814 தூய நல்ல ஆலோசனை மாதா ஆலயம், வெள்ளப்பட்டி

      

தூய நல்ல ஆலோசனை மாதா ஆலயம்

இடம்: வெள்ளப்பட்டி, மேல அரசரடி அஞ்சல், தூத்துக்குடி, 628 002

மாவட்டம்: தூத்துக்குடி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: தூத்துக்குடி

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்கு: புனித ஞானப்பிரகாசியார் ஆலயம், துப்பாஸ்பட்டி

பங்குத்தந்தை: அருட்பணி. J. வினித் ராஜா

குடும்பங்கள்: 340

அன்பியங்கள்: 10

ஞாயிறு திருப்பலி காலை 06:30 மணி

நாள்தோறும் திருப்பலி காலை 06:00 மணி

மாதத்தின் முதல் சனிக்கிழமை மாலை 06:00 மணிக்கு கடல்மாதா சிற்றாலயத்தில்: ஜெபமாலை, நற்செய்திக் கூட்டம், நவநாள், திருப்பலி. தொடர்ந்து அசன விருந்து

திருவிழா: அக்டோபர் மாதம் முதல் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பித்து 11 நாட்கள் நடைபெறும்.

கடல்மாதா திருவிழா: மே மாதம் 12,13,14

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. ஜோதிமணி

2. அருட்சகோதரி. இராஜபுஷ்பம், Salesion 

3. அருட்சகோதரி. ரெஜினா மேரி, Salesion

4. அருட்சகோதரி. சகாய இனி, Servite Convent

5. அருட்சகோதரி. சாராள் ரோஸ், Sacred Heart sisters Tuticorin

வரலாறு:

அலைகடல் வந்து தாலாட்டும் இயற்கையின் கொடையாக கடலோரத்தில் அமைந்துள்ள அழகிய கிராமம் தான் வெள்ளப்பட்டி. சிவந்தாகுளம் அழகப்பாபுரம், நாகர்கோவில், சொக்கன் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் இருந்து குடிபெயர்ந்து வந்த மக்கள் தான் இந்த கிராமம் உருவாவதற்கு வழிவகுத்தவர்கள் ஆவார்கள். 

இவர்கள் இந்தப் பகுதியில் நெடுக வளர்ந்த பனைமரங்களை நம்பி, தன் உடல் திறமையில் நம்பிக்கை கொண்டு குடியேறிய, பனைத்தொழிலை குலத்தொழிலாக கொண்ட மக்களாவர்.‌ இவர்கள் தாங்கள் விரும்பிய இடங்களில் விடிவிகளை (குடிசை) அமைத்து, பதனீர் இறக்கி, அதனை கருப்புக்கட்டி ஆக்கி தங்களது வாழ்வை நடத்தினர்.‌ முதலில் இந்த கிராமம் நடுவப்பட்டி என்றும், பாலாத்தா தெரு, வடக்குத்தெரு என்றும் பெயரிட்டு அழைத்தனர். வேம்பார் பங்கில் இருந்து இங்கு பணிசெய்து வந்த அருட்பணி. கௌசானல் அடிகளார் அவர்களின் முயற்சியால், வெள்ளைமனம் கொண்ட மக்கள் வாழும் இவ்வூருக்கு வெள்ளைப்பட்டி (வெள்ளப்பட்டி) என்று பெயர் சூட்டப்பட்டது.

பின்னாட்களில் மழைபொய்த்துப் போனதால், பனைத்தொழில் செய்து வந்த இம்மக்கள் கடல் தொழில் செய்து வருகின்றனர்.

தொடக்கத்தில் ஊரின் நுழைவுப்பகுதியில் சிறிய அளவில் புனித சந்தன மாதா ஆலயத்தை கட்டி இறைவனை வழிபட்டு வந்தனர். நாளடைவில் அது பழுதடைந்து போனது.

1889 ஆம் ஆண்டு அருட்பணி. கௌசானல் அடிகளாரின் முயற்சியால் தூய நல்ல ஆலோசனை மாதா ஆலயம் கட்டப்பட்டு, வேம்பார் பங்கின் கீழ் செயல்பட்டு வந்தது. நல்ல ஆலோசனை மாதா திருவுருவப்படம் (புகைப்படம்) உரோமை நகரில் இருந்து கொண்டு வரப்பட்டது ஆகும்.‌ 

தருவைகுளம் தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம் தனிப் பங்கானது முதல், வெள்ளப்பட்டி ஆலயமானது தருவைகுளம் பங்கின் கிளைப் பங்காக மாற்றப்பட்டது.

அருட்பணி. செங்கோல் மணி பணிக்காலத்தில் தற்போது உள்ள ஆலய கட்டுமானப் பணிகள் துவக்கப் பட்டது. அருட்பணி. ஜாண் பால் பணிக்காலத்தில் ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று, தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு அமலநாதர் அவர்களால் 05.11.1986 அன்று அர்ச்சிக்கப்பட்டது.

அருட்பணி.‌ அகஸ்டின் ஜான் பெர்க்மான்ஸ் அவர்கள் வெள்ளப்பட்டியை தனிப்பங்காக மாற்றும் முயற்சியை மேற்கொண்டு, 08.02.2004 அன்று வெள்ளப்பட்டி தனிப் பங்காக உயர்த்தப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. S. அமலதாஸ் அவர்கள் பணிப் பொறுப்பேற்று வழிநடத்தினார்.

