561 புனித அருளானந்தர் ஆலயம், சேசுராஜபுரம்

     

புனித அருளானந்தர் ஆலயம் 

இடம் : சேசுராஜபுரம், 635102

மாவட்டம் : கிருஷ்ணகிரி 

மறைமாவட்டம் : தருமபுரி 

மறைவட்டம் : தேன்கனிகோட்டை

நிலை : பங்குத்தளம் 

கிளைப் பங்கு:

புனித ஆரோக்கிய மாதா ஆலயம், ஆரோக்கியபுரம்

பங்குத்தந்தை : அருள்பணி. P. ஜான் கென்னடி 

குடும்பங்கள் : 697

அன்பியங்கள் : 13

ஞாயிறு திருப்பலி : காலை 08.30 மணிக்கு 

நாள்தோறும் திருப்பலி : மாலை 06.00 மணிக்கு 

செவ்வாய் காலை 08.00 மணிக்கு திருப்பலி. (புனித வனத்து அந்தோனியார் திருத்தலம்) 

மாதத்தின் முதல் சனிக்கிழமை மாலை 05.30 மணிக்கு திருப்பலி. (மலை மாதா கெபியில்) 

திருவிழா : பெப்ரவரி மாதம் 2, 3, 4 தேதிகளில். 

வழித்தடம் : ஓசூர் -தேன்கனிகோட்டை -அஞ்செட்டி -சேசுராஜபுரம். 

தருமபுரி -ஒகேனக்கல் -சேசுராஜபுரம். 

Location map : St John De Britto Church, Sesurajapuram, Krishnagiri

MDR588, Natrampalayam, Tamil Nadu 635102

https://maps.app.goo.gl/6zvEcHpCfMF2cikn8

வரலாறு :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாட்றாம்பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட இயற்கை எழில் சூழ்ந்த அழகிய ஊர் சேசுராஜபுரம். மேட்டூர் அணை கட்டப்பட்ட போது புலம் பெயர்ந்த கத்தோலிக்க மக்கள், கி.பி 1950 ஆம் ஆண்டளவில் மார்ட்டல்லி, சவேரியார் பாளையம், பூமனூர் பகுதியில் வாழ்ந்து வந்த கிறிஸ்தவ மக்கள் நாட்றாம்பாளையம் பகுதியில் உள்ள நிலங்களில் விவசாயம் செய்து அங்கேயே தங்கி, வாழ ஆரம்பித்தனர். தாங்கள் வாழும் பகுதிக்கு சேசுராஜபுரம் என்று பெயரிட்டழைத்தனர். 

சவேரியார் பாளையம், மார்ட்டல்லி பங்குத்தந்தையர்கள் இந்த மக்களின் ஆன்மீகத் தேவையை உணர்ந்து, இவர்களுக்கு உதவ கோவிலூர் பங்குத்தந்தையர்களிடம் கடிதம் வாயிலாக கேட்டுக் கொண்டனர். திரு. வங்கியான் என்கிற இராயப்பன் தானமாகக் கொடுத்த 1.30 ஏக்கர் நிலத்தில் சிற்றாலயம் ஒன்று கட்டப்பட்டது. கோவிலூர் பங்குத்தந்தையர் ஒகேனக்கல் வழியாக வனவிலங்குகள் நிறைந்த அடர்ந்த காட்டு வழியில் நடந்து சென்று பிலிகுண்டு, சேசுராஜபுரம் மக்களின் ஆன்மீகத் தேவையை நிறைவேற்றி வந்தனர். 

கோவிலூர், தருமபுரி, தாசரப்பள்ளி பங்குத்தந்தையர்களின் கண்காணிப்பில் சேசுராஜபுரம் தலத்திருச்சபை வளர்ச்சியடைந்து வந்தது. 

