965 புனித தோமையார், ஆலயம் சிற்றார்

     

புனித தோமையார் ஆலயம்

இடம்: சிற்றார்

மாவட்டம்: கன்னியாகுமரி

மறைமாவட்டம்: குழித்துறை

மறைவட்டம்: புத்தன்கடை

நிலை: கிளைப்பங்கு

பங்கு: தூய லூர்து அன்னை ஆலயம், ஆலஞ்சோலை

பங்குதந்தை அருட்பணி. V. வின்சோ ஆன்றனி

தொடர்பு எண்: +91 89397 07671

குடும்பங்கள்: 45

அன்பியங்கள்: 4

ஞாயிறு திருப்பலி காலை 09:00 மணி

திருவிழா: ஜூலை மாதத்தில் புனித தோமையார் பெருவிழாவை மையமாகக் கொண்டு மூன்று நாட்கள் நடைபெறும்.

மண்ணின் இறையழைத்தல்:

அருட்பணி. மரிய செல்வன், MSFS

வழித்தடம்:

மார்த்தாண்டம் -மேல்புறம் -அருமனை களியல் -கடையாலுமூடு -ஆலஞ்சோலை -சிற்றார் 

Location map: St. Thomas Church

https://g.co/kgs/nUeA2tH

வரலாறு:

1973-ம் ஆண்டு முதல் சிற்றார் அணைக்கு காவலராக பணியாற்றி வந்த திரு. செறியன் அவர்களது முயற்சியால், கடையல் பங்குத்தந்தை வின்சென்ட் அடிகளார் அவர்களால், தொழிலாளர் குடியிருப்பு வராண்டா மற்றும் வீதிகளில் வைத்து; கிறிஸ்மஸ், உயிர்ப்பு போன்ற சிறப்பு நாட்களில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது. தொடர்ந்து திரு. தங்கப்பன் அவர்களது முயற்சியால் கடையல் பங்கிலிருந்து கன்னியர்கள் சிற்றார் வந்து, வீடுகள் சந்தித்து மக்களை திருப்பலிக்கு அழைத்தனர். அவர்கள் அழைப்பை ஏற்று அதிக மக்கள் திருப்பலிக்கு வரத் தொடங்கினர்.

1980- ஆண்டு கடையல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற அருட்பணி. கார்மல் அவர்களால் மாதம் ஒருமுறை திருப்பலி நிறைவேற்றப்பட்டது. வீடுகளின் வரண்டாவிலும், வீதியிலும் திருப்பலி நிறைவேற்றும் முறை மாற்றப்பட்டு, புதிய ஆலயம் கட்ட வேண்டும் என்று பங்குத்தந்தை மற்றும் மக்களால் தீர்மானிக்கப்பட்டது. பங்குத்தந்தையோடு இணைந்து திரு. தங்கப்பன், திரு. மரிய ஜாண்போஸ்கோ, திரு. மரிய ஆன்றணி மற்றும் பங்கு மக்கள் இணைந்து, ஓலைக்குடிசையால் முதல் ஆலயத்தை அமைத்தனர். அந்த ஆலயம் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் அகற்றப்பட்டது. 

மீண்டும் மக்களின் முயற்சியால் அதிகாரிகளிடம் பேசி, அகற்றப்பட்ட குடிசைப் பொருட்கள் மீண்டும் கொண்டுவரப்பட்டு ஆலயம் கட்டப்பட்டது. அந்த இடத்தில் ஆலயத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், திரு. மரிய ஆன்றணி அவர்களின் பெயரில் வீட்டிற்குரிய இடமாக அனுமதிக்கப்பட்டது. மாதம் ஒருமுறை என்றிருந்த திருப்பலி வாரம் ஒருமுறை (சனி) என மாற்றப்பட்டது. தொடர்ந்து புதிய ஆலயம் கட்ட அடித்தளம் போடப்பட்டது.

1987-ம் ஆண்டு முதல் அருட்பணி. அந்தோணி முத்து அவர்கள் கடையலில் புதிய பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்றார். அவரது முயற்சியில் பங்கின் முதல் அருட்பணிப் பேரவை உருவாக்கப்பட்டது. பேரவையினர் தலைமையில் ஆலயத்தின் சுவர், செங்கற்களால் கட்டியெழுப்பப்பட்டு, ஆலயத்தின் பின்புறம் உள்ள நிலமும் வாங்கப்பட்டது. தொடர்ந்து அருட்பணி. ஜார்ஜ் அவர்கள் பொறுப்பேற்றார். அவரது தலைமையில் ஆலயத்தில் ஓடு வேய்ந்த கூரை அமைக்கப்பட்டது.

