507 புனித காணிக்கை மாதா ஆலயம், ஊ. மாரமங்கலம்


புனித காணிக்கை மாதா ஆலயம்.

இடம் : ஊ. மாரமங்கலம், ரெட்டிப்பட்டி அஞ்சல், ஓமலூர் தாலுகா.

மாவட்டம் : சேலம்
மறை மாவட்டம் : சேலம்
மறை வட்டம் : மேட்டூர்

நிலை : கிளைப் பங்கு
பங்கு : புனித சார்லஸ் பொரோமியோ ஆலயம், தாரமங்கலம்.

பங்குத்தந்தை : அருட்பணி. V. ஆல்பர்ட் அந்தோணி ராஜ்

குடும்பங்கள் : 25
அன்பியங்கள் : 3

ஞாயிறு மாலை 06.15 மணிக்கு திருப்பலி.

திருவிழா : பிப்ரவரி மாதத்தில் சாம்பல் புதனுக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையை மையமாகக் கொண்டு 3 நாட்கள்.

சிறப்புகள் :
1) கொங்கு நாட்டிலேயே அருட்பணி. ராபர்ட் தே நோபிலியால் கட்டப்பட்ட முதல் ஆலயம்.
2. சேலம் மறைமாவட்டத்தில் கட்டப்பட்ட முதல் ஆலயம்.

வழித்தடம் : ஓமலூர்- தொளசம்பட்டி.
பேருந்து நிறுத்தம் : மாதா கோவில்
பேருந்துகள் : P.P.S

வரலாறு :

மாரமங்கலம் பகுதியில் 17 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் கிறிஸ்துவமறை தோன்றியதாக வரலாறு கூறுகிறது. அருட்தந்தை. இராபர்ட் தெ நொபிலி அவர்கள், வடமேற்கில் ஏத்தாப்பூரிலிருந்து தென்கரைக்கோட்டை வரையும் பரவியிருந்த சேலப்பட்டியை விட்டு கொச்சிக்கு சென்ற பின்னர் சேலப்பட்டி நாயக்கர், சேர்ந்தமங்கல நாயக்கரோடு போர் தொடுத்தார். திருமங்கல நாயக்கர் தமக்கு நேரப்போகும் துன்பத்தை அறிந்தவராய் தன்னுடைய உறவினர்களுடன் சேலப்பட்டியை விட்டு ஓடிவந்து மாரமங்கல நாயக்கரிடம் அடைக்கலம் புகுந்தார்.

திருமங்கல நாயக்கர் தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் திருமுழுக்கு அளிக்கும்படி கேட்டு, அருட்தந்தை. இராபர்ட் தெ நொபிலி அவர்களுக்கு ஆள் (தூது) அனுப்பினார். ஆனால் 1626 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மாரமங்கலத்திற்கு வந்த அருட்தந்தை. இராபர்ட் தே நொபிலியை, திருமங்கல நாயக்கர் பார்க்க விரும்பவில்லை. ஆனால் சில நாட்களுக்கு பிறகு தன்னுடைய ஆண் பிள்ளைகளை திருமறையில் சேரும்படி கட்டளையிட்டு, அவர்களை மறைக்கல்வி கற்க தத்துவபோதகரிடம் (இராபர்ட் தே நொபிலி) அனுப்பி வைத்தார். பின்னர் திருமங்கலநாயக்கர், மாரமங்கலத்தில் தத்துவபோதகர் தங்கிக் கொள்ள வீடு ஒன்றைக் கொடுத்தார். சிறிது நாட்களுக்குப் பிறகு நாயக்கரின் மனைவியும் திருமறையில் சேர்ந்தார்.