1952 முதல் 1974 வரை கோவிலூரில் உள்ள திருமுழுக்கு பதிவேடுகளில் சேசுராஜபுரத்தில் கொடுத்த திருமுழுக்கு விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

தருமபுரியின் பங்குத்தந்தையாக அருள்பணி. குருவில்லா தாமஸ் பொறுப்பேற்ற பின்னர் 1968 ஆம் ஆண்டு முதல் சேசுராஜபுரம், தருமபுரியின் கிளைப் பங்கானது. சேசுராஜபுரம் மக்கள் தங்களது நிலச்சான்று (பட்டா) பெறுவதற்கு அருள்பணி. குருவில்லா தாமஸ் அவர்கள் அயராது உழைத்தார். அரசு அதிகாரிகளை சந்தித்து, நிலங்களை மக்களுக்கே உரிமையாக்குவதற்கு சிறப்பு முகாம்களை சேசுராஜபுரத்தில் அமைத்து, அரசுக்கும் மக்களுக்கும் உதவினார். அவரது நினைவை போற்றும் வகையில் ஏரிக்கு குருவில்லா ஏரி எனவும், அன்பியம் ஒன்றிற்கு அவரது பெயரும் சூட்டப் பட்டுள்ளது.

1974 முதல் 1979 வரை சேசுராஜபுரம், தாசரப்பள்ளியின் கிளைப்பங்காக இருந்து வளர்ந்து வந்தது. 

1975 முதல் 1979 வரை திருச்சிலுவை சபையின் அருள்தந்தையர்கள் சேசுராஜபுரத்தில் தங்கி, தாசரப்பள்ளி பங்குத்தந்தையர்களின் கண்காணிப்பில் பணியாற்றினர். 1975 பெப்ரவரி முதல் மே வரை அருள்பணி. யுவான் மார்ட்டின் அவர்களும், 1975 மே முதல் 1976 ஆகஸ்ட் வரை அருள்பணி. லாரன்ஸ் அவர்களும் பணியாற்றினர். இக்காலகட்டத்தில் இங்கு களப்பயிற்சிக்கு வந்த சகோ. குழந்தை பிரான்சிஸ், அவர்கள், பின்னர் IVDP என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவி இம்மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக உழைத்தார். பல சிற்றணைகளை கட்டி சாதனைப் படைத்த சகோதரரின் பணியை பாராட்டும் விதமாக ஒரு தடுப்பணைக்கு பிரான்சிஸ் டேம் என்று பெயர் சூட்டியுள்ளனர். 

1979 ஆம் ஆண்டு சேசுராஜபுரம் தனிப்பங்காக உயர்த்தப்பட்டு, பிலிகுண்டு இதன் கிளைப் பங்காயிற்று. தாசரப்பள்ளியில் துணைப் பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்பணி. P. லூர்துசாமி அடிகளார் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்று வழிநடத்தினார். ஏற்கனவே அங்கிருந்த சிற்றாலயத்தின் அருகிலேயே தங்கி மக்களோடு மக்களாக வாழ்ந்து தம் பணியை சிறப்புறச் செய்து தற்போதைய புனித அருளானந்தர் ஆலயத்தை கட்டியெழுப்பி 04.02.1983 அன்று  அன்றைய சேலம் மறைமாவட்ட ஆயர் மேதகு மைக்கேல் போஸ்கோ துரைசாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. 

தொடர்ந்து பொறுப்பேற்ற அருள்பணி. செ. சிங்கராயன் (முன்னாள் சேலம் மறைமாவட்ட ஆயர்) அவர்களின் முயற்சியால் குருக்களுக்கான இல்லம் கட்டப்பட்டு 26.08.1985 அன்று திறந்து வைக்கப்பட்டது.  

சேசுராஜபுரத்தில் பணியாற்றிய எல்லா பங்குத்தந்தையர்களும், பங்கு மாணவர்களின் கல்வியில் சிறப்பு கவனம் செலுத்தி, மறைமாவட்டதில் உள்ள எல்லா விடுதிகளிலும் சேசுராஜபுரத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர் சேர்க்கப்பட்டு, கல்வி பயின்று வந்தனர். 

கொட்டாம்பட்டியிலிருந்து கோலார் பகுதிக்கு சென்று, பின்னர் அங்கிருந்து 

சேசுராஜபுரத்தின் அருகில் உள்ள மாசனட்டி பகுதியில்

குடியேறிய கிறிஸ்தவர்கள், தங்கள் குடியிருப்புக்கு ஆரோக்கியபுரம் என்று பெயரிட்டனர். 

