புனித பாத்திமா அன்னை திருத்தலம்
இடம் : வள்ளியூர்
மாவட்டம் : திருநெல்வேலி
மறை மாவட்டம் : தூத்துக்குடி
மறை வட்டம் : வடக்கன்குளம்.
நிலை : திருத்தலம்
கிளைப்பங்கு : புனித அந்தோணியார் ஆலயம், தளபதி சமுத்திரம் (பெருமளஞ்சி)
குடும்பங்கள் : 525
அன்பியங்கள் : 18
பங்குத்தந்தை : அருட்பணி மிக்கேல் லாரன்ஸ்
இணை பங்குத்தந்தை : அருட்பணி சகாய ஜஸ்டின்.
ஞாயிறு திருப்பலி : காலை 05.30 மணி: முதல் திருப்பலி..
காலை 07.30 மணி: இரண்டாவது திருப்பலி..
மாலை 06.00 மணிக்கு நற்கருணை ஆசீர்.
வாரநாட்களில் திருப்பலி : காலை 05.30 மணி... மாலை 06.30 மணி...
மாதத்தின் முதல் சனிக்கிழமை : காலை 05.30 மணி, காலை 11.30 மணிக்கும் திருப்பலி.
மாலை 05.30 மணிக்கு செபமாலை, நவநாள் செபங்கள், தொடர்ந்து நற்கருணை ஆசீர், சிலுவைப்பாதை, திருப்பலி ஆகிய வழிபாடுகள் நடைபெறும். திருப்பலி முடிந்தவுடன் யோர்தான் ஆற்றுத் தீர்த்தம், எருசலேம் நகர பரிமளத்தைலம் மந்திரித்து வழங்கப்படும். மாலை 5.30 மணியிலிருந்து குருக்கள் இறைமக்களுக்கு ஒப்புரவு அருட்சாதனம் வழங்குவார்கள். இரவு 9.30 மணி முதல் 12.00 மணி வரை அன்னையின் திருவுருவப் பவனியோடு இணைந்து செபமாலை, தொடர்ந்து ஜெபக்குழுவினர் நடத்தும் குணமளிக்கும் ஆராதனை, நற்கருணை ஆசீர் நடைபெறும். தொடர்ந்து நள்ளிரவு 12.00 மணிக்கு மலையாள மொழியில் ஞாயிற்று கடன் திருப்பலி நடைபெறும் .
திருவிழா : மே மாதம் 04-ம் தேதி துவங்கி 13 ஆம் தேதி நிறைவு அடையும்.
அக்டோபர் மாதம் 04-ம் தேதி துவங்கி 13 ஆம் தேதி நிறைவு அடையும். 9 ம் திருவிழா தேர்பவனி, 10 ம் திருவிழா நற்கருணை பவனி.
மண்ணின் மைந்தர்கள் :
அருட்பணியாளர்கள் :
1. அருட்தந்தை அந்தோணிபிச்சை
2. அருட்தந்தை இருதயராஜா
3. அருட்தந்தை S. ஞான பிரகாச சுரேஷ்
4. அருட்தந்தை மார்ட்டின்.
அருட்சகோதரிகள் :
1. அருட்சகோதரி ஜெயம் மேரி
2. அருட்சகோதரி G. விமல ஜோதி
3. அருட்சகோதரி ஞான ரத்தின பியாரா
4. அருட்சகோதரி G. மேரி கமலபாய்
5. அருட்சகோதரி A. அக்ஸீலியா
6. அருட்சகோதரி V. அன்னத்தாய்
வழித்தடம் 1 :
நாகர்கோவில் - ஆரல்வாய்மொழி - காவல்கிணறு விளக்கு - புண்ணியவாளன் குருசடி - பணகுடி - வள்ளியூர்.
வழித்தடம் 2 : திருநெல்வேலி - நாங்குநேரி - வள்ளியூர்.
Location Map : Our Lady of Fatima Church – Vallioor
https://g.co/kgs/oqSjq3
வரலாறு :
இந்தியத் திருநாட்டின் தென்கோடியில், தென்பாண்டிச் சீமையின் தென்பகுதியில், எட்டுத் திசைக்கும் பாத்திமா அன்னையின் புகழை பறைசாற்றிக் கொண்டிருக்கும் வள்ளியூர் ஆலய வரலாற்றைக் காண்போம்.
