816 புனித சலேத் மாதா ஆலயம், தினையூரணி

      

புனித சலேத் மாதா ஆலயம்

இடம்: தினையூரணி

முகவரி: புனித சலேத் மாதா ஆலயம், தினையூரணி, ராமகிருஷ்ணாபுரம் அஞ்சல், முனஞ்சிபட்டி வழி, திசையன்விளை தாலுகா, திருநெல்வேலி மாவட்டம், 627355.

மாவட்டம்: திருநெல்வேலி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: சாத்தான்குளம்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித அந்தோனியார் ஆலயம், சோமநாதபேரி

பங்குத்தந்தை: அருட்பணி. மைக்கேல் ஜெகதீஷ் 

குடும்பங்கள்: 240

அன்பியங்கள்: 5

ஞாயிறு திருப்பலி காலை 07:00 மணி

திருவிழா: ஆவணி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பித்து பத்து நாட்கள். (செப்டம்பர் மாதம்)

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. சலேத் ஜெரால்ட், தூத்துக்குடி மறைமாவட்டம்

2. அருட்பணி. கு. ஜேம்ஸ் சகாய அருள் செல்வன், பிரான்சிஸ்கன் மிஷனரி பிரதர்ஸ் ஆஃப் சர்வீஸ் (FMBS), தென்கொரியா

3. அருட்பணி. கு. சேவியர் சகாய அருள் செல்வன், பிரான்சிஸ்கன் மிஷனரி பிரதர்ஸ் ஆஃப் சர்வீஸ் (FMBS), தென்கொரியா

4. அருட்சகோதரி. மேரி ஹியூபர்ட்

5. அருட்சகோதரி.‌ அந்தோணியம்மாள்

6. அருட்சகோதரி. விர்ஜின் சிந்தாத்திரி

7. அருட்சகோதரி.‌ மேரி சித்ரா

8. அருட்சகோதரி. தஸ்நேவிஸ் மெல்கி

9. அருட்சகோதரி.‌ ஹெயில் மேரி

10. அருட்சகோதரி. அ. ரோஸ்லின் மேரி

11. அருட்சகோதரி. மரிய மல்லிகா

12. அருட்சகோதரி. மரிய பூங்கோதை

13. அருட்சகோதரி. சலேத் ஜெஸ்மின்

14. அருட்சகோதரி.‌ ஜெஸிகன்சியூஸ்

15. அருட்சகோதரி. ஜெர்லின் பெலிக்ஸ்

16. அருட்சகோதரி.‌ ஆலிஸ் சலேத்

17. அருட்சகோதரி. அந்தோணி ரின்சி

வரலாறு:

பல ஆண்டுகளுக்கு முன்னர் ரெட்டாகுளம் என்ற கிராமத்தில் இருந்து, இங்கு குடிபெயர்ந்து வந்த தம்பதிகளுக்கு 5 ஆண்மக்கள் இருந்தனர். இவர்கள் பனையேறும் தொழில் செய்ததுடன், ஊரணியில் இருந்து நீர் இறைத்து, தினைப்பயிர்கள் விளைவித்ததால், தினை+ஊரணி 'தினையூரணி' என்று இவ்வூர் பெயர் பெற்றது. 

1890 ஆம் ஆண்டு முதல் 1913 வரை போர்த்துக்கீசியர் விஜயநாராயணத்தை தலைமை பணித்தளமாகக் கொண்டு, சுமார் 200 கிராமங்களை உள்ளடக்கி மறைபோதகப் பணி செய்து வந்தனர். 

1914 ஆம் ஆண்டு சாத்தான்குளம் தனிப் பங்கானது. அப்போது திருச்சிராப்பள்ளி மறைமாநிலமாக இருந்தது. 1923 ஆம் ஆண்டு தூத்துக்குடி மறைமாவட்டம் உருவாகியது. 1924 ஆம் ஆண்டு 18 கிளைப்பங்குகளுடன் சோமநாதபேரி தனிப் பங்காக உயர்த்தப்பட்டது. தினையூரணி ஆலயமானது அதன் கிளைப் பங்காக மாற்றப் பட்டது. தூத்துக்குடி மறைமாவட்டத்திற்கு அருட்பணி. X. கபிரியேல் அடிகளார் நியமனம் செய்யப்பட்டு, தினையூரணியின் ஆன்மீக, பொருளாதார முன்னேற்றத்திற்கு பாடுபட்டார்.

