637 புனித குழந்தை தெரசாள் ஆலயம், செஞ்சை -காரைக்குடி

            

புனித குழந்தை தெரசாள் ஆலயம் 

இடம் : செஞ்சை -காரைக்குடி, 630001

மாவட்டம் : சிவகங்கை 

மறைமாவட்டம் : சிவகங்கை 

மறைவட்டம் : தேவகோட்டை

நிலை : பங்குத்தளம் 

கிளைப்பங்கு: புனித அருளானந்தர் ஆலயம், ரஸ்தா 

பங்குத்தந்தை : அருள்பணி. L. சகாயராஜ் MSW, MHR, B.L, M.Phil

குடும்பங்கள் : 436 (கிளைப்பங்கு சேர்த்து) 

அன்பியங்கள் : 24

வழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு காலை 06.45 மணி திருப்பலி (கிளைப்பங்கு) 

காலை 08.15 மணி திருப்பலி பங்கு ஆலயம் 

செவ்வாய் மாலை 06.30 மணி புனித அந்தோனியார் நவநாள் திருப்பலி 

வியாழன் மாலை 06.30 மணி குழந்தை இயேசு நவநாள் திருப்பலி 

புதன், வெள்ளி காலை 06.00 மணிக்கு திருப்பலி 

புதன், சனி காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை ரஸ்தா அருங்கொடை மையத்தில் சிறப்பு வழிபாடு, திருப்பலி, நற்கருணை ஆசீர் 

திருவிழா : அக்டோபர் மாதத்தில் இரண்டாவது சனி, ஞாயிறு 

மண்ணின் இறையழைத்தல்கள் :

1. அருள்பணி. சிரில், SVD 

2. அருள்பணி. I. ஜேம்ஸ், Rodenbach,  Germany 

3. அருள்பணி. வளன், SDB 

4. அருள்பணி. ஜெயக்குமார், SJ

5. அருள்பணி. டேவிட், St. Paul's congregation 

6. அருள்பணி. அன்பரசன், Norbertines

மற்றும் 8 அருள்சகோதரிகள்.

வழித்தடம் : காரைக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து தேவகோட்டை செல்லும் சாலையில் செஞ்சை அமைந்துள்ளது. 

Location map : https://g.co/kgs/5cK94f

வரலாறு :

"குறைவாக விதைப்பவர் குறைவாக அறுவடை செய்வார். நிறைவாக விதைப்பவர் நிறைவாக அறுவடை செய்வார். இதைத் தெரிந்து கொள்ளுங்கள்."

2 கொரிந்தியர் 9: 6

விடுதலைக் காற்றை சுவாசிக்க விவேகத்துடன் போராடிய காலகட்டத்தில், இயேசுவே சுவாசக் காற்று என்று ஆங்காங்கே நல்வழி காட்டிக்கொண்டிருந்த இறையருள் அடியார்களின் அன்பின் பாதையை ஏற்று, காரைக்குடி நகரில் ஆங்காங்கே கிறிஸ்தவ குடும்பங்கள் முளைத்திருந்தன. செஞ்சை வளாகத்தில் சற்றே கூடுதலான கிறிஸ்தவ குடும்பங்கள் இருந்தன. 

கி.பி 1942 -க்கு முன்பே அமலோற்பவ மாதா சபை அருள்சகோதரிகள் செஞ்சையில் தங்கி இறைப்பணியாற்றி வந்துள்ளனர். அக்காலகட்டத்தில் இறைமக்களின் சங்கமமாக கூத்தலூர் பங்கு திகழ்ந்தது. கூத்தலூரில் பங்குத்தந்தையாக பணியாற்றிய அருள்பணி. சங்குயினி அவர்களும், உதவிப் பங்குத்தந்தை அருள்பணி. ஹேக் அவர்களும், அருள்சகோதரிகள் இல்லமருகில் ஓலைகுடில் அமைத்து ஆலய வழிபாடுகள் நடத்தி வந்துள்ளனர். 

