951 புனித விண்ணேற்பு அன்னை ஆலயம், பணிக்கன்குப்பம்

                 

புனித விண்ணேற்பு அன்னை ஆலயம்

இடம்: பணிக்கன்குப்பம், 607106

மாவட்டம்: கடலூர்

மறைமாவட்டம்: புதுவை -கடலூர் உயர் மறைமாவட்டம்

மறைவட்டம்: கடலூர்

நிலை: பங்குதளம்

கிளைப்பங்குகள்:

1. புனித குழந்தை தெரசா ஆலயம், L.N புரம் பண்ருட்டி

2. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், மாளிகைமேடு 

3. கிரேஸ்வேலி

பங்குத்தந்தை அருள்பணி. M. இராபர்ட்

குடும்பங்கள்: 400+

வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 06:15 மணி

நாள்தோறும் திருப்பலி காலை 06:00 மணி

செவ்வாய் மாலை 06:30 மணி புனித அந்தோனியார் நவநாள் திருப்பலி

சனி மாலை 06:30 மணி சகாய மாதா நவநாள் திருப்பலி

திருவிழா: ஆகஸ்ட் மாதம் 06 ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, 15 -ம் தேதி திருவிழா. 16-ம் தேதி புனித அந்தோனியார் தேர்த்திருவிழா.

மண்ணின் இறையழைத்தல்கள்:

அருட்பணியாளர்கள்:

1. அருட்பணி. R.C. ராஜா (late)

2. அருட்பணி. V. அருள்தாஸ்

3. அருட்பணி. S. லாரன்ஸ்

4. அருட்பணி. A. லூர்துசாமி

5. அருட்பணி. M.S. சேவியர்

6. அருட்பணி. V. மெசியா

7. அருட்பணி. B. செல்வநாதன்

8. அருட்பணி. L. மைக்கேல்ராஜ்

9. அருட்பணி. P. சைமன் அந்தோணிராஜ்

10. அருட்பணி. A. லூர்துசாமி

11. அருட்பணி. M. மரிய வியான்னி

12. அருட்பணி. P. அந்தோணிராஜ் 

13. அருட்பணி. J. இருதயராஜ்

அருட்சகோதரிகள்:

1. அருட்சகோதரி. செல்வானா மேரி

2. அருட்சகோதரி. S.A. ஜூலியஸ் மேரி

3. அருட்சகோதரி. L. தெரசா பிலோமினா மேரி

4. அருட்சகோதரி. கார்மேல் (எ) பவுலின்

5. அருட்சகோதரி. S. கிளாரா அலோஷியஸ்

6. அருட்சகோதரி. A. நசரேத் மேரி

7. அருட்சகோதரி. C. ஜான்சி சோபியா மேரி

8. அருட்சகோதரி. E. வெர்ஜினியா ரெஜியஸ்

9. அருட்சகோதரி. J. பிரவினா ரோசி

10. அருட்சகோதரி. A. சலோமி

11. அருட்சகோதரி. A. ரூபி மார்க்கிரேட் மேரி

12. அருட்சகோதரி. A. ஆரோக்கிய தமிழரசி 

13. அருட்சகோதரி. A. சபிஷாமேரி

வழித்தடம்:

மதுரை -திருச்சி -விருத்தாசலம் -நெய்வேலி 

சென்னை -விக்கிரவாண்டி -பண்ருட்டி -பணிக்கன்குப்பம்

சேலம் -உளுந்தூர்பேட்டை -பண்ருட்டி

Location map: https://g.co/kgs/3mEyd7

வரலாறு:

பணிக்கன்குப்பம் ஊரில் வாழும் எவருக்குமே இவ்வூரில் முதலில் குடியேறியவர்கள் யார்? இவ்வூரின் வேர்கள் எங்கே எப்போது தோன்றின, ஊர் உருவான விதம் என்ன என்றும் தெளிவாகத் தெரியவில்லை. எனினும் மக்கள் பல்வேறு கருத்துக்களைச் சொல்கின்றனர். அவர்களின் கருத்துக்களை, இவ்வூரில் கடந்த காலத்தில் பணியாற்றிய குருக்கள் ஓரளவுக்கு தொகுத்து இவ்வூரின் தோற்றத்தைப்பற்றிய விவரங்களைக் கொடுத்துள்ளனர்.  

