197 அற்புத குழந்தை இயேசு ஆலயம், வசந்தபுரம்


அற்புத குழந்தை இயேசு ஆலயம்

இடம் : வசந்தபுரம்

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம்: குழித்துறை

நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய ஜார்ஜியார் ஆலயம், #பிலாவிளை

பங்குத்தந்தை : அருட்பணி சிறில் தனிஸ்லாஸ்

குடும்பங்கள் : 125
அன்பியங்கள் : 4

ஞாயிறு திருப்பலி : காலை 07.15 மணிக்கு

திருவிழா : ஜனவரி மாதம் 14 குழந்தை இயேசு விழாவை உள்ளடக்கிய ஏழு நாட்கள்.

அற்புத குழந்தை இயேசு ஆலய வரலாறு :

அற்புத குழந்தை இயேசு ஆலயமானது திங்கள்நகரின் அருகில் அழகன்பாறையை ஒட்டியுள்ள வசந்தம்வீசும் வசந்தபுரத்தில் அமைந்துள்ளது.

மேலும் இவ்வாலயமானது மூத்தாருண்ணி குளத்திற்கு தெற்காகவும், ஆக்கணங்காடு என்ற ஊருக்கு மேற்காகவும், பிலாவிளைக்கு வடக்காகவும், ஆற்றங்கரைக்கு கிழக்காகவும் அமைந்துள்ளது.

அழகன்பாறை, காளிவிளை, கொடித்தோட்டம் ஆகிய மூன்று பகுதிகளையும் உள்ளடக்கியது தான் வசந்தபுரம்.

இறை நம்பிக்கையில் தளராத விசுவாசமும், செயல் ஆர்வமும் கொண்ட இப்பகுதி மக்கள் திருப்பலிக்கும், மறைக்கல்வி மற்றும் அனைத்து நிகழ்வுகளுக்கும் சற்று தொலைவில் உள்ள மாங்குழி பங்கினையே நாடி நின்றனர். இதனைக் கண்டு 1965 -ல் அப்போதைய பங்குத்தந்தை அருட்பணி M தனிஸ்லாஸ் அவர்கள் இப்பகுதி மக்களுக்கு தனியாக ஒரு ஆலயம் தேவை என்பதை வலியுறுத்தினார்.

1992 -ல் மாங்குழி பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற அருட்பணி M அந்தோணி முத்து அவர்கள் பல முயற்சிகள் எடுத்ததின் பயனாக 23-11-1992 ல் ஒரு கிராம முன்னேற்ற சங்கம் தொடங்கப்பட்டது.

25-01-1998 ல் மாங்குழி பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி சேகர் மைக்கேல் அவர்களால் துவக்கத்தில் 3 அன்பியங்கள் உருவாக்கப் பட்டது. (தற்போது 4 அன்பியங்களாக செயல்படுகிறது )

1998 ம் ஆண்டு நவம்பர் 15- ம் நாளில் பங்குத்தந்தை அருட்பணி சேகர் மைக்கேல் தலைமையில் இறைமக்கள் ஒருங்கிணைந்த பொதுக்குழுக் கூட்டம் தொடங்கப்பட்டது. அன்றே ஆலயம் அமைக்க 44 சென்ட் நிலத்திற்கு முன்பணம் கொடுக்கப்பட்டது. வசந்தபுரம் என்ற பெயர் சூட்டப்பட்ட நாளும் அன்றே. ஆலயத்தின் பாதுகாவலர் குழந்தை இயேசு என்றும் அனைவராலும் முடிவு செய்யப் பட்டது.

15-11-1998 அன்று செயற்குழு ஒன்று பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் பட்டது. இச் செயற்குழு ஆலயம் சார்பாக காரியங்களை கவனித்து மக்களின் ஒத்துழைப்போடு ஓலையால் ஆன சிற்றாலயம் எழுப்பப்பட்டது. அதில் வைத்து குழந்தை இயேசு நவநாள் ஜெபம் வியாழக்கிழமைகளிலும், மறைக்கல்வி, பணிக் குழுக்களின் கூட்டங்களும் நடைபெற்றன.
இவ்வாறு திருப்பலி தவிர அனைத்து காரியங்களும் இங்கேயே நிறைவேற்றி வந்தார்கள். 2000 ம் ஆண்டில் ஓலைக்கூரையானது மாற்றப்பட்டு ஆஸ்பெஸ்டாஸ் போடப்பட்டது.

இத்தகைய வேகமான வளர்ச்சி மாற்றங்களை கொண்டு வந்தது பங்குத்தந்தை அருட்பணி சேகர் மைக்கேல் அவர்களின் சீரிய திட்டமிடலும், அவரது வழி காட்டலும், தலைமைப்பண்பும் தான் என்பது குறிப்பிடத் தக்கது.

