678 தூய அடைக்கல மாதா ஆலயம், திருநெல்வேலி டவுன்

    
தூய அடைக்கல மாதா ஆலயம்

இடம்: சாலியர் தெரு, திருநெல்வேலி மாநகர்

மாவட்டம்: திருநெல்வேலி

மறைமாவட்டம்: பாளையங்கோட்டை

மறைவட்டம்: பாளையங்கோட்டை

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்:

1. புனித சவேரியார் ஆலயம், திருநெல்வேலி டவுன்

2. புனித செபஸ்தியார் ஆலயம் திருநெல்வேலி டவுன்

3. புனித செபஸ்தியார் ஆலயம், கண்டியப்பேரி

4. புனித சவேரியார் ஆலயம், லாலுகாபுரம்

5. புனித வியாகப்பர் ஆலயம், கருப்பந்துறை

6. புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், காந்திநகர்

7. புனித அன்னம்மாள் ஆலயம், அபிஷேகப்பட்டி

8. புனித பரலோக மாதா ஆலயம், வெள்ளாளன்குளம்

9. சீதபற்றப்பநல்லூர் (ஆலயம் இல்லை)

பங்குத்தந்தை: அருள்பணி. மை. பா. சேசுராஜ்

குடும்பங்கள்: 375

அன்பியங்கள்: 16

வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி: காலை 08.30 மணி

புதன், வெள்ளி திருப்பலி: மாலை 06.30 மணி

திருவிழா: செப்டம்பர் மாதக் கடைசி ஞாயிறு.

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருள்பணி. R. ஆரோக்கியராஜ், கிளாரட் சபை

2. அருள்சகோதரி. R. ஐஸ்வர்யா ஜாய், FSJ

3. அருள்சகோதரி. மைக்கிள் எமிமா, SMMI (கண்டியபேரி)

4. Bro. சாமராய் டேரன்ஸ், SJ (லாலுகாபுரம்)

Location map: https://g.co/kgs/yBikWV

வரலாறு:

வரலாற்று சிறப்புமிக்க திருநெல்வேலி மாநகரில் அமைந்துள்ள தூய அடைக்கல மாதா ஆலய வரலாற்றைக் காண்போம்....

கி.பி 1650 -ம் ஆண்டுகளில் புனித பிரான்சிஸ் சவேரியாரின் மறைப்பரப்பின் வழியாக கிறிஸ்துவை நெல்லைப் பகுதி வாழ் மக்கள்உணர்ந்து கொண்டனர்.  

இத்தாலியில் பிறந்த காண்ஸ்டான்டின் ஜோசப் பெஸ்கி என்னும் பெயர் கொண்ட வீரமாமுனிவர், கி.பி 1711 ஆம் ஆண்டு மதுரை மறைமாவட்டத்தைச் சேர்ந்த காமநாயக்கன்பட்டியில் பங்குத்தந்தையாக பணிபுரிந்தார். அண்டிவருவோருக்கெல்லாம் அடைக்கல தாயாக மாதாவை எடுத்துரைத்தார். இதை ஏற்று மாதாவின் திருக்காவலில் மக்கள் தாழ்பணிந்தனர். இதன் விளைவாக வீரமாமுனிவர் கட்டிய குடிசை ஆலயங்களுக்கெல்லாம் மாதாவின் பெயரை சூட்டினார். 

இதில் ஏலாக்குறிச்சி, வடுகர்பேட்டை, பூண்டி, காமநாயக்கன்பட்டி, ஆலங்குளம் அருகில் உள்ள ஆண்டிப்பட்டி, தஞ்சையில் உள்ள அடைக்கல மாதா ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கது. அவரது பணிக்காலத்தில் நெல்லை டவுன் பகுதியிலும் பணிபுரிந்துள்ளார்.

இந்த வழித்தோன்றலில் நெல்லை மாநகரில் கி.பி 1787 ஆம் ஆண்டு தூய அடைக்கல மாதா குடிசை ஆலயம் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தைச் சுற்றி குறைந்த அளவே கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வந்ததால் இதனை பராமரிக்க இயலாமல் போகவே, நாளடைவில் ஒரு தம்பதியர் கட்டுப்பாட்டில் தனியார் ஆலயமாக விளங்கியது.