ஆரோக்கியபுரத்தில் 1986 ஆம் ஆண்டு 1.10 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு, புனித பீட்டர் துவக்கப் பள்ளியை அருள்பணி. செ. சிங்கராயன் அவர்கள் அவர்கள் துவக்கி வைத்தார். மேலும் இவரது பணிக்காலத்தில் தான் புதுவை மாதா இருதய கன்னியர்கள் தங்கள் பணியை 1985 ஆம் ஆண்டு சேசுராஜபுரத்தில் துவங்கினர். 

மேலும் அருள்சகோதரிகள் 1989 -ஆம் ஆண்டு விடிவெள்ளி  மருத்துவமனை ஒன்றை கட்டி, அதன் வழியாக மக்களுக்கு மருத்துவப் பணியாற்றி வருகின்றனர். 

1993 ல் சேசுராஜபுரத்தில் புனித சூசையப்பர் நடுநிலைப் பள்ளி துவக்கப்பட்டு, பின்னர் உயர் நிலைப்பள்ளியாகி, 2011 -ல் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 

1996 ஆம் ஆண்டு அருட்பணி. K. மரிய ஜோசப் அவர்கள் பங்குத்தந்தையாக பொறுப்பேற்று, 1997 இல் நாட்றாம்பாளையம் பஞ்சாயத்து மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தவும், போக்குவரத்து வசதியை உருவாக்கவும் பல முயற்சிகள் மேற்கொண்டார். அவரது தீவிர முயற்சியாலும், நாட்றாம்பாளையம் பஞ்சாயத்து மக்களின் ஒத்துழைப்பாலும், நாட்றாம்பாளையத்திலிருந்து பிலிகுண்டு வரை முதல்முறையாக சாலை அமைக்கப்பட்டு, ஒகேனக்கல் சாலையோடு இணைக்கப் பட்டது. 

ஊரின் பொன்விழா நினைவாக மணிகோபுரம் கட்டப்பட்டு 23.04.2000 அன்று திறந்து வைக்கப்பட்டது. 

அருள்பணி. M. பெஞ்சமின் பணிக்காலத்தில் பங்குத்தந்தை இல்லம் விரிவாக்கம் செய்யப்பட்டு 04.07.2003  அன்று திறந்து வைக்கப்பட்டது. 

சேசுராஜபுரம், ஆரோக்கியபுரத்திற்கும் இடையே உள்ள மலையில் அருள்பணி. P. லூர்துசாமி அடிகளாரால், மலையுச்சியில் லூர்தன்னை கெபி கட்டப்பட்டு, ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 2 ம் தேதி லூர்தன்னை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அருள்பணி. A. ரொசாரியோ பணிக்காலத்தில்,  பேகூர் திரு. சின்னப்பன் அவர்களின் பொருளுதவியில்  2010 ஆண்டு ஜனவரி மாதத்தில் மலையுச்சி வரை பாதை அமைக்கப்பட்டு, பல வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் இவரது பணிக்காலத்தில் ஆலயத்தை சுற்றி சுற்றுச்சுவரும், ஆலய வளாகத்தில் மேடையும், ஆலய வளாகத்தில் தூய லூர்து அன்னை கெபியும் எழுப்பினார்.  

சேசுராஜபுரத்திற்கு வடக்கே வனப்பகுதியில் புனித வனத்து அந்தோனியார் ஆலயம் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பே இங்கு பொங்கல் வைத்து வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தது. மண்சுவரால் கட்டப்பட்ட சிறிய குருசடியானது, பங்கின் பொன்விழா நினைவாக அருள்பணி. சக்கரையாஸ் அவர்களின் முயற்சியால் சிற்றாலயத்திற்கு 4.2.2004 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு,  கட்டி முடிக்கப்பட்டது. இங்கு ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் 17 ஆம் தேதி புனித வனத்து அந்தோனியார் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

ஆரோக்கியபுரத்தில் மக்களின் ஆன்மீகத் தேவையை உணர்ந்து அருள்பணி. K. ஆரோக்கிய ஜேம்ஸ் அவர்களின் முயற்சியால் தூய ஆரோக்கிய அன்னைக்கு அழகிய ஆலயம் கட்டப்பட்டு, 22.09.2010 அன்று தருமபுரி மறைமாவட்ட ஆயர் மேதகு ஜோசப் அந்தோணி இருதயராஜ் அவர்களால் புனிதப் படுத்தப் பட்டது. மேலும் அருள்தந்தையின் பணிக்காலத்தில் தூய லூர்து அன்னை கெபி மற்றும் புனித வனத்து அந்தோனியார் சிற்றாலயத்திற்கும் மின் இணைப்பு பெறப்பட்டது. 