அப்போது கிறிஸ்தவத்திற்கு பரவலாக எதிர்ப்பு இருந்தது. எனவே செஞ்சையில் ஆலயம் அமைக்க பிற சமயத்தவர் இடம் தர முன்வரவில்லை. ரஸ்தா தேனாற்றுப்பாலம் அருகில் ஏறக்குறைய 300 சென்ட் இடத்தை கிறிஸ்தவ மக்கள் குடியிருப்பு மனை இடமாகவும், ஆலய இடமாகவும் கிரயமாக்கிக் கொண்டனர். பல்வேறு ஏக்கங்கள் ஏமாற்றங்களுக்கு மத்தியில் செஞ்சையில் ஆலயத்திற்கான இடம் வாங்கப்பட்டது. 

தற்போதைய ஆலய நுழைவாயிலுக்கு உள்ளே அமைந்திருந்த பெரிய வீட்டில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து பங்குத்தந்தை இல்லமாகவும், அலுவலகமாகவும் கொண்டு 07.08.1943 அன்று கூத்தலூர் பங்கிலிருந்து காரைக்குடி (செஞ்சை) பங்கு பிரிக்கப்பட்டு தனிப் பங்கானது. முதல் பங்குத்தந்தையாக அருள்பணி. மெனேசஸ் அவர்கள் பணிப் பொறுப்பேற்றார். அப்போது காரைக்குடியுடன் 23 கிராமங்கள் அடங்கியிருந்தன. 

1944 ம் ஆண்டு பொறுப்பேற்ற அருள்பணி. பிரான்சிஸ் பெர்னாண்டோ அவர்கள் புனித தெரசாள் ஆலயத்தைக் கட்டினார். ஆலயம் கட்டப்பட்ட பிறகு மக்கள் ஆன்மீகத்திலும் பக்தி முயற்சிகளிலும் அதிகமாக ஈடுபாடு காட்டத் தொடங்கினார்கள். காரைக்குடி மாநகரை சுற்றியுள்ள பகுதியெங்கும் கிறிஸ்தவம் தளிர்விட புனித தெரசாள் ஆலயம் அடித்தளமாக அமைந்தது. காரைக்குடி வட்டார கிராம இறைமக்கள் மாட்டு வண்டிகளில் புனித தெரசாள் ஆலயம் வந்து ஞாயிறு திருப்பலியில் பங்கேற்று செபித்து செல்வார்கள். 1948 ம் ஆண்டு, LFRC தொடக்கப் பள்ளிக்கூடமும் அருள்பணி. பிரான்சிஸ் பெர்னாண்டோ பணிக்காலத்தில் உருவாக்கப் பட்டது. 

1954 ம் ஆண்டு அருள்பணி. சாக்கோ அவர்கள் பொறுப்பேற்று, 1963 ம் ஆண்டு

LFRC தொடக்கப்பள்ளியை நடுநிலைப் பள்ளியாக  தரம் உயர்த்தினார். குருக்கள் இல்லம் கட்டப்பட்டது. 

1963 ம் ஆண்டு பொறுப்பேற்ற அருள்பணி. அந்தோணிசாமி அவர்கள் ஓராண்டு காலம் சிறப்பாக பணியாற்றினார். 

அருள்பணி. எர்னெஸ்ட் M. கூலாஸ் அடிகள் பள்ளியின் தரத்தை உயர்த்தினார். பாலர்சபை, நற்கருணை வீரர் சபை, வியாகுலமாதா சபை போன்ற பக்த சபைகளை உருவாக்கி அனைவரையும் இறைவழிப் பாதையில் பயணிக்கச் செய்தார். 

1968 -ம் ஆண்டு பொறுப்பேற்ற அருள்பணி. ஜோசப், SJ அவர்கள் மாபெரும் கலைக்குழுவை உருவாக்கி "இயேசுவின் அன்புவழி மனிதநேயம் காக்கும் சிறந்த வழி" என்பதை கலை நாடகம் வழியாக மக்களின் மனங்களில் ஆழமாக பதியச் செய்தார். 

