்

🌷குடும்பங்கள் : 300
🌷அன்பியங்கள் : 9

💥ஞாயிறு திருப்பலி : காலை 07.00 மணிக்கு

💥திங்கள், புதன், வெள்ளி, சனிக்கிழமைகளில் திருப்பலி : காலை 06.30 மணிக்கு

💥வியாழன் மாலை 06.00 மணிக்கு நவநாள், திருப்பலி.

💥செவ்வாய் காலை 06.30 மணிக்கு திருப்பலி அருட்சகோதரிகள் இல்லத்தில்.

🔴மண்ணின் இறையழைத்தல்கள் :
அருட்பணியாளர்கள்:
🌷1. Rev. Fr மாதவடியான் கிறிஸ்துதாஸ்
🌷2. Rev. Fr பெர்னாண்டஸ்

அருட்சகோதரிகள்:
🌹1. Rev. Sr அன்னம்மாள் (பபியானாள்)
🌹2. Rev. Sr பிரகாசியம்மாள்
🌹3. Rev. Sr சிசிலி முடியப்பன் SMI
🌹4. Rev. Sr ஜெசிந்தாள் SSAM.
🌹5. Rev. Sr ஸ்டெல்லா அருணா SSAM
🌹6. Rev. Sr மேரி புஷ்பம் SMI
🌹7. Rev. Sr அனஸ்தாசி
🌹8. Rev. Sr மரியதங்கம் SSAM
🌹9. Rev. Sr. S மரிய தங்கம்
🌹10. Rev. Sr. M லில்லி புஷ்பம் SSAM
🌹11. Rev. Sr. மரிய புஷ்பம்

🎊திருவிழா : மே மாதத்தில் கடைசி ஞாயிறு நிறைவடையும் வகையில் பத்து நாட்கள்.

👉வழித்தடம் : கருங்கல் - குளச்சல் வழித்தடத்தில் வெள்ளியாவிளையில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

வரலாறு :
**********
🍇இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ள வெள்ளியாவிளை பங்கானது வடக்கே துண்டத்துவிளை, தெற்கே ரீத்தாபுரம், மேற்கு மங்கலக்குன்று, கிழக்கே சகாயநகர் மற்றும் மாத்திரவிளை ஆலயங்களை எல்கையாக கொண்டுள்ளது.

🍇விவசாயம் மற்றும் பனை ஏறுதல் இவற்றை தொழிலாகக் கொண்ட இவ்வூர் ஏழை மக்கள், பல ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கன்குளம் சென்று திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவம் தழுவியுள்ளனர். பிற்காலத்தில் மாத்திரவிளை -யில் ஆலயம் அமைந்ததும் இவ்வூர் அப்பங்கின் அங்கமாக ஆனது. மாத்திரவிளை பங்குத்தந்தையர் உபதேசியார், வரியோலை உதவியோடு இம்மக்களை பராமரித்து வந்தனர்.

🌿காலரா, வைசூரி போன்ற கொள்ளை நோய்களால் அக்காலத்தில் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்ட போது, கிறிஸ்தவ மக்கள் கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு முன்னர் தொடங்கி 41 நாட்கள் பஜனை பாடி மக்களின் பயத்தையும் இறை விசுவாசத்தை ஆழப்படுத்தியும் வந்தனர். பின்னர் அமல அன்னை சபை அருட்சகோதரிகளின் வருகையால் புனித அலோசியஸ் கன்னியர் இல்லம் ஆரம்பிக்கப்பட்டது. பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஐசிஎம் சபை அருட்சகோதரி ரோசாபீயா இம்மக்களின் கல்வி, ஆன்மீக வளர்ச்சிக்கு மிகவும் உதவினார். அருட்சகோதரிகள் இல்லந்தோறும் சென்று மக்களை திருப்பலிக்கு அழைத்து வருவார்கள். அத்துடன் மறைக்கல்வி ஞாயிறு மதியம் அருட்சகோதரிகள் இல்லத்தில் நடத்தப்பட்டதுடன், பெண்களுக்கு மாதா சபையும், ஆண்களுக்கு திருஇருதய சபையும், குழந்தைகளுக்கு பாலர் சபை, கற்பிரசாத யுத்த சபையும் துவக்கப்பட்டது.

