983 மலை மாதா திருத்தலம், கொணலை

         

மலை மாதா திருத்தலம்

இடம்: கொணலை, 621132

மாவட்டம்: திருச்சிராப்பள்ளி

மறைமாவட்டம்: கும்பகோணம்

மறைவட்டம்: இலால்குடி

நிலை: திருத்தலம்

பங்கு: புனித அந்தோனியார் ஆலயம், கொணலை

பங்குத்தந்தை அருள்பணி. S. மரியதாஸ்

வழிபாட்டு நேரங்கள்:

வாரநாட்களில் திருப்பலி: காலை 06:30 மணி

சனிக்கிழமை திருப்பலி: மாலை 05:00 மணி

ஞாயிறு திருப்பலி: காலை 11:00 மணி

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, சாம்பல் புதன் உயிர்ப்பு ஞாயிறு, சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் சிறப்புத் திருப்பலி காலை 11:00 மணி.

திருவிழா:

ஒவ்வொரு வருடமும் மே 30 மற்றும் 31 தேதியில், தேவதாய் எலிசபெத் அம்மாளை சந்தித்த நிகழ்வில், திருவிழா குடந்தை ஆயர் தலைமையில் நடைபெறும்.

Location map: https://maps.app.goo.gl/JzdR2qABq1sQaZUa6

வழித்தடம்:

திருச்சிராப்பள்ளி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சியில் இருந்து 25 கி.மீ (சமயபுரம் அடுத்து)

மலைமாதா திருத்தல வரலாறு:

அமைவிடம்:

இந்தியத் திருநாட்டின் தென்பகுதியில், தேனமுதத் தமிழகத்தில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சமயபுரத்திற்கு வடக்கே சுமார் 6 கி.மீ தொலைவில் கொணலை என்னும் சிற்றூர் உள்ளது. அதற்கு கிழக்கே அக்காலத்தில் திராட்சைகளுக்குப் பெயர் பெற்ற கல்பாளையத்தில், திரு. ஜோசப் என்பவர் வாழ்ந்திருந்தார்.

கனவில் கண்ட காட்சி:

ஒருநாள் திரு. ஜோசப் அவர்களின் கனவில் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் ஒரு நீரூற்று இருப்பதைக் கண்டார். காலையில் எழுந்ததும் அந்த ஊற்றை தேடிப்புறப்பட்டார். அவர் கண்கள் வியக்கும் வண்ணம் இந்த இரண்டு ஊர்களுக்கு (கல்பாளையம் & சமயபுரம்) இடையில் நெடுஞ்சாலைக்குக் கீழ் திசையில், அந்த வறண்ட காலத்திலும் ஒரு சிறு குழியில் கொஞ்சம் தண்ணீர் இருப்பதைக் கண்டார். இந்த வறட்சிமிகு காலத்தில், குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்ற வேளையில் இந்தத் தண்ணீர் எப்படி வந்தது? என்று வியந்தனர்!

அள்ள அள்ள குறையாத அமுத ஊற்று:

திரு. ஜோசப் அவர்கள் அந்தத் தண்ணீரை அள்ளிப் பருகினார். தேனமுதாக இனித்த அத்தண்ணீர், அள்ள! அள்ள! குறையாமல் இருப்பதைக் கண்டு ஆனந்தக் கூத்தாடினார். "தாயே! மலைமாதாவே! தாகம் தீர்க்க வந்தவளே! எங்களை காப்பற்று" என்று கூறி அங்கே ஒரு சிலுவையைக் கொண்டு வந்து நட்டார்.

பாவம் போக்கும் நீரூற்று:

மக்கள் அந்த இடத்தை நாடி வந்து நீரூற்றைக்கண்டு, அதனை தீர்த்தமாக பாவித்து அள்ளிப்பருக ஆரம்பித்தனர். அப்போது அவர்களுக்குத் தெரியாது "இது தாகம் தீர்க்கும் நீரூற்று மட்டுமல்ல, பாவம் போக்கும் நீரூற்றும் ஆகும் என்பது," ஏனெனில் சில மாதங்களிலேயே அந்த சிலுவைமேடை ஒரு சிற்றாலயமானது.

ஒளியாகத் தோன்றிய அன்னை மரியா:

15.05.1968 ஆம் ஆண்டு திருச்சி கிராப்பட்டியைச் சார்ந்த திரு. எட்வர்டு நெட்டோ, திரு. ஜோசப் பெர்ணான்டஸ், திரு. சில்வெஸ்டர் ஆகிய மூவரும் முயல்வேட்டைக்கு அங்கு வந்தனர். அந்த இடத்திற்குச் சற்று மேற்கே உள்ள மலை உச்சி அதாவது தற்போதைய குருசடியில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் திடீரென ஒரு ஒளி தோன்றுவதையும், அங்கு ஒரு பெண்மணி நிற்பதையும் கண்டனர். ஆனால் அங்கு சென்று பார்த்தபோது அந்தப்பெண்மணி மறைந்து போக, அங்கு ஒரு நீரூற்று இருப்பதையும், அதன் அருகே ஒரு சிலுவை நடப்பட்டிருப்பதையும் கண்டு வியந்தனர்.

