260 தூய மத்தேசியார் ஆலயம், திருக்களூர்


தூய மத்தேசியார் (மத்தேயு) ஆலயம்

இடம்: திருக்களூர், திருவைகுண்டம் 

மாவட்டம் : தூத்துக்குடி 

மறை மாவட்டம் : தூத்துக்குடி 

நிலை : கிளைப்பங்கு

பங்கு : தூய சந்தியாகப்பர் திருத்தலம், திருவைகுண்டம்

பங்குத்தந்தை : அருட்பணி. கிஷோக்

குடும்பங்கள் : 3

ஞாயிறு திருப்பலி : காலை 10.00 மணிக்கு 

திருவிழா : செப்டம்பர் மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமை. 

Location map:

St Matthew's Church

https://maps.app.goo.gl/GGmBYVzCS9FnYi7KA

வரலாறு:

1600 ஆம் ஆண்டு இயேசு சபை குருக்களால் திருக்களூரில் புனித மத்தேயு ஆலயம் கட்டப்பட்டது. 

1621 ஆம் ஆண்டு உள்நாட்டில் இறைப் பணியாற்றிய இயேசு சபை குருக்களில், கோவா பல்கலைக் கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் இருந்தார். இவர் திருக்களூர் பங்கு இல்லத்தில் தங்கியிருந்து 20 கிராமங்களை கண்காணித்து வந்தார். பல கி.மீ தூரம் நடந்து சென்று மக்களுக்கு மறைபோதகம் செய்து, பலருக்கு திருமுழுக்கும் வழங்கினார். களக்காடு என்ற ஊரிலும் அவர் பலருக்கு திருமுழுக்கு வழங்கினார். இவ்வாறாக அவர் மொத்தம் 4000 பேரை திருமறையில் இணைத்ததாக அவ்வாண்டின் இயேசு சபை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1644 ஆம் ஆண்டு முதல் திருவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலயமானது, திருக்களூர் பங்கின் கிளைப்பங்காக ஆனது. அக்காலத்தில் திருக்களூர் தான் உள்நாட்டுப் பகுதிகளில் உள்ள பெரிய கிறிஸ்துவ ஊராக விளங்கியது. அங்கு கிறித்தவ மக்களின் எண்ணிக்கை சுமார் 500 ஆகவும் இருந்தது.

திருக்களூர் தான் உள்நாட்டில் உருவான முதல் பங்குமாகும். இவ்வூரில் மட்டுமே பெரிய ஆலயமும் இருந்தது. மற்ற உள்நாட்டு கிறிஸ்தவ பகுதிகளில் சிற்றாலயங்கள் அல்லது குருசடிகள் மட்டுமே இருந்தன.

1644 ஆம் ஆண்டின் இயேசு சபை அறிக்கையில் அருட்பணி. ஆண்ட்ரூ லோப்பஸ் அவர்கள் முத்துக்குளித்துறையின் பங்குகள், உள்நாட்டின் ஒரே பங்கான திருக்களூர், இதன் கிளைப்பங்குகள், ஆலயங்கள், பாதுகாவலர்கள் ஆகியவற்றை குறித்து நீண்டதோர் பட்டியலை எழுதி வைத்துள்ளார். திருக்களூர் பங்கானது அப்போதைய மதுரை மிஷனின் ஒரு முக்கிய பகுதியாகவும் விளங்கியது.

1644 இல் அருட்பணி. ஆண்ட்ரூ லோப்பஸ் எழுதிய திருக்களூரின் கிளைப் பங்குகள் பட்டியல்:

1. ஆழ்வார்திருநகரி: 30 கிறிஸ்தவர்கள்

2. சவரமங்கலம்: 25 கிறிஸ்தவர்கள்

3. மறிச்சுக்கட்டி: 260 கிறிஸ்தவர்கள், புனித மிக்கேல் அதிதூதர்

4. திருவைகுண்டம்: 133 கிறிஸ்தவர்கள், புனித சந்தியாகப்பர்

5. மணக்கரை: 34 கிறிஸ்தவர்கள், புனித மரிய மதலேனாள்

6. வயப்புரம்: 49 கிறிஸ்தவர்கள், புனித சவேரியார்

7. மணக்காடு: 60 கிறிஸ்தவர்கள், புனித பர்த்தலோமியு

8. பாளையம்: 70 கிறிஸ்தவர்கள், புனித மரியன்னை

9. கயத்தாறு: 18 கிறிஸ்தவர்கள், புனித சந்தியாகப்பர்

10. பட்டமடை: 22 கிறிஸ்தவர்கள்

11. வீரவநல்லூர்: 14 கிறிஸ்தவர்கள்

12. சாத்துப்பட்டூர்: 65 கிறிஸ்தவர்கள்

13. மன்னார்கோவில்: 45 கிறிஸ்தவர்கள்

14. அய்யனார்பட்டி: 17 கிறிஸ்தவர்கள், புனித இராயப்பர்

15. சிங்கநல்லூர்: 23 கிறிஸ்தவர்கள்

16. அலரி: 65 கிறிஸ்தவர்கள்

17. கிறிஸ்வநல்லூர் (கிருஷ்ணபுரம்): 17 கிறிஸ்தவர்கள்

18. மீன்குளம்: 7 கிறிஸ்தவர்கள்

19. மறணவக்குறிச்சி: 23 கிறிஸ்தவர்கள்

20. களக்காடு: 30 கிறிஸ்தவர்கள்

21. ஆத்தூர்: 12 கிறிஸ்தவர்கள்

22. குரும்பூர்: 7 கிறிஸ்தவர்கள்

23. பேரூர்: 12 கிறிஸ்தவர்கள்

இந்த உள்நாட்டு ஊர்களில் எல்லாம் கிறிஸ்தவ மக்கள் திருக்களூரின் கண்காணிப்பின் கீழ் வாழ்ந்து வந்தனர்.

தொழில் தேடி இவ்வூர் மக்கள் வெளியூர், வெளிநாடுகளில் சென்று அங்கேயே தங்கி விட்டாதால், இங்கு குடும்பங்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து கொண்டே வந்ததால், பின்னர் திருவைகுண்டம் தூய சந்தியாகப்பர் திருத்தலத்தின் கிளைப்பங்காக மாற்றப்பட்டது. 

தற்போது குடும்பங்களின் எண்ணிக்கை மூன்றாக இருந்தாலும், வெளியூர் வெளிநாடுகளில் வாழும் இப்பங்கை சேர்ந்த அனைத்து மக்களும் திருவிழா காலங்களில் ஒன்று கூடுவர்.  திருவிழாவில் சுமார் இரண்டாயிரம் மக்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்வார்கள். 

ஆலயத்தின் சுவர்கள் ஒன்றரை அடி அகலம் கொண்டவை என்பது குறிப்பிடத் தக்கது. 

இவ்வாலய புனிதரான தூய மத்தேயு -வை இம்மக்கள் தூய மத்தேசியார் என்றே அன்போடு அழைத்து வந்தனர். ஆகையால் மத்தேயு என்பது மத்தேசியார் ஆனது.

தகவல்கள்: 2018 ஆம் ஆண்டு அப்போதைய பங்குத்தந்தை அருட்பணி. மரிய வளன்

ஆலய வரலாறு: அருட்பணி. வெனான்சியுஸ் எழுதிய பவளவிழா நினைவு தூத்துக்குடி மறைமாவட்ட புராதீன வரலாறு (1535-1923) புத்தகம்.