211 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், புக்ளிபாளையம்


புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம்

இடம் : புக்ளிபாளையம்

மாவட்டம் : கோயம்பத்தூர்

மறை மாவட்டம் : கோயம்பத்தூர்

பங்குத்தந்தை : அருட்தந்தை குழந்தை ராஜ்

நிலை : பங்குதளம்

கிளைகள் :

1. புனித அந்தோணியார் ஆலயம், பூமலூர்
2. புனித ஞானப்பிரகாசியார் ஆலயம், வேட்டுவப்பாளையம்

குடும்பங்கள் : 120

ஞாயிறு திருப்பலி : காலை 07.30 மணிக்கு

திங்கள், புதன், வெள்ளி, சனிக்கிழமைகளில் மாலை 06.00 மணிக்கு திருப்பலி.

திருவிழா : டிசம்பர் மாதம் 03 -ம் தேதி.

புக்ளியாளையம் ஆலய வரலாறு :

பெயர்க்காரணம்:

பூக்குழிபாளையம் என்று அழைக்கப்பட்ட இவ்வூரானது காலப்போக்கில் புக்ளிபாளையம் என ஆனது.

இங்கு முற்காலத்தில் பெரிய குழி ஒன்று இருந்தது. சுற்றுப்புற பகுதிகளிலெல்லாம் கடும் வறட்சி தலைவிரித்தாட, இந்த குழியில் மட்டும் பூக்கள் பூத்துக் குலுங்குமாம். ஆதலால் இந்தப் பகுதி பூக்குழி எனப் பெயர் பெற்றது. புக்ளிபாளையம் என்பதற்கு பூக்களால் நிறைந்த ஊர் எனப்பொருள் படும். இந்த ஊரில் 125 ஆண்டுகளாக புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் இருக்கின்றது.

தனிச்சிறப்புகள் :

திப்பு சுல்தான் காலத்தில் மைசூரில் மதக்கலவரம் மூண்டது. கலவரத்திற்கு பயந்து கிறிஸ்தவ மக்கள் சவேரியார் பாளையம், சத்தியமங்கலம், தாராபுரம் போன்ற தமிழகத்தின் கொங்கு மண்டலத்தில் குடியேறினர். இவ்வாறு வந்தவர்களில் சிலருக்கு புக்ளிபாளையம் மண் அரவணைப்பையும், அடைக்கலத்தையும் கொடுத்தது.

இங்குள்ள மக்கள் நெசவுத்தொழிலிலும், ஜவுளி வியாபாரத்திலும் கைதேர்ந்தவர்கள். இதுவே இவர்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையாகவும் அமைந்தது.

தற்போது இந்த சிற்றூர் மக்கள் அமெரிக்கா, ஜெர்மனி, மலேஷியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு குடியேறியுள்ளனர் என்பதும்; மும்பை, பெங்களூரு, சென்னை ஆகிய பெரு நகரங்களில் அதிக அளவில் வசிக்கின்றனர் என்பதும் பெருமைக்குரியது.

ஆலய வளர்ச்சி :

இப் பங்கின் 125 ஆண்டுகால பெருமைக்கு, இங்கு பணிபுரிந்த பங்குத்தந்தையர்களின் அர்ப்பணிப்பும், வழிகாட்டுதலும் சிறந்த அடித்தளமாக அமைந்தது.

அருட்தந்தை இஞ்ஞாசியார் இப்பங்கின் முதல் பங்குத்தந்தையாக பல ஆண்டுகள் பணியாற்றினார்.

தொடர்ந்து அருட்தந்தை அமிர்தநாதர் இரண்டு ஆண்டுகளும், தொடர்ந்து அருட்தந்தை ரோச் நாதர் அவர்களும் பணிபுரிந்தனர்.

தொடர்ந்து அருட்தந்தை அண்ணாசாமிநாதர் அவர்கள் பத்தாண்டுகள் பணிபுரிந்தார்.

அருட்தந்தை சவரிநாதர் பணிபுரிந்த போது பொன்விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது. பொன்விழா நினைவாக தூய லூர்து அன்னை கெபியும், மணிக்கூண்டும் கட்டப்பட்டது. இவர் இறந்த போது ஆலயத்தினுள்ளேயே அடக்கம் செய்யப் பட்டார்.

அடுத்ததாக அருட்தந்தை அண்ணா சாமிநாதர் இரண்டாம் முறையாக பங்குத்தந்தையானார்.

