புனித அந்தோணியார் ஆலயம்
இடம்: அந்தோணியார் தெரு, வத்தலகுண்டு சாலை, பேகம்பூர் அஞ்சல், திண்டுக்கல்- 624002
மாவட்டம்: திண்டுக்கல்
மறைமாவட்டம்: திண்டுக்கல்
மறைவட்டம்: திண்டுக்கல்
நிலை: கிளைப்பங்கு
பங்கு: புனித சவேரியார் ஆலயம், சவேரியார் பாளையம், திண்டுக்கல்
பங்குத்தந்தை அருட்பணி. அருள் ஜஸ்டின் திரவியம், SDB
உதவிப் பங்குத்தந்தையர்கள்
அருட்பணி. செபாஸ்டின், SDB
அருட்பணி. ஆல்பர்ட், SDB
அருட்பணி. ரொசாரியோ, SDB
குடும்பங்கள்: 300
அன்பியங்கள்: 6
செவ்வாய்க்கிழமை மாலை 07:30 மணிக்கு புனித அந்தோனியார் நவநாள் திருப்பலி
மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை மாலை 07:30 மணிக்கு புனித அந்தோனியார் நவநாள் திருப்பலி, நற்கருணை ஆசீர்
திருவிழா: ஜனவரி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் நிறைவு பெறும் வகையில் 13 நாட்கள்.
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருட்சகோதரி. A. சாந்தா மேரி, MSI
2. அருட்சகோதரி. H. கவிதா, MSI
வரலாறு:
அந்தோணியார் தெருவைச் சேர்ந்த முன்னோர்கள் பாண்டிச்சேரியை பூர்விகமாக கொண்டவர்கள் ஆவர். இவர்கள் வாணிபம் செய்வதற்காக தமிழ்நாடு முழுவதும் செல்வார்கள். குறிப்பாக திண்டுக்கல், திருச்சியில் அதிகமாக வாணிபம் செய்தார்கள். இதில் நான்கு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தற்போது உள்ள ஊரில் நிலம் வாங்கி, அதில் வீடுகட்டி விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர்.
இவர்கள் முன்னோர்கள் பாண்டிச்சேரியில் இருந்து வந்ததால், புனித அந்தோனியாரின் மீதிருந்த பக்தியின் பொருட்டு தங்களின் வாழ்விடத்தை “அந்தோணியார் சேரி” என்று பெயர் சூட்டிவாழ்ந்து வந்தனர். இதுவே பிற்காலத்தில் பெயர் மாற்றம் அடைந்து “அந்தோணியார் தெரு” என ஆனது.
ஆங்கிலேய ஆட்சி காலமாக இருந்த 1856-ஆம் ஆண்டு முதல் கிழக்கிந்திய தோல் தொழிற்சாலை (EAST INDIA LEATHER ) தமிழ்நாட்டில் திருச்சி மற்றும் திண்டுக்கலில், தோல் தயாரிக்க நிறுவப்பட்ட ஒரு நிறுவனம் ஆகும். இத்தோல் தயாரிப்பானது திருச்சி மற்றும் திண்டுக்கலில் மட்டுமே அப்போது செய்யப்பட்டு வந்தது. இது ஆங்கிலேய ராணுவத்தில் மிகவும் பிரபலமான தொழில்நுட்ப முறையாகும்.
ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் திண்டுக்கல் மலைக்கோட்டையின் மேற்கு திசையில் வத்தலகுண்டு, மதுரை செல்லும் சாலையில் சில தோல் தொழிற்சாலைகளை உருவாக்கினார்கள். இதன் அடிப்படையில் வெளிநாடுகளுக்கு தோல் ஏற்றுமதி அதிகம் தேவை இருந்ததால் பல தோல்பதனிடும் தொழிற்சாலைகள் உருவாயின. இவ்வூர் முன்னோர்கள் செய்த விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாததால், விவசாயத்தை விட்டு விட்டு, தங்கள் விவசாயம் செய்த இடத்தை தோல் பதனிடும் தொழிற்சாலைக்கு விற்றனர். விவசாயம் செய்யாததால் போதிய வருமானம் இல்லை, இதனால் தங்கள் வாழ்விடத்தில் எதிரில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர்.
அந்தோணியார் தெருவின் எதிர் திசையில், தோல் பதனிடும் தொழிற்சாலையை பொன்னப்பா இராவுத்தர் என்பவர் நடத்தி வந்தார். இவர் அந்தோணியார் தெரு முன்னோர்களுக்கு வேலைவழங்கி இம்மக்களோடு இணக்கமாக இருந்தார். அந்தோணியார் தெரு என்ற பெயர் பிரபலம் அடையாததால், இவர் நடத்தி வந்த தொழிற்சாலை பெயர் பொன்னப்பா ஷாப் என்பது மறுவி “பொன்பா ஷாப்” என்று இம் முன்னோர்கள் வசித்த இடத்தை சுற்றியுள்ள வட்டாரங்களில் அழைத்தனர்.