சுமார் ஐநாறு ஆண்டுகளுக்கு முன்னரே திருச்சி மாவட்டம் உடையார்பாளையம் தாலுகாவைச் சேர்ந்த, பொன் பரப்பி என்ற ஊருக்கு அருகில் உள்ள, ஓலூர் என்ற ஊரிலிருந்து வந்தவர்கள் இங்கு குடியேறி, மண்சுவர் குடிசை அமைத்து வாழ்ந்து வந்தனர் என கூறப்படுகிறது. இவர்கள் ஓலூரில் ஆட்சி செய்து வந்த பாளையக்காரனின் கொடுமையிலிருந்து தப்பிவந்து இங்கு வாழ்ந்து வந்தவர்கள் ஆவர்.

இவர்களைப் பின்தொடர்ந்து திண்டிவனத்திற்கு அருகிலுள்ள வெள்ளிமேடு, வடலூருக்குத் தென்மேற்கேயுள்ள வடவம், அரியாங்குப்பத்திற்கு தெற்கேயுள்ள நொருக்கமேடு, தென்னூர், கொளக்குடி, போன்ற இடங்களிலிருந்தும் மக்கள் இங்கே வந்து குடிசை அமைத்து வாழத் தொடங்கினர். விருத்தாசலத்திலிருந்தும் வெளியேறிய சில மக்கள் கெடிலம் ஆற்றின் தென் கரையிலுள்ள பணிக்கன்குப்பம் ஊரில் கால்பதித்தார்கள். கடந்த இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் எறையூரிலிருந்தும் சில கிறிஸ்தவர்கள் பணிக்கன்குப்பத்தில் குடியேறினார்கள்.

பணிக்கன்குப்பம் மக்கள் எப்போது மனந்திரும்பினார்கள் என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஆவணங்கள் எதுவுமில்லை. 15ஆம் நூற்றாண்டிலேயே மனம் மாறியவர்கள் என்பது ஒரு பாரம்பரியம். இங்கு பூர்வீகக் குடியேறியவர்கள் திருச்சி மாவட்டம் உடையார் பாளையம் தாலுக்கா ஒலூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆதலால் இவர்கள் தென்னூரிலிருந்த இயேசு சபைக் குருக்களால் கண்காணிக்கப்பட்டு வந்தனர். 1843-ல் இப்பகுதி போர்த்துக்கீசியர் கைக்கு மாறிய பிறகு கோணான்குப்பம், கோவிலானூர், இருந்தை பகுதியிலிருந்த குருக்களின் கண்காணிப்புக்குள் வந்தனர்.

(தென்பகுதி 1776-ல் பாரிஸ் மறைபோதக சபையின் கைக்கு மாறிய போது பின்னாட்களில் பணிக்கன்குப்பம் பெரிய பங்காக மாறிற்று. இதிலிருந்து கிருஷ்ணன்குப்பம், சாத்திப்பட்டு, மோழாண்டிக்குப்பம் (அழப்பசமுத்திரம்) என்ற பங்குகள் பிரிக்கப்பட்டன.)

ஆலயம்:

பணிக்கன்குப்பம் பகுதியில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கவே, மக்களின் ஆன்மீகத் தேவைக்காக ஆலயம் ஒன்று தேவைப்பட்டதால், சுமார் 175 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சிறிய ஆலயம் கட்டப்பட்டது. இடப் பற்றாக்குறை காரணமாக சிறிய ஆலயம் இடிக்கப்பட்டு, இரண்டாவது பெரிய ஆலயம் கட்டப்பட்டது.