சோமநாதபேரி பங்குத்தந்தை அருட்பணி. பி. ஞானப்பிரகாசம் அவர்கள் பணிக்காலத்தில் பல பிரச்சினைகளையும் வெற்றிகரமாக கடந்து, பங்கின் வளர்ச்சிக்கு அதிகமாக உழைத்தார். 

ஆலயம்:

முதன்முதலில் தினையூரணியில் ஓலைக்குடிசை ஆலயம் இருந்தது. பின்னர் அருட்பணி. X. கபிரியேல் அடிகளார் அவர்களால் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஊரில் உள்ள சிறியவர், பெரியவர் என அனைவரும் ஒன்றுபட்டு உழைத்து ஆலயத்தைக் கட்டினர். 

பழைய ஆலயமானது புறா எச்சங்களாலும் மழையாலும் கொஞ்சம் சிதிலமடைந்து வந்தது. அப்போது மண்ணின் மகளான மூத்த அருட்சகோதரி கியூபர்ட் அவர்கள், நமக்கு கண்டிப்பாக புதிய ஆலயம் கட்டவேண்டும் என்றும் அதற்காக நாம் மாதாவிடம் ஜெபிப்போம் என்று கூறினார். அதன்படி தினமும் இரவு கோயில் ஜெபத்தில், புதிய கோயில் கட்ட வேண்டும் என்று ஒரு பரலோக மந்திரமும், ஒரு அருள் நிறைந்த மந்திரமும் ஒப்புக்கொடுக்கப் பட்டது. அன்னையின் ஆசியுடன் புதிய கோயில் கட்ட அருட்பணி. ஜான்சன் அடிகளார் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஊர் மக்களின் பெரும் முயற்சியாலும் நன்கொடைகளாலும், சோமநாதபேரியில் அப்போதைய பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி. இருதயசாமி அவர்களின் வழிகாட்டுதல்படி 

தற்போதைய புதிய ஆலயமானது அழகுற கட்டப்பட்டு, 22.05.2010 அன்று மேதகு ஆயர் இவான் அம்புரோஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

தினையூரணி ஊருக்கு நடுவில் புனித சலேத் மாதா ஆலயம் அமைந்துள்ளது தனிச்சிறப்பு.‌ ஆலயத்தைச் சுற்றிலும் 5 தெருக்கள் உள்ளன. ஊரின் வடபகுதியில் நீர்த்தேக்க தொட்டியும், மேற்கு மற்றும் கிழக்கில் இரண்டு பெரிய குளங்களும், அத்துடன் ஆறு ஒன்றும் ஓடுகிறது. ஊரின் தெற்கே முன்னோர்களின் கல்லறைத் தோட்டம் அமைந்துள்ளது. 

பள்ளிக்கூடம்:

அருட்பணி. கபிரியேல் அடிகளாரின் முயற்சி மற்றும் உதவியுடன் தினையூரணியில் தொடக்கப்பள்ளி உருவானது. அருட்பணி.‌ அமலதாஸ் அடிகளார் முயற்சியால் நடுநிலைப் பள்ளியாக உயர்ந்தது.‌ அருட்பணி. ஜான்சன் அடிகளார் முயற்சியால் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. தினையூரணி மக்களின் கல்வியறிவு விகிதம் அதிகரிக்கவும், அவர்களின் வாழ்வு மேம்படவும் இந்த பள்ளிக்கூடம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

புனித மிக்கேல் அதிதூதர் கெபி:

2000 ஆம் ஆண்டில் புனித மிக்கேல் அதிதூதர் கெபி கட்டப்பட்டது. 

புனித தேவசகாயம் மணிமண்டபம்:

1958 ஆம் ஆண்டு இந்த மணிமண்டபம் கட்டப்பட்டது. புனித தேவசகாயம் மணிமேடையில் இன்றளவும் ஒரு இருக்கை போடப்பட்டிருக்கும். காரணம் இரவு நேரத்தில் தேவசகாயம் வந்து அமர்வார் என்பது இன்றளவும் உள்ள நம்பிக்கை. அதில் வேறு எவரும் அமர்வதில்லை. குழந்தை இல்லாதவர்கள் தேவசகாயத்தை வேண்டிக்கொண்டு, ஆலய வளாகத்திலுள்ள வேப்பமரத்தின் இலைகளை இறைபக்தியுடன், அரைத்து குடித்து குழந்தை வரம்பெற்றவர்கள் பலர்.

