740 புனித வியாகுல அன்னை ஆலயம், சிப்பிகுளம்

     

புனித வியாகுல அன்னை ஆலயம்

இடம்: சிப்பிகுளம், 628903

மாவட்டம்: தூத்துக்குடி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: குறுக்குச்சாலை 

பங்குப்பணியாளர்: அருள்பணி. R. சந்தியாகு

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்: 

1. கிறிஸ்து அரசர் ஆலயம், கல்லூரணி

2. புனித சவேரியார் ஆலயம், வேப்பலோடை

3. புனித அந்தோனியார் ஆலயம், குளத்தூர்

சிற்றாலயம் மற்றும் கெபிகள்:

1. புனித குழந்தை தெரசாள் ஆலயம், கல்லாறு

2. புனித அந்தோனியார் ஆலயம், வேப்பலோடை

3. சிலுவையார் குருசடி, பனையூர்

4. புனித பாத்திமா மாதா கெபி, சிப்பிகுளம்

5. புனித சவேரியார் கெபி, சிப்பிகுளம்

குடும்பங்கள்: 166

அன்பியங்கள்: 9

திரு வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 06:00 மணி, மாலை 06:15 மணி செபமாலை, நற்கருணை ஆசீர்

வாரநாட்களில் திருப்பலி காலை 06:00 மணி

முதல் வியாழன் மாலை 05:30 மணி புனித சவேரியார் கெபியில் திருப்பலி

முதல் வெள்ளி மாலை 05:15 மணி கல்லூரணியில் திருப்பலி

திருவிழா: செப்டம்பர் மாதம் இரண்டாவது சனி மற்றும் ஞாயிறு

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருள்பணி. ஜோசப் சேவியர் பூபாலராயர்

2. அருள்பணி. செட்ரிக் பீரிஸ்

3. அருள்பணி.‌ ஜூலியான்ஸ் மச்சாது

4. அருட்சகோதரி. மரிய பிரான்சிஸ் ஜாய்ஸி, மரியின் ஊழியர் சபை

5. அருட்சகோதரி. கனிஸ்டா, மரியின் ஊழியர் சபை

வழித்தடம்: தூத்துக்குடி -வேம்பார் -வேப்பலோடை. வேப்பலோடையில் இருந்து சற்று உட்புறமாக கடற்கரை நோக்கிய பயணத்தில் 6கி.மீ வந்தால் சிப்பிகுளத்தை வந்தடையலாம்.

Location map: Sippikulam

https://maps.app.goo.gl/HK7EmsSB6i5mCQnn9

வரலாறு:

தென் தமிழகத்தில் வங்காள விரிகுடா பகுதியில், தூத்துக்குடியிலிருந்து வடகிழக்காக 30கி.மீ தொலைவில் இராமேஸ்வரம் செல்லும் சாலையில், வேப்பலோடைக்கும் வைப்பாறுக்கும் இடையில் அமைந்துள்ளது சிப்பிகுளம் கடற்கரை கிராமம். சிப்பி வளம் அதிகமாக காணப்பட்டதாலும், நாளடைவில் சிப்பி வளம் மருவி சிப்பிகுளமாக மாறியது. அன்று அழகும் தூய்மையும் நிறைந்த இந்த நிலப்பரப்பில் மீனவர்கள் மற்றும் பல்வேறு சாதி, சமய மக்களும் பல்லாண்டு காலமாக ஒருமித்து சகோதர உறவுடன் வாழ்ந்து வந்தனர்.‌ சிப்பிகுளத்தில் வாழ்ந்த கிறிஸ்தவ மக்களின் முதன்மை தொழில் கடல் தொழில் தான் என்றாலும், சிலர் இலங்கை தீவுக்கும், ஒருசிலர் சிங்கப்பூர், பினாங்கு, மலேயா முதலிய வெளிநாடுகளுக்கும் தொழிலை முன்னிட்டு போய் வந்தனர்.