அருள்தந்தை. செபஸ்தியான் அவர்கள் தமது பத்து ஆண்டுகள் பணிக்காலத்தில், செக்காலை தூய சகாயமாதா ஆலயப் பணிகளை நன்கு கவனித்து, அப்பகுதியில் வாழ்ந்த மக்களை ஒருங்கிணைத்தார். 1972 -ம் ஆண்டு செக்காலை பங்கு தனிப்பங்காக ஆவற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டது.  

செக்காலை, வளன்நகர், ஆவுடைப்பொய்கை, அமராவதிபுதூர் ஆகிய பங்குகளுக்கு செஞ்சை தாய்ப்பங்காக விளங்கியது குறிப்பிடத் தக்கது. 

1980 ம் ஆண்டு பொறுப்பேற்ற அருள்பணி. மரிய பங்கிராஸ் அவர்கள் இளைஞர்களை ஆற்றலோடு உருவாக்குவதில் மிகுந்த கவனம் செலுத்தினார். 

சிவகங்கை புதிய மறைமாவட்டமாக உதயமான போது அருள்பணி. சாமு இதயன் அவர்கள் இசையின் மூலம் இறைவனோடு ஒன்றிக்கவும் இறையாற்றலை உணரவும் கற்றுக் கொடுத்தார். 

1990 -ம் ஆண்டு பொறுப்பேற்ற அருள்பணி. அல்போன்ஸ்நாதன் ஆலயத்திற்கு புதிய வடிவம் கொடுத்தார். செக்காலை தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. இதுமுதல் காரைக்குடி பங்கானது செஞ்சை பங்கு எனப் பெயர் மாற்றம் பெற்றது. கிளைப்பங்கான ரஸ்தா புனித அருளானந்தர் ஆலயம் மீண்டும் உருவாக்கம் பெற்றது. நற்செய்தி பணியாளர்களை உருவாக்கி இல்லந்தோறும் இறைவாக்கை ஒலிக்கச் செய்தார். 

அருள்பணி. இராஜசேகரன் பணிக்காலத்தில் LFRC பள்ளியை, 1998 ல் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தினார். வளாகத்தில் உள்ள பெரும்பாலான கட்டிடங்கள் இவரது முயற்சியால் உருவானவையாகும். 

அருள்பணி. சூசை ஆரோக்கியசாமி பணிக்காலத்தில்  இயேசுவின் கல்வாரி சிலுவைப்பாட்டினை கண்முன் நிறுத்தும் வகையில் ஆலயத்தை அழகு படுத்தியதுடன், தூய லூர்து அன்னை நீரூற்று கெபி அமைத்தார். 

2012 ம் ஆண்டு அருள்பணி. அந்தோணிசாமி அவர்கள் பொறுப்பேற்று, கல்லறைத் தோட்டம் முழுமையாக சீரமைத்தார். அன்பியங்களை உருவாக்கி உறவை மேம்படுத்த, நல்லதோர் குடும்பமாய் வாழ வழிவகை செய்தார். அமராவதிபுதூரில் இறைஇரக்க ஆலயம் எழுப்பி பங்காக உயர்த்தினார். 

2017 ம் ஆண்டு பொறுப்பேற்ற அருள்பணி. L. சகாயராஜ் அவர்கள் பங்கின் பவளவிழா நினைவாக உயர்நிலைப் பள்ளியை, 2018 ல் மேல்நிலைப்பள்ளியாக உயர்த்தினார். 