தொடர்ந்து அருட்தந்தை டி. சி அடைக்கல நாதர், அருட்தந்தை ஜோசப் நாதர், அருட்தந்தை ஆசீர்வாதம் பங்குத்தந்தையாயினர்.

தொடர்ந்து அருட்தந்தை இராயப்பநாதர் சிறிது காலம் பணியாற்றி, இங்கேயே மரணமடைந்தார்.

பின்னர் பள்ளப்பாளையம் பங்குத்தந்தை அருட்பணி தோமினிக் அடிகளார் இப்பங்கின் பொறுப்பை ஏற்று வழி நடத்தினார்கள். இவர் காலத்தில் பங்கின் 100-வது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது. விழா நினைவாக ஆலயம் புதுப்பிக்கப் பட்டது. பூமலூர் ஆலயத்தை இடித்து புதிதாகக் கட்டப்பட்டது.

தொடர்ந்து அருட்பணியாளர்கள் பீட்டர் அடைக்கலம் அவர்கள் பொறுப்பேற்று குருக்கள் இல்லம் புதிதாக கட்டப்பட்டது.

தொடர்ந்து அருட்தந்தை அலெக்ஸ் செல்வநாயகம் அவர்கள் காலத்தில் பங்கு மக்கள் மற்றும் மும்பை வாழ் மக்களின் பொருளுதவியால் தூய லூர்து மாதா கெபியும், புனித பிரான்சிஸ் சவேரியாருக்கு பொன் கிரீடமும் சூட்டப் பட்டது. கிளைப் பங்கான பூமலூரில் ஆலயத்தின் இருபுறமும் கோபுரங்கள் கட்டப்பட்டன.

தொடர்ந்து அருட்தந்தை பி. இருதய ராஜ் அவர்கள் ஐந்து ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றினார்கள்.

தற்போது பங்குத்தந்தையாக பணியாற்றும் மறை மாவட்ட முன்னாள் முதன்மை குரு அருட்தந்தை குழந்தை ராஜ் அடிகளாரின் வரவு, இப் பங்கின் வளர்ச்சிக்கு மேன்மேலும் உதவியது.

அருட்தந்தை குழந்தை ராஜ் அவர்களின் அயராத முயற்சி மற்றும் வழிகாட்டுதலில் 125 ஆண்டு கால முற்றிலும் மண்ணாலான ஆலயம் உறுதித் தன்மை இழந்ததால், அதனை அப்புறப்படுத்தி விட்டு புதிய ஆலயம் கட்டப்பட்டது.

இப்புதிய ஆலயமானது 29-12-2018 அன்று கோவை மறை மாவட்ட ஆயர் மேதகு தாமஸ் அக்வினாஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

இப்புதிய ஆலய கட்டுமானப் பணிக்கு அயராது தன்னலமற்ற உழைப்பையும் நன்கொடைகளையும் கொடுத்த பங்குமக்களை வாழ்த்துகின்றோம்..! பாராட்டுகின்றோம்..!

மேலும் நன்கொடைகள் வழங்கிய உள்ளூர், வெளியூர், மற்றும் பிற சமய மக்கள், மற்றும் வெளிநாட்டில் வாழும் நன்கொடையாளர்களை சிறப்பாக ஒருங்கிணைத்து வழி நடத்திய பங்குத்தந்தை அருட்பணி குழந்தை ராஜ் அவர்களையும் நன்றியுணர்வோடு நினைவு கூறுகின்றது புக்ளிபாளையம் இறை சமுகம்..!

மண்ணின் இறை அழைத்தல்கள் :

1. Fr சவரி நாதர்
2. Fr இராயப்ப நாதர்
3. Fr அருள் நாதர
4. Fr மரிய லூயிஸ்
5. Fr செல்வராஜ்
6. Fr ஜான் போஸ்கோ
7. Fr லூர்து சாமி
8. Fr அருள் தாஸ்
9. Fr பவுல் சகாயம்

மேலும் 2 துறவற சபை சகோதர்களையும், 9 அருட்சகோதரிக ளையும் மறைபரப்பு பணிக்காக தந்துள்ளது புக்ளிபாளையம் இறை சமுகம்.

இவ்வாறாக சிறந்த வரலாற்றையும் கொண்டு, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்தி, இறை திட்டத்தின் படி வளர்ச்சியை நோக்கி பயணிக்கின்றது புக்ளிபாளையம் இறை சமூகம்.