வசந்தபுரம் மக்களின் ஒருமித்த குரலுக்கு கோட்டார் மறை மாவட்டம் செவி சாய்த்து மாங்குழி பங்கின் ஒரு பகுதியாக இருந்த வசந்தபுரத்தை 14-01-2001 -ல் கிளைப் பங்காக உயர்த்தி படர்நிலம் பங்கோடு இணைக்கப் பட்டது. பங்கின் முதல் அருட்பணியாளர் அருட்பணி ஆன்ட்ரூ ஆவார்.

25-03-2001 -ல் பங்கு அருட்பணிப்பேரவை தேர்தல் நடத்தப் பட்டது.

04-05-2010 -ல் பிலாவிளை தனிப்பங்காக உயர்த்தப்பட்டு வசநதபுரம் அதன் கிளைப் பங்காக செயல்பட்டு வருகிறது.

2001 ம் ஆண்டு மே மாதத்தில் அருட்பணி ஆன்ட்ரூ அவர்கள் மாறுதல் பெற்றதைத் தொடர்ந்து அருட்பணி விக்டர் அடிகளார் பங்குத்தந்தையானார். இவரது சிறப்பான வழிகாட்டுதல், ஆர்வமூட்டுதலாலும் 16-01-2002 ல் மறைமாவட்ட முதன்மைப் பணியாளர் அருட்பணி ஜான் குழந்தை அவர்களால் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

பங்கு மக்களின் அயராத தன்னலமற்ற உழைப்பாலும், பங்கு நிர்வாகத்தினரின் தொடர் முயற்சியாலும், நன்கொடையாளர்களின் நன்கொடைகளாலும், பங்குத்தந்தையின் வழிகாட்டுதலாலும் ஆலயப் பணிகள் 75% நிறைவு பெற்றது.

2003- ம் ஆண்டு அருட்பணி மைக்கிள் ராஜ் அவர்கள் பங்குத்தந்தையானார்கள். அவரது ஒத்துழைப்பு மற்றும் பங்கு மக்களின் அயராத உழைப்பாலும் ஆலயப் பணிகள் நிறைவு பெற்று 12-01-2005 அன்று கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு லியோன் அ தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

2006 ல் அருட்பணி ஜான் பிரான்சிஸ் அவர்கள் பங்குத்தந்தையானார்கள்.

2007 ல் அருட்பணி சந்தியாகு மற்றும் 2009 ல் அருட்பணி ஜேம்ஸ் குமார் ஆகியோர் பங்கை சிறப்பாக வழி நடத்தினார்கள்.

2010- ல் அருட்பணி பிராங்க் அவர்களின் சிறப்பான வழிகாட்டுதலால் பங்கு மேலும் வளர்ச்சியடைந்தது. ஆலயத்திற்கருகில் சிறிய மண்டபம் கட்டப்பட்டது.

இணைப் பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி லூயிஸ் ராஜ் அவர்கள் இளையோரை சிறப்பாக வழி நடத்தி அவர்களின் வளர்ச்சிக்கு வித்திட்டார்.

2016-ல் அருட்பணி சிறில் தனிஸ்லாஸ் அவர்கள் பொறுப்பேற்று தற்போது பங்கை சிறப்பாக வழி நடத்தி வருகிறார்கள். பெரிய அளவில் திருமண மண்டபம் கட்ட நிலம் வாங்கப்பட்டுள்ளது. மேலும் பல ஆலய வளர்ச்சிப் பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது.

அருட்பணி பிராங்க் அவர்களின் முயற்சியால் இவ்வாலயத்திலேயே தவக்கால வழிபாடுகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது.

அனைத்து பக்தசபை, இயக்கங்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

அற்புத குழந்தை இயேசுவின் அருளால் இம்மக்களின் வாழ்க்கையில், மனநிலையில், பொருளாதாரத்தில் நல்ல ஏற்றம் கண்டு சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர்.

மண்ணின் இறை அழைத்தல்களாக இரண்டு அருட்பணியாளர்களையும் ஒரு அருட்சகோதரரையும் ஒரு அருட்சகோதரியையும் மறை பரப்பு பணிக்காக தந்துள்ளது வசந்தபுரம் இறை சமூகம்.

வழித்தடம் : திங்ள்சந்தையிலிருந்து (47 -A அரசுப்பேருந்து, சிவரஞ்சனி, ராஜம் மினிபஸ்) சுமார் 3 கி.மீ தூரத்தில் உள்ள மூத்தாருண்ணி வந்து அங்கிருந்து சற்றே நடந்தால் வசந்தபுரம் ஆலயத்தை அடையலாம்.