300 பனிமய மாதா திருத்தலப் பேராலயம், தூத்துக்குடி


பனிமய மாதா திருத்தலப் பேராலயம்.

இடம் : தூத்துக்குடி

மாவட்டம் : தூத்துக்குடி
மறை மாவட்டம் : தூத்துக்குடி

நிலை : திருத்தலப் பேராலயம் (Shrine Basilica)

பங்குத்தந்தை : அருட்தந்தை முனைவர் ஜோசப் குமார் ராஜா
இணை பங்குத்தந்தை : அருட்தந்தை சேவியர் கிங்ஸ்டன்

குடும்பங்கள் : சுமார் 1000
அன்பியங்கள் : 28

திருவழிபாட்டு நேரங்கள் :

திங்கள் - வெள்ளி வரை:
காலை 05:30 - முதல் திருப்பலி.
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி.
மாலை 05:30 - திருப்பலி.

சனிக் கிழமை :
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 11:30 - நவநாள் திருப்பலி
மாலை 05:00 - ஒப்புரவு அருட்சாதனம்
மாலை 05:30 - திருப்பலி
மாலை 06:30 - நவநாள்-நற்கருனை ஆசீர்.

முதற் சனிக்கிழமை :
மாலை 06:30 - சப்பர பவனி, நவநாள், நற்கருனை ஆசீர்.

ஞாயிற்றுக்கிழமை :
காலை 05:00 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 08:00 - மூன்றாம் திருப்பலி
காலை 09:30 - ஆங்கில திருப்பலி

மாலை 05:30 - திருப்பலி
மாலை 06:30 - நற்கருணை ஆசீர்

திருவிழா : ஜூலை மாதம் 26-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி வரையில்.

வரலாறு :

வெள்ளித்திரை கொண்டு வங்கக்கடல் இன்று தாள் பணிந்து போற்றுகின்ற கடற்கரையினிலே மங்கா புகழ் கொண்டு காட்சியளிக்கும் பனிமய மாதா! அவள் கோயில் கொண்டிருக்கும் தூத்துக்குடி பனிமய மாதா கோவிலுக்கும் மிகப்பெரிய வரலாறு உண்டு. பனிமய மாதா ஏழு கடற்கரை ஏக அடைக்கல மாதா என்றும் அழைக்கப்படுகிறார்.

முத்துக்குளித்துறையில் 1535-37-ம் ஆண்டுகளிலேயே முத்துகுளிதுறை பரதவர்கள் மதம் மாறினார்கள். முதலில் பரதவர்களின் ஜாதி தலைவர்களின் தலைமையில் 85 பட்டம்கட்டிமார் முதலில் மதம் மாறி அதன் பிறகு சுமார் 20000 பரதவர்கள் மதம் மாறினார்கள். உலகில் முதன்முதலாக அதிக அளவில் மக்கள் ஒரு மதத்தில் இருந்து அடுத்த மதத்துக்கு மதம் மாறி கத்தோலிக்க மறையைத் தழுவியிருந்தனர். ஆனால் இவர்கள் மத்தியில் ஆன்மீகப் பணி புரியவும், வழிபாடுகள் நிறைவேற்றவும் குருக்கள் எவருமே இருக்கவில்லை. திருத்தந்தை 3-ம் சின்னப்பரால் இயேசு சபை குருக்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்

புன்னக்காயலில் செயல்பட்டு வந்த சம்.பவுல் கல்லூரி என்று அழைக்கப்பட்ட இயேசு சபை தலைவராக இருந்த சுவாமி தியோகுதிகுனா என்பவரின் முயற்சியால் இரக்கத்தின் மாதா ஆலயம் கட்டப்பட்டது. இந்த ஆலயம் 1582ல் கட்டி முடிக்கப்பட்டு, ரோமாபுரியில் எஸ்கலின் குன்றின் மேல் அமைந்துள்ள மேரி மேஜர் என்று அழைக்கப்படும் பனிமய மாதா பேராலயத்தின் திருநாளாகிய ஆகஸ்ட் 5ம் தேதி ஆடம்பரமாக திறந்து வைக்கப்பட்டது. இந்த ஆலயம் திறக்கப்பட்ட போது பனிமய மாதாவின் அற்புத சொரூபம் இங்கு வந்தடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புனித சவேரியாரின் வேண்டுகோள்படி மணிலாவில் உள்ள புனித அகுஸ்தின் சபை கன்னியர் மடத்திலிருந்த பனிமய மாதாவின் அற்புத சொரூபம் புனித சவேரியாரின் மரணத்திற்கு பின் சந்தஹெலேனா என்ற கப்பல் மூலம் தூத்துக்குடி பரதகுல மக்களுக்கு அன்பளிப்பாக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த அதிசய சொரூபத்தை கோவா மறை மாநில பெரிய குருவாயிருந்த மிக்கேல்வாஸ் என்பவர் வரவேற்று அதை சம்பவுல் ஆலயத்தில் ஆடம்பரமாக நிறுவினார்.