அதன்பின் கடையல் பங்கானது M.S.F.S. சபையின் கீழ் ஒப்படைக்கப்பட்டது. MSFS-ன் பங்குத்தந்தையாக அருட்பணி. ஹென்றி ஜோசப் அவர்களும், இணைப் பங்குத்தந்தையாக அருட்பணி. இராபர்ட் அவர்களும் பொறுப்பேற்றார்கள். இவர்கள் தலைமையில் ஆலயத்தின் முன்பக்கம் உள்ள நிலம் வாங்கப்பட்டது. 

பின்னர் இணைப் பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி. இராபர்ட் அவர்கள் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். இவரது முயற்சியால் ஆலயத்தின் உள்தரை மொசைக் போடப்பட்டது. ஆலயத்தின் முன்பக்கம் குருசடி கட்ட தீர்மானிக்கப்பட்டு, வேலையும் ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்ந்து பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற அருட்பணி. மைக்கேல் அவர்கள் குருசடி வேலையை தொடர்ந்து நடத்தினார். வேலை முடியும் தருவாயில் இருந்த குருசடியை, அரசு அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர். இதனை எதிர்த்து கடையல் பங்குப்பேரவை உபதலைவர் தலைமையில், பங்கு மற்றும் கிளைப்பங்கு மக்கள் இணைந்து, கடையல் சந்திப்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டம் தீவிரமானதும், அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வந்தனர். அன்றைய வட்டார முதல்வர் ஹிலாரியுஸ், குலசேகரம் பங்குத்தந்தை. சூசையன், கடையல் இணைப்பங்குத்தந்தை. செபாஸ்டின் இராபர்ட் மற்றும் பங்கு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது. புதிய குருசடி கட்டித்தருவதாக அரசு அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் பல மாதங்களாகியும் குருசடி கட்டப்படவில்லை.

பின்னர், பொறுப்பேற்ற பங்குத்தந்தை. அலெக்சாண்டர், மற்றும் பங்கு நிர்வாகிகள் பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகளை சந்தித்து குருசடி கட்ட அனுமதி கோரினர். அனுமதி கிடைத்ததும் புதிய குருசடி ஒரே நாளில் கட்டி முடிக்கப்பட்டு, 02-04-2003 அன்று அன்றைய குருகுல முதல்வர் அருட்பணி. ஜாண் குழந்தை அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

2005-ம் ஆண்டு அருட்பணி. மரிய ஜாண்  போஸ்கோ, அருட்பணி. கிறிஸ்துதாஸ் ஆகியோர் பங்குத்தந்தையர்களாக பொறுப்பேற்றார்கள். இவர்கள் தலைமையில் பங்கு முன்னேற்றப்  பாதைக்குச் சென்றது. 

2008 ஜனவரி மாதம் அருட்பணி. மரிய ஜாண் போஸ்கோ அவர்கள் விபத்தில் சிக்கி, சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். அப்போது பங்கின் பொறுப்பாளராக அருட்பணி.‌ பவுல்சாமி அவர்கள் பொறுப்பேற்றார்கள். தொடர்ந்து 2008 மே மாதம் பங்குத்தந்தையாகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பங்குத்தந்தை மரிய ஜாண் போஸ்கோ அவர்கள் 21-12-2008 ஞாயிறன்று சுயநினைவு திரும்பாமலே மரணமடைந்தார்.

கடந்த காலகட்டங்களில் ஆலஞ்சோலை பங்குடன் சிற்றார் நல்லுறவு வைத்திருந்தது. ஆலஞ்சோலை தனிப்பங்காக உயர்த்தப்பட்டால், சிற்றார் அவர்களுடன் இணைய வேண்டும் என்ற எண்ணம் இரு தரப்பிலும் இருந்து வந்தது. அதற்கு ஆலஞ்சோலை எடுத்த முயற்சிக்கு சிற்றார் ஒத்துழைப்பு அளித்து வந்தது. 2009 பிப்ரவரி மாதம் வட்டார முதல்வர் அருட்பணி. வின்சென்ட் அவர்களும், பங்குத்தந்தை பவுல்சாமி அவர்களும், ஆலஞ்சோலை பங்கு நிர்வாகிகளுடன் சேர்ந்து சிற்றார் ஆலயத்தை பார்வையிட்டு சென்றார்கள். 