மேலும் பவளவிழா நினைவாக குழந்தை இயேசுவின் புனித தெரசாள் ஆலய கோபுரத்திற்கு 12.11.2017 அன்று ரோடன்பர்க் பங்குத்தந்தை. அருள்பணி. I. ஜேம்ஸ் அவர்களால் அடிக்கல் நாட்டப் பட்டது. நெடிதுயர்ந்த கோபுரப் பணிகளுடன், ஆலயமும் புதுப்பிக்கப்பட்டு, 30.09.2018 அன்று சிவகங்கை மறைமாவட்ட ஆயர் மேதகு செ. சூசை மாணிக்கம் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டு, பவளவிழா கொண்டாடப் பட்டது. 

புனித குழந்தை தெரசாள் வழியாக ஏராளமான வேண்டுதல்கள் நிறைவேறி வருவதால், இவ்வாலயத்தை நாடி இறைமக்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள்... 

பங்கில் உள்ள கெபிகள் :

புனித லூர்து மாதா கெபி 

புனித ஆரோக்கிய மாதா கெபி. 

Little Flower Roman Catholic Primary School 

Little Flower Roman Catholic Higher Secondary School - ஆகிய இரண்டு பள்ளிக்கூடங்கள் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கி வருகின்றன. 

பங்கில் உள்ள கன்னியர் இல்லம் :

அமலோற்பவ மாதா அருள்சகோதரிகள் இல்லம் 

பங்கின் பங்கேற்பு அமைப்புகள் :

1. பங்குப்பேரவை

2. புனித வின்சென்ட் தே பவுல் சபை 

3. பாடகற்குழு 

4. குடும்ப வாழ்வு பணிக்குழு 

5. இளையோர் இயக்கம் 

6. பீடப்பூக்கள்

7. இயேசுவின் கண்மணிகள் 

8. கல்லறை பராமரிப்புக் குழு

9. பணி நிறைவுபெற்றோர் குழு

10. நற்செய்தி பணிக்குழு 

11. மரியாயின் சேனை 

12. மறைக்கல்வி

"நீங்கள் உழுது பயிரிடாத நிலத்தில் அறுவடை செய்தீர்கள். நீங்கள் கட்டாத நகர்களில் நீங்கள் வாழ்கின்றீகள். நீங்கள் நடாத திராட்சை, ஒலிவத் தோட்டங்களின் பயனை நீங்கள் நுகர்கின்றீர்கள். இவை அனைத்தும் நான் உங்களுக்குக் கொடுத்தவையே."

யோசுவா 24: 13

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. அருள்திரு. டீ. எஸ். மெனேசஸ் (1943-1944)

2. அருள்திரு. ஜெ. பிரான்சிஸ் பெர்னாண்டோ (1944-1953)

3. அருள்திரு. பி. சி. சாக்கோ (1954-1963)

4. அருள்திரு. பி. எஸ். அந்தோணி (1963-1964)

5. அருள்திரு. எர்னெஸ்ட் எம். கூலாஸ் (1964-1968)

6. அருள்திரு. ஜார்ஜ் ஜோசப் சே. ச (1968-1970)

7. அருள்திரு. எஸ். செபாஸ்டியன் (1970-1980)

8. அருள்திரு. மரிய பங்கிராஸ் (1980-1985)

9. அருள்திரு. ஜோசப் (1985-1986)

10. அருள்திரு. சாமு இதயன் (1986-1990)

11. அருள்திரு. அல்போன்நாதன் (1990-1995)

12. அருள்திரு. ம. ராஜசேகரன் (1996-2002)

13. அருள்திரு. வே. சூசை மாணிக்கம் (2002-2007)

14. அருள்திரு. ச. சூசை ஆரோக்கியசாமி (2007-2012)

15. அருள்திரு. அ. அந்தோணிசாமி (2012-2017)

16. அருள்திரு. லூ. சகாயராஜ் (2017 முதல் தற்போது...)

தகவல்கள் : பங்குத்தந்தை அருள்திரு. L. சகாயராஜ் MSW, MHR, B.L, M.Phil

புகைப்படங்கள் : பங்குத்தந்தையின் வழிகாட்டுதலில் பங்கின் உறுப்பினர்.