389 புனித சந்தியாகப்பர் ஆலயம், கொற்கை


புனித சந்தியாகப்பர் ஆலயம்.

🐚இடம் : கொற்கை, 628801.

🍇மாவட்டம் : தூத்துக்குடி
🍇மறை மாவட்டம் : தூத்துக்குடி
🍇மறை வட்டம் : தூத்துக்குடி

🍀நிலை : கிளைப்பங்கு
🍀பங்கு : புனித சூசையப்பர் ஆலயம், ஏரல்

💐பங்குத்தந்தை : அருட்பணி ஜேசுதுரை ஜாண்சன்

🌳குடும்பங்கள் : 134
🍀அன்பியங்கள் : 5

🔥ஞாயிறு திருப்பலி : காலை 09.00 மணிக்கு

🎉திருவிழா : ஜூலை முதல் வாரத்தில் வருகிற சனி, ஞாயிறு நிறைவடையும் வகையில் பத்து நாட்கள்.

💐மண்ணின் மைந்தர் : அருட்பணி சுபாஷ்

👉வழித்தடம் : திருச்செந்துர்-ஆத்தூர்- உமரி காடு-கொற்கை.

👉Location Map :
St. James Church

கொற்கை, Tamil Nadu 628801

https://g.co/kgs/2SnkbD

கொற்கை வரலாறு :
*********************
🌺கொற்கை - பாண்டிய மன்னனின் துறைமுகத் தலை நகரம். கபாடபுரத்தையும், பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோட்டையையும் கொடுங்கடலுக்குக் கொள்ளக் கொடுத்த பாண்டிய மன்னர்களுக்கு ஆசுவாசும் தந்த பூமி, கொற்கை.

👑கொற்கை முத்து சிறந்த முத்தாக அக்காலத்தில் மதிக்கப்பட்டது.
கொற்கை விறற்போர்ப் பாண்டியன், மறப்போர்ப் பாண்டியர், வெற்றிவேல் செழியன் முதலான பாண்டிய மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.

🌺தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மதுரையில் இருந்துகொண்டு ஆண்டாலும் கொற்கை மக்களின் எதிர்பார்ப்புகளை யெல்லாம் நிறைவேற்றி வைத்தான்.
கடலலை குவிக்கும் முத்துக்கள் செல்வர் ஏறிவரும் குதிரைக் குளம்புக்குள் மாட்டி அவற்றிற்கு இடையூறாக அமையும் அளவுக்குக் கொட்டிக்கிடக்கும்.
கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்வோர் தாம் உண்ணும் கள்ளுக்கு விலையாக முத்துக்களைத் தருவர்.
முத்துக்குளிப்பது மட்டுமின்றி வலம்புரிச் சங்கு எடுக்கவும் அங்குள்ள ஆடவர் கடலில் மூழ்குவர்.
அங்கு உப்பு விளைவிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த உமட்டியர் கிலுகிலுப்பையில் முத்துக்களைப் போட்டு ஆட்டித் தங்கள் குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டுவர்.

🐘மறப்போர்ப் பாண்டியர் கொற்கையில் முத்துக்களைப் பாதுகாக்க வேங்கடமலைப் பகுதியிலிருந்து கொண்டுவந்த யானைகளைப் பயன்படுத்தினர்.
கொற்கைப் பகுதியில் பழையர் எனப்படும் குடிமக்கள் வாழ்ந்து வந்தனர். அந்தக் குடியைச் சேர்ந்த மகளிர் முத்துக்குளிக்கும் துறையை வழிபட்டு விழாக் கொண்டாடும்போது தழையாடை உடுத்திக்கொண்டு முத்துக்களையும், கிளிஞ்சல்களையும் கொட்டிப் படையல் செய்து மகிழ்ந்தனர்.

🌺கி.பி. முதல் நூற்றாண்டில் இந்தியா வந்த கிரேக்க மாலுமி பெரிப்ளஸ் கொற்கையைக் கொல்கி என்று குறிப்பிட்டு அது பாண்டியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்ததாகவும் எழுதியுள்ளார்.

👑கொற்கை துறைமுகத்து முத்துகள் கிளியோபாட்ரா அரசியின் ராஜகிரீடத்தை அலங்கரித்ததாக வரலாற்றில் குறிப்புகள் உண்டு. பாண்டியன், தன் கப்பல் படைத்தளத்தை கொற்கை முத்துகளுக்குப் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தான் என்கிறது தமிழர் வரலாறு.

💐கடல் வணிகத்துக்காக பாண்டிய மன்னர்கள் நாணயங்கள் அச்சிட அக்ககச் சாலை ஒன்றையும் நிறுவியிருக்கிறார்கள் கொற்கையில். அப்படிப்பட்ட கொற்கை, இன்று பல்போன ஒரு பொக்கை வாயாக, ஒரு கடற்கரை கிராமமாகச் சுருங்கி, ஒடுங்கிக் கிடக்கிறது.

🍇முன்னொரு காலத்தில் கொற்கை வழியாக ஓடித்தான் வங்கக் கடலில் சங்கமித்திருக்கிறது தாமிரபரணி. காலமாற்றமும் கடல்கோள் மாற்றமும் கொற்கையைத் தூர்த்து விட்டு, கடலை இன்னும் கிழக்கு நோக்கி உள்ளிழுத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், ஊருக்குள் எங்கு தோண்டினாலும் கடல் அலையடித்தற்கான சாட்சியாக, சங்கு, சிப்பி, உப்பு மண் என கடல் சார்ந்த தடயங்கள் புதையலாகக் கிடைக்கின்றன.

ஆலய வரலாறு :
****************
🌺பழம் பெருமை வாய்ந்த கொற்கையில் வாழும் கத்தோலிக்க மக்கள் 1532 முதல் 1535 வரை கிறிஸ்தவம் தழுவிய 22 கிராமங்களில் அடங்குவர். நீண்ட காலமாக பழைய காயல் பங்கின் கீழ் இருந்த கொற்கை புனித சந்தியாகப்பர் ஆலயம், பின்னர் ஏரல் புனித சூசையப்பர் ஆலயத்தின் கிளைப் பங்காக ஆனது.

👑மிகவும் பழமையான இந்த ஆலயத்தில் தான் டச்சுக்காரர்களுக்குப் பயந்து தூத்துக்குடி தூய பனிமய மாதா சுரூபத்தை கி.பி 1671 முதல் 1686 வரை மறைத்து வைத்து பாதுகாத்ததாக வரலாறு கூறுகிறது. ஆகவே தான் தூத்துக்குடி தூய பனிமய மாதாவிற்கு 'கொற்கை மாதா' என்ற பெயரும் உண்டு.

🍀பழமையான ஆலயம் பழுதடைந்த போது அருட்பணி ஆஸ்வால்ட் அவர்கள் பணிக்காலத்தில் மேதகு D. அம்புறோஸ் ஆண்டகையின் நிதியுதவியுடன் 1978 ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது.

🌳1940 ல் புனித ஞானப்பிரகாசியார் தொடக்கப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டு 1960 ல் நடுநிலைப் பள்ளியாக உயர்த்தப் பட்டது.

🙏ஊரின் பழமைக்கேற்ப பல்வேறு இனத்தை சேர்ந்த மக்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் சிறந்த ஊர் கொற்கை.

👉தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி ஜான்சன் அவர்கள்.