இவ்வாறு பிரசித்தி பெற்று வந்த பனிமயமாதா ஆலயம் 1603ம் ஆண்டு நடந்த போரில் தீ வைத்து நாசப்படுத்தப்பட்டது. இதனால் கொதிப்படைந்த கிறிஸ்தவ மக்கள் 1604ம் ஆண்டு தூத்துக்குடி அருகேயுள்ள முயல்தீவிற்கு குடியேறினர். இயேசு சபையினர் தேவ மாதாவின் ஆலயத்தை 1606ம் ஆண்டு உருவாக்கினர். இங்கு தான் பனிமய மாதா சொரூபம் ஆடம்பரமாக ஸ்தாபிக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டது எனினும் மீண்டும் ஏற்பட்ட போர் காரணமாக 1611ம் ஆண்டு தேவமாதா ஆலயம் இடித்து நொறுக்கப்பட்டது.

மேலும் பரதகுல மக்களின் வீடுகளும் சேதப்படுத்தப்பட்டன. இச்சூழ்நிலையில் பரதகுல மக்கள் பனிமய மாதாவின் அற்புத சொரூபத்தை சிறிது காலம் புனித ஸ்நாபக அருளப்பர் ஆலயத்தில் வைத்திருந்தனர். தூத்துக்குடியை விட்டு வெளியேறிய இயேசு சபைக் குருக்கள் மீண்டும் 1621ம் ஆண்டு மார்ச் மாதம் தூத்துக்குடி வந்தடைந்தனர். பின்னர் முதல் வேலையாக பாழடைந்து கிடந்த தலைமை இல்லத்தை கட்டி முடித்ததோடு பனிமய மாதாவின் ஆலயத்தையும் புதுப்பித்தனர்.

பின்னர் 1658ல் டச்சு படையெடுப்பு காரணமாக அவர்களுக்குத் தெரியாமல் பனிமய மாதா சொரூபம் புனித ஸ்நாபக அருளப்பர் ஆலயத்திலும் பின்னர் 1671ம் ஆண்டிலிருந்து 1686ம் ஆண்டு வரை ஏழு ஆண்டுகள் கொற்கையிலும் வைக்கப்பட்டிருந்தது. 1699ம் ஆண்டு தூத்துக்குடியில் பங்கு குருவாக இயேசு சபையை சார்ந்த சுவாமி லிஜிலியூஸ் மான்சி பணியாற்ற வந்த போது பனிமய மாதாவின் சொரூபம் இயேசு சபைக்கு வந்து சேர்ந்தது. டச்சுக்காரர்களினால் ஆபத்து வரலாம் என்று நினைத்து தனது இல்லத்திலேயே மாதாவின் சொரூபத்தை சங்லிஜிலியூஸ் மான்சி சுவாமி வைத்திருந்தார்.

இந்த காலக் கட்டத்தில் தான் 1707ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி நள்ளிரவில் சங்.விஜிலியூஸ் மான்சி சுவாமி தங்கியிருந்த அறையில் பயங்கர இடி விழுந்தது. அப்போது இப்பேராலயத்தில் இருந்த சங்.விஜிலியூஸ் மான்சி சுவாமியையும் அவரோடு இருந்த சக ஊழியர்களையும் பனிமய மாதா காப்பாற்றினார். மாதா சொரூபமானது இடிதாக்கிய பின்னர், பனிமய மாதா இடி தாங்கிய மாதா என்றே அழைக்கப்பட்டார்.