தற்போதைய பங்குத்தந்தை அருள்பணி. P. ஜான் கென்னடி அவர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார். இவரது பணிக்காலத்தில் ஆலய மேற்கூரை சீரமைக்கப்பட்டு, ஆலயத்திற்கு வர்ணம் பூசப் பட்டது. மறைமாவட்டம் மற்றும் பங்கின் பொருளாதார உதவி கொண்டு,  குருக்களுக்கான புதிய சமையற்கூடம் கட்டப் பட்டது. ஆலயத்திற்கு மூன்று இலட்சம் ரூபாய் செலவில் ஜெனரேட்டர் வாங்கப் பட்டது.  

ஆரோக்கியபுரம் புனித பீட்டர் துவக்கப் பள்ளிக்கு புதிய கான்கிரீட் கூரையும், மாணவ மாணவியர்களுக்கான கழிப்பறை வசதியும் செய்யப்பட்டது. 

மேலும் பங்குத்தந்தை அருள்பணி. P. ஜான் கென்னடி அவர்களின் முயற்சியால் 2017 ஆம் ஆண்டில் அன்னையின் கெபிக்கு, அறைகட்டப்பட்டு கான்கிரீட் தளம் அமைத்து,  அன்னையின் சுரூபம் வைக்க பீடம் கட்டியெழுப்பி, திரு. மத்தியாஸ் அவர்களின் உதவியுடன் கிரானைட் கற்களால் ஆன இருக்கைகள் போடப்பட்டு கெபியின் பணிகள் நிறைவு செய்யப்பட்டது. 

புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியின் வரலாறு :

1950 ஆம்  ஆண்டுகளில் நாட்றாம்பாளையம் பஞ்சாயத்தில் வாழ்ந்த மக்கள் கல்வி வாசனைக்கூடத் தெரியாத பாமர மக்களாக இருந்தனர். அவர் அவர்களுக்கு பிடித்த இடங்களில் குடிசைகளாக போட்டு இயற்கையான அடர்ந்த காட்டின் நடுவே பறவைகளோடு பறவைகளாக சுதந்திரத்தோடும்; ஒற்றுமையோடும் வாழ்ந்து வந்தனர். காடுகளில் கிடைக்கும் பழங்களையும் கிழங்குகளையும் உண்டு வாழ்ந்தனர்.

மக்களின் முதன்மையான தொழில்கள் ஆடு, மாடு மேய்ப்பது, விவசாயம் செய்வது, மரத்தை எரித்து கரியாக்கி விற்பனை செய்வது போன்றவையாகும். மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு கல்வி அவசியமாகத்  தேவைப்பட்டது. 

ஆரோக்கிபுரத்தில் ஒரு தொடக்கப் பள்ளியும்  ஒரு பஞ்சாயத்து ஒன்றியப் பள்ளியும் இருந்தது. தொடக்கக் கல்வி மட்டுமே பெற்ற பெரும்பான்மையான குழந்தைகள் உயர்கல்வி கற்க அருகில் பள்ளி இல்லாத காரணத்தினால் இடைநிற்றலே விதியானது. சிலர் மட்டும் அஞ்செட்டியிலிருந்த அரசு பள்ளிக்கும் மற்றும் சிலர் மறைமாவட்டத்தால் நடத்தப்பட்ட பள்ளிகளின்  விடுதிகளில் தங்கிப் படித்தனர். அடைக்கலாபுரம், மதகொண்டபள்ளி, எலத்தகிரி, கிறிஸதுபாளையம் -  ஆனந்த் நகர் ஆகிய இடங்களில் சில குழந்தைகளும்  கன்னியர்களின் ஆலோசனைப்படி கோவிலூர், சேலம் போன்ற இடங்களுக்கும் சென்று கல்வி பயின்றனர். 100 மாணவர்களுக்கு 5 மாணவர்கள் மட்டுமே வெளியிடங்களுக்குக் கல்வி பயிலச் சென்றனர். 