தற்போது உள்ள மூன்றாவது ஆலயத்திற்கு, 1901 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு (ஆனால் 1910வரை கட்டடப் பணி நீடித்ததாக ஒரு குறிப்பும் உள்ளது.) 1904-ல் கட்டி முடிக்கப்பட்டது. இந்த ஆலயத்தை வடிவமைத்தவர் அருட்பணி. வெல்டர். இவர் ஒரு கட்டிடக்கலை நிபுணர். இந்த ஆலயம் மட்டுமல்லாது நெல்லித்தோப்பு, புதுவை  போன்ற இடங்களில் ஆலயங்களை இவர் அமைத்துள்ளார்.

பங்கின் பழைமை:

பணிக்கன்குப்பம் பற்றிய சமய வரலாறு கூரைப்பேட்டை, தென்னூர், கோவிலானூர் இவற்றுடன் பின்னிப்பிணைக்கப்பட்டுள்ளது.

இயேசு சபையினர் தங்கள் கண்காணிப்புக்குட்பட்ட இடங்கள் பற்றிய 1737 ஆம் ஆண்டு வரைப்படத்தில், பணிக்கன்குப்பம் ஒரு கிறிஸ்துவக் குடியிருப்பாகத் தரப்பட்டுள்ளது. மேலும் கோணான்குப்பத்தோடு இணைந்து இருந்தது என்பதையும் இதன் மூலம் அறிய முடிகிறது.

1843ஆம் ஆண்டு ஏற்பட்ட எல்லை மாற்றத்தால் கோணான்குப்பம் சென்னை மறைமாவட்டத்திலிருந்து பிரிந்து, புதுவை மறைமாவட்டத்தோடு இணைக்கப்பட்டது. அப்போது அருட்பணி. பார்துய் அவர்கள் இப்பகுதியில் கோவிலானூரைத் தலைமையிடமாகக் கொண்டு பணியாற்றி வந்தார். 

1845ஆம் ஆண்டு ஆயர் பொனான் ஆண்டகை பணிக்கன்குப்பம் வந்து பார்வையிட்டார் எனவும், 1851ஆம் ஆண்டு பார்வையிட சென்ற ஆயர் பணிக்கன்குப்பத்தோடு, சாத்திப்பட்டுக்கும் சென்றார் எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது.

1857ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கணக்கெடுப்பில் பணிக்கன்குப்பம் பற்றிய புள்ளிவிவரம் இடம் பெற்றுள்ளது. இதன்படி இங்கு 500 கிறிஸ்துவர்கள் இருந்ததாகவும், செங்கல்லினால் கட்டப்பட்ட கோயிலும், குருக்கள் தங்குமிடமும் இருந்ததாகவும் தெரிகிறது.

பணிக்கன்குப்பத்தோடு இணைத்திருந்த இருந்தையில் பணியாற்றிய பார்துய் அடிகள் கோவிலூரை விட்டு 1860-ல் எறையூர், விரியூர் என்ற ஊர்களுக்கும் சென்றதாகவும் தெரிகின்றது. 

1860-1870ஆம் ஆண்டு காலகட்டத்தில் பரந்துவிரிந்த கோவிலானூர் மறைவட்டம் பிரிக்கப்பட்டது. பணிக்கன்குப்பம் பங்குத் தளமாக (1860) அமைக்கப்பட்டது. 1866-67ஆம் ஆண்டு பணிக்கன்குப்பம் பங்கானது பாப்பரசருக்கு (திருத்தந்தை) ரூ.150 கொடுத்ததாகவும் குறிப்புகள் கூறுகின்றன.

