புனித ஞானப்பிரகாசியார் ஆலயம்
இடம்: மலைத்தாதம்பட்டி
மாவட்டம்: திருச்சி
மறைமாவட்டம்: திருச்சி
மறைவட்டம்: மணப்பாறை
நிலை: கிளைப்பங்கு
பங்கு: புனித சவேரியார் ஆலயம், மலையடிப்பட்டி
பங்குத்தந்தை: அருட்பணி. ஜேம்ஸ்
குடும்பங்கள்: 150
மாதத்திற்கு ஒருமுறை திருப்பலி
திருவிழா: ஜூன் மாதம் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை
மலைத்தாதம்பட்டி மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருட்பணி. A.M. ஞானப்பிரகாசம், (late) புதுவை -கடலூர் உயர் மறைமாவட்டம்
2. அருட்பணி. A. மரியானந்தம், (late) திருச்சி மறைமாவட்டம்
3. அருட்பணி. அந்தோணி ரமேஷ் குமார், திருச்சி மறைமாவட்டம்
4. அருட்பணி. தாஸ், திருச்சி மறைமாவட்டம்
5. அருட்சகோதரி. அமலோற்பவ மேரி, CIC (late)
6. அருட்சகோதரி. ஹெலன், குளூனி (late)
7. அருட்சகோதரி. பவுலின், குளுனி
8. அருட்சகோதரி. ஜோஸ்பின், குளுனி
9. அருட்சகோதரி. தைனஸ், CIC
வழித்தடம்: திண்டுக்கல் -திருச்சி சாலையில், மணப்பாறையில் இருந்து 4கி.மீ தொலைவில் மலைத்தாதம்பட்டி அமைந்துள்ளது.
வரலாறு:
திருச்சி - திண்டுக்கல் சாலையில் மணப்பாறையில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த அழகிய சிற்றுார் மலைத்தாதம்பட்டி ஆகும்.
மலையடிப்பட்டி பங்கின் நுழைவாயிலாக மலைத்தாதம்பட்டி அமைந்துள்ளதும் இவ்வூரின் தனிச்சிறப்பாகும்.
இவ்வூரின் வடக்கில் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையும், மேற்கில் தொம்பச்சி ஆறும், கிழக்கில் சாமியார்ரோடு என்றழைக்கப்படும் கிராமச்சாலையும், தெற்கில் சென்னை- திருவனந்தபுரம் அகல இரயில்பாதையும் எல்லைகளாக அமைந்துள்ளன.
புனித தோமையார் மலையைத் தாண்டி அமைந்திருக்கின்ற காரணத்தினால் 'மலைத்தாண்டிபட்டி' என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்றும், தாதம்பட்டியைத் தாண்டிச் சென்றால் மலையை அடையலாம் என்று பொருள்பட 'மலைத்தாதம்பட்டி' என்று விரைவில் பெயர் பெற்றிருக்கலாம் என்றும் கருத்து நிலவுகிறது.
சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு வரை மலைத்தாதம்பட்டியில் ஆலயமோ, சிலுவைத்திண்ணையோ கூட அமைந்திருக்கவில்லை.
மலைத்தாதம்பட்டியில் பிறந்து முதல் குருவாக அருட்பணியேற்ற அருட்தந்தை. A.M. ஞானப்பிரகாசம் அவர்கள் தான் முதன் முதலாக ஒரு சிலுவையை ஊன்றினார். அச்சிலுவை கொன்னை மரத்தினால் செய்யப்பட்ட மரச்சிலுவையாகும். பின்னர் அருட்தந்தையின் பெயரை பெற்ற, புனித ஞானப்பிரகாசியார் திருச்சிலுவை என்று மக்களால் அழைக்கப்பட்டு வந்தது.
நாளடைவில் சிறிய சிலுவை திண்ணை ஊர்ப்பொதுமக்கள் அமைத்தார்கள். பல்வேறு காலகட்டங்களில் ஆலயம் அமைப்பதற்காக பொதுமக்கள் எடுத்த முயற்சிகள் தடைபட்டன.
சுமார் 1952 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மலைத்தாதம்பட்டியில் ஒரு சிறிய ஆலயம் கட்டப்பட்டது.
அருட்பணி. மரியானந்தம் சுவாமிகள் பங்குத்தந்தையாக (1962-1973) இருந்த காலத்தில் ஆலயமானது மறைமாவட்டத்திற்கு ஊர்மக்களால் எழுதிக்கொடுக்கப்பட்டு, ஆயர் மேதகு தாமஸ் பெர்ணாண்டோ அவர்களால் ஆலயம் புனிதப்படுத்தப்பட்டது.
அருட்தந்தை. யூஜின் அவர்களின் பெருமுயற்சியால் ஆயர் அவர்களின் அனுமதியின் பெயரில், தற்போதுள்ள ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டு, மேதகு ஆயர். அந்தோணி டிவோட்டா அவர்களால் 28.05.2007 அன்று அர்ச்சிக்கப்பட்டது.