வேத போதக நாடாகிய இந்தியாவின் தென்பகுதியில் கத்தோலிக்க மறையை பரப்ப வந்த ஐரோப்பாவைச் சார்ந்த அருட்பணி கௌசானல் சுவாமிகள், கிழவனேரி பங்குத்தந்தையாக பணிபுரிந்த போது வள்ளியூர் புதிய பேருந்து நிலையத்திற்கு வடபுறம், காசி - கன்னியாகுமரி சாலையில் அன்னை பாத்திமா மாதா வளாகப் பகுதி தூத்துக்குடி மறை மாவட்டத்தின் பெயரால் வாங்கப் பட்டது.
காலப்போக்கில் கள்ளிகுளத்திலிருந்து பிழைப்பதற்காகவும், வியாபாரத்திற்காகவும் சில கத்தோலிக்க குடும்பங்கள் வள்ளியூரில் குடியேறின. இவர்கள் புனித மிக்கேல் அதிதூதரிடம் மிகுந்த பற்றும் விசுவாசமும் கொண்டிருந்ததை அறிந்த அருட்பணி கௌசானல் அவர்கள் வள்ளியூரின் வடபகுதியில், மறை மாவட்டத்திற்கு சொந்தமான நிலத்தில் ஒரு அறையில் புனித மிக்கேல் அதிதூதரின் சுரூபத்தை வைத்து ஞாயிறு தினங்களில் ஒன்று கூடி ஜெபிக்க ஏற்பாடு செய்து கொடுத்தார்.
பின்னர் தற்போதைய பாத்திமா மாதா வளாகத்தின் மேற்குப் பகுதியில் ஓலைக்குடிசை அமைத்து, புனித மிக்கேல் அதிதூதர் ஐ பாதுகாவலராகக் கொண்டு அவ்வப்போது திருப்பலியும், ஜெப வழிபாடுகளும் நடந்து வந்தன. வள்ளியூர், கிழவனேரி -யின் துணைப் பங்காக இருந்தது.
கிழவனேரியிலிருந்து வள்ளியூருக்கு போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால், பின்னர் இலங்கையைச் சேர்ந்த அருட்தந்தை அரச ரத்தினம் சுவாமிகள் பணகுடி பங்குத்தந்தையாக இருந்த போது, வள்ளியூர், பணகுடியின் கிளைப் பங்காக மாற்றப் பட்டது.
அருட்பணி லூர்து மணி பணகுடி பங்குத்தந்தையாக இருந்த போது 1965 -ம் ஆண்டு வரை பணகுடி பங்கிலும், 1965 ம் ஆண்டின் இறுதியில் நாங்குநேரி பங்கின் கிளையாக வள்ளியூர் மாற்றப்பட்டது. அப்போது அருட்தந்தை அந்தோணி ச. பர்னாந்து நாங்குநேரி பங்குத்தந்தையாக இருந்தார். அருட்தந்தையின் காலத்தில் வள்ளியூர் மக்களிடையே புத்துயிரும், புத்துணர்வும் ஏற்பட்டு; காடுகளாகவும், குன்றுகளாகவும், கற்பாறைகளாகவும், பள்ளங்களாகவும் கிடந்த இடம் சமதளப் படுத்தப்பட்டு, அழகிய கிராமமாக மாறியது.
அப்போது தூத்துக்குடி மறை மாவட்ட ஆயராக பணியாற்றிய மேதகு தாமஸ் பர்னாந்து ஆண்டகை அவர்கள் கொடுத்த அரிய ஆலோசனை, ஊக்குவித்தலால், அருட்தந்தை அந்தோணி ச. பர்னாந்து அவர்கள் இன்று நாம் காணும் அழகிய பாத்திமா மாதா ஆலயத்தை கட்ட ஆரம்பித்தார்.
இவ்வாலயம் தான் இன்று வரை வள்ளியூர் கத்தோலிக்க மக்களின் வித்தாகவும், ஆதாரமாகவும் அமைந்தது.
1966 ம் ஆண்டில், அன்னை பாத்திமா மாதா முதல் காட்சி அளித்த அதே மே 13 ம் தேதி அன்றைய தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு அருட்பணி ஸ்டீபன் தாஸ் அடிகளாரால் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப் பட்டது. இதுவரை வள்ளியூரின் பாதுகாவலராக இருந்த புனித மிக்கேல் அதிதூதரை, இரண்டாம் பாதுகாவலராகக் கொண்டு, அன்னை பாத்திமா மாதாவின் பெயரால் ஆலய கட்டுமானப் பணிகள் சிறப்பாக நடைபெற்று 05-05-1968 அன்று திருத்தந்தையின் இந்தியத் தூதர் மேதகு ஜோசப் காப்பிரியோ அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.
