514 கிறிஸ்து அரசர் ஆலயம், பாலப்பள்ளம்


கிறிஸ்து அரசர் ஆலயம்

இடம் : பாலப்பள்ளம்

மாவட்டம் : கன்னியாகுமரி
மறைமாவட்டம் : தக்கலை
மறைவட்டம் : சூசைபுரம்

நிலை : பங்குத்தளம்

பங்குத்தந்தை : அருட்தந்தை. ஜாண்பால்

குடும்பங்கள் : 165
உறவியங்கள் : 8

வழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு திருப்பலி : காலை 07.00 மணிக்கு

திங்கள், செவ்வாய், வியாழன், சனி திருப்பலி : காலை 06.30 மணிக்கு.

புதன் மாலை 06.30 மணிக்கு சகாயமாதா நவநாள் திருப்பலி வெள்ளி மாலை 06.30 மணிக்கு திருப்பலி, நற்கருணை ஆராதனை.

திருவிழா : நவம்பர் மாதத்தில் நான்காவது ஞாயிறு நிறைவடையும் வகையில் பத்து நாட்கள். (கிறிஸ்து அரசர் பெருவிழாவை உள்ளடக்கிய)

Church YouTube channel : https://www.youtube.com/channel/UCPg0ceH61ICZJwrOLV8iAUQ

வழித்தடம் : கருங்கல் -குளச்சல் வழித்தடத்தில் பாலப்பள்ளம் சந்திப்பிற்கு அருகில்.

👉Location map : Christ the King Church, Palappallam Karungal Rd, Tamil Nadu 629159

https://maps.app.goo.gl/JKmCvweujHHBTo3L9

வரலாறு :

கிறிஸ்துவின் 12 அப்போஸ்தலர்களுள் ஒருவரான தூய தோமையார் கி.பி 52 ஆம் ஆண்டில் இந்தியாவின் கேரளாவிற்கு வந்தார். மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றில் முற்றிலும் மாறுபட்ட மக்களிடத்தில் தான் தூய தோமையார் தாம் பெற்ற இறை அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அவர் கேரளா மற்றும் தமிழகத்தில் ஏழரை சபை சமூகங்களை நிறுவினார்.

தூய தோமையாரின் மறைப்பரப்பு வழியாக உருவான சீரோ மலபார் திருச்சபையின், சங்ஙனாசேரி மறை மாநிலத்தின் தென் எல்லையான குமரி மண்ணில், கி.பி 1955 இல் பேரருட்தந்தை முனைவர் தாமஸ் நங்கச்சிவீட்டில் அவர்கள் தலைமையில் மறைப்பரப்பு பணி ஆரம்பமானது. அவர் அருட்தந்தை சக்கரியாஸ் காயித்தற தலைமையில் நித்திரவிளை யில் முதல் திருத்தொண்டு நிலையத்தை 1960 ஆம் ஆண்டில் தொடங்கினார்.

தொடர்ந்து அருட்தந்தையர்கள் ஜோசப் மடத்தில் அடிகளாரும், தாமஸ் வீட்டுவேலிக்குன்னேல் அடிகளாரும் மறைப் பரப்புப் பணிக்கு வந்தனர். அருட்தந்தை. தாமஸ் முட்டத்துக்குன்னேல் அடிகளார் காக்கவிளை யில் (சூசைபுரம்) தமது பணியைத் தொடங்கினார்.

1962 அம் ஆண்டில் சேவிளை திரு. பொன்னுமுத்து வைத்தியர் அவர்கள், கறையான் குளத்துக்குச் செல்லும் வழியில் தமக்கு சொந்தமான நிலத்தில் உள்ள பாறையில் வழிபாட்டிற்காக ஓலைக் குடிசை கட்ட அனுமதித்தார். ஈசோ பேதுருவிடம், இந்த பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன் (மத்தேயு 16:18) என்று கூறியது போல, அன்றைய பேராயர் மார் மாத்யூ காவுட் ஆண்டகையின் அனுமதியோடு அருட்தந்தை. தாமஸ் வீட்டுவேலிக்குன்னேல் அவர்கள் அந்தப் பாறையின் மீது ஓலைக்குடிசை ஆலயத்தைக் கட்டி திருப்பலியை தொடங்கினார்.

இந்த ஆலயத்தில் 03.07.1962 அன்று மரிய மதலேனாள் (late) பாட்டிக்கு முதலாவதாக திருமுழுக்கு கொடுக்கப் பட்டது. தொடர்ந்து அம்மாதத்தில் மீண்டும் ஆறு நபர்களுக்கு திருமுழுக்கு கொடுக்கப் பட்டது. பின்னர் திரு. பொன்னுமுத்து வைத்தியரிடம் 22 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கி அருட்தந்தை. தாமஸ் வீட்டுவேலிக்குன்னேல் அவர்கள் கற்களால் ஆன ஆலயம் ஒன்றைக் கட்டினார்.