புனித அதிசய கடல் மாதா:

புனித நல்ல ஆலோசனை மாதா ஆலயத்தை மையமாகக் கொண்ட கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வாழும் கிராமம் வெள்ளப்பட்டி. இவ்வூரின் கடற்கரை சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் அழகிய வெண்மணற் பரப்பும், சுத்தமான கடற்காற்றும்; முயல்தீவு, வான்தீவு  ஆகிய கடல்தீவுகளின் கண்கவர் காட்சியும் அமைந்துள்ளது. இந்த கடற்கரையில் தருவைக்குளம் ஓடைக்கு தெற்கே சுமார் அரை கி.மீ தூரத்தில் கடலோரத்தின், அலைமடக்குப் பகுதியில்  மணலில் புதையுண்ட நிலையில் புனித அதிசய கடல் மாதா சுரூபம் கண்டெடுக்கப்பட்டது. 

13.05.1998 அன்று காலையில் மீனவர்கள் சிலர் வள்ளத்தில் சுண்ணாம்புக்கல் சேகரிக்கச் சென்ற போது தண்ணீருக்கு வெளியே சுரூபத்தின் சிறு பகுதி தெரியவே அதனை தோண்டி எடுத்து   வந்தனர். 

அருட்பணி. பங்கிராஸ் அவர்களின் ஒத்துழைப்புடன் சிற்றாலயம் அமைக்கப்பட்டு, 13.10.1998 புதன்கிழமை தருவைக்குளம் பங்குத்தந்தையின் ஒப்புதலுடன், வெள்ளப்பட்டி ஊர் நிர்வாகிகள் மற்றும் கடல் தொழிலாளர்களின் ஒத்துழைப்புடன், கடற்கரையில் கட்டப்பட்டுள்ள வெள்ளப்பட்டி  புனித அதிசய மாதா கடல் கோவிலில், இந்த சுரூபம் வைக்கப்பட்டது. இந்த கடல்மாதா சுரூபம் கண்டெடுக்கப்பட்ட நாள் பாத்திமா மாதாவின் முதல் காட்சி நாளாகிய மே 13 என்பதும், இந்த சுரூபம் ஆலயத்தில் நிறுவப்பட்ட நாள் பாத்திமா மாதாவின் கடைசி காட்சி நாளாகிய அக்டோபர் 13 என்பதும் குறிப்பிடத்தக்கது.

புனித பிரான்சிஸ் சவேரியார் வழிபட்டு வந்த இந்த சுரூபமானது, சுமார் 450 ஆண்டுகளுக்கு பின்னர் கிடைத்துள்ளதாக இறைமக்களால் விசுவசிக்கப் படுகிறது.

மே 13 ஆம் தேதி நடைபெறும் அதிசய கடல் மாதா திருத்தல திருவிழாவில் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான இறைமக்கள் பங்கேற்று வருகின்றனர்.

கெபி மற்றும் திருத்தலம்:

1. அதிசய கடல்மாதா திருத்தலம்

2. புனித அந்தோனியார் கெபி

3. புனித மிக்கேல் அதிதூதர் கெபி

பங்கின் பள்ளிக்கூடம்:

ஆர்.சி. ஆரம்பப் பள்ளி, வெள்ளப்பட்டி

பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:

1. புனித சூசையப்பர் சபை

2. திருக்குடும்ப சபை

3. புனித ஞானப்பிரகாசியார் வாலிபர் சபை

4. அமலோற்பவ மாதா இளம்பெண்கள் சபை

5. பாலர் சபை

6. மரியாயின் சேனை

7. நற்கருணை வீரர் சபை

8. கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம்

9. மகளிர் குழுக்கள்

10. மறைக்கல்வி

11. பீடப்பூக்கள்

12. பாடகற்குழு

13. மீனவர் நல சங்கம்

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. Rev.Fr. Amaladas S. (2004 –2009)

2. Rev.Fr. Bright Machado  (2009 - 2014)

3. Rev.Fr. Fabian Joseph (2014 -2017)

4. Rev.Fr. Soosai Raja A.S (2017 - 2022)

5. Rev.Fr. Vinith Raja J. (2022....)

வெள்ளப்பட்டி வாருங்கள்... தூய நல்ல ஆலோசனை மாதாவின் வழியாகவும், அதிசய கடல் மாதாவின் பரிந்துரையாலும், நன்மைகள் பல பெற்றுச் செல்லுங்கள்...

வழித்தடம்: தூத்துக்குடி -இராமேஸ்வரம் சாலையில் வடக்கு நோக்கி செல்லும் போது, அய்யனார்புரத்தில் இருந்து வலதுபுறமாக 2கி.மீ தொலைவில் வெள்ளப்பட்டி அமைந்துள்ளது.

தூத்துக்குடி -வெள்ளப்பட்டி 5கி.மீ

Location map: Nalla Alosanai Matha Church https://maps.app.goo.gl/rVD8FCVEcVxAQB1p7

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. J. வினித் ராஜா