☘️இந்த காலகட்டங்களில் மாத்திரவிளை தூய ஆரோபண அன்னை ஆலய பங்குத்தந்தையர்களாக இருந்த மேதகு ஆயர் அந்தோணிமுத்து
அருட்பணி ஸ்தனிஸ்லாஸ் மரியா
அருட்பணி கிரகோரி
அருட்பணி அல்போன்ஸ்
ஆகியோர் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் அருட்சகோதரிகள் இல்லத்தில் திருப்பலி நிறைவேற்றினார்கள். மேலும் போக்குவரத்து வசதிகளற்ற அக்காலத்தில் அருட்பணியாளர்கள் நடந்து அல்லது மிதிவண்டி யில் வந்து மக்களின் தேவைகளை நிறைவேற்றி வந்தனர்.

🌳மாத்திரவிளை பங்கிலிருந்து பிரிந்து, 1966 ம் ஆண்டு துண்டத்துவிளை புனித அந்தோணியார் ஆலயமானது தனிப்பங்காக உருவான போது வெள்ளியாவிளையையும் மாத்திரவிளையிலிருந்து பிரித்து, துண்டத்துவிளையுடன் இணைந்தனர்.

🍎வெள்ளியாவிளையில் ஒரு ஆலயம் தேவையென்பதை உணர்ந்து இவ்வூர் மக்கள், துண்டத்துவிளை பங்குத்தந்தை அருட்பணி அல்போன்ஸ் அடிகளாரின் வழிகாட்டுதலில், 57 சென்ட் நிலத்தை நன்கொடையாகவும், குறைந்த விலைக்கும் கொடுத்தனர்.
அருட்பணி அல்போன்ஸ் அடிகளாரின் முயற்சிகளாலும் அன்னை மார்சியால் அவர்களின் ஒத்துழைப்பாலும் கருங்கல்லால் ஆன ஆலயம் கட்டப்பட்டு 08-12-1968 அன்று மேதகு ஆயர் ஆஞ்ஞிசுவாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

🌺வெள்ளியாவிளையோடு நடுத்தேரி, உலகன்விளை, தக்காளிவிளை, கூட்டுவிளையும் சேர்த்து வெள்ளியாவிளை பங்கு என்ற பெயரில் துண்டத்துவிளையின் கிளைப் பங்காக ஆனது. பங்குத்தந்தை இல்லமும் கட்டப்பட்டது.

🌸இக்காலகட்டத்தில் அருட்சகோதரிகள் இல்லமும், பள்ளிக்கூடமும் அமல அன்னை சபையிடமிருந்து 27-04-1973 ல் சென்னை புனித அன்னாள் சபை அருட்சகோதரிகளின் நிர்வாகத்தின் கீழ் வந்தது.

🏵வியாழன் தோறும் புனித யூதா ததேயு நவநாள் துவக்கப்பட்டு இன்றளவும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு 1975 ம் ஆண்டு வரை அருட்பணி அல்போன்ஸ் அடிகளார் சிறப்பாக வழி நடத்தினார்கள்.

🌷தொடர்ந்து அருட்பணி கிறிஸ்துதாஸ் (1975-1976)
🌷மேதகு ஆயர் லியோன் அ தர்மராஜ் (1976-1978)
🌷அருட்பணி பொ. வின்சென்ட் (1978-1983)
🌷அருட்பணி கிளீட்டஸ் (1983-1986)
🌷அருட்பணி ஆசீர்வாதம் (1986-1987)
🌷அருட்பணி லடிஸ்லாஸ் பெஞ்சமின் (1987-1990)
🌷1990 முதல் அருட்பணி மரியவில்லியம் அவர்களும் துண்டத்துவிளை பங்குத்தந்தையாக இருந்து, வெள்ளியாவிளையை சிறப்பாக பராமரித்தனர்.

🌼இவ்வேளையில் முதிய அருட்தந்தையர்கள் வெள்ளியாவிளையில் அருட்பணிளாளர் தங்கும் இல்லத்தில் வந்து ஓய்வெடுத்துக் கொள்ள ஆயர் அவர்களால் அனுப்பி வைக்கப் பட்டனர்.

🌺1982 ல் புனித வின்சென்ட் தே பவுல் சபை துவக்கப்பட்டது. மறைக்கல்வி வகுப்புகள் கன்னியர் இல்லத்திலிருந்து மாற்றப்பட்டு ஆலயத்தில் வைத்து நடத்தப்பட்டு வந்தது. அருட்பணி பெல்லார்மின் ஜியோ அடிகளாரின் வழிகாட்டுதலில் விவிலியத்தில் காணப்படும் மலைகள் பெயர் கொண்ட அன்பியங்கள் துவக்கப் பட்டன.