தொடர்ந்து ஆலஞ்சோலை பங்குப்பேரவையின் தீவிர முயற்சியால் 14-05-2009 அன்று மாலை 6 மணிக்கு, மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அவர்கள் தலைமையில் ஆலஞ்சோலை தனிப் பங்காக உயர்த்தப்பட்டது. அப்போது அதன் கிளைப்பங்காக சிற்றார் பங்கை ஆயர் அவர்கள் அறிவித்தார்கள். பங்கின் முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. ஆரோக்கிய ஷெல்லிறோஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். பின்னர் 2009 ஜூலை மாதம் நடந்த சிற்றார் பங்கின் முதல் திருவிழாவை மிகப் பிரமாண்டமாக தந்தை அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு, சிறப்பாக நடத்தப்பட்டது. தாய்ப்பங்கு மக்கள் கிளைப்பங்கை எப்படி ஆதரித்து அரவணைக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக, தாய்ப்பங்கு மக்கள் மூன்று நாள் விழாவிலும் திரண்டு வந்து, சிற்றார் இறைமக்களை மகிழ்வித்து ஆதரித்து வந்தார்கள்.

தற்போதைய புதிய ஆலயத்திற்கு அருட்பணி. மரிய அற்புதம் பணிக்காலத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கின.‌ பல்வேறு நெருக்கடிகள் காரணமாக பணிகள் தொடர்ந்து நடைபெறுவதில் தாமதங்கள் ஏற்பட்டன. தொடர்ந்து ஆலஞ்சோலை பங்கின் பொறுப்பை ஏற்றுக் கொண்ட அருட்பணி. வின்சோ ஆன்றனி அவர்களின் அயராத முயற்சியின் பயனாகவும், சிற்றார் இறைமக்களின் ஒத்துழைப்பின் காரணமாகவும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டுமானப் பணிகளானது 9 வருடங்களாக (2015-2024) நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஆலயமானது இரண்டு தளங்களாக கட்டப்பட்டு வருகிறது. கீழ்த்தளமானது அரங்கமாகவும், மேல்த்தளம் ஆலயமாகவும் கட்டப்பட்டு வருகிறது. தற்போது கோபுரம் கட்டுகிற பணியானது நடைபெற்று வருகிறது.

தூய மிக்கேல் அதிதூதர் குருசடி அருட்பணி. வின்சோ ஆன்றனி அவர்களின் முயற்சியால் புதுப்பிக்கப்பட்டது.

சமய ஒற்றுமை:

புனித தோமையார் ஆலயத் திருவிழாவின் இரண்டாம் நாளில் நடைபெறும் தேர்பவனியின் போது, இங்குள்ள சாமுண்டீஸ்வரி திருக்கோயில் இறைபக்தர்கள், நாராயணகுரு  இறைபக்தர்கள் இணைந்து, பவனி வரும் சிற்றார் புனித தோமையார் ஆலய இறைமக்களுக்கு இரவு உணவு கொடுத்து உபசரிப்பார்கள். அதுபோல இவ்விரண்டு கோயில்கள் திருவிழாவின் போதும் பவனி வருகிற வேளையில், புனித தோமையார் ஆலய மக்கள் அவர்களை வரவேற்று, ஆலய அரங்கத்தில் வைத்து உணவு கொடுத்து உச்சரிப்பது, சமய ஒற்றுமைக்கு சான்றாகும். கடந்த சில ஆண்டுகளாக இந்த நிகழ்வு பங்குதந்தை அருள்பணி. வின்சோ ஆன்றனி அவர்களின் வழிகாட்டலில் சிறப்பாக நடைபெற்று வருவது தனிச்சிறப்பு.

இயற்கை எழில் கொஞ்சும் மலைகளால் சூழப்பட்ட, சிற்றார் அணைக்கு அருகிலேயே இவ்வாலயம் அமைந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் திருப்பயணிகள் ஏராளமாக இவ்வாலயத்திற்கு வருகை தருகின்றனர்.

நிதி நெருக்கடியின் காரணமாக பல்வேறு பணிகள் (குறிப்பாக ஆலய கோபுரப் பணிகள்) நிறைவு பெறாமல் உள்ளது. ஆகவே போதிய நிதிகள் கிடைக்கவும், இம்மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேறிடவும் கரங்கொடுப்போம், இறைவனிடம் ஜெபிப்போம்...

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குதந்தை அருட்பணி. வின்சோ ஆன்றனி அவர்கள்.