வேறு சிலர் உள்நாட்டிலேயே பல்வேறு அரசுப் பணிகளில் திறம்பட பணியாற்றி வந்தனர்.‌

திருமறைத் தோற்றம்:

1535 டிசம்பர் மாதம் பெரோ வாஸ் அவர்கள் தலைமையில் 85 பரதகுலத் தலைவர்கள் கொச்சியில், கோவா மறைமாவட்டத்தின் பெரிய குரு அருட்பணி. மைக்கேல் வாஸ் அவர்களிடம் திருமுழுக்கு பெற்றனர். பெரிய குரு மற்றும் நான்கு அருள்பணியாளர்களும் மீன்பிடிக்கும் பரதகுல மக்களுக்குத் திருமுழுக்கு கொடுத்து, கத்தோலிக்க திருச்சபையில் இணைந்தனர். உலக வரலாற்றிலேயே ஒரு இனம் முழுவதுமே கத்தோலிக்க மறையைத் தழுவியது என்றால், அது பரதகுல இனம் மட்டும் தான். இவ்வாறு போர்த்துக்கீசியர் காலத்தில் ஒட்டுமொத்தமாகக் கத்தோலிக்கர் ஆனவர்களின் ஞான காரியங்களை கவனிப்பதற்காக, பதுரவாதோ என்ற போர்த்துகீசியர் மறைப்பணி பராமரிப்பில், பரதகுல மக்கள் ஒன்றாக சேர்க்கப் பட்டனர். 

மைலாப்பூர் மறைமாவட்ட ஆளுகை:

முத்துகுளித்துறையில் ஞான அதிகாரத்தின் அடிப்படையில், பதுரவாதோ மற்றும் பிரெஞ்சு மிஷன் என்ற இரு மறைப்பரப்பு தளங்கள் உருவாகின. அதன் விளைவாக ஏற்பட்ட போட்டி பூசல்களுக்கும், கலவரங்களுக்கும் முடிவு காண திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர், போர்த்துகல் அரசருடன் ஓர் ஒப்பந்தம் செய்தார்.‌ அதன்பின் திருத்தந்தை 13-ம் சிங்கராயர் 1886 ஆம் ஆண்டு புதியதோர் ஒப்பந்தம் செய்து கொண்டார்.‌ அதன்படி போர்த்துகல் அரசின் ஞான அதிகாரம் முற்றிலுமாக நீக்கப் பட்டது.

இதன் பயனாக முத்துகுளித்துறை, திருச்சிராப்பள்ளி மறைமாவட்டத்தோடு இணைக்கப் பட்டது. அதேசமயம் போர்த்துகல் அரசர் சமயப்பணியில் செய்து வந்த சேவையை மதித்து, அவரை மகிழ்ச்சிப்படுத்த முத்துகுளித்துறையில் 5 பங்குகள் மட்டுமே, திருத்தந்தை அவர்கள் பழைய பதுரவாதோ நிர்வாகத்திற்கு விட்டு வைத்தார்.‌ 

1873 ஆம் ஆண்டு அருட்பணி. பங்காரு சே.ச அவர்கள் வேம்பாரில் பங்குத்தந்தையாக பணியாற்றிய போது, வேம்பார் தூய ஆவி ஆலயத்தின் 25 கிளைப்பங்கு தளங்களுள் சிப்பிகுளமும் ஒன்று. எனவே சிப்பிகுளம் பதுரவாதோ பார்வையிலேயே நீடித்தது. மைலாப்பூர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த கோவா குருக்கள் இங்கு பணிபுரிந்தனர்.

கோவா குருக்களின் பணியில் மகிழ்ச்சி கொள்ளாத சிப்பிகுள இறைமக்கள், 1891 ஆம் ஆண்டு தொடக்கம் முதல், திருச்சி மறைமாவட்டத்தில் இணைய முயன்று வந்தனர். ஏறக்குறைய 100 பேர் அடங்கிய குழு 1892 ல் கௌசானல் அடிகளைச் சந்தித்து தங்களது கோரிக்கைகளை வைத்தனர். 

திருச்சி மறைமாவட்ட கண்காணிப்பு:

கோரிக்கை ஏற்கப்பட்டு, பழைய மைலாப்பூர் மேற்பார்வையில் இருந்து விடுபட்டு, அருட்பணி.‌ அடைக்கலநாதர் (1889-1893) பணிக்காலத்தில் அன்றைய திருச்சி மறைமாவட்டத்தில் இணைந்தது.‌

1901 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற சுதேச குருக்களால் சிப்பிகுளம் கவனிக்கப்பட்டு வந்தது. 1903 ஆம் ஆண்டு இப்பகுதியை பார்வையிட திருச்சி மறைமாவட்ட ஆயர் மேதகு பார்த்தே அவர்கள் வந்த போது, சிப்பிகுளம் தூய வியாகுல அன்னை ஆலயத்திற்கு அடித்தளமிட்டார்.‌ இவ்வாலயம் கட்டும் பணி அருட்பணி.‌ சிலுவைமுத்து நாதரால் 1911 ஆம் ஆண்டு ரூ.7000 செலவில் ஆலய வேலைகள் தொடங்கப்பட்டன. அருட்பணி.‌ சூசை மாணிக்கம் பணிக்காலத்தில் ஆலயப் பணிகள் நிறைவு பெற்று 1915 ஆம் ஆண்டு திருச்சி மறைமாவட்ட ஆயர் மேதகு பெசாந்தியார் ஆண்டகையால் அர்ச்சிக்கப்பட்டது.