ஒரு சமயத்தில் மாரமங்கலத்தில் தொற்று நோய் பரவவே, அதற்குக் காரணம் அருட்தந்தை. இராபர்ட் தே நொபிலி அவர்களே காரணம் எனக் கருதி, அவரை நாடுகடத்த செட்டிமன்னன் முயற்சித்தான். ஆனால் அருட்தந்தை. நொபிலி அவர்கள் மாரமங்கலத்தில் சிறு ஆலயம் ஒன்றை எழுப்பி, அதன் மீது ஒரு சிலுவையை நாட்டினார். அதன் பின்னர் தொற்றுநோய் நீங்கியது. இந்த ஆலயம் தான் கொங்கு நாட்டிலும், சேலம் மறைமாவட்டத்திலும் எழுப்பப்பட்ட முதல் ஆலயமாகும்.

தத்துவபோதகர் தமக்கு உதவியாக இருக்கும்படி அருட்தந்தை. மானுவேல் மார்டின்ஸ் அவர்களை மாரமங்கலத்திற்கு அழைத்து வந்தார். அதன் பிறகு இராபர்ட் தெ நோபிலி மதுரை சென்றார். அவருக்குப்பின் அருட்தந்தை. அந்துவான் தெலிக்கோ அவர்கள் மாரமங்கலம் பகுதியில் தங்கி பணியாற்றினார்.

தற்போது உள்ள ஆலயமானது பழைய ஆலயம் இருந்த அதே இடத்தில், அருட்தந்தை. பிரான்சிஸ் சேவியர் பணிக்காலத்தில் கட்டப்பட்டு 06.02 2005 அன்று அர்ச்சிக்கப் பட்டது.

மேலும், அருட்பணி. சேவியர் (2006-2011) அவர்களின் பணிக்காலத்தில் ஆலயத்தை பாதுகாக்க சுற்றுச்சுவர் கட்டப்பட்டு, அன்னை வேளாங்கண்ணி மாதா கெபியும் கட்டப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.

அருட்பணி. ஜான் ஜோசப் (2011-2016) அவர்களின் பணிக்காலத்தில் இராபர்ட் தே நொபிலி இங்கு வந்துச் சென்றதன் நினைவாக மணிக்கோபுரம் அமைக்கும் பணியை ஆரம்பித்தார்.

அதன்பிறகு வந்த அருட்பணி. மரிய சூசை (2016-2019) அவர்களின் முயற்சியாலும், நன்கொடையாளர்களின் உதவியாலும் "நொபிலி மணிக்கூண்டு" கட்டப்பட்டு 11.02.2017 அன்று சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு. செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டதுடன், தேர் வைப்பதற்கு நிழற்கூடம் கட்டப்பட்டது.

இன்றையப் பங்குத்தந்தை அருட்பணி. ஆல்பர்ட் அந்தோணி ராஜ் அவர்கள் மக்களை ஆன்மீகப் பாதையிலும், வளர்ச்சிப் பாதையிலும் வழிநடத்தி செல்கின்றார்.

காணிக்கை அன்னையின் புதுமைகள் :

பல ஆண்டுகளாக குழந்தை இல்லாத தம்பதிகள், இவ்வாலயம் வந்து ஜெபித்து குழந்தை பாக்கியம் பெற்றனர்.

திருமண தடை நீங்கி, மகிழ்வான குடும்ப வாழ்க்கை பெற்றவர்கள் வந்து நன்றி கூறி செல்கின்றனர்.

சிலருக்கு வீடு கட்டும் பாக்கியம் கிடைத்து மகிழ்ச்சியடைந்தனர்.

நோயுற்றோர் நோய்கள் நீங்கி நலம் பெற்றனர்.

சிலரது குடும்ப வாழ்வில் ஏற்பட்ட பிரச்சினை நீங்கியது.

வேலை வாய்ப்பு இல்லாதவர்கள் இவ்வாலயம் வந்து ஜெபித்து வேலை கிடைத்தது.

இவ்வாறு எண்ணற்ற அற்புதங்கள் தூய காணிக்கை அன்னையின் அருளால் நாள்தோறும் நடந்து வருகின்றன. வாருங்கள் அன்னையின் வழியாக இறைவனின் ஆசீர்வாதங்களை பெற்றுச் செல்லுங்கள்..

தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி. ஆல்பர்ட் அந்தோணி ராஜ்