755 தூய ஜெபமாலை மாதா ஆலயம், ரிவாடி

       

புனித ஜெபமாலை மாதா ஆலயம் (Our Lady of Holy Rosary Church)

இடம்: ரிவாடி (Rewari)

மாநிலம்: ஹரியானா

மாவட்டம்: ரிவாடி

மறைமாவட்டம்: புதுதில்லி உயர் மறைமாவட்டம்

மறைவட்டம்: ரிவாடி

நிலை: பங்குத்தளம்

மறைப்பரப்புத் தளம் (Mass Center): ஜலியவாஸ் (Jaliwas)

பங்குத்தந்தை: அருட்பணி. டோனி, MMI

தவிப் பங்குத்தந்தையர்கள்: 

அருட்பணி. ஜான் ரத்தினம், MMI

அருட்பணி. தோமினிக் சாவியோ, MMI

குடும்பங்கள்: 35

ஞாயிறு திருப்பலி: கோடைகாலத்தில் காலை 09:00 மணிக்கு

குளிர்காலத்தில் காலை 10:30 மணிக்கு (ஹிந்தி)

நாள்தோறும் திருப்பலி: காலை 07: 00 மணிக்கு 

திருவிழா: அக்டோபர் மாதம் 7-ம் தேதியை அடுத்து வரும் ஞாயிறு

வழித்தடம்: புதுடெல்லி -ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், 100கி.மீ தொலைவில் ரிவாடி அமைந்துள்ளது.

Location map: https://g.co/kgs/75wsV9

வரலாறு:

தூய செபமாலை அன்னை ஆலயம் - ரிவாரி, ஹரியானா. (ஆங்கிலத்தில் ரிவாரி எனவும், ஹிந்தியில் ரிவாடி எனவும் அழைக்கப்படுகிறது).

தூய செபமாலை அன்னை ஆலயம் புதுதில்லி உயர் மறைமாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஆலயங்களுள் ஒன்று. இவ்வாலயம் புதுதில்லியிலிருந்து 100 கி.மீ தொலைவில் ஹரியானா மாநிலம் ரிவாரி மாவட்டத்தில்  அமைந்துள்ளது.

ஆலயம் உருவான விதம்:

ரிவாரி நகரம் இந்திய இரயில்வே வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இங்கு இந்திய வட மேற்கு இரயில்வேயின் மிக விரிவான இரயில் நிலையம் அமைந்துள்ளதால், அப்போதைய கத்தோலிக்க ஆங்கிலேயர்கள் இங்கு பணி செய்ய மிகுந்த ஆர்வம் காட்டினர். 1860 – ம் ஆண்டு இங்கு பணிபுரிந்தவர்களில் 7 கத்தோலிக்க குடும்பங்கள் இருந்தன. அவர்களின் வழிபாட்டுத் தேவைக்காக ஒரு ஆலயம் வேண்டும் என்று உணர்ந்தவர்கள், அப்போதைய இரயில் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளின் உதவியோடு ஓர் ஆலயத்தை கட்டியெழுப்ப முடிவு எடுத்தனர். 1864 – ம் ஆண்டு இவ்வாலயம் கட்டியெழுப்பப்பட்டு தூய செபமாலை அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அப்போதைய ஆக்ரா மறைமாவட்டத்தின் குருக்கள், இம்மக்களின் ஆன்மத் தேவையை ஞாயிறு தோறும் வந்து நிறைவேற்றிச் சென்றனர். 

1937 –ம் ஆண்டு ஆக்ரா மறைமாட்டத்திலிருந்து பிரிந்து, புதுதில்லி – சிம்லா உயர் மறைமாவட்டம் உருவானப் பிறகு, ஆலய நிர்வாக பொறுப்பு புதுதில்லி – சிம்லா உயர் மறைமாவட்டத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. 1941 – ம் ஆண்டிற்கு பிறகு  கப்புச்சின் சபையை சார்ந்த அருட்பணி. ஆன்சலம் முதல் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக மேதகு. ஆண்டகை. சில்வஸ்டர் பேட்ரிக், அதன் பிறகு பேராயர். ஆஞ்சலோ பெர்ணாண்டஸ், அதன் பிறகு பேராயர். ஆலன் டி லாஸ்டிக் என அனைத்து ஆயர்களும் ரிவாரி பணித்தளத்தின் மீது தனிப்பட்ட அக்கறை செலுத்தினர். 

இந்திய சுதந்திரத்திற்கு பிறகு 1948 –ம் ஆண்டு ஆலய கட்டிடம், பங்களா நம்பர்  – 118 என்ற பெயரில் குத்தகையின் அடிப்படையில் புதுதில்லி –சிம்லா மறைமாவட்டத்திற்கு ஒப்படைக்கப்பட்டது. 1961 –1970 வரையிலான காலக்கட்டத்தில் மறைமாவட்ட குருக்கள் ரிவாரியிலிருந்து 80 கி.மீ தொலைவிலுள்ள குருகிராமில் அமைந்துள்ள புனித மிக்கேல் பணித்தளத்தில் தங்கி, ஞாயிறு தோறும் ரிவாரி பணித்தளத்தில் ஆன்மீகத் தேவையை நிறைவேற்றி வந்தார்கள். 