தூத்துக்குடி மறைமாவட்டம் கீழ்:

1919 ஆம் ஆண்டு சிப்பிகுளம் தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. மரியதாஸ் அவர்கள் பணிப் பொறுப்பேற்று வழிநடத்தினார்.‌ துணைப் பங்குத்தளங்களாக கல்லூரணி, வேப்பலோடை, குளத்தூர் ஆகியன சேர்க்கப் பட்டன. பின்னர் 1923 ஆம் ஆண்டு 23 பங்குகள் கொண்டு புதிய மறைமாவட்டமாக தூத்துக்குடி உருப்பெற்ற போது, சிப்பிகுளம் பங்கு அதில் ஒன்று என்பது, பங்கின் பழைமையையும் சிறப்பையும் உணர முடிகிறது.

பங்கு தளத்தின் வளர்ச்சி:

தூத்துக்குடி மறைமாவட்டத்தில் புனித வியாகுல அன்னையின் பாதுகாவலில் ஒப்படைக்கப்பட்ட முதல் ஆலயம் சிப்பிகுளம் பங்கு என்பது தனிச்சிறப்பு. இவ்வாலயம் உள்ளூர் கடற்கரை வருவாயைக் கொண்டும், தூத்துக்குடி ராவ் பகதூர் கயத்தான் வில்வராயர் நிதியுதவி கொண்டும் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றது. மக்களின் ஆன்மீகம் மற்றும் கல்வியை மேம்படுத்த அருட்பணி. சூசைநாதர் முயற்சியால் 1949 ஆம் ஆண்டு சிப்பிகுளத்தில் மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகள் பணி செய்ய துவங்கினர். அவர்களுக்கான கன்னியர் மடம் மேதகு பிரான்சிஸ் திபூர்சியூஸ் ரோச் ஆண்டகை அவர்கள் திறந்து வைத்தார். 1975 டிசம்பரில் பங்குப் பணியாளராக இருந்த அருட்பணி.‌ G. பிரான்சிஸ் அவர்களால் ஆலயத்தின் முன்வாயில் பகுதிக்கு மேல், இருகோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டன.‌ அருட்பணி.‌ ரொசாரியோ பெர்னாண்டோ பங்குத்தந்தை இல்லம் கட்டினார்.

அருட்பணி.‌ R. S. அகஸ்டின் அவர்கள் சிப்பிகுளத்தில் தேர்த்திருவிழாவிற்கு வித்திட்டார். தேரில் புனித ஆரோக்கிய அன்னை சுரூபத்தை அறிமுகப் படுத்தினார்.‌ அன்றிலிருந்து செப்டம்பர் மாதத்தில் இரட்டை திருவிழாக்கள் கொண்டாடப் படுகிறது. நவநாட்களின் இறுதியில் பங்குத் திருவிழாவாக புனித வியாகுல அன்னையின் திருவிழாவும், மறுதினம் ஊர்த் திருவிழாவாக புனித ஆரோக்கிய அன்னையின் திருவிழாவும் தேரோட்டத்துடன் கொண்டாடப் படுகின்றன.‌

புதிய பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டு 15.04.1998 அன்று மேதகு ஆயர் S. T. அமலநாதர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அருட்பணி.‌ ஜான் சேவியர் அவர்கள் பாத்திமா மாதா கெபி, கலையரங்கம், குளத்தூர் புனித அந்தோனியார் ஆலயம், பள்ளிக்கூட கட்டிடம் ஆகியவற்றை அமைத்து, ஆன்மீகம் வளரவும் கல்வி சிறக்கவும் வழிவகுத்தார்.

ஞானத்தகப்பன் புனித சவேரியார் நினைவாக கடற்கரையில் கெபி ஒன்று அருட்பணி. ரெனால்ட் மிசியர் பணிக்காலத்தில் நிறுவப்பட்டது. அருட்பணி.‌ பிரைட் மச்சாது கல்விப் பணியை மேம்படுத்த பள்ளியின் மேல்தளத்தைக் கட்டினார். 

அருட்பணி. ராஜா ரொட்ரிகோ அவர்கள் இசையின் மீது ஆர்வத்தை தூண்டி, சிறுவர் சிறுமிகளைப் பாடுபவர்களாகவும், இசை மீட்டுபவர்களாகவும் உருவாக்கினார். மேலும் பழுதுபட்ட ஆலயத்தை புதுப்பித்ததுடன், மக்களின் ஒத்துழைப்புடன் ஆலய கோபுரத்தை 90 அடிக்கு உயர்த்தி ஆலயத் தோற்றத்தை சிறப்புற செய்தார். 

