313 செங்கோல் மாதா ஆலயம், திருமலைராயபுரம்

  

செங்கோல் மாதா ஆலயம்.

இடம் : திருமலைராயபும்

மாவட்டம் : புதுக்கோட்டை
மறை மாவட்டம் : திருச்சி
மறை வட்டம் : கீரனூர்

நிலை : பங்குத்தளம்

கிளைகிராமங்கள் :
1. வாழமங்கலம்
2. சூசையப்பர் பட்டினம்
3. T மேலப்பட்டி
4. T கீழப்பட்டி

குடும்பங்கள் : 270
அன்பியங்கள் : 9(கிளைப்பங்குகளையும் சேர்த்து)

பங்குத்தந்தை : அருட்தந்தை R. ஞான அருள்தாஸ்

ஞாயிறு திருப்பலி : காலை 08.00 மணிக்கு

திங்கள், புதன், வெள்ளி, சனி மாலை 07.00 மணிக்கு ஜெபமாலை மற்றும் திருப்பலி

திருவிழா : ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் மூன்று நாட்கள். (சனி, ஞாயிறு, திங்கள்)

மாதத்தின் முதல் சனிக்கிழமை ஆலயத்தை சுற்றி மாதா சுரூபம் தாங்கிய தேர் பவனி, ஜெபமாலை நடைபெறும்.

வழித்தடம் : புதுக்கோட்டை- கீரனூர்- வழி திருமலைராயபுரம், உப்பிலியாகுடி.

பேருந்துகள் : 32, K4, 7C.

வரலாறு :

ஊர் பெயர்க்காரணம் :
புதுக்கோட்டையானது ஒரு காலத்தில் மன்னராட்சி நடைபெற்ற மாவட்டம். திருமலை நாயக்கர் என்பவரது ஆளுகையில் இருந்தது. அவ்வேளையில் இந்த ஊரில் திரு ராயப்பன் என்பவர் ஊர் தலைவராக இருந்துள்ளார். ராஜாவிற்கு திரு ராயப்பன் செய்த சில உதவிகளுக்காக, இவ்வூரை பட்டயம் செய்யும் போது அரசரின் பெயரான திருமலையையும், ஊர் தலைவர் பெயரான ராயப்பன் என்பதையும் இணைத்து "திருமலைராயபுரம்" எனப் பெயரிட்டு பட்டயம் செய்து கொடுத்துள்ளார். அதுவே இவ்வூரின் பெயராக நிலைத்து நின்றது.

ஆலய தோற்றம் :
பல ஆண்டுகளுக்கு முன்னர் திருச்சி புள்ளம்பாடியை சார்ந்த ஒருவர், ஓரிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்திருந்தார். இத் தம்பதிகள் பிற சமயத்தை சார்ந்தவர்ளாக இருந்தனர்.

இவர்களுக்கு திருமணமாகி நெடுநாளாகியும் குழந்தை பாக்கியம் இல்லாமலிருந்தனர்.

இவ்விரு ஊர்களுக்குமிடையே சுமார் 200 கி.மீ தொலைவிருந்தது. மக்கள்
நடைபயணமாகவே இவ்வூர்களுக்கு சென்று வந்தனர். தனது மனைவியையும் அழைத்துக் கொண்டு அடர்ந்த காட்டுப்பகுதியான இவ்வழியே ஓரிக்கோட்டையை நோக்கி சென்றபோது, அப்பெண் வயிற்று வலியால் துடித்துள்ளார்.

தற்போது ஆலயம் அமைந்துள்ள இடத்தில் ஒரு புளியமரம் இருந்தது, அப்பெண் வலியால் நடக்க முடியாமல் போகவே இந்த புளியமரத்தடியில் அமர்ந்து ஓய்வெடுத்துள்ளார். ஆச்சரியம் அப்பெண்ணுக்கு வயிற்று வலி இல்லாமல் போனது.

பின்னர் கணவர் மனைவியை, வா பயணத்தை தொடரலாம் என்றழைக்க..! அப்பெண் நான் எங்கேயும் வரவில்லை, இங்கேயே தங்கிக் கொள்கின்றேன். இது மகிமை நிறைந்த இடமாகத் தெரிகின்றது இவ்விடத்தை விட்டு நான் எங்கேயும் வரவில்லை..! என்று கூறி அங்கேயே அமர்ந்து விட்டார். கணவர் எப்படி அழைத்த பின்னரும் அவர் அந்த இடத்தை விட்டு அகலவேயில்லை.