நாட்றாம்பாளையம் கிராமத்தில் வசிக்கும் ஏழை விவசாயிகளின் குழந்தைகளுக்குப் புனிதமான கல்வி அறிவை வளர்க்க உருவாக்கப்பட்ட முதல்  கல்வி நிலையம் புனித ஜோசப் நடுநிலைப் பள்ளி. இப்பள்ளியை உருவாக்க பல அருள்தந்தையர்கள் அரும்பாடுபட்டுள்ளனர்.

1993ஆம் ஆண்டில் சேசுராஜபுரத்தில் பங்குத்தந்தையாக பணியாற்றிய அருள்பணி. மரிய சூசை அவர்கள் ஊர் மக்களின் ஒத்துழைப்புடன், ஆயரின் அனுமதி பெற்றார். பிறகு கன்னியர் இல்லத்திற்கு அருகில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டு,  

புனித ஜோசப் நடுநிலைப் பள்ளி எனப் பெயரிட்டு, ஆறு முதல்  எட்டு வகுப்பு வரையிலான வகுப்புகள் 06.06.1994 அன்று ஆரம்பிக்கப்பட்டன. 

பள்ளி தொடங்கிய பின் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து மாணவர்கள் ஆர்வமுடன் படிக்க வந்தனர். போதிய இடவசதியும் இல்லாமல் இருந்தது. 

அருகில் இருக்கக்கூடிய அனைத்து கிராமங்களிலிருந்தும் மாணவர்கள் வந்து கல்வி பயில வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு சாலை ஓரமாக இருக்கக்கூடிய நிலம் இருந்தால் நல்லது என முடிவு செய்து, கன்னியர் இல்லத்திற்கு அருகில் உள்ள திருமதி. மதலையம்மாள் அவர்களின் நிலத்தை  விலைக்கு வாங்கினர். 

முதன் முதலாக தலைமையாசிரியராக நியமிக்கப்பட்ட திரு. ஆசீர்வாதம் அவர்கள் 1994-1998 ஆம் ஆண்டு வரை பள்ளியை சிறப்பாக வழிநடத்தி சென்றார்.

புதியதாக வாங்கப்பட்ட நிலத்தில் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு அப்போதைய ஆயரால் அடிக்கல் நாட்டப்பட்டது. அதே சமயம் நடுநிலைப் பள்ளியாக இருந்த இப்பள்ளியானது 02.06.1997 அன்று உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பள்ளியின் தாளாளர் தந்தையாக இருந்த அருள்பணி. K. மரிய ஜோசப் அவர்களின் தீவிர முயற்சியாலும், ஊர் மக்களின் ஒத்துழைப்பாலும் நான்கு வகுப்பறைகளும் இரண்டு அலுவலகங்களும் என இப்பள்ளியின் கீழத்தளம் கட்டப்பட்டது. 2000 ஆம் ஆண்டில் தருமபுரி மறைமாவட்ட ஆயர் மேதகு. ஜோசப் ஆண்டனி இருதயராஜ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 

1996  முதல் 2000 ஆம் ஆண்டு வரை சேசுராஜபுரம் பங்கின் பங்குத்தந்தையாகவும்  பள்ளியின் தாளாளராக  பணியாற்றிய அருள்பணி. K. மரிய ஜோசப் அவர்களால் இப் பள்ளி அசுர வளர்ச்சி அடைந்தது. 1998 முதல் 1999 வரையிலான காலக்கட்டத்தில்  பள்ளியின் தலைமையாசிரியராக இருந்தவர் சகோ. இருதயராஜ் ஆவார். 1998 ஆம் ஆண்டில் அரசாங்கத்தால் அளிக்கப்படும் மதிய உணவுத் திட்டத்தினை பெற்றுத்தந்த பெருமைக்குரியவர் அருள்பணி. K. மரிய ஜோசப் ஆவார். 