கி.பி.1962 ஆம் ஆண்டு பேட்டை பங்குத்தந்தை அருள்பணி. ஜார்ஜ் ஜோசப் சே.ச அவர்கள் பணிக்காலத்திலும், 1971 ம் ஆண்டில் பொறுப்பேற்ற அருள்பணி. மரிய மிக்கேல் பணிக்காலத்திலும் தூய அடைக்கல மாதா ஆலயத்தை, மறைமாவட்டத்திற்குப் பெற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. 

பின்னர் அருள்பணி.‌ எம். அருள் அடிகளார் பணிக்காலத்தில், பல நல்லுள்ளங்களின் இடைவிடாத முயற்சியின் பலனாக கி.பி 1981 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஆலயம் மற்றும் நிலம் மறைமாவட்டத்திற்கு இலவசமாக எழுதிக் கொடுக்கப் பட்டது. ஆலயத்தை திறப்பதற்காக கிளைப்பங்குகளின் பெரியவர்கள் அனைவரும் வரவழைக்கப்பட்டு, அருள்பணி. எம். அருள் அடிகளார் ஜெபித்து திறந்து வைத்தார்கள்.

பல ஆண்டுகளுக்குப் பின்னரும் அடைக்கல மாதாவின் சுரூபம் எவ்வித சேதமும் அடையாமல் புன்னகை பூத்த முகமாக இருந்தது. ஆலயத்தின் மேற்கு ஒளிவட்டப் பகுதி வழியாக, செப்டம்பர் மாதக் கடைசி சனிக்கிழமை மாதாவின் முகத்தில் ஒளி வந்து விழுமாறு இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. ஆகவே செப்டம்பர் மாதக் கடைசியில் ஆலயத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது‌. அருள்பணி. எம். அருள் அவர்களால் 28.03.1982 அன்று ஆலய நிர்வாகம் ஏற்படுத்தப் பட்டது.

1982 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற அருள்பணி. லூர்துராஜ் பணிக்காலத்தில் ஆலய முன்புற வாசல்களை விரிவுபடுத்தி புதுப்பித்து திருப்பலி நடத்த வசதியாக மாற்றினார்.  

1983 ஆம் ஆண்டு அடைக்கல அன்னை சிற்றாலயத்தில் பாலர்பள்ளி துவக்கப்பட்டது.

1984 ஆம் ஆண்டு மேதகு ஆயர் இருதயராஜ் தலைமையில் முதன் முதலாக திருவிழா சிறப்பாக கொண்டாடப் பட்டது.

1985 ஆம் ஆண்டு புதிய ஆலயம் கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, 1986 ஆம் ஆண்டு ஆலய கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டது. கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 27.12.1987 அன்று மேதகு ஆயர் இருதயராஜ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. 1987 ஆம் ஆண்டு (1787-1987) ஆலயத்தின் 200 -வது ஆண்டாக சிறப்பிக்கப்பட்டது.

தொடர்ந்து 12.02.1989 அன்று பேட்டை பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற அருள்பணி. S. சந்தியாகு அவர்கள் ஊர்நல கமிட்டியை உருவாக்கி, ஊர் பெரியவர்கள் பங்குத்தந்தையோடு இணைந்து பணிசெய்யும்  வாய்ப்பை உருவாக்கினார். இவரது பணிக்காலத்தில் முதன்முதலாக திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது. 1990 ஆம் ஆண்டு சிறிய கட்டிடம் கட்டப்பட்டு, அசிசி சபை அருள்சகோதரிகளுடன் அடைக்கல அன்னை பாலர்பள்ளி தொடங்கப் பட்டது.

1992 ஆம் ஆண்டு முதல் அருள்பணி. வியானி அவர்களும், 1993 ஆம் ஆண்டு முதல் அருள்பணி. பீட்டர் அடிகளாரும் சிறப்புற பணியாற்றினர். 1999 ஆம் ஆண்டு முதல் அருள்பணி. V. K. S. அருள்ராஜ் அவர்கள் பணிபுரிந்தார்கள். 2002 ஆம் ஆண்டு முதல் பேட்டை பங்கின் முதல் உதவிப் பங்குத்தந்தையாக அருள்பணி. மை. பா. சேசுராஜ் அவர்கள் பொறுப்பேற்று அன்பியங்களை தொடங்கினார்.