1969 ல் பேராயர் மார் மாத்யூ காவுகாட் அவர்களது மறைவைத் தொடர்ந்து, பொறுப்பேற்ற பேராயர் மார் ஆன்டனி படியற ஆண்டகை பல முறை இச் சிற்றாலயத்திற்கு வருகை புரிந்து, ஆலய வளர்ச்சிக்கு உதவினார்.

1983 ல் நிறுவனர் அருட்தந்தை தாமஸ் வீட்டு வேலிக்குன்னேல் அடிகளார் காலமானதைத் தொடர்ந்து, அவருடன் பணியாற்றிய அருட்தந்தை. தாமஸ் முட்டத்துகுன்னேல் அடிகளாரும், அவரைத் தொடர்ந்து அருட்தந்தை. மாத்யூ வாக்கேல் அடிகளாரும் பங்குத்தந்தையர்களாக பணியாற்றினர். மேலும் பல உதவிப் பங்குத்தந்தையர்களும் ஆலய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார்கள்.

அருட்தந்தை. குரியன் புத்தன்புர அடிகளார் பணிக்காலத்தில் தற்போதைய ஆலயத்தின் தரைத்தளம் பேராயர் கர்தினால் ஆன்றனி படியற அவர்களால் அடிக்கல் போடப்பட்டு கட்டப் பட்டது. மேலும் வளாகத்தைச் சுற்றிலும் மதிற்சுவரும், குருசடியும் கட்டப் பட்டது. இவ்வாலயம் அமைந்துள்ள சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவுள்ள நிலம் மற்றும் அருகிலுள்ள நிலங்களும் விலைக்கு வாங்கப்பட்டது.

தனிப் பங்காக உயர்த்தப் பட்ட போது அருட்தந்தை. குரியன் புத்தன்புர அவர்களே முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்று, இவ்வாலயத்தின் பின்புறம் கட்டப்பட்டுள்ள குருக்கள் இல்லத்தில் தங்கி இறைப் பணியாற்றினார்.

அருட்தந்தை. ஜோசப் மைலாடில் MST அடிகளார் பணிக்காலத்தில் ஆனக்குழியில் பாலர் சபைக்கான கட்டிடம் கட்டப்பட்டது. கல்லறைத் தோட்டத்துக்கு இடம் வாங்கப்பட்டது.

கன்னியாகுமரி திருத்தொண்டு நிலையமாக செயல்பட்டு வந்த 'குமரி மிஷன்' திருத்தந்தை இரண்டாம் ஜாண்பால் அவர்களின் 'அபுத் இந்தோரம்' என்னும் ஆணைப்படி "தக்கலை சீரோ மலபார் கத்தோலிக்க மறை மாவட்டம்" 1996 ல் உதயமானது. அதுவரை பேராயர் மார் ஜோசப் பவ்வத்தில் அவர்கள் குமரி மிஷனை வழிநடத்தி வந்தார்கள்.

பின்னர் தக்கலை மறை மாவட்டத்தின் முதல் ஆயராக மார் ஜார்ஜ் ஆலஞ்சேரி பொறுப்பேற்றுக் கொண்டார்.

அப்போது அருட்தந்தை. ஜோஸ் முட்டத்துப்பாடம் அவர்கள் இப்பங்கில் பணியாற்றினார். அவரது பணிக்காலத்தில் தக்கலை மறை மாவட்டத்தின் இரண்டாவது புதிய ஆலயமாக மேல்தளத்தில் விளங்கும், பாலப்பள்ளம் கிறிஸ்து அரசர் ஆலயமானது கட்டப்பட்டது. ஆலயத்தின் முன்பக்க நிலம் வாங்கப்பட்டது. ஆலய கீழ்தளம் சமூக நலக்கூடமாக பயன்படுத்தப் பட்டது. பங்கு பிரதிநிதி மன்றமும், குடும்ப கூட்டமைப்புகளும் துவங்கப் பட்டது.

ஆராதனை சபை கன்னியர் (SABS) இல்லம் கட்டப்பட்டு, அதில் 'ஜோதி நிலையம் ' என்ற மனவளர்ச்சி குன்றிய மாணாக்கருக்கான பாடசாலையுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அருட்தந்தை. யேசுதாஸ் சீராம்பள்ளி பணிக்காலத்தில் ஆலயத்திற்கு வண்ணம் பூசப்பட்டு புதுப் பொலிவு பெற்றது.

அருட்தந்தை. மாத்யூ முளங்ஙாசேரில் பணிக்காலத்தில் சமூக நலக்கூடத்திற்கு கூடுதல் கட்டடம் கட்டப்பட்டது.

அருட்தந்தை. தாமஸ் பாலக்காட் பணிக்காலத்தில் ஆலய உட்புறம் தரை கிரானைட் கற்கள் போடப்பட்டது.

அருட்தந்தை. ஜியோ சூழிக்குன்னேல் பணிக்காலத்தில் 2012 ஆம் ஆண்டில் ஆலய பொன்விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது. புதிய கொடிமரம், அருட்தந்தையர் தங்கும் இல்லம் ஆகியவையும் நிறுவப் பட்டது.

அருட்தந்தை. ஜஸ்டின் செறுவேலில் பணிக்காலத்தில் ஆலயத்தின் முன்புறம் ஒரு குருசடியும், கல்லறைத் தோட்டத்திற்கருகில் மற்றொரு குருசடியும் கட்டப் பட்டது.

அருட்தந்தை. பிரின்டோ குரியாஸ் பணிக்காலத்தில் ஆலய அலுவலக கட்டடம், பயிற்சி கூடம், சமூக நலக்கூடத்திற்கு மணவறை, ஆனக்குழி தொழிற்கூடக் கட்டடம் புனரமைப்பு, கல்லறைத் தோட்டம் சீரமைப்பு ஆகிய பணிகளைச் செய்தார்.

தற்போதைய பங்குத்தந்தை அருட்தந்தை. ஜாண் பால் அவர்களின் முயற்சியால் கிறிஸ்து அரசர் கிளவுஸ் பேக்கிங் யூனிட் நிறுவனம் ஆனக்குழி யில் துவக்கப்பட்டது. இதனை 2020 ஜூன் மாதத்தில் தக்கலை மறை மாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் இராஜேந்திரன் அவர்கள் ஆசீர்வதித்து துவக்கி வைத்தார். மேலும் அருட்தந்தை. ஜாண் பால் அவர்கள் மக்களை ஒருங்கிணைத்து ஆன்மீகப் பாதையில், குறிப்பாக மறைக்கல்வி மற்றும் பக்த இயக்கங்களை வலுப்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிறார்.

பக்த சபைகள், இயக்கங்கள் :

மறைக்கல்வி
புனித வின்சென்ட் தே பவுல் சபை (3கிளைகள்)
மாதர் ஜோதிஸ்
மரியாயின் சேனை
இளைஞர் இயக்கம்
மிசன் லீக்
குழந்தை ஈசோ இயக்கம்
பாலர் சபை
பொது நிலையினர் பேரவை
பங்கு பிரதிநிதி மன்றம்.
-ஆகியன சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

நிறுவனங்கள் :

கிறிஸ்து அரசர் பாலர் பள்ளி :

கிறிஸ்து அரசர் ஆங்கில வழி மழலையர் பள்ளி :

ஜோதி நிலையம் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி : (SABS அருட்சகோதரிகளால் நடத்தப்படுகிறது)

கன்னியர் இல்லம் : SABS -ஆராதனை சபை சமூகம்.

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் :
1. அருட்தந்தை. தோமஸ் வீட்டுவேலிக்குன்னேல்
2. அருட்தந்தை. தோமஸ் முட்டத்துக்குன்னேல்
3. அருட்தந்தை. மாத்யூ வாக்கேல்
4. அருட்தந்தை. குரியன் புத்தன்புர
5. அருட்தந்தை. ஜோசப் மைலாடில்
6. அருட்தந்தை. ஜோஸ் முட்டத்துப்பாடம்
7. அருட்தந்தை. யேசுதாஸ் சீராம்பள்ளி
8. அருட்தந்தை. மாத்யூ முளங்ஙாசேரில்
9. அருட்தந்தை. சினோஜ் காருபிளாக்கில்
10. அருட்தந்தை. தோமஸ் பாலகாட்
11. அருட்தந்தை. ஜியோ சூழிக்குன்னேல்
12. அருட்தந்தை. ஜஸ்டின் செறுவேலில்
13. அருட்தந்தை. பிரின்டோ குரியாஸ்
14. அருட்தந்தை. ஜாண் பால் (தற்போது).

பங்கின் துணை அருட்தந்தையர்கள்:
1. அருட்தந்தை. அகஸ்டின் கொல்லம் பறம்பில்
2. அருட்தந்தை. லூக்காஸ் பீடியக்கல்
3. அருட்தந்தை. சிறியக் மாலியக்கல்
4. அருட்தந்தை. ஐசக் கொல்லம்பள்ளி
5. அருட்தந்தை. ஆன்றணி பேரூர்கர
6. அருட்தந்தை. சினோஜ் காருபிளாக்கில்.

தகவல்கள் : பங்குத்தந்தை அருட்தந்தை. ஜாண் பால் மற்றும் பங்குப் பேரவை செயலர்.