வேறுவழியின்றி கணவர் அந்த புளியமரத்தின் மீதேறி அருகே எங்கேயாவது வீடுகள் தெரிகின்றனவா..! என்று பார்க்க, தொலைவில் குடியிருப்புகள் தென்பட்டது. அவர் அங்கு சென்று உதவி கோர, இப்பெண்ணை அவர்கள் வீட்டிலேயே தங்கிக் கொள்ளலாம் வாருங்கள் என்றழைத்தும் போகாமல் இருந்திடவே, அந்த இடத்திலேயே ஊராரின் உதவியுடன் சிறுகுடிசை கட்டி வாழ்ந்துள்ளார்கள்.

ஒரு நாள் இப்பெண்ணுக்கு அன்னை காட்சி கொடுத்து, இவ்விடம் புனிதமான இடம் எனவும், அருகிலேயே வேறு ஒரு குடிசை கட்டி வாழ்ந்து கொள்ளுங்கள் என்று ஆசி கூறியுள்ளார்கள்.

பின்னர் இவர்கள் கிறிஸ்தவம் தழுவினர்.

அவ்வாறு ஊரார் சேர்ந்து கட்டிக் கொடுத்த குடிசையை ஆலயமாகக் கொண்டு, இத்தம்பதியினர் வேறு ஒரு குடிசையை கட்டி விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர். அன்னையின் அருளால் குழந்தை பாக்கியம் பெற்று அதன் வழியாக பல தலைமுறைகளாக வாழ்ந்து வருபவர்களே திருமலைராயபுரம் மக்கள் என வரலாறு கூறுகின்றது.

ஆலயத்தின் வளர்ச்சி :
சுமார் 1700 -களில் துவக்கப்பட்ட இத்தல திருச்சபையானது, ஆரம்பத்தில் ஓலைக்குடில் ஆலயத்தை கட்டி புனித செங்கோல் மாதாவை பாதுகாவலாகக் கொண்டு மக்கள் இறைவனை வழிபட்டு, கீரனூர் அருகில் உள்ள நாஞ்சூர் புனித வியாகுல மாதா ஆலயத்தின் கிளையாக இருந்தது. பின்னர் கீரனூர் தனிப்பங்கான பின்னர் அதன் கிளைப்பங்காக இருந்தது.

இரண்டாவதாக ஓட்டுக்கூரை ஆலயம் கட்டப்பட்டது. மூன்றாவதாக 1928 -ம் ஆண்டில் சற்று பெரிய ஆலயமானது கட்டப்பட்டது. 1978 ம் ஆண்டு ஜூபிலி ஆண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பங்கு மக்களின் சிறப்பான செயல்பாடுகளாலும், அருட்தந்தையர்களின் வழிகாட்டுதலினாலும் தூய செங்கோல் மாதாவின் அருளாசியினாலும் 1998 -ம் ஆண்டு திருமலைராயபுரம் தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி தேவராஜ் அவர்கள் பொறுப்பேற்று வழிநடத்தினார்கள்.

திருமலைராயபுரம் பங்கு 21-05-2005 அன்று திரு இருதயங்களின் குருக்கள் சபையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.2012-ல் பங்குப் பணியாளர்கள் தங்கவும்,
அலுவல்களை மேற்கொள்ளவும் பங்கு இல்லம் கட்டப்பட்டது.

கிளைப்பங்கான வாழமங்கலம் இறைமக்களின் ஆன்மீக நலனை கருத்தில் கொண்டு, 2013 ல் புதிய ஆலயம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.

அன்னையின் அருளால் ஆலயம் வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆலயத்தில் இடநெருக்கடி ஏற்பட்டதால் அவ்வாலயத்தை 2014 - ம் ஆண்டில் இடித்து விட்டு, அருட்தந்தை சதீஷ் மகிழன் பணிக்காலத்தில் தற்போது காணப்படும் அழகிய ஆலயம் கட்டப்பட்டு 30-09-2017 அன்று அப்போதைய திருச்சி மறை மாவட்ட ஆயர் மேதகு அந்தோணி டிவெட்டோ அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்தந்தை பிலவேந்திரன்
2. அருட்தந்தை ஜேம்ஸ்
3. அருட்தந்தை செங்கோல்.