💐1983 ம் ஆண்டு ஆலய வெள்ளிவிழா சிறப்பாக கொண்டாடப் பட்டது. ஆலய வளர்சிக்கு இங்கு தங்கி இருந்த முதிய அருட்தந்தையர்கள் மற்றும் துண்டத்துவிளை பங்குத்தந்தையர்கள் முக்கிய காரணமாக விளங்கினர்.

🌺அருட்பணி லூக்காஸ் அவர்களின் காலத்தில் 19-06-1996 அன்று துண்டத்துவிளை பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு வெள்ளியாவிளை தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. ஈச்சிவிளை, சகாயநகர் பங்கிலிருந்து மாற்றப்பட்டு இதன் கிளைப்பங்கானது. மேலும் அருட்பணி லூக்காஸ் பணிக்காலத்தில் தொழிலாளர்களுக்கு தொழில் உபகரணங்கள், ஏழைகளுக்கு விலையில்லா ஆடுகள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கி கொடுக்கப் பட்டது. பங்குத்தந்தையின் பெரும் முயற்சியாலும் பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் நல்லாயன் திருமண மண்டபம் கட்டப்பட்டு 28-06-1998 அன்று திறக்கப்பட்டது.

🌸தொடர்ந்து அருட்பணி கபிரியேல் பணிக்காலத்தில் 2003 ல் மரியாயின் சேனை துவக்கப் பட்டது. மண்டபத்தின் கிழக்கு பகுதியில் சுற்றுச் சுவர் கட்டப் பட்டது.

🌸அருட்பணி ஜஸ்டஸ் பணிக்காலத்தில் ஆலய வளாகத்தை ஒட்டிய நிலம் வாங்கப்பட்டது. அதிகமாக நோயாளிகளை சந்தித்து ஆறுதல் படுத்தினார்.

☘️அருட்பணி சேவியர் சேம்ராஜ் அவர்கள் சிறப்பாக மக்களை ஆன்மீகப் பாதையில் வழி நடத்தினார்கள்.

🌹அருட்பணி மரியவில்லியம் அவர்கள் காலத்தில் ஆலய வளாகம் விரிவு படுத்தப்பட்டு இரப்பர் மரக் கன்றுகள் நடப் பட்டது. சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து குழந்தைகள் காப்பகம் கட்டப் பட்டது. புத்தகப்பை தைக்கும் நல்லாயன் தொழிலகம் கட்டப்பட்டு 02-12-2007 அன்று அருட்பணி அல்போன்ஸ் அடிகளாரால் திறந்து வைக்கப்பட்டது. ஆரோக்கிய அன்னை குருசடி கட்டப்பட்டது.

🏵அருட்பணி A. மரியதாஸ் பணிக்காலத்தில் ஆலய பீடம், தரை, ஆலய சுவர் உட்பகுதி புதுப்பிக்கப்பட்டு 19-07-2013 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. கொடிமரம் 2013 ல் வைக்கப் பட்டது. அத்துடன் பங்குத்தந்தை இல்லம் புதிதாக கட்டப்பட்டு 16-08-2014 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் திறக்கப்பட்டது.

🌳தொடர்ந்து அருட்பணி S. வின்சென்ட் அவர்கள் பொறுப்பேற்று தற்போது வரை சிறப்பாக வழி நடத்தி வருகிறார்கள். ஆலய பொன்விழாவை முன்னிட்டு பழைய கோபுரம் இடிக்கப்பட்டு புதிய அழகிய கோபுரங்கள் பங்குத்தந்தையின் முயற்சி, பங்கு மக்களின் மற்றும் பல நல்லுள்ளங்களின் ஒத்துழைப்பு மற்றும் நன்கொடைகளால் கட்டப்பட்டு, 08-12-2018 அன்று ஓய்வு பெற்ற கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. மேலும் பொன்விழா நினைவாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒட்டு மாங்கன்று ஒன்று கொடுக்கப் பட்டது.

☘️நல்லாயன் தொழிலகம் வேறிடத்திற்கு மாற்றப்பட்டதால், அவ்விடத்தில் பங்கின் நூலகம் செயல்பட்டு வருகிறது.

🦋இவ்வாறு பல்வேறு நிலைகளில் சிறந்து விளங்குகிறது வெள்ளியாவிளை நல்லாயன் ஆலயம்.

👉தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி S. வின்சென்ட் அவர்கள். பங்குத்தந்தையின் உதவியுடன் ஆலய வரலாறானது ஆலய பொன்விழா மலரிலிருந்து எடுக்கப்பட்டு தொகுக்கப் பட்டது.