15-10-1968 அன்று மேதகு ஆயர் தாமஸ் பர்னாந்து அவர்களால் திருப்பலி பீடம் அர்ச்சிக்கப் பட்டது.
இவ்வாலயத்தில் அமைந்துள்ள பாத்திமா அன்னையின் சுரூபம் சிறப்பு வாய்ந்ததாகும். இச்சுரூபம் பாத்திமா காட்சியில் அன்னையை நேரில் பார்த்த, அப்போது உயிரோடு இருந்த அருட்சகோதரி லூசியா அவர்கள் தான் காட்சியில் கண்ட அன்னையின் உருவத்தை வர்ணிக்க, அதன்படி வடிவமைக்கப்பட்ட மூன்று சுரூபங்கள் பாத்திமா பகுதியில் பேராயர் மேதகு வெனான் பொரையிரோ அவர்களால் அர்ச்சிக்கப் பட்டு, சுரூபங்களில் ஒன்று பாத்திமா பகுதியிலும், மற்றொன்று 'யாத்திரிகைக்கன்னிகை' என்ற பெயரில் உலகம் முழுவதிலும் சுற்றி பாத்திமா மாதா பக்தியையும், ஜெபமாலை பக்தியையும் பறைசாற்றி வந்தது. மூன்றாவது சுரூபம் வள்ளியூருக்கு அனுப்பப் பட்டு 06-07-1968 ல் அருட்தந்தை அந்தோணி ச. பர்னாந்து அவர்களால் ஆலயத்தின் மாதா பீடத்தில் திருநிலைப் படுத்தப் பட்டது. மேலும் தங்கக் கிரீடம் மந்திரிக்கப்பட்டு மதுரை பேராயர் மேதகு ஜஸ்டின் திரவியம் அவர்களால் மாதாவிற்கு முடி சூட்டப் பட்டது.
இவ்வாலய கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்த காலத்தில் தினமும் திருப்பலியும், தியானங்களும், ஆன்மீக கருத்தரங்குகளும் நடத்தப்பட்டு, வள்ளியூர் மக்களின் இறை விசுவாசம் ஆழப் படுத்தப்பட்டது. மேலும் கப்பூச்சின் சபையின் அருட்தந்தையர்கள் வரவழைக்கப்பட்டு மறையுரை கொடுத்ததுடன், அவர்கள் ஒவ்வொரு குடும்பங்களையும் சந்தித்து கிறிஸ்துவில் ஒன்றித்திருக்க செய்த பெருமை அருட்பணி அந்தோணி ச. பர்னாந்து அவர்களையே சாரும்.
ஆலய மணி அர்ச்சிக்கப் பட்டவுடன், இவ்வாலய மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு செய்யப்படும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரம் செய்யும் திருத்தலமாக செயல்படும் விதத்தில் வழிபாட்டு முறைகள் அமைக்கப் பட்டன. அதன்படி அன்னை பாத்திமாவில் அறிவித்த முதல் சனிக்கிழமை பக்தியை முழு இரவு ஜெபத்துடன் "அன்பிரவு" என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.
பாத்திமா என்ற பெயரில் மாதப் பத்திரிகை ஆரம்பித்து 30,000 க்கும் அதிகமான பிரதிகளை அச்சிட்டு இலவசமாக பலருக்கும் அனுப்பிக் கொடுத்து, முதல் சனிக்கிழமை பக்தியை பரப்பினார்கள். எனவே அன்னையின் ஆசீரையும், அருளையும் பெற ஆயிரக்கணக்கான மக்கள் முதல் சனிக்கிழமை அன்று ஆலயம் நாடி வந்தனர்.
இவ்வாறு வரும் மக்களுக்கு தங்குவதற்கு 'சூசையப்பர் இல்லம்' அமைத்து, அதன் அருகில் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப் பட்டது. அன்னையின் ஆசீரை அபரிமிதமாகப் பெற்றும், கேட்ட வரங்கள் அனைத்தையும் பெற்றமையால் திருயாத்திரைப் பயணிகளின் எண்ணிக்கை பல்லாயிரமாகப் பெருகியது. பாத்திமா பத்திரிகையை வெளியிட அச்சகம் நிறுவப்பட்டது.