1902 முதல் 1924 வரை (12முதல் 14வரை நீங்கலாக) அருட்பணி. புருதன்த் பங்கு குருவாகப் பொறுப்பேற்றார். இடைப்பட்ட 2 ஆண்டுகள் அவர் வேட்டவலத்தில் இருந்தார். இவருக்கு முன் இங்குப் பணியாற்றியவர்கள் பலர் சாதிக்க முடியாதவற்றை இவர் தம் சாணக்கியத்தனத்தால் சாதித்தவர். 1904ஆம் ஆண்டு கோயிலைக் கட்டிக்கொண்டிருந்தார். மோழாண்டிக்குப்பத்திலும் அதைச் சுற்றிய ஊர்களிலும் 2000 மக்கள் இருந்தனர். இவர்களை அருட்பணி.‌ புருதன்த் கவனித்து வந்தார். பின்னாளில் நோயுற்று 1924ஆம் ஆண்டு புதுவையில் இறைவனடி சேர்ந்தார்.. 

1950 ஆம்ஆண்டு மோழாண்டிகுப்பம், பணிக்கன்குப்பம் பங்கிலிருந்து கிருஷ்ணன் குப்பத்துடன் இணைக்கப்பட்டது. சாத்திப்பட்டு 1966ஆம் ஆண்டு தனிப்பங்காயிற்று. 

ஆயர் கோதல் ஆண்டகையின் நாட்குறிப்பில் 1860ஆம் ஆண்டிற்குப் பிறகு குறிப்பில் அய்யம்பேட்டை, கூரைப்பேட்டை, கோணான்குப்பத்தில் ஒரு குரு பணியாற்றினார் என்றும், பணிக்கன்குப்பம், சாத்திப்பட்டு, மோழாண்டிகுப்பம் ஆகியவற்றை ஒரு குரு கவனித்து வந்தார் எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது. இங்கு 2 கோயில்களும், 3 செபக் கூடங்களும், 10 மாணவர்களை கொண்ட ஒரு பள்ளிக்கூடமும் இருந்துள்ளது.

அருட்திரு. சூரல்:

1892-ஆம் ஆண்டு பணிக்கன்குப்பம் பங்கு குருவாகப் பொறுப்பேற்றார்.

அப்போது இப்பங்கில் 4000 கத்தோலிக்கர்கள் இருந்தனர். இவர் தமது சாதுர்யம், சாமர்த்தியம், அன்பு ஆர்வம் இவற்றினால் பல கடினமான

சூழ்நிலைகளையும், கொந்தளிப்புகளையும் சாந்தப்படுத்தி அமைதி நிலவச் செய்தார்.  கிறிஸ்துவர்களிடையே மீண்டும் ஒற்றுமையை ஏற்படுத்தினார். இங்குள்ள ஆலயம் வெடித்து சுவர்கள் பாளம் போல பிளந்து கிடந்தன. இவரிடம் இருந்த கொஞ்சம் பணத்தைக் கொண்டு அவசரத் தேவையான பழுதுபார்க்கும் பணியைச் செய்து செப்பனிட்டார். இடையில் மாவட்டம் பிரிக்கப்பட்டது. பிரிக்கப்பட்ட இப்பகுதியில் மிகவும் ஏழைப் பகுதியான இருந்தையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இங்கே ஏற்கனவே தொடங்கப்பட்ட ஓர் ஆலயம் இருந்தது. இக்கட்டிடம் முடிக்கப்படாத நிலையில் இருந்தது. எனினும் இவர் இதைக் கட்டி முடித்தார். அழகான தொம்பை கோபுரம் வைத்துக் கட்டினார்.

தொடர்ந்து பணியாற்றி வந்த அருட்பணியாளர்கள் பணிக்கன்குப்பம் பங்கின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை நின்றனர்.

நூற்றாண்டு விழா:

பணிக்கன்குப்பம் பங்கின் நூற்றாண்டு விழா 06.08.2000 முதல் 15.08.2000‌ வரை கொண்டாடப் பட்டது.‌ விழா நினைவாக 15.08.2000 அன்று புதுவை கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் மேதகு S. மிக்கேல் அகஸ்டின் அவர்களால் நூற்றாண்டு விழா மலர் வெளியிடப்பட்டு, நூற்றாண்டு நினைவு தையற்பள்ளி திறந்து வைக்கப்பட்டு, மிகவும் சிறப்பாக கொண்டாடப் பட்டது.