இந்நிகழ்ச்சிக்கு பிறகு 1712ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட புனித ராயப்பர் தேவாலயத்தில் மக்களின் பொது வணக்கத்திற்காக மாதாவின் சொரூபம் வைக்கப்பட்டது. அப்போதுதான் பனிமய மாதாவிற்கு தனி ஆலயம் அமைக்க வேண்டும் என்று எண்ணிய சங்.விஜிலியூஸ் மான்சி சுவாமி 1712ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி மாலை பனிமய மாதா ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

72 அபிட்ஸ் நீளம், 22 குபிட்ஸ் அகலம், 17 குபிட்ஸ் சுவர் உயரம், 35 குபிட்ஸ் கூரையின் உயரம், ஆலய பலிபீடத்தின் நீளம் 23 குபிட்ஸ், அகலம் 13 குபிட்ஸ், கூரையின் உயரம் 25 குபிட்ஸ் என்ற அளவில் பனிமய மாதா ஆலய கட்டடம் கட்டும் பணி துவங்கியது. ஆலயத்தின் முகப்பில் 3 வாசல்கள், நடுப்பகுதியில் 2 ஆலயகிரிஸ்துக்கள் என 6 வாசல்கள் ஆலயத்திற்கு அமைக்கப்பட்டது. பனிமய மாதாவின் சொரூபத்தை தாங்குகின்ற பீடமானது முற்றிலும் வெண்பணிக்கல்லால் அமைக்கப்பட்டது.

மாதாவின் சொரூபத்திற்கு வலதுபுறம் புனித இஞ்ஞாசியாருக்கு தனிப்பீடமும் அமைக்கப்பட்டது. இவ்வாறு அழகுறக் கட்டி முடிக்கப்பட்ட பிரமாண்டமான பனிமய மாதா போராலயம் 1713 ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. வரலாற்று சிறப்பு மிக்க இப்பேராலயத்தின் 400வது ஆண்டு நிறைவு விழாவை 1982ம் ஆண்டு கொண்டாடிய வேளையில் பரிசுத்த பாப்பரசர் 2ம் அருள் சின்னப்பர் தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தை பசிலிக்கா என்ற சிறப்பு நிலைக்கு உயர்த்தி பிரகடனம் செய்தார்.

மக்களுக்கு கிடைத்த பெரும் செல்வம் பனிமய அன்னை :

பனிமய அன்னையின் அற்புத திருச்சுரூபம் தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்த பின்னர் பல இனிய நிகழ்ச்சிகள் நடந்தேறியது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 5ம் தேதி பனிமய அன்னையின் திருநாளை முத்துக்குளித்துறை மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கோலாகலமாகக் கொண்டாடத்துவங்கினர். அந்த நாள் முத்துக்குளித்துறை முழுவதும் மாபெரும் திருவிழாவாக இருந்தது. காரணம் அது பனிமய மாதாவின் திருநாள்.

தூத்துக்குடி இயேசுசபை இல்லத்தின் திருநாள் எப்போதும் பனிமய மாதா திருநாள் தினத்தன்றே கொண்டாடப்படுகிறது. முத்துக்குளித்துறை முழுவதும் இதுவே முதன்மையான திருநாளாகும். ஆலயத்தின் தலைமைப்பீடம் ரோஜா மலர்களாலும் மெழுகுவர்த்திகளாலும் வெகுநேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருக்கும். பீடத்தைச் சுற்றிச் சுவர்களிலே வண்ணக் கொடிகளும், மலர்களும் தொங்கினது போல் ஆலயத்தின் மற்ற பகுதிகளையும் அழகிய கொடிகள் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அன்னையின் திருஉருவம் வரையப்பட்ட பல வண்ணங்கள் சரிகை வேலைப்பாடுகள் அமைந்த அழகிய துகில்களால் அழகு படுத்தப்பட்டு பார்ப்பதற்கு கண்கொள்ளாகாட்சியாக இருக்கும் . திருநாளுக்கு முந்தைய இரவில் வாணவேடிக்கைகள் நடக்கும். அன்று நடக்கும் சப்ர பவனி யில் ஊரே திரண்டு நிற்கும்.

தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்த பனிமய மாதாவை பெரும் செல்வமாக மதித்து போற்றி வந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடக்கும் பனிமயமாதா ஆலய திருவிழாவில் தூத்துக்குடி மாநகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.