"இந்த இடம் புதுமைகள் நிறைந்த இடம். இதற்கு நாம் ஏதேனும் செய்யவேண்டும்" என்றெண்ணி வீடு சென்றனர். பிறகு திருச்சி ஆர்.சி பள்ளி ஆசிரியர் திரு. அந்தோணிசாமியிடம் ஒரு மாதா சுரூபம் செய்து தருமாறு கேட்டுக்கொண்டனர்.

அன்னையின் அற்புதம்:

அதே ஆண்டு (1968) கேரளாவிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த லாரி ஒன்று நள்ளிரவில் கொணலைக்கு அருகே வந்து கொண்டிருந்த போது, திடீரென்று நின்றுவிட ரேடியேட்டரில் தண்ணீர் இல்லை என்றறிந்த டிரைவர் திகைத்து நின்றபோது, தெற்கே சிறிது தூரத்தில் ஒரு பெண்மணி நிற்பதைக் கண்டார். அருகில் சென்று பார்த்தபோது பெண்மணி மறைந்து அங்கே ஒரு நீரூற்று இருப்பதைக்கண்டு மகிழ்ச்சியுடன் அந்த நீரை எடுத்து, ரேடியேட்டருக்கு ஊற்றி தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தார். அது முதல் லாரி ஓட்டுநர்கள் அந்த இடத்தில் ஒரு உண்டியல் வைத்து காணிக்கை செலுத்த ஆரம்பித்தார்கள்.

மாதா சுரூபம் நிறுவுதல்:

திருச்சியிலிருந்து மாதா சுரூபத்தைக் கொண்டு வந்த அந்த மூவர் குழு, அங்கு ஒரு கொட்டகையை அமைத்து, சுரூபத்தை நிறுவிச் சென்றார்கள். 

நடைமுறை சிக்கல்:

சில ஆண்டுகளில் கொணலையைச் சார்ந்த அந்த நிலத்துக்குச் சொந்தக்காரர், அந்த உண்டியல் வருமானம் தனக்குரியது என்று கூற, கிராமத்தினர் தலையிட்டு இது கோவில் இடமாக மாறிவிட்டதால், இந்த வருமானம் நமது கொணலை பங்கு (புனித அந்தோனியார் ஆலயம்) கோவிலுக்கே சொந்தமானது என்று முடிவெடுத்தனர். ஆனாலும் அதை பராமரிப்பதில் நாட்டார்களுக்குள் நடைமுறை சிக்கல் நீடித்தது.

சிற்றாலயம் அமைத்தல்:

ஊர்நாட்டார்கள், பங்குதந்தையிடம் வந்து, அந்த நிர்வாகப் பொறுப்பையும், கோவில் நிலத்தையும் அவரது பராமரிப்பில் ஒப்படைத்தனர். ஆனால் அதே வேளையில் ஆயர் அவர்களின் அனுமதியில்லாமல் வெளிநாட்டு உதவி பெறமுடியாது. அதனால் தன்னால் இயன்றவரை குருக்களிடம் நன்கொடை வசூலித்து, மக்களின் விருப்பப்படி கொணலை கிராமத்தை நோக்கிய வண்ணமாக ஒரு சிற்றாலயத்தை அமைத்து, 19.06.1982 அன்று ஆலயத்தை புனிதப்படுத்தினார் அன்றைய பங்குத்தந்தை அருட்பணி. S.A. சின்னப்பன் அடிகளார் அவர்கள்.

குணமளிக்கும் அன்னை:

25.02.1988 அன்று தச்சங்குறிச்சியைச் சேர்ந்த நோயாளியாக இருந்த விமல் பிரிட்டோ என்ற சிறுவனுக்கு, இந்த ஆலயத்தில் வைத்து நலம் பெறுவதாக, அவனது தந்தை கனவில் கண்டார். மறுநாள் இந்த ஆலயத்தைத் தேடிக் கண்டுபிடித்து ஒரு குத்துவிளக்கைக் காணிக்கையாகச் செலுத்தி, தமது மகனின் நோய் நீங்கியதை சாட்சியம் அளித்துள்ளார்.