புதுப்பிக்கப்பட்ட ஆலயமானது அருட்பணி. சகாயம் பெர்னாண்டோ பொறுப்பேற்றவுடன், மேதகு ஆயர் இவோன் அம்புரோஸ் அவர்களால் 27.12.2017 அன்று அர்ச்சிக்கப்பட்டது.‌

பங்கில் உள்ள நிறுவனங்கள்:

மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகள் இல்லம்

புனித தெரசாள் நடுநிலைப் பள்ளி

பங்கில் உள்ள பக்த சபைகள் மற்றும் இயக்கங்கள்:

1. பாலர் சபை

2. நற்கருணை வீரர் சபை

3. அமலோற்பவ மாதா சபை

4. வளனார் சபை

5. சவேரியார் சபை

6. திருக்குடும்ப சபை

7. திரு இருதய சபை

பங்கில் பணியாற்றிய பங்குப்பணியாளர்கள்:

1. அருள்பணி. J. மரியதாஸ் (1917-1927)

2. அருள்பணி.‌ F. M. பாக்கியர் (1927-1931)

3. அருள்பணி. M. பெர்னாண்டோ (1931-1933)

4. அருள்பணி.‌ மரியதாஸ் பெர்னாண்டோ (1933-1935)

5. அருள்பணி. J. V.  பூபாலராயர் (1935-1936)

6. அருள்பணி. D. சுவாமிநாதர் (1936-1937)

7. அருள்பணி.‌ பயாப்பள்ளி (1937-1940)

8. அருள்பணி. அந்தோனி பெர்னாண்டோ (1940-1941)

9. அருள்பணி.‌ J. வியாகுலம் (1941-1946)

10. அருள்பணி. எம்மானுவேல் டயஸ் (1945-1946)

11. அருள்பணி.‌ D. சுவாமிநாதர் (1946-1949)

12. அருள்பணி.‌ G. சூசைநாதர் (1949-1951)

13. அருள்பணி. அந்தோனி ரொசாரியோ பெர்னாண்டோ (1951-1952)

14. அருள்பணி. அமலதாஸ் விக்டோரியா (1952-1959)

15. அருள்பணி. J. X. பூபாலராயர் (1959-1962)

16. அருள்பணி. J. வியாகுலம் (1962-1963)

17. அருள்பணி. ரிச்சர்ட் ரொட்ரிகோ (1963-1969)

18. அருள்பணி. சேசு அருளப்பன் (1969-1970)

19. அருள்பணி. பால்பாண்டியன் (1970)

20. அருள்பணி. சார்லஸ் பெர்னாண்டோ (1970)

21. அருள்பணி. மெத்தோடிஸ் (1970-1971)

22. அருள்பணி.‌ M. J. இருதயராஜ் பூபாலராயர் (1971-1972)

23. அருள்பணி. குரூஸ் மரியான் (1972-1973)

24. அருள்பணி. G. பிரான்சிஸ் (1973-1976)

25. அருள்பணி.‌ ரிச்சர்ட் ரொட்ரிகோ (1976-1977)

26. அருள்பணி.‌ R. S. அகுஸ்தீன் (1977-1982)

27. அருள்பணி.‌ விளாட்மிர் ராயன் (1982-1983)

28. அருள்பணி. சார்லஸ் பெர்னாண்டோ (1983-1986)

29. அருள்பணி. சேசு அருளப்பன் (1986-1987)

30. அருள்பணி. ஜான் சேவியர் பர்னாந்து (1987-1990)

31. அருள்பணி.‌ ஜோசப் இசிதோர் (1990-1992)

32. அருள்பணி.‌ வியாகுல மரியான் (1992-1997)

33. அருள்பணி.‌ ரெனால்ட் மிசியர் (1997-1998)

34. அருள்பணி.‌ அல்போன்ஸ் (1999-2000)

35. அருள்பணி. அலெக்சாண்டர் (2000-2004)

36. அருள்பணி. பிரைட் மச்சாது (2004-2009)

37. அருள்பணி. D. செல்வன் (2009-2012)

38. அருள்பணி. ராஜா ரொட்ரிகோ (2012-2017)

39. அருள்பணி. சகாயம் (2017-2020)

40. அருள்பணி. R. சந்தியாகு (2020 முதல்...)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருள்பணி. R. சந்தியாகு