2003 ஆம் ஆண்டு பங்குத்தந்தையாக அருள்பணி. சூசை மரியான் அவர்களும், உதவிப் பங்குத்தந்தையாக அருள்பணி. வியாகப்ப ராஜூ அவர்களும் பணியாற்றினர். திருப்பலி பீடம் விரிவாக்கம் செய்யப்பட்டது. 

2004 ஆம் ஆண்டு அருள்பணி.‌ சகாயராஜன், அருள்பணி. செல்வராஜ் பொறுப்பேற்று, திருவிழாக் காலங்களில் நற்கருணை பவனி ஆரம்பிக்கப்பட்டது. மேலும் பேட்டை பங்கிலிருந்து பிரித்து, நெல்லை டவுன் அடைக்கல மாதா ஆலயத்தை பங்கு ஆலயமாக உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, 05.06.2005 அன்று தனிப்பங்காக உயர்த்தப்பட்டது.‌ கண்டியபேரி, டவுன் புனித செபஸ்தியார் ஆலயம், டவுன் புனித சவேரியார் ஆலயம், கருப்பன்துறை, லாலுகாபுரம், காந்திநகர், அபிஷேகப்பட்டி, வெள்ளாளன்குளம், சீதபற்றப்பநல்லூர், கருவநல்லூர், உகன்தான்பட்டி ஆகியன இதன் கிளைப்பங்குகளாயின. முதல் பங்குத்தந்தையாக அருள்பணி. அந்தோணி சேவியர் அவர்கள் பணிப் பொறுப்பேற்றார். பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டது. திருவிழாவிற்கு முதன் முதலாக மாதாவிற்கு சப்பரம் எடுத்து வீதியுலா வரச் செய்தார். கிளைப்பங்குகளான டவுன் புனித செபஸ்தியார் ஆலயத்தையும், கருப்பந்துறை புனித வியாகப்பர் ஆலயத்தையும் நற்கருணைப்பேழை -யுடன் புதிதாகக் கட்டினார்.

இரண்டாவது பங்குத்தந்தையாக அருள்பணி. அருள் அம்புரோஸ் அவர்கள் 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பொறுப்பேற்று ஆன்மீகப் பாதையில் வழிநடத்தி, 2011 ஆம் ஆண்டு வீரமாமுனிவர் அரங்கம் கட்டினார்.

2011 ஆம் ஆண்டு அருள்பணி.‌ அந்தோணி குரூஸ் அவர்கள் பொறுப்பேற்று, இளையோரை ஒருங்கிணைத்து ஊக்குவித்தார். 2012 ஆம் ஆண்டு 74 அடி உயரம் கொண்ட ஒரு மணிக்கோபுரம் கட்டினார். சிற்றாலயம் கட்டப்பட்ட 225 -வது ஆண்டு நினைவாகவும், புதிய ஆலயம் கட்டப்பட்ட 25 -வது ஆண்டு நினைவாகவும் மரியன்னைக்கு முடிசூட்டுதல், அன்னை தெரசா ஆடை தயாரிப்பகம் திறப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்குதல், அன்னையின் திருக்காட்சி எழில்மாட திறப்பு, அடைக்கலம் நீயே குறுந்தகடு வெளியீடு ஆகிய ஐம்பெரும் விழாவினை சிறப்பாக நடத்தினார்.

2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அருள்பணி. மை.பா. சேசுராஜ் அவர்கள் பணிப் பொறுப்பேற்று பங்கை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்தி வருகின்றார்.

பங்கில் தூய லூர்து மாதா கெபி ஒன்று உள்ளது.

ஆலய பங்கேற்பு அமைப்புகள்:

1. மரியாயின் சேனை

2. மறைக்கல்வி

3. புதுவாழ்வு ஜெபக்குழு

4. இளையோர் இயக்கம்

5. பாலர்சபை

6. பாடகற்குழு

7. பீடச்சிறார்

தகவல்கள்: பங்குத்தந்தை அருள்பணி. மை.பா. சேசுராஜ் அவர்கள்

புகைப்படங்கள்: பங்குத்தந்தையின் வழிகாட்டுதலுடன் பங்கு உறுப்பினர்