குழந்தை வரம் கொடுக்கும் மலைமாதா

23.03.1991 இல் கோவில்பட்டியைச் சேர்ந்த M. மரியசெல்வம் 17 ஆண்டுகளாய் குழந்தை பேறு இல்லாமல் போகவே மலை மாதாவிடம் வேண்டிக் கொண்டார். என்னே! அற்புதம். 1992 ஜனவரி மாதம் அன்னையின் அருளால் ஆண் மகனை ஈன்றெடுத்து, மலைமதுக்கனி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். 

மலைமாதா ஆலய மரத்தின் இலைகள்:

மலைமாதா கோவிலின் மேற்புறத்திலுள்ள பாறைக் கோவிலில், பாடுபட்ட சுரூபத்திற்கு மேலுள்ள ஓர் அரிய மரத்தின் அற்புத இலையை விசுவாசத்தோடு செபித்து உண்பவரும் குழந்தைபாக்கியம் பெறுகின்றனர். தீராத நோய் உள்ளவர்களும், சர்க்கரை நோய், தோல் நோய், உயர் இரத்த அழுத்த நோய் போன்ற அனைத்து நோயாளர்களும் அந்த இலையைப் பறித்து நம்பிக்கையோடு உண்டு குணம் பெறுகின்றனர்.

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை நடைபெறும் குணமளிக்கும் நற்செய்திக் கூட்டத்தில் இது குறித்து சான்று பகர்ந்தும் வருகின்றனர்.

அறுவை சிகிச்சையின்றி அற்புதமாக குணம்:

24.09.1996 ஆம் ஆண்டு ஆரோக்கியராஜ் என்பவரின் மனைவி சிறுநீர் பையில் கல் அடைப்பு இருந்து துன்பப்பட்டார். மருத்துவரிடம் சிகிச்சை பெற்றும் குணம் பெற முடியவில்லை. கொணலை மலைமாதா திருத்தலத்திற்கு வந்து அன்னையிடம் நம்பிக்கையோடு வேண்டிக் கொண்டார். அறுவை சிகிச்சையின்றி அற்புதமாக குணம் பெற்றார். அற்புதம் செய்யும் அன்னையின் மர இலையை உண்டதால் நலம் பெற்றதாக சாட்சியம் பகர்ந்துள்ளார்.

திருச்சிலுவை வரலாறு:

அருட்தந்தை S. செல்வராயார் அடிகளார் பங்குத் தந்தையாக இருந்த காலத்தில், மலைமாதா திருத்தலத்திற்கு மேற்கேயுள்ள கல்வாரி மலையில் திருச்சிலுவை ஒன்று நிறுவப்பட்டது. அவரைத் தொடர்ந்து பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்ற அருட்தந்தை. M. அந்தோணிசாமி அடிகளார் காலத்தில் நன்கொடையாளர் உதவியுடன் அந்த இடத்தில் பெரிய திருச்சிலுவை சுரூபம் நாட்டப்பட்டது.

தவக்கால சிறப்பு நிகழ்வுகள்:

தவக்காலத்தின் 6வது வெள்ளியன்று மாலை 6.30 மணிக்கு அன்னை வேளாங்கண்ணி பாதை யாத்திரைக்குழு, இயேசுவின் பாடுகளின் நிகழ்வுகளை தத்ரூபமாக நடித்துக் காண்பித்து இறையரசை அறிவிக்கின்றனர். அன்று குடந்தை மறைமாவட்டம் இலால்குடி மறைவட்டத்தைச் சேர்ந்த குருக்களும், இறை மக்களும், மலைமாதா திருத்தலத்திற்கு வந்து, சிலுவைப்பாதை செய்து திருப்பலியில் பங்கேற்று, பாடுகளின் புனித வாரத்தில் நுழைகிறார்கள். கிறிஸ்துவர்கள் மட்டுமின்றி எல்லா மக்களும் சாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி அலைஅலையாக திரண்டுவந்து, அன்னையின் அருளையும் ஆசீரையும் பெற்றுச் செல்கிறார்கள்.

அருட்தந்தை P.J. சாம்சன் அடிகளாரின் பணிக்காலத்தில் மின்சார இணைப்புகாகவும் மற்றும் மலைமாதா ஆலய வளர்ச்சிப் பணிக்காகவும் பல்வேறு நிலங்கள் விலை கொடுத்து வாங்கப்பட்டன.