2000 ஆம் ஆண்டில்  அருள்பணி. ஸ்டீபன் அடிகளார் தலைமையாசிரியராக பொறுப்பேற்றார். இவரது பணிக்காலத்தில் பள்ளியானது மாவட்ட அளவில் கல்வியிலும் விளையாட்டுத் துறையிலும் பல சாதனைகளைப் படைத்தது. 2003 முதல் 2005 வரை தலைமையாசிரியராகப் பணியாற்றிய திரு. சகாய ஆரோக்கிய ராஜ் அவர்களின் முயற்சியால் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தைப் பிடித்து சாதனைப் படைத்தது இப்பள்ளி. 

சகோ. இருதயராஜ் அவர்கள் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு தலைமையாசிரியர் தந்தையாக இரண்டாவது முறையாக இப்பள்ளிக்கு 2006 இல் பொறுப்பேற்றார். அனைத்து கிராமங்களிலிருந்தும் மாணவ மாணவியர்கள்  இப்பள்ளியில் சேர்ந்தனர். இந்தச் சூழ்நிலையில் வகுப்பறைகள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் பள்ளிக்கட்டிடத்தை விரிவாக்கம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அப்போதைய தாளாளர் தந்தையர்கள் மற்றும் தலைமையாசியர் தந்தை இவர்களின் கூட்டு முயற்சியால் கீழத்தளத்தில் வலதுபுற பாதி கட்டிடமும் முதல் தளமும் கட்டிமுடிக்கப்பட்டது. ஒவ்வொரு வகுப்பறையும் கட்டி முடிக்க முடிக்க மாணாக்கர்களின் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டது.

அருள்பனி. மார்ட்டின் கிறிஸ்துதாஸ் அவர்கள் 2010 ல் தலைமையாசிரியர் தந்தையாகப் பொறுப்பேற்றார். பத்தாம் வகுப்பு முடித்த மாணவியர்களின் மேல்நிலைக் கல்வி கேள்விக்குறியாக இருப்பதை அறிந்தார். அவர்களுக்குக் குழந்தைத் திருமணம் நடப்பதை அறிந்து வேதனையடைந்தார். இதனால் இப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த முடிவு செய்து, ஊர் மக்களோடு இணைந்து  அமைச்சர் பெருமக்களைச் சந்தித்து முயற்சியை மேற்கொண்டார். இதன் விளைவாக 15.06.2011 அன்று இப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. இதற்காகப் பள்ளி கட்டிடத்தை விரிவாக்கம் செய்ய நினைத்தார். கல்விப் பணியோடு  ஒவ்வொரு ஊர் தலைவர்கள் மற்றும் மக்களையும் சந்தித்து நன்கொடைகள் பெற்றும்  மறைமாவட்டத்தின் பங்களிப்போடும் இரண்டாம் தளம் கட்டி முடிக்கப்பட்டது. இவ்வாறு அனைத்து மாணவர்களுக்கும் போதுமான வகுப்பறை வசதி செய்து தரப்பட்டது. புதிய தளமானது 2013 ஜூன் மாதம் தருமபுரி மறைமாவட்ட ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ் அவர்களால் புனிதம் செய்து திறந்து வைக்கப்பட்டது. மேலும் பள்ளி மைதானம் சமன் செய்யப்பட்டது.

2013 இல் அருள்பணி. தேவசகாய சுந்தரம் அவர்கள் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றார். 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மறைமாவட்ட  அளவில் முதலிடம் பெறுவதற்கு அவர் பெரும் பங்காற்றினார். பள்ளியின் பாதுகாவலர் புனித ஜோசப் கெபி கட்டினார். மேதகு ஆயர் அவர்கள் அதனைப் புனிதம் செய்து வைத்தார்.