1969 ம் ஆண்டு திருச்சிலுவை தொடக்கப் பள்ளியையும், 1972 ல் பாத்திமா மகளிர் உயர் நிலைப் பள்ளியையும் அருட்பணி அந்தோணி ச. பர்னாந்து அவர்கள் துவங்கி, பின்னர் திருச்சிலுவை பள்ளியை திருஇருதய அருட்சகோதரிகளிடமும், பாத்திமா மகளிர் உயர்நிலைப் பள்ளியை முதலில் அன்னாள் சபை அருட்சகோதரிகளிடமும், தொடர்ந்து காணிக்கை அன்னை சபை அருட்சகோதரிகளிடமும் ஒப்படைத்து, அருட்தந்தை அவர்களே தாளாளராக இருந்தார். 2001 ல் பாத்திமா மகளிர் உயர்நிலைப் பள்ளி மேல் நிலைப் பள்ளியாக உயர்வு பெற்றது.
வள்ளியூர் ஆலயம் தனிப் பங்காக உயர்த்தப் பட்டு, அருட்தந்தை அந்தோணி ச. பர்னாந்து அவர்கள் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். வள்ளியூரின் கிளைப் பங்குகளாக ஏர்வாடி, திருக்குறுங்கடி, களக்காடு, சிதம்பராபுரம், நம்பித்தலைவன் பட்டயம், பெருமளஞ்சி, தலைவன் மனை ஆகியவை இருந்தன. அருட்தந்தை அந்தோணி ச. பர்னாந்து காலத்திலேயே பங்குத்தந்தை இல்லம் கட்டினார்.
அருட்பணி பங்கிரால் எல். பர்னாந்து பணிக்காலத்தில் திருக்குறுங்கடியிலும், பெருமளஞ்சியிலும் புனித அந்தோணியார் பெயரில் அருட்பணி அந்தோணி ச. பர்னாந்து அவர்களின் உதவியுடன் ஆலயங்கள் எழுப்பப்பட்டு அர்ச்சிக்கப் பட்டது.
தனியார் நடுநிலைப்பள்ளி ஒன்றை அருட்தந்தை அந்தோணி ச. பர்னாந்து அவர்கள் விலைக்கு வாங்கி, அதற்கு நிர்மலா ஆர் சி பள்ளி எனப் பெயர் சூட்டி வள்ளியூர் பங்குத்தந்தையிடம் ஒப்படைத்தார்.
அருட்பணி விக்டர் தேவராஜ் பணிக்காலத்தில் கல்லறைத் தோட்டத்திற்கு மதிற்சுவரும், நிர்மலா ஆர் சி பள்ளிக்கு புதியதொரு கட்டிடமும் கட்டப்பட்டதுடன், இரவு வரை நடந்து வந்த அன்பிரவு ஜெபத்தை நள்ளிரவு 12.00 மணி வரை மாற்றினார்.
அருட்பணி தியோபிலஸ் பணிக்காலத்தில் கலையரங்கம் மேற்கூரை கான்கிரீட் போடப்பட்டதுடன், அருட்தந்தை அந்தோணி ச. பர்னாந்து அவர்களின் ஒத்துழைப்போடு ஜெபமாலையின் 15 தேவ இரகசியங்களும் சுரூபமாக ஆலய வளாகத்தில் அமைத்து 1992 ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மேதகு ஆயர் தாமஸ் பர்னாந்து அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.
அருட்பணி மஸ்கர்னஸ் காலத்தில் அமலி இல்லம் கட்டப்பட்டது. 14-05-1994 ல் இறைவனடி சேர்ந்த வள்ளியூரை வளர்த்தெடுத்த, மாதாவின் விசுவாசியான அருட்பணி அந்தோணி ச. பர்னாந்து அவர்களது உடல் மே 17 ம் தேதி ஆலய வளாகத்தில் மாதா பீடத்தின் வெளிப்புற முன்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.
மாதா பீடமும் புனித மிக்கேல் அதிதூதர் பீடமும் புதுப்பிக்கப்பட்டு ஆயரால் அர்ச்சிக்கப் பட்டது. கிளைப் பங்கான தலைவன் மனையில் பழைய ஆலயம் அகற்றப்பட்டு புதிய ஆலயம் கட்டப்பட்டது.
அருட்பணி பன்னீர்செல்வம் பணிக்காலத்தில் மின் விசிறி வசதி செய்யப் பட்டது. கெபி கட்டப்பட்டு திரு இருதய சுரூபம், பாத்திமா மாதா சுரூபமும் வைக்கப்பட்டு, இவ்வழியே செல்லும் பயணிகளின் மாதா என அன்புடன் அழைக்கப் படுகிறது.