கொடியேற்றம் நடைபேறும் அன்றைய தினம் நண்பகல் 12.00 மணிக்கு தூய பனிமய மாதாவிற்கு அனைத்து நகைகள், கிரீடம் சூட்டும் நிகழ்விற்கு மணிமகுடம் சூட்டு விழா என்று பெயர்.

இந்த மணிமகுடத்தை அன்னைக்கு யார் சூட்டுவது என்பதை பங்குத்தந்தை அவர்கள் முடிவு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட அருட்தந்தை அவர்கள் மணிமகுடம் சூட்டுவார்கள். இந்த நிகழ்வைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் காலையில் இருந்தே ஆலயத்தில் கூடுவார்கள்.

திருயாத்திரை திருப்பலி :

திருவிழாவின் போது ஒன்பதாம் திருவிழா வரை நடைபெறும் திருயாத்திரை திருப்பலி மிகவும் சிறப்பு வாய்ந்ததும், முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும்.

தூத்துக்குடியில் உள்ள பல பங்குகளை சார்ந்த, பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பங்கு மக்கள் தங்களது பங்குத்தந்தை பாடகற்குழுவுடன், மேள தாளங்கள் முழங்க பேராலயத்திற்கு திருயாத்திரீகர்களாக வருகை தருவார்கள்.

இந்த திருயாத்திரை குழுவினர், பேராலயத்தில் தங்கள் பங்குத்தந்தையால் திருப்பலி நிறைவேற்றப்பட, ஒரு குழுவினர் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருக்கும் போதே அடுத்த குழுவினர் தங்களது பங்குத்தந்தையுடன் அடுத்த திருப்பலி நிறைவேற்ற பயபக்தியுடன் காத்துக் கொண்டிருப்பது வேறெங்கும் காணாத தனிச்சிறப்பு.

தற்போது பேராலயத்தை தினமும் இரண்டு அன்பிய மக்கள் வந்து மதியம் மற்றும் இரவு சுத்தம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

பனிமய மாதா பேராலயத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தங்கத்தேர் பவனி மற்றும் நடைபெற்ற ஆண்டுகள் :

வரலாற்று சிறப்புமிக்க தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் சிறப்புகளுக்கெல்லாம் மணி மகுடம் சேர்ப்பது 1806ம் ஆண்டு இப்பேராலயத்தின் பரத குல மக்களால் வடிவமைக்கப்பட்ட தங்கத்தேர்.

தேவமாதாவின் சிறிய பக்தி முயற்சியான ஜெப மாலை பக்தியை குறிக்கும் வகையில் 53 அடி உயரத்தில் பல்வேறு வேதசத்தியங்களின் வெளிப்பாடாக தங்கத்தேரானது பரதகுலத் தலைவர் சிஞ்ஞோர்டோம் கபிரியேல் தெக்குருஸ்வாஸ் கோமஸ் தலைமையில் வடிவமைக்கப்பட்டது. மிகுந்த கலை நுட்பத்துடனும், வேதசாஸ்திர வெளிப்பாடாகவும் பரதகுல சிற்பி நேவிஸ் பொன்சேகர் தங்கத்தேரை செய்து முடித்தார்.

தேவமாதாவின் சுத்திகரிப்பு திருவிழாவான பிப்ரவரி 2ம் தேதி 1806ம் ஆண்டு பனிமயமாதாவின் அற்புத சுரூபம் திருமந்திர நகர வீதிகளில் முதன் முதலாக தங்கத்தேரில் பவனி வந்தது.

மீனவர்களின் பாதுகாவலராகவும், நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்கும் பனிமய மாதாவின் தேர்ச் சிறப்பு சொல்லிலடங்காது. சிலுவைக்குப் பதிலாக நட்சத்திரத்தைக் கொண்டிருக்கும் இத்தேரிலுள்ள தங்கக் கிரீடம், கடவுளின் தந்தை சிலை, புறா வடிவில் தூய ஆத்மா, குழந்தை வடிவில் இயேசுநாதர், தூய அன்னை, மீனவ சமுதாயத்தினரின் கதை சொல்லும் அடித்தள வடிவமைப்பு என்று ஒவ்வொரு அம்சமும் அர்த்தமுள்ளது ஆகும்.