இப்பங்கின் வரலாற்றின் முக்கிய நிகழ்வாக 1980 –ம் ஆண்டு தமிழ்நாடு ஆயர் பேரவையின் முன்னெடுப்பில், தமிழக குருக்கள் வட இந்தியாவின் கடினமான பணித்தளங்களில் பணி செய்யும் அனுபவம் பெறும் வகையில், இரண்டு அருட்பணியாளர்களை வட இந்தியாவிற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இம்முடிவை வரவேற்ற அப்போதைய பேராயர் ஆஞ்சலோ பெர்ணாண்டஸ் 1982 –ம் ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து வந்த அருட்தந்தையர்கள் போஸ்கோ மற்றும் பாலா இருவரையும் ரிவாரி பணித்தளத்தில் பணியமர்தினார்.

இவ்விரு குருக்களின் அயராத உழைப்பால் பணித்தளத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தை உணர்ந்த பேராயர், 1991 –ம் ஆண்டு ஹரியானா மாநில வீட்டு வாரிய காலணியில் குடியிருப்பு ஒன்றை வாங்கி அதற்கு Divyodaya என்று பெயர் சூட்டி குடியிருப்பை திறந்து வைத்தார். அதுமுதல் குருக்கள் அங்கு தங்கி தினந்தோறும் திருப்பலி நிறைவேற்றி வந்தனர். பின்நாட்களில் அருகாமையில் உள்ள தாருகடா, பாவல் போன்ற இடங்களில் பணித்தளங்களை விரிவுபடுத்தினர். 

இச்சூழலில் சில காரணங்களுக்காக 1985 –ம் ஆண்டு இந்திய இரயில்வே குத்தகை ஒப்பந்தத்தை திருப்ப பெற்றுக் கொண்டது. அதே சமயம் CNI – Church of North India போதகர்கள் ஆலயத்தை உரிமை கோரி வழக்குத் தொடர்ந்தனர். அப்போதைய குருகிராம் புனித மிக்கேல் பள்ளியின் அதிபர் தந்தை. ஜோசப் குடிலில் இவ்வழக்கை சட்டரீதியாக எதிர்கொண்டார். 

1989 – ம் ஆண்டு FMM சபையின் கன்னியர்கள் ரிவாரியில் தங்கி பணிசெய்ய முன்வந்தார்கள். 1992 –ம் ஆண்டு சில காரணங்களுக்காக தமிழக குருக்கள் பணித்தளத்தை மீண்டும் புதுதில்லி உயர் மறைமாவட்டத்தின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு தங்கள் சொந்த மறைமாவட்டத்திற்கு திரும்பி சென்றார்கள். மீண்டும் 1992 –2004 ம் ஆண்டு வரை பல்வேறு மறைமாவட்ட குருக்கள் பங்குப் பணியாளர்களாக பணியாற்றினர். 1993 – ம் ஆண்டு FMM அருட்சகோதரிகள் தங்களுக்கென ரிவாரியில் தீப்தி ஆசிரமம் என்னும் கன்னியர் இல்லத்தை கட்டியெழுப்பினர். 

2004 –ம் ஆண்டு முதல் அப்போதைய பேராயர் வின்சென்ட் கொன்சாசோ ரிவாரி பணித்தளத்தை  கப்புச்சின் (OFM Cap) குருக்களின் பொறுப்பில் ஒப்படைத்தார். 2014 –ம் ஆண்டு FMM சபைக்கு போதிய இறை அழைத்தல் இல்லாத காரணத்தால் ரிவாரி பணித்தளத்தை மூடுவதென அருட்சகோதரிகள் முடிவெடுத்தனர். தற்போதைய புதுதில்லி உயர் மறைமாவட்ட பேராயர். அனில் ஜோசப் தாமஸ் குட்டோ அவர்கள், CIC சபை கன்னியர்களை இப்பணியைத் தொடர அழைப்பு விடுத்தார். அழைப்பை ஏற்ற CIC கன்னியர்கள் இன்றளவும் ரிவாரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சமூக சேவைகள் ஆற்றி வருகின்றனர்.

2015 –ம் ஆண்டு கப்புச்சின் சபையினர் ரிவாரி பணித்தளத்தை மறைமாவட்டத்திடம் ஒப்படைத்தனர். அதன் பிறகு மறைமாவட்ட அருட்தந்தை. டென்னி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆயர் இல்லத்திலிருந்து ரிவாரி பணித்தளத்திற்கு வந்து, திருப்பலி நிறைவேற்றிவிட்டு சென்றார். 

2016 –ம் ஆண்டு ரிவாரி பணித்தளத்தின்பால் கவனத்தை ஈர்க்கும் வகையில், பேராயர் தலைமையில் இரு அருட்சகோதரர்களுக்கு திருத்தெண்டர் பட்டம் வழங்கும் நிகழ்வு ரிவாரியில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் பிறகு 2016 –ம் ஆண்டு ரிவாரி பணித்தளம்  MMI சபையின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது. அதுமுதல் MMI சபையை சார்ந்த அருட்தந்தை. டோனி பணித்தளத்தின் பங்குத்தந்தையாக பொறுப்பேற்று செயல்பட்டு கொண்டிருக்கிறார். 2017 –ஆம் ஆண்டு ஆலய வளாகத்தினுள் தூய செபமாலை அன்னைக்கு கெபி எழுப்பப்பட்டது. 2018 – ஆம் ஆண்டு ஆலய வளாகத்தை சுற்றி அழகு சேர்க்கும் வகையில் பேராயர். அனில் குட்டோ சிலுவைப்பாதை நிலைகளை நிறுவினார். தற்போது இப்பங்கில் 8 வெவ்வேறு மாநிலங்களை சார்ந்த சுமார் 35 குடும்பங்கள் உள்ளன.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: 

பங்குத்தந்தை அருட்பணி. டோனி, MMI மற்றும் உதவிப் பங்குத்தந்தை அருட்பணி. ஜான் ரத்தினம், MMI