தனிச்சிறப்புகள் :

மே மாதம் 'மாதா வணக்கம்' மாதமாக சிறப்பாக நடத்தப்படுகிறது. இதில் சிறப்பு என்னவென்றால் மண்டகப்படி என்ற பெயரில் ஒரு நாள் ஒரு குடும்பத்தினர் ஆலயத்திற்காக அர்ப்பணிப்பு செய்து அன்றைய நாளில் காணிக்கைகள், இனிப்புகள், பலகாரங்கள் வழங்கி சிறப்பு செய்வார்கள்.

விவசாயிகள் நிறைந்த இவ்வூரில் ஜனவரி 17-ம் தேதி புனித வனத்து அந்தோணியார் பொங்கலாக சிறப்பிக்கின்றனர். இதில் சிறப்பு என்னவென்றால் இப்பகுதியில் கிறிஸ்தவ மக்களோடு சகோதரர்களாக இந்து சமய மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.

பொங்கல் வைக்கும் ஜனவரி 14 - ம் தேதிக்கு பதிலாக இந்த பிறசமய மக்களும் இணைந்து புனித வனத்து அந்தோணியார் பொங்கலாக இவ்வாலய மக்களுடன் சேர்ந்து ஜனவரி 17 -ம் தேதி அவரவர் வீடுகளில் பொங்கல் வைப்பார்கள். கிறிஸ்தவ மக்கள் அவர்கள் வீடுகளில் சென்று மரியாதை செய்வார்கள். அது போல இந்து சமய மக்களும், புனித செங்கோல் மாதா ஆலயத்தில் வைக்கும் பொங்கல் நிகழ்விலும் கலந்து கொண்டு மரியாதை செய்து, கொண்டாடி மகிழ்கின்றனர்.

18-ம் தேதி காலையில் மாட்டுப் பொங்கலாக கொண்டாடப் படுகிறது. காலையில் சுமார் 11.00 மணியளவில் ஆலயத்திற்கு வெளியே புனித செங்கோல் மாதா, புனித மிக்கேல் அதிதூதர், புனித அந்தோணியார் சொரூபங்கள் கொண்டு வரப்பட்டு பாடல்கள் பாடி, ஜெபிக்கின்றனர். இதில் இப்பகுதியில் உள்ள அனைத்து சமய மக்களுக்கும் கலந்து கொள்கின்றனர்.

தொடர்ந்து ஜல்லிக்கட்டிற்காக தங்கள் மாடுகளை அவிழ்த்து விடுவார்கள். இவ்வாறாக சமய நல்லிணக்கத்திற்கு முன்னுதாரணமாக திகழ்கிறது திருமலைராயபுரம் கிராமம்.

1998 ல் தனிப்பங்காக ஆன பின்னர் பணிசெய்த பங்குத்தந்தையர்கள் :

1. Fr தேவராஜ்
2. Fr இருதயசாமி
3. Fr யூஜின்
4. Fr சிங்கராயர்
5. Fr தேவராஜ்
6. Fr பெஞ்சமின் போஸ்கோ (2005-2012)
7. Fr சதீஷ் மகிழன் (2012-2017)
8. Fr ஜான் பால் (2017-2019 )
9. Fr R. ஞான அருள்தாஸ் (2019 ஜூன் முதல்...)

புனித செங்கோல்மாதா நர்சரி ஆங்கிலப் பள்ளி சிறப்பாக அருட்சகோதரிகளால் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

புனித வளனார் உயர்நிலைப் பள்ளி (6ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு) ஒன்றும் அருட்தந்தை அவர்களின் வழிகாட்டுதலில் சிறப்பாக நடத்தப்பட்டு இப்பகுதி மக்களின் கல்வியறிவிற்கு முக்கியப் பங்காற்றி வருகிறது.

விவசாயத்தை தங்கள் உயிர் மூச்சாகவும், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு என தமிழர்களின் வீர விளையாட்டுகளை என்றும் பாதுகாத்து, பெரும் விழாவாக கொண்டாடி மகிழ்ந்து, சாதி சமய வேறுபாடுகள் இல்லாமல் ஒரே குடும்பமாக வாழும் திருமலைராயபுரம் இறைசமூகமானது தற்போது மேன்மேலும் வளர்ச்சி பெற்று சிறப்பாக முன்னேறி செல்கிறது.