02-02-1806 அன்று முதலாவதாக தங்கத் தேர்பவனி.
2வது 1872
3வது 1879
4 வது 1895
5 வது 1905
6 வது 1908
7 வது 1926
8 வது 1947
9 வது 1955
10 வது 1964
11 வது 1977
12 வது 1982
13 வது 2000
14 வது 2007
15 வது 05-08-2013 அன்று என இதுவரை 15 முறைகள் தூய பனிமய அன்னையின் தங்கத்தேர் பவனிகள் நடந்துள்ளது.

முக்கிய நிகழ்வுகள் :

02-02-1806 -ல் தங்கத் தேர் பவனி துவக்கம்.

30-07-1982 -ல் பேராலயமாக (Basilica) உயர்த்தப்பட்டது.

05-08-2007- ல் பேராலயமாக அறிவிக்கப்பட்டதன் 25-வது வெள்ளி விழா கொண்டாட்டம்.

25-12-2007 -ல் இப்பேராலய அஞ்சல்தலை (postal stamp) வெளியிடப் பட்டது.

10-01-2009 -ல் நற்கருணை சிற்றாலயம் கட்டப்பட்டு பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் மேதகு ஜூடு பால்ராஜ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

05-08-2013 -ல் தற்போது காணப்படும் பேராலயம் கட்டப்பட்ட 300 வது ஆண்டு கொண்டாட்டம்.

அருட்தந்தை முனைவர் லெரின் டிரோஸ் பணிக்காலத்தில் பழைய பங்குத்தந்தை இல்லம் இடிக்கப்பட்டு, 2017 ம் ஆண்டு புதிதாக கட்டப்பட்டது.

2019 மே மாதம் தற்போதைய பங்குத்தந்தை அருட்தந்தை முனைவர் ஜோசப் குமார் ராஜா பொறுப்பேற்பு.

பல ஆலயங்களில் மறையுரை என்பது காலையில் மட்டும்தான் நடக்கும். உலகிலேயே மதியம் மறையுரை நடக்கக்கூடிய ஒரே ஆலயம், இந்தப் பனிமயமாதா அன்னை ஆலயம் மட்டும் தான். அதேபோல மற்ற ஆலயங்களில் ஒரே திருப்பலி மட்டும்தான் நடக்கும். ஆனால், இந்த ஆலயத்தில் மட்டும்தான் தினமும் எட்டு திருப்பலிகள் நடக்கிறது. கிறிஸ்தவர்களுக்கு அடுத்தபடியாக இந்துக்களும், பர்தா அணிந்த முஸ்லிம் மக்களும் பிரார்த்தனைக் கூட்டங்களில் கலந்துகொண்டு, தங்கள் பிரார்த்தனை நிறைவேற மெழுகுவத்தி ஏந்தி ஜெபிப்பதுதான் கூடுதல் சிறப்பாகும்.

போக்குவரத்து வசதி:

தூத்துக்குடி நகருக்கு பல்வேறு நகரங்களில் வந்து செல்ல தரைவழி, கடல்வழி, விமான வழி போக்குவரத்து வசதிகள் உள்ளது. சென்னையில் இருந்து தினமும் இரண்டு விமான சேவையும், ரயில் சேவையும் உள்ளது. திருநெல்வேலியிலிருந்து சுமார் 47 கிலோ மீட்டர் தொலைவில் தூத்துக்குடி அமைந்துள்ளது.

ஆலய தொடர்புக்கு : 0461- 232 0854

இவ்வாறாக தூய பனிமய அன்னை திருத்தல பேராலயமானது உலக அளவில் மக்களை ஈர்த்து அன்னையிடம் மிகுந்த பற்றுதலை உருவாக்கி அவரின் பரிந்துரையால் இறைவனின் ஆசீர்வாதங்களை பெற்று செல்கின்றனர். ஆகவே மாதாவின் வணக்கம் மாதமாக கொண்டாடப்படும் இந்த மே மாதத்தின் இறுதி நாளில் தேவ அன்னையை மகிமைப்படுத்தும் விதமாக எமது 300 -வது பதிவை இறைவன் பாதம் சமர்ப்பிக்கின்றோம்..!