ஆலய மணிக்கோபுரம் அருட்பணி ஸ்டீபன்தாஸ் அவர்களால் அடிக்கல் போடப்பட்டு, கலை நயத்துடன் கட்டப்பட்டு 2000 ம் ஆண்டு மேதகு ஆயர் பீட்டர் பெர்னாண்டோ அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. ஆலயமணி என்ற ஒலிநாடா வெளியிடப் பட்டது. இவ்வாறு அருட்பணி பன்னீர்செல்வம் பணிக்காலத்தில் மக்களிடம் ஜெபமாலை பக்தி அதிகமாக ஏற்படுத்தப்பட்டு, பங்குத்தளத்தை வளர்ச்சி பெற செய்தார்கள்.
அருட்பணி நார்பர்ட் தாமஸ் அடிகளாரின் பணிக்காலத்தில் 2004 -2005 காலத்தை திருத்தந்தையால் நற்கருணை ஆண்டாக அறிவிக்கப் பட்டதையொட்டி, இறை மக்கள் ஆராதனை செய்யும் பொருட்டு நற்கருணை சிற்றாலயம் அமைத்து 12-10-2005 அன்று தூத்துக்குடி ஆயர் மேதகு இவான் அம்புறோஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.
பாத்திமா மாதா சமூக மையம் அமைக்கப் பட்டதுடன், 2007 -ல் புதிய கொடிமரமும் வைக்கப் பட்டது. பாத்திமா அற்புத கெபி ஒன்றும் கட்டப்பட்டது. மேலும் பங்குத்தந்தையின் முயற்சியால் அன்பியங்கள், மாமன்ற பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டன.
நார்பர்ட் தாமஸ் அடிகளாரைத் தொடர்ந்து அருட்பணி கமில்லஸ் அவர்கள் பொறுப்பேற்று, திருஇருதய சொருபம் அமைக்கப்பட்டது. மற்றும் தேர் வைக்க அறை (தேர்புரை) கட்டப்பட்டது. அருட்தந்தை அவர்கள் பங்கில் பணியில் இருக்கும் போது வாகன விபத்தில் உயிரிழந்தது பங்கு மக்களை துன்பத்தில் ஆழ்த்தியது.
அவர் விட்டுச்சென்ற பணிகளை அருட்பணி பெஸ்கி அவர்கள் சிறப்புற தொடர்ந்தார்.
தொடர்ந்து அருட்பணி ஜெபநாதன் அவர்கள் பணியாற்றினார்.
தொடர்ந்து தற்போது அருட்பணி மிக்கேல் லாரன்ஸ் அவர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். பங்குத்தந்தையின் வழிகாட்டுதலில் பாத்திமா அன்னை காட்சி அளித்த நூற்றாண்டு நினைவாக, நூற்றாண்டு விழா கெபி கட்டப்பட்டு, தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் மேதகு இவான் அம்புரோஸ் ஆண்டகை அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.
வள்ளியூர் தனிப்பங்காக ஆன பின்னர் பணிபுரிந்த பங்குத்தந்தையர்கள் :
1. Fr. Antony Fdo
2. Fr. Bancras Raja
3. Fr. Gruz Martin
4. Fr. R. S Augustin
5. Fr. Andrew De Rose
6. Fr. Joseph Mascarenhas
7. Fr. M. J Irudayaraj
8. Fr. Bancras Fdo
9. Fr. Victor Devaraj
10. Fr. Vladimir Rayen
11. Fr. Theophilus
12. Fr. Panneer Selvam (1998-2003)
13. Fr. Norbert Thomas (2003-2008)
14. Fr. A. J Camilus (2008-2011)
15.Fr. Beschi (2011-2012)
16. Fr. Jebanaathan (2012-2017)
17.Fr. Antony Michael Lawrence (2017-till today)
இன்றும் அநேக இறைமக்கள் அன்னையின் அருளைப்பெற இத்திருத்தலத்திற்கு வருகிறார்கள்... ஏற்கெனவே வந்து அன்னையின் அருளைப் பெற்றவர்கள் அன்னைக்கு நன்றி சொல்ல அன்போடு வருகிறார்கள்... அந்த அன்னையின் இல்லம் செல்வோம்... இறையாசீர் பெறுவோம்...
தகவல்கள் மற்றும் திருத்தங்கள் : பங்குத்தந்தை அருட்பணி ஆன்றனி மிக்கேல் லாரன்ஸ்.