சிலுவைப்பாதை கெபி:

30.05.2008 ஆம் ஆண்டு மலைமாதா பக்தர்களின் நன்கொடையாலும், கொணலை மக்களின் உதவியாலும், ஆன்மீகத்தில் வளர இயேசுவின் திருப்பாடுகளை சித்திரிக்கும் விதத்தில் சிலுவைப்பாதை கெபிகள் கட்டப்பட்டு, பேரருட்பணி. பீட்டர் பிரான்சிஸ் (மறைமாவட்ட நிர்வாகி) அவர்களால் புனிதப் படுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை மலைமாதா பக்தர்கள், திரு. பிச்சை ஆசிரியர் மனைவி ஆரோக்கியமேரி அவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட இயேசுவின் மலைப் பொழிவு இடம், உடல் அடக்க இடம், இயேசுவின் உயிர்ப்பு சுரூபங்கள் ஆகிய இடங்களுக்குச் சென்று தரிசித்து வருகிறார்கள். மலைமாதா பக்தர்கள் இயேசுவினுடைய திருப்பாடு கெபிகளை அடைந்து சிலுவைப்பாதை சொல்வதோடு மட்டுமல்லாமல் பல புதுமைகளும் அடைந்து வருகிறார்கள்.

கட்டுமான பணிகள்:

பங்குத்தந்தை A. ரோச் அலெக்ஸாண்டர் காலத்தில் மலைமாதா திருத்தலத்தின் வானுயர் கோபுரமும், செபமாலை பூங்காவும், தியான கூடமும், மாதாவின் விசுவாசிகளின் நன்கொடையாலும், பங்குத்தந்தையின் பெருமுயற்சியாலும் கட்டப்பட்டது.

அருட்தந்தை A. சாம்சன் அடிகளார் பொறுப்பேற்ற பின் 10.10.2018 ஆம் ஆண்டு மலைமாதா திருத்தலத்தின் மேற்கில் ரூ.35,00,000/- (ரூபாய் முப்பது ஐந்து இலட்சம்) செலவில் மண் அடித்து, குழாய் பாலங்கள் அமைத்து, தார்சாலை போடப்பட்டது. கொணலை பங்கு மண்ணின் மைந்தர் அருட்தந்தை M.செல்வராஜ் அடிகளார் உதவியால் ரூ. 1,30,000/- செலவில் 500 அடியில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் நலனுக்காக 172 அடி நீளம் 33அடி அகலத்தில் 5600 சதுர அடியில் சிலுவைப்பாதை நடைபெறும் இடத்தில் பேவர் பிளாக்ஸ் அமைக்கப்பட்டுள்ளது.

சிறப்புகள்:

மிகச்சிறிய ஓலைக்குடிசைக் கொட்டகையுடன் மலை மாதா குருசடியாக அமையப்பெற்ற இந்த ஆலயம் இன்று, அழகிய விண்ணை முட்டும் கோபுரத்துடன் மிகப்பெரிய திருத்தலமாக விளங்குகிறது.

செபமாலை பூங்கா, தியான மண்டபம், சிலுவைப்பாதை கெபிகள் (வேளாங்கண்ணியில் உள்ளது போல) பாறைக்கோயில் இயேசுவின் அடக்கக் கல்லறை, மாதா நீரூற்று -குளம் ஆகியவை மக்களின் மனங்களை ஆறுதல் படுத்தும் (ஆற்றுப்படுத்தும்) இடங்களாக அமைந்துள்ளன.

திருத்தலத்தின் வளர்ச்சியில் பங்குத் தந்தையர்கள்:

அருட்பணி. S.A. சின்னப்பன் : 1972-1982

அருட்பணி. S. செல்வராயர் : 1987-1995

அருட்பணி. I. அடைக்கலசாமி : 1995-2000

அருட்பணி. M.அந்தோணிசாமி : 2000-2006

அருட்பணி. P.J. சாம்சன் : 2006-2012

அருட்பணி. A. ரோச் அலெக்ஸாண்டர் : 2012-2018

அருட்பணி. A. சாம்சன் : 2018-2024

அருட்பணி. S. மரியதாஸ் 2024 முதல்…

கொணலை மலை மாதா திருத்தலத்திற்கென்று குடும்பங்கள் எதுவும் இல்லை. ஆனாலும் நாள்தோறும் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. இதில் ஏராளமான இறைவிசுவாசிகள் பங்கேற்று வருகின்றனர். மே மாதம் நடைபெறும் திருவிழாவிலும், மார்ச் மாதத்தில் நடைபெறும் தவக்கால சிறப்பு திருப்பயணம், சிலுவைப்பாதை, திருப்பலியிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று இறையாசீர் பெற்றுச் செல்கின்றனர். 

நமக்காக இறைவனிடம் பரிந்து பேசும் அன்னை மாமரியியின் வல்லமை நிறைந்த, மலைமாதா திருத்தலத்தலம் வாருங்கள்... அளவற்ற ஆசீர்வாதங்களை பெற்றுச் செல்லுங்கள்...

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் சேகரிப்பு: பங்குத்தந்தை அருள்பணி. மரியதாஸ் அவர்களின் அனுமதியுடன், திரு. ஆரோக்ய பிரிட்டோ, இடையாற்றுமங்கலம்.

வரலாறு: ஆலய வரலாற்று மலர்.