காலப்போக்கில் 4 குடும்பங்கள் பல குடும்பங்களாக பல்கிப் பெருகியது. சுற்று வட்டாரப் பகுதியில் நடைப்பெற்ற புனித அந்தோணியார் திருவிழாவில் கலந்து கொண்ட இம்மக்களும், புனித அந்தோணியாரை மகிமைப்படுத்த தற்போதுள்ள கோயில் இடத்தில், 1880-ஆம் ஆண்டு ஊரின் கிழக்கு பக்கம் சிறிய ஓலை குடிசை அமைத்து, அதில் பாண்டிச்சேரியில் இருந்து மரத்தினால் செய்யப்பட்ட புனித அந்தோனியார் சுரூபம் வைத்து, முன்னோர்கள் வழிபட்டு வந்தனர்.
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள், குழந்தைகள் ஆலயத்தில் சென்று ஜெபமாலை செய்து மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு செய்தனர். மேலும் மேட்டுப்பட்டி புனித வியாகுல மாதா ஆலயத்தில் தங்களை இணைத்துக் கொண்டு, தவறாமல் ஞாயிற்றுக்கிழமை திருப்பலிக்கு சென்று வந்தனர்.
தமிழக அளவில் மேட்டுப்பட்டி பங்கு பாஸ்கா திருவிழா பிரபலமாக இருந்தது. சுற்றியுள்ள ஊர்களில் இருந்து பலர் கலந்து கொள்வார்கள். இதன் அடிப்படையில் தோல் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் (ஊக்கத் தொகை) இந்த பாஸ்கா திருவிழாவில் கொடுப்பார்கள். இவ்விழா மட்டுமே இம் முன்னோர்கள் பெரிய திருவிழாவாகக் கருதி, புத்தாடைகள் எடுத்து ஆடம்பரமாக கொண்டாடி வந்தனர்.
1907-ஆம் ஆண்டில் இருந்து பதுவை புனித அந்தோனியார் திருவிழாவானது முறைப்படுத்தப்பட்டு, 13 நாட்கள் கொண்டாடப் பெற்று இன்று வரை 115-ஆம் ஆண்டு திருவிழா நிறைவு பெற்றுள்ளது.
ஓலைக் குடிசையாக இருந்த ஆலயத்தில் அருகில் இருந்த புளியமரம் விழுந்து, இடிந்த நிலையில் 1932-ஆம் ஆண்டு மேற்கு பக்கமாய் ஊரைப் பார்த்து ஓடு வேய்ந்த சிறிய ஆலயமாக மாறியது.
90 ஆண்டுகளுக்கு முன்பு இம் முன்னோர்கள் படித்து பலர் ஆசிரியர்களாகவும், இரயில்வே, அஞ்சலகம், ராணுவம், வங்கி, போக்குவரத்துத் துறை, காவல் துறை போன்றவற்றில் பணிசெய்து வாழ்வில் முன்னேற ஆரம்பித்து விட்டனர்.
தோல் தொழிலாளர்களாக இருந்தவர்கள் பலர் தொழில் முனைவோராக முன்னேறி வாழ்ந்து, தங்கள் தரத்தினை உயர்த்தினார்கள். பொருளாதார நிலையில் முன்னேற்றம் அடைந்தனர்.
முன்னோர்கள் ஊரை நிர்வகிக்க நாட்டாண்மை முறையை கொண்டு வந்தனர். நாட்டாண்மை, மணியம் (மேனேஜர்), ஜூரி, கோவில் பிள்ளை, விழாக் குழுவினர் போன்ற அமைப்புகளை ஏற்படுத்தி திருவிழா மற்றும் ஊரில் நடக்கும் நல்ல மற்றும் துக்க நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.
ஓடு கொட்டகை சிறு ஆலயமாக இருந்ததை மாற்றி, ஊர் மக்களின் கூட்டு முயற்சியால் தற்போதுள்ள புதிய ஆலயம் கட்டி எழுப்பப்பட்டு, திருச்சி மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு பீட்டர் ஆண்டகை அவர்களால் 13.06.1999 அன்று அர்ச்சிக்கப்பட்டது .
1985-ஆம் ஆண்டு முதல் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக இம் முன்னோர்கள் சென்று வந்தனர். வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பக்தியால் அந்தோணியார் கோவிலில் மேற்கு திசையில், ஊரின் வலப்புறத்தில் ஒரு மாதா சுரூபத்துடன் திட்டு அமைத்து வழிபட்டனர். பின்னர் 1990-ஆம் ஆண்டு மக்களின் முயற்சியில் புனித ஆரோக்கிய மாதா சிற்றாலயம் உருவாக்கப்பட்டது.
இதே போல் புனித செபஸ்தியார் மீது கொண்ட பக்தியால், கல்லறைத் தோட்டத்தின் அருகில் 1996-ஆம் ஆண்டு புனித செபஸ்தியார் சுரூபம் அமைத்து வழிபட்டனர். 2002-ஆம் ஆண்டு புனித செபாஸ்தியர் குருசடியாக அமையப்பெற்றது.