2015  ஆம் கல்வியாண்டில் தலைமையாசிரியராக இருந்த அருள்பணி. லூர்துசாமி அவர்கள் நவீன கணினி ஆய்வகம் நிறுவினார். கணினி ஆய்வகத்திற்குத் தேவையான 20 கணினிகள், ஐ.வி.டி.பி தொண்டு நிறுவனத் தலைவர் ரமன் மகசசே திரு. குழந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கினார். 19.12.2015 அன்று அவரே அதனைத் திறந்து வைத்தார். மேலும் பள்ளி மாணாக்கர்கள் வெகு தூரத்திலிருந்து வருவதை அறிந்து ஐ.வி.டி.பி தொண்டு நிறுவனத்தின் மூலம் 100 மிதிவண்டிகளை பெற்றுத் தந்தார். 15.02.2016 அன்று அவரே மாணாக்கர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.

2016  முதல் தலைமையாசிரியர் தந்தையாகப் பொறுப்பேற்ற பின்பு தாளாளர் தந்தை அருள்பணி. P. ஜான் கென்னடி அவர்களோடு இணைந்து பள்ளியின் வளர்ச்சி பணியில் சிறிதும் தொய்வில்லாமல் தொடர்ந்தவர் அருள்தந்தை. ஜேம்ஸ் அடிகளார் அவர்கள். பள்ளிக் கட்டிடத்திற்கு  வண்ணம் பூசி மெருகேற்றினார். கல்விப் பணியில் 10 மற்றும் 12 ஆம் அரசு  பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதோடு மறைமாவட்ட அளவில் முதலிடமும் பிடிக்கச் செய்தார். பள்ளிக்கூட 

மாணாக்கர்களுக்கு நவீன கழிப்பிடம் கட்டப் பட்டது. மறைமாவட்ட நிதியுதவி கொண்டு, 

ஆசிரியைகளின் குடியிருப்பு - கான்கிரிட் தளம் அமைத்து.

ஆசிரியர்களுக்கு  புதிய குடியிருப்பு கட்டப்பட்டது. மக்களின் நன்கொடை உதவியுடன் 

பள்ளிக்கு சுற்றுச் சுவர் கட்டப் பட்டது.

குடிநீருக்கு - ஆழ்துளை கிணறு அமைத்தது.

இவ்வாறாக புனித ஜோசப் மேல்நிலைப்  பள்ளி ஒவ்வொரு காலக் கட்டத்திலும்  பல இடர்பாடுகளை சந்தித்தாலும் பல ஆயிரம் மாணாக்கர்களுக்கு அறிவு ஒளி புகட்டி 25  -ஆம் ஆண்டைக் கடந்து கம்பீரமாக நிற்கிறது. 

பள்ளியில் பணியாற்றிய தலைமையாசிரியர்கள்:

1994  -1998  - திரு. ஆசீர்வாதம்

1998  - 1999  - சகோ. இருதயராஜ்

1999  - 2000 - திரு. பிரான்சிஸ் சேவியர்

2000  - 2003  அருள்பணி. ஸ்டீபன்

2003  - 2005 - திரு. சகாய ஆரோக்கிய ராஜ்

2005  - 2006 - திரு.   யேசுதாஸ்

2006  - 2010  - அருள்பணி.  இருதயராஜ்

2010  - 2013  - அருள்பணி. P.  மார்ட்டின் கிறிஸ்துதாஸ்

2013  - 2015  - அருள்பணி. தேவசகாய சுந்தரம்

🌷2015 - 2016  - அருள்பணி. P. லூர்துசாமி

 2016 அருள்பணி. ஜேம்ஸ்.

2016 முதல் அருள்பணி. P. ஜான் கென்னடி அவர்கள். 

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. அருள்பணி. P. லூர்துசாமி (1979-1984)

2. அருள்பணி. செ. சிங்கராயன் (முன்னாள் சேலம் மறைமாவட்ட ஆயர்) (1984-1987)

3. அருள்பணி. A. பிலவேந்திரன் (1987-1990)

4. அருள்பணி. M. ஜெகராஜ் (1990-1993)

5. அருள்பணி. I. மரியசூசை (1993-1996)

6. அருள்பணி. K. மரிய ஜோசப் (1996-2000)

7. அருள்பணி. S. யேசுதாஸ் (2000-2002)

8. அருள்பணி. M. பெஞ்சமின் (2002-2003)

9. அருள்பணி. L. சக்கரையாஸ் (2003-2006)

10. அருள்பணி. A சவரியப்பன் (2006-2007)

11. அருள்பணி. K. ஆரோக்கிய ஜேம்ஸ் (2007-2013)

12. அருள்பணி. A. ரொசாரியோ (2013 -2016)

13. அருள்பணி. P. ஜான் கென்னடி (2016 முதல் தற்போது வரை..) 

