புனித பிரான்சிஸ் அசிசியார் மலங்கரை கத்தோலிக்க ஆலயம்
மாவட்டம் : கன்னியாகுமரி
மறைமாவட்டம் : மார்த்தாண்டம்
மறைவட்டம் : குலசேகரம்
நிலை : கிளைப்பங்கு
பங்கு : இயேசு மரியா திரு இருதய மலங்கரை கத்தோலிக்க ஆலயம், செருப்பாலூர்
பங்குத்தந்தை : அருள்தந்தை. ஜோஸ் பென்னட்
குடும்பங்கள் : 30
அருள் வாழ்வியங்கள் : 2
ஞாயிறு காலை 08.00 மணி காலை ஜெபம், காலை 08.30 மணி திருப்பலி.
வியாழன் மாலை 06.30 மணி செபமாலை, நவநாள், திருப்பலி.
திருவிழா : அக்டோபர் முதல் வாரத்தில் ஐந்து நாட்கள்.
மண்ணின் இறையழைத்தல் :
அருள்சகோதரி. டெய்சி மேரி (புனித அன்னாள் சபை)
வழித்தடம் : மார்த்தாண்டம் -குலசேகரம். அரசமூடு- பொன்மனை, பெருவழிக்கடவு ஜங்ஷன்.
Location map : https://maps.app.goo.gl/pXJoSiKMK5HRDCvk7
பெருவழிக்கடவு தூய பிரான்சிஸ் அசிசியார் மலங்கரை கத்தோலிக்க ஆலயத்தின் வரலாற்றுப் பாதை....
பெருவழிக்கடவு பகுதியில் கிறிஸ்தவ இறை நம்பிக்கையானது ஆண்டுகள் கடந்து உறுதியாய் நிலைத்து நிற்கிறது. பெரிய அளவில் கத்தோலிக்க இறை விசுவாசிகளின் எண்ணிக்கை இல்லாவிட்டாலும் பெருவழிக்கடவு சுற்று வட்டாரத்தில் உள்ள 30 குடும்பங்கள் இறை நம்பிக்கையில் சிறந்து விளங்கியதுடன், திருப்பலிக்கு குலசேகரம், பொன்மனை போன்ற இடங்களுக்கு சென்று வந்தனர்.
இத்தருணத்தில் போதிய போக்குவரத்து வசதி இல்லாததால் தொலைவிலுள்ள குலசேகரம், பொன்மனை பகுதிகளுக்கு சென்று திருப்பலியில் பங்கெடுப்பது சற்று கடினமாகவே இருந்தது. இதனால் பெருவழிக்கடவு பகுதியில் ஒரு ஆலயம் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் திரு. எலியாஸ், திரு. வர்கீஸ், திரு. வறுவேல் ஆகியோர் அணக்கரை பங்கைச் சார்ந்த திரு. நடராஜன் என்பவரின் உதவியுடன் மார்த்தாண்டம் மலங்கரை கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் மேதகு. யூகானோன் மார் கிறிஸோஸ்டோம் ஆண்டகை அவர்களை நாடினர்.
மேதகு ஆயர் அவர்கள் இவர்களின் வேண்டுகோளை ஏற்று, 2007 -ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அருட்தந்தை. ஜோசப் பத்