புனித அந்தோனியார் கோவில் எதிரில் அமையப் பெற்ற தண்ணீர் குழாய் அருகில் 1980 ஆம் ஆண்டு, சிலுவை திண்ணையும் அமைக்கப்பட்டது.
திண்டுக்கல் மறைமாவட்டதில் புதிதாக 1996-ஆம் ஆண்டு சவேரியார்பாளையம் பங்கு உருவான போது, அந்தோனியார் தெரு ஆலயம் அதன் கீழ் வந்தது.
ஊரின் சிறப்புகள்:
மேட்டுப்பட்டி பங்கின் கிளைப்பங்காக இருந்த காலகட்டத்தில், முதன் முதலாக கிறிஸ்துமஸ் பஜனை இம் முன்னோர்களால் உருவாக்கி ஊரின் வீதிகளில் பஜனை செய்து சிறப்பித்தனர்.
முன்னோர்கள் மரியாயின் சேனை செயல்படுத்தி ஞாயிறு மதியம் கோவிலிலும் மற்ற நாட்களில் வீதியிலும் ஜெபங்கள் செய்தனர். உடல்நிலை சரியில்லாதவர்கள் வீட்டிற்கு சென்று உடல்நிலை குணமடைய ஜெபம் செய்து பக்தி முயற்சி செய்தனர்.
இக்காலகட்டத்திற்கு ஏற்ப நாட்டாண்மை முறையை மாற்றி அமைத்து, 2017 ஆண்டு முதல் ஊர்நிர்வாகம் என்று கொண்டு வந்து “பதுவை புனித அந்தோனியார் ஆலய அறக்கட்டளை” என்ற பெயரில் ஊர் நிர்வாகம், ஊர் நிர்வாகிகள் மூலம் சிறப்பாக இன்று வரை செயல்பட்டு வருகிறது.
1975 ஆம் ஆண்டு முதல் திருவிழாவில் அன்னப்பகிர்வு திட்டத்தை தொடங்கி இன்றுவரை இது தொடர்கிறது.
ஊரின் திருவிழாக்கள்:
பதுவை புனித அந்தோனியாரின் திருவிழா வருடம்தோறும் தலைகட்டுவரி விதிக்கப்பட்டு, ஆண்டுதோறும் ஜனவரிமாதம் கடைசி வாரத்தில் கொடியேற்றமும், பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இரவு மின் ரத தேர்பவனியும், காலை ஆடம்பர கூட்டுத் திருப்பலியுடன், நண்பகல் நேரத்தில் சப்பரம் சுற்றுபிரகாரமும், அனைவருக்கும் அன்னப்பகிர்வு (உணவு) வழங்கப்படும். மாலை புனித அந்தோனியாரின் திருக்கொடி இறக்கப்பட்டு, 13 நாள் திருவிழா இனிதே நிறைவுபெறும்.
புனித ஆரோக்கிய மாதா சிற்றாலயத்தில் செப்டம்பர் மாதம் இறுதியில் 3 நாள் திருவிழாவாக கொண்டாடப்படும்.
புனித செபஸ்தியார் குருசடியில் ஆண்டுதோறும் தமிழ்மாதம் ஆடி18-ஆம் தேதியில் திருவிழா கொண்டாடப்படும்.
ஆண்டுதோறும் தவக்காலத்தில் புனித வாரத்துக்கு முன் ஊரைச் சுற்றி சிலுவைப்பாதை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
நன்றிக்குரியவர்கள்:
கடந்த 25 ஆண்டு காலத்தில் பங்குத் தந்தையர்கள் பலர், பொருளாதரத்தில் பின் தங்கியவர்களுக்கு உதவி செய்து படிக்க வைத்து, வேலை வாய்ப்பு பெற வழிவகுத்துத் தந்தனர். தொடக்கத்தில் 5 அன்பியங்களாக செயல்பட்டு வந்தது. இப்போது 6 அன்பியங்கள் அமைத்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பொருளாதாரத்திலும், கல்வியிலும், ஞானத்திலும் சிறந்து விளங்க, சலேசிய பங்குதந்தையர்கள் மிகவும் முக்கிய காரணமாக அமைந்தார்கள். அவர்களுக்கு ஊர் சார்பாக நன்றியினை காணிக்கையாக்குகின்றனர்.
வழித்தடம்: திண்டுக்கல் -வத்தலகுண்டு சாலையில், திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து 3கி.மீ தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
Location map: https://maps.app.goo.gl/iJ6YTRd9o59qE2vu9
Church Facebook: https://www.facebook.com/profile.php?id=100069131010373...
ஆலய வரலாறு: சவேரியார் பாளையம் பங்கு வெள்ளிவிழா மலர்.
ஆலய புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் சேகரிப்பில் உதவி: ஆலய உறுப்பினர் திரு. எட்வின் ராஜா அவர்கள்.