கேரளா எர்ணாகுளம் பனிமய மாதா பேராலயம்


பனிமய மாதா பெருங்கோவில் (பள்ளிப்புறம்) (Basilica of Our Lady of Snows Pallippuram) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் எற்ணாகுளம் மாவட்டத்தில் கோட்டப்புறம் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு இணைப் பெருங்கோவில் (minor basilica) ஆகும்.

வரலாறு

பனிமய மாதா பேராலயம் மலையாளத்தில் “மஞ்ஞுமாதா தேவாலயம்” என்று அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் வரலாறு ஐந்து நூற்றாண்டுகளை உள்ளடக்கியது. 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர்த்துகீசியர்கள் பள்ளிப்புறத்தில் ஒரு கோட்டை கட்டி எழுப்பினார்கள். அதைத் தொடர்ந்து அன்னை மரியாவுக்கு ஒரு கோவில் கட்டி அர்ப்பணித்தார்கள்.

இக்கோவில் நிறுவப்பட்ட ஆண்டு 1503. பின்னர் 1931இல் கோவில் புதுப்பிக்கப்பட்டது. 2006ஆம் ஆண்டு பனிமய மாதா கோவில் புதிதாக மீண்டும் கட்டப்பட்டது.

முதலில் இக்கோவில் கொச்சி மறைமாவட்டத்தின் கீழ் இருந்தது. அப்போது 1577இல் பனிமய மாதா கோவில் ஒரு தனிப்பங்கு ஆனது. வராப்புழை மறைமாட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட கோட்டப்புறம் மறைமாவட்டத்தின் தலைமைக் கோவிலாக இப்போது இக்கோவில் உள்ளது.

இக்கோவிலின் முன் வரலாறு

பின்வருமாறு கூறப்படுகிறது: கிபி 52ஆம் ஆண்டில் இயேசுவின் சீடரான புனித தோமா பண்டைய முசிறி துறைமுகத்தின் அருகே மலியங்கரையில் வந்திறங்கினார். பெரியாறு அரபிக்கடலில் கலக்குமுன்பு மூன்று கிளைகளாகப் பிரிவதால் “முசிறி” என்ற பெயர் எழுந்தது. முசிறித் துறைமுகம் 1341இல் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அழிந்து போனது. பெருவெள்ளத்தின் விளைவாக, கொச்சி அருகே வைப்பீன் தீவு வேம்பநாடு ஏரியில் உருவானது.

பல இடங்களிலுமிருந்து மக்கள் அத்தீவுக்கு வந்து குடியேறினார்கள். 1503இல் போர்த்துகீசியர்கள் அங்கே ஒரு கோட்டை கட்டி எழுப்பினார்கள். ஐரோப்பிய பாணியில் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கோட்டை இதுவே. அதே ஆண்டில் அவர்கள் அங்கே ஒரு கோவிலையும் கட்டினார்கள்.

திப்பு சுல்தான் படையெடுப்பு

18ஆம் நூற்றாண்டில் மைசூரிலிருந்து திப்பு சுல்தான் கேரளத்தின்மீது படையெடுத்து வந்தார். சாலக்குடி ஆற்றின் அருகே பாளையம் இறங்கி திருவிதாங்கூரைத் தாக்க அவர் திட்டமிருந்தார். அவர் அப்பகுதிகளில் இருந்த பெரும்பாலான கிறித்தவக் கோவில்களையும் இந்துக் கோவில்களையும் தரைமட்டமாக்கினார். கிறித்தவர்கள் பனிமய மாதா கோவிலில் ஒன்றுகூடி அன்னையின் அருளை வேண்டினார்கள். 

அப்போது ஒரு பனிமூட்டம் ஏற்பட்டது. அது மிகவும் அடர்த்தியாக இருந்ததால் திப்பு சுல்தானின் படைகளால் கோவிலையோ சூழிடங்களையோ அடையாளம் காண முடியவில்லையாம். அது அரபிக்கடலின் பகுதியோ என்று அவர்கள் நினைத்த அவ்வேளையில் பெரியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மன்னன் தன் படைகளின் ஒரு பகுதியை இழந்துவிட்டு மைசூர் திரும்பினாராம்.

இந்த புதுமையான நிகழ்ச்சியைத் தொடர்ந்து மக்கள் அன்னை மரியாவை “பனிமய மாதா” (மஞ்ஞுமாதா) என்று அழைத்தனராம்.

இக்கோவிலின் 500ஆம் ஆண்டு விழா 2007இல் கொண்டாடப்பட்டது.

துணைப் பெருங்கோவில்

2012ஆம் ஆண்டு ஆகத்து 27ஆம் நாள் பனிமய மாதா கோவில் “துணைப் பெருங்கோவில்” நிலைக்கு உயர்த்தப்பட்டது. திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் கொடுத்த அறிக்கையை அவருடைய இந்தியத் தூதர் சால்வத்தோரே பென்னாக்கியோ வாசித்தளித்தார்.

கோவில் திருவிழா

பனிமய மாதா கோவில் திருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்டு 5ஆம் நாள் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சூலை 30 மாலையில் விழாக் கொண்டாட்டம் தொடங்கும்.