பங்கில் பணியாற்றிய உதவிப் பங்குத்தந்தையர்கள்:

1. அருள்பணி. சார்லஸ் (1985-1986)

2. அருள்பணி. K. லூர்துசாமி (2004-2005)

3. அருள்பணி. R. ஏசுதாஸ் (2005-2006)

மண்ணின் இறையழைத்தல்கள் :

1. அருள்பணி. பெரியநாயகம் 

2. அருள்பணி. ஆன்டனி மதலைமுத்து

3. அருள்பணி. ஜார்ஜ் 

4. அருள்பணி. பிரான்சிஸ், MSFS 

5. அருள்பணி. மைக்கேல் ஆண்ட்ரூஸ் 

6. அருள்பணி. பாக்கியநாதன் 

7. அருள்பணி. பெரிய நாயகம், MSFS

8. அருள்பணி. ஆரோக்கியசாமி 

9. அருள்பணி. சவரியப்பன், MMI

10. அருள்பணி. வில்லியம் ஜான் போஸ்கோ, VC 

11. அருள்பணி. சேகர் லூர்துராஜ்

12. அருள்பணி. வினோத்.

1. அருட்சகோதரி. அர்ச்சனா, SJC

2. அருட்சகோதரி. பெர்னார்ட், FIHM

3. அருள்சகோதரி. கார்மல், FIHM 

4. அருள்சகோதரி. ஜெனிபர், FSM 

5. அருள்சகோதரி. நிர்மலா மேரி, SMA

6. அருள்சகோதரி. பரிசுத்த மேரி, SMA

7. அருள்சகோதரி. வெரோணிக்கா, SMMI 

8. அருள்சகோதரி. லில்லி புஷ்பம், FIHM 

9. அருள்சகோதரி. லூர்து மரியாள், FIHM 

10. அருள்சகோதரி. ஆன்டனி ஜாய்ஸ், SMMI 

11. அருள்சகோதரி. K. பாத்திமா மேரி, FIHM 

12. அருள்சகோதரி. பிரேமா, DMI 

13. அருள்சகோதரி. ஆரோக்கியமேரி, FSM

14. அருள்சகோதரி. C. பாத்திமா மேரி, FIHM 

15. அருள்சகோதரி. ஆஞ்சலா மேரி, SCSM

16. அருள்சகோதரி. சாராள் மேரி, PMC

17. அருள்சகோதரி. ஆரோக்கிய மேரி, DMI 

18. அருள்சகோதரி. ஸ்டெல்லா, SJC 

19. அருள்சகோதரி. அமலோற்பவ மேரி, FIHM

20. அருள்சகோதரி. பாஸ்கா மேரி, SCN

21. அருள்சகோதரி. ரீனா மெர்லின், SJT

22. அருள்சகோதரி. ரோஸ்லின், DMI

23. அருள்சகோதரி. அமலா ஜெயந்தி, CSAC

24. அருள்சகோதரி. ரெஜினா மேரி, SMMI

1. அருள்சகோ. மாசிலாமணி, Csc

2. அருள்சகோ. அற்புதராஜ், SG 

3. அருள்சகோ. மரிய ஜெயபால், SG 

4. அருள்சகோ. ராபின் ரொசாரியோ, SG

5. அருள்சகோ. நவீன் பிரபு, FSF

6. அருள்சகோ. லியோ சார்லஸ், SDB

7. அருள்சகோ. டேவிட் அந்தோணிசாமி, SDB.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் :

பங்குத்தந்தை அருள்பணி. P. ஜான் கென்னடி அவர்கள். 

மண்ணின் இறையழைத்தல் தகவல்கள் : 

அருள்பணி. சவரியப்பன், MMI அவர்கள். 

ஆலய வரலாறு தகவல்கள் : அருள்பணி. சூசை ராஜ் (தருமபுரி மறைமாவட்ட பொருளர்)