2019 ஆம் ஆண்டில் ஆலயமானது அழகுற புதுப்பிக்கப்பட்டு, பேராயர் மேதகு அனந்தராயர் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

அன்னையின் தேர்:

ஆகஸ்ட் 15-ம் தேதி அன்னையின் விண்ணேற்பு விழாவின் போது இம் முன்னோர்கள் மரத்தினால் செய்த சிறிய தேர்களைப் பயன்படுத்தி அன்னைக்கு விழா எடுத்து வந்துள்ளனர். சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய தேரினை மரத்தினால் உருவாக்கி, வாழைப் பட்டையை பயன்படுத்தி அதை மல்லிகைப்பூ மற்றும் பல வண்ணப் பூக்களால் அலங்கரித்து தேர் உருவாக்கப்பட்டு அன்னையின் தேர்பவனி நடைபெற்று வந்துள்ளது. ஆனால் தற்போது உள்ளதுபோல மின்விளக்கு அலங்காரங்கள் கிடையாது. தீப்பந்தங்களின் வெளிச்சத்திலும், பிறகு பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தினும் தேர்பவனி நடைபெற்றது. சிறிது காலத்தில் பூக்களால் அலங்கரிக்கப்படும், தேர் மாற்றி அமைக்கப்பட்டு அலுமினிய வண்ணத்தாட்களை உபயோகித்து புதிய வடிவமைக்கப்பட்டு தேர் அழகுபடுத்தப்பட்டு அன்னையின் தேர்பவனி நடைபெற்றது. 

சுமார் 65 ஆண்டுகளுக்கு முன் பணிக்கன்குப்பம் நல்லுள்ளங்களின் முயற்சியில் தற்போது உள்ள தேரினைப் போன்ற வடிவமைப்பு உடைய அழகுமிகு தேர் உருவாக்கப்பட்டது. ஜெனரேட்டர் வரவழைத்து மின்விளக்கு அலங்காரமும் செய்யப்பட்டு தேர்பவனி நடைபெற்றது. 1966-ல் பணிக்கன்குப்பம் கிராமத்திற்கு மின்வசதி ஏற்பட்டது. மின்கம்பிகள் சாலையில் குறுக்கே சென்றதால் மிகவும் உயரமான அந்த தேரினை பவனியாக எடுத்துவர மிகவும் சிரமமாக இருந்தது. 3 ஆண்டுகளுக்குப்பின் உயரம் குறைவான புதிய ஒரு தேர் உருவாக்கப்பட்டு 3 ஆண்டுகள் வலம் வந்தது. அதன் பின்னர் மின்கம்பிகள் மாற்றி அமைக்கப்பட்டு, மீண்டும் உயரமான தேர் பவனியாக கொண்டு வரப்பட்டது.

1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருமழையில் தேர் வைக்கப்பட்டிருந்த கட்டிடம் இடிந்து, தேரானது முற்றிலும் சேதமடைந்தது. இருப்பினும் பணிக்கன்குப்பம் மக்களின் அயராத முயற்சியினால் புதிய தேர் அமைக்கப்பட்டு 1984 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி மின் அலங்காரத்துடன் வலம் வந்தது. அது இன்றுவரையிலும் ஒவ்வொரு ஆண்டு திருவிழாவின் போதும் சிறப்புற வலம் வந்து கொண்டேயிருக்கிறது.

தேர்த்திருவிழா:

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி இரவு புனித விண்ணேற்பு அன்னையின் தேர்த்திருவிழாவாகவும், 16 ஆம் தேதி புனித அந்தோனியார் தேர்த் திருவிழாவும் சிறப்பாக கொண்டாடப் படுகிறது.‌ இதில் பணிக்கன்குப்பத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும், பிற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் பங்கேற்று இறையாசீர் பெற்றுச் செல்கின்றனர்.