மலைத்தாதம்பட்டி மக்கள் புனித தோமையாரின் தீவிர விசுவாசிளாக இருப்பினும், புனித ஞானப்பிரகாசியாரையும் தங்கள் பாதுகாவலராகக் கொண்டுள்ளனர். மேலும், தூய பனிமய அன்னையின்பால் தீவிர பக்தியும் கொண்டுள்ளனர். இன்றுவரை, புனித தோமையாரிடமும், புனித ஞானப்பிரகாசியார் வழியாகவும் வேண்டுதல் வைத்து உடல் நலம் பெற்றவர்கள் ஏராளம்.
தினந்தோறும் மாலை 07:00 மணியளவில், ஆலயத்தில் செபமாலை, நற்செய்தி வாசித்தல் போன்ற வழிபாடுகள் உள்ளூர் மக்களால் நடத்தப்படுகிறது. மலைத்தாதம்பட்டியில் இரண்டு அன்பியங்கள் மூலம் மாதந்தோறும் அன்பியக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. திருவிழாக்காலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
ஆண்டுதோறும் உயிர்ப்பு ஞாயிறுக்கு அடுத்தநாள், திங்கள் மாலை 6.30 மணியளவில் புனித தோமையாரின் திருக்கொடியானது ஊர்வலமாக மலைத்தாதம்பட்டியில் இருந்து எடுத்து வரப்பட்டு, புனித தோமையார் மலையில் ஏற்றப்படுகிறது. அன்று முதல் மலையடிப்பட்டி பங்கில் பெரிய திருவிழா ஆரம்பமாகிறது.
ஜூன் மாதம் 17-ஆம் நாள் புனித ஞானப்பிரகாசியார் திருவிழாவிற்கான திருக்கொடி ஏற்றப்பட்டு, ஞானப்பிரகாசியார் திருவிழா ஆடம்பர பாடல் திருப்பலியுடன் ஆண்டுதோறும் துவங்குகிறது. அதனைத்தொடர்ந்து ஜூன் 21-ஆம் தேதி பாடல் திருப்பலிக்குப் பிறகு புனித ஞானப்பிரகாசியார் திருவிழா ஆரம்பமாகிறது. மிகச் சிறப்பாக சப்பர பவனியும் நடை பெறுகிறது. அதனைத்தொடர்ந்து அடுத்தநாள் புனித ஞானப்பிரகாசியார் திருக்கொடி இறக்கப்படுகிறது.
ஜூலை மாதம் 3- ஆம் தேதி நடைபெறும் புனித தோமையார் திருவிழாவிற்காக, புனித தோமையார் மலைக்கு ஆண்டுதோறும் ஜூன் 26-ஆம் தேதி திருயாத்திரையாக மலைத்தாதம்பட்டி மக்கள் செல்வது வழக்கமாகும்.
1940-1950 மற்றும் 1978-1980 - ஆம் ஆண்டுகளில் புனித தோமையார் நாடகமானது, ஜூலை 3-ஆம் தேதி நடத்தப்பட்டு வந்துள்ளது. சிலகால இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் தொடரப்பட்டு, இன்று வரை புனித தோமையாரின் வாழ்க்கை வரலாற்றை மலைத்தாதம்பட்டியைச் சேர்ந்த மக்களே இந்நாடகத்தில் மிக அற்புதமாக சித்தரிக்கப்பட்டு நடித்து வருவது தான் இதன் தனிச்சிறப்பாகும். ஜூலை 5-ஆம் தேதி புனித தோமையார் பெயரில் அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.
புனித பனிமய மாதாவை தங்கள் பாதுகாவலியாகக் கொண்டுள்ள ஊர் மக்கள் ஆண்டுதோறும் ஜனவரி 17-ஆம் தேதியன்று மலைத்தாதம்பட்டியிலிருந்து ஊர்வலமாக பொங்கல் வைப்பதற்காக புனித பனிமய மாதா ஆலயத்திற்குச் செல்வது இன்றுவரை பழக்கத்தில் உள்ளது. உடன் கால்நடைகளையும் அழைத்து வந்து மந்திரித்து புனித பனிமய அன்னையின் ஆலய வளாகத்தில் பொங்கல் வைத்து தங்களின் பக்தி முயற்சியினை வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இப்பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தகவல்கள்: மலையடிப்பட்டி மண்ணின் மைந்தர் அருட்பணி. ஜோசப் அற்புதராஜ், OFM Cap
மண்ணின் இறையழைத்தல்கள் மற்றும் ஆலய புகைப்படங்கள்: மலையடிப்பட்டி மண்ணின் மைந்தர் அருட்பணி. ஸ்டீபன் கஸ்பார் (திண்டுக்கல் மறைமாவட்டம்)