ஆவணி மாதம் நடைபெறும் திருவிழாவின் பத்தாம் திருவிழாவன்று இரவு, மறைசாட்சியாய் மரித்த புனித தேவசகாயம்  வாழ்க்கை வரலாற்று நாடகம் ஊர் மக்களால் மிகவும் சிறப்பாக நடிக்கப்படும்.‌ இவ்வாறு தினையூரணி ஊர் மக்களின் வாழ்வில் புனித சலேத் மாதாவும், புனித தேவசகாயமும் இரண்டறக் கலந்துள்ளனர்.

புனித சலேத் மாதாவின் புதுமைகள்:

சலேத் மாதா காட்சி கொடுத்தது பிரான்ஸ் லா சலேத் என்ற இடத்தில். காட்சி பெற்ற குழந்தைகள் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த மெலானி, மேக்ஸ்மின் ஆவார். தினையூரணி ஊரில் பலருக்கும் சலேத்.. மேக்ஸ்மின்.. மெலானி.. என்றுதான் பெயர் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாலயத்தில் சலேத் காட்சி பெற்ற குழந்தைகளும் மாதாவின் அருகில் சுரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. 

15.09.2000 அன்று பழைய கொடிமரத்தை மாற்றி, இரும்பால் ஆன புதிய கொடிமரம் வைக்கப்பட்டது. பாதியளவு கொடிமரம் வைத்து விட்டனர். பாதிக்கு மேலே ஏற்ற, பெரிய சாரம் கட்டி இரண்டு பக்கமும் வேப்பமரத்தில் பெரிய கயிறு கட்டியபின் ஆனால் எவ்வளவோ முயன்றும் கொடிமரத்தை பொருத்த முடியவில்லை. அப்போதெல்லாம் கிரேன் வசதிகள் இல்லை. அதனால் சாரம்மட்டும் தான் ஒரே வழி. ஊரில் உள்ள அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து இழுத்த பின்னரும் முடியவில்லை. அனைவரும் சோர்ந்து போன வேலையில், ஊரில் உள்ள ஒரு பெரியவர் சொன்னார்.. இவ்வளவு நேரம் கஷ்டப்பட்டுட்டோம் முடியல...!!! இனி மாதாவையும் துணைக்கு சேர்த்துக் கொள்வோம்... மாதா கையிலும் ஒரு கயிறு கொடுங்கள்... அவரால் மட்டும் தான் முடியும் என்று.... கோயிலுக்குள் இருந்த மாதா சுரூபத்தின் கையில் ஒரு சின்ன கயிறு கொடுக்கப்பட்டு.... கொடிமரத்துடன் இணைக்கப்பட்டது. என்ன ஒரு ஆச்சரியம்...!!!!! கொஞ்ச நேரத்தில் கொடிமரம் உயரே ஏற்றப்பட்டு... பொருத்தப்பட்டது. 

மூன்று குருக்களையும், 14 அருட்சகோதரிகளையும் கொண்டு இறையழைத்தல்கள் நிரம்பப் பெற்ற ஊர் தினையூரணி. குறிப்பாக இவ்வூரைச் சேர்ந்த இரட்டை சகோதரர்கள் தென்கொரியா நாட்டில் குருக்களாகி, பின்னர் தினையூரணி புனித சலேத் மாதா ஆலயத்தில் நன்றி திருப்பலி நிறைவேற்றிச் சென்றது தனிச் சிறப்பு.

ஆலய பங்கேற்பு அமைப்புக்கள்:

1. புனித அமலோற்பவ மாதா சபை

2. இளையோர் இயக்கம்

3. புனித ஞானப்பிரகாசியார் சபை

4. பாடகற்குழு 

5. மறைக்கல்வி

6. பாலர்சபை

7. திருக்குடும்ப சபை

அன்பியங்கள்:

1. தூய மிக்கேல் அதிதூதர் அன்பியம்

2. புனித அந்தோனியார் அன்பியம்

3. புனித இஞ்ஞாசியார் அன்பியம்

4. புனித சவேரியார் அன்பியம்

5. புனித சலேத் மாதா அன்பியம்

வழித்தடம்: திருநெல்வேலியிலிருந்து, காரியாண்டி வழியாக திசையன்விளை செல்லும் பேருந்துகள் தினையூரணி வழியாகச் செல்லும்.‌

Location map: https://g.co/kgs/aokRPy

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: ஆலய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்.

ஆலய வரலாறு: ஆலய அர்ச்சிப்பு விழா மலர் (2010)