புதுமைகள்:

நெய்வேலியைச் சேர்ந்த திரு. தாமஸ் பேபி மேரி தம்பதியருக்கு திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாமல் கவலையுடன் வாழ்ந்து வந்தனர். பணிக்கன்குப்பம் ஆலயம் வந்து கண்ணீருடன் ஜெபிக்க, அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தனர்.

இதுபோல பலர் தங்கள் வாழ்வில் கிடைத்த ஏராளமான நன்மைகளை ஆலயத்தில் வந்து சாட்சியமாக பதிவு செய்து, தூய விண்ணேற்பு அன்னைக்கு நன்றி கூறிச் செல்கின்றனர்.

கெபிகள்:

1. தூய லூர்து மாதா கெபி

2. துயிலும் புனித சூசையப்பர் கெபி

3. புனித அந்தோனியார் கெபி

4. வியாகுல மாதா கெபி

பங்கில் உள்ள கல்வி நிறுவனங்கள்:

1. R. C. Middle school, Panikankuppam

2. Annai Velankanni Polytechnic college (SAT),  Anguchettipalayam

3. Sir P. Muthaiya Higher secondary school (SAT), Panruti 

4. St. Ann's matriculation higher secondary school (SAT), Thatta Chavadi

5. St. Mary's matriculation school (FIHM), L. N Puram

6. St Ann's College of Engineering & Technology, Anguchettipalayam

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. அருட்பணி. லூயிஸ் அலோசியுஸ் (1861-70)

2. அருட்பணி. மரியபிரகாசம் (1871-76)

3. அருட்பணி. ராயப்பநாதர் (1877-98)

4. அருட்பணி. துரியம் (1898-99)

5. அருட்பணி. ஆரோக்கியநாதர் (1899-1900)

6. அருட்பணி. பால் (சின்னப்பநாதர்) (1901)

7. அருட்பணி. வெல்டர் (1901-02)

8. அருட்பணி. ப்ரூதன்த் (1902-09)

9. அருட்பணி. செல்வநாதர் (1905-24)

10. அருட்பணி. ப்ளானா (1924-25)

11. அருட்பணி. அருள் (1925-30)

12. அருட்பணி. தேவண்ணா (1930-33)

13. அருட்பணி. மரியஜோசப் (1933-37)

14. அருட்பணி.‌ K.P.‌ அந்தோணிசாமி (1937-43)

15. அருட்பணி. R. மேத்யு (1944-54)

16. அருட்பணி. P.P. சேவியர் (1955-60)

17. அருட்பணி. ஜோசப் எத்தக்குழி (1960-63)

18. அருட்பணி. ஆல்பர்ட் லசார் (1963-66)

19. அருட்பணி. A. மரியதாஸ் (1966-85)

20. அருட்பணி. A. ஜான் (1985-87)

21. அருட்பணி.‌ R.S. ஆரோக்கிய ராஜ் (1987-90)

22. அருட்பணி. A. தாமஸ் (1990-91)

23. அருட்பணி. M. இன்னையா (1991-99)

24. அருட்பணி. S. குழந்தைசாமி (1999-2002)

25. அருட்பணி. Y. அமலதாஸ் (2002-04)

26. அருட்பணி. P. ரொசாரியோ (2004-08)

27. அருட்பணி. A.S.P. அகஸ்டின் (2008-13)

28. அருட்பணி.‌ G. மரிய ஆனந்தராஜ் (2013-23)

29. அருட்பணி.‌ M. இராபர்ட் (2023---)

புதுமைகள் நிறைந்த பணிக்கன்குப்பம் ஆலயம் வாருங்கள்... விண்ணேற்பு அன்னையின் வழியாக இறைவனின் அருள் வரங்களை பெற்றுச் செல்லுங்கள்...

ஆலய வரலாறு: 2000 ஆம் ஆண்டு வெளிவந்த ஆலய நூற்றாண்டு விழா மலர்.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: திரு. ரொசாரியோ ராஜ்குமார் மற்றும் திரு. ரோமல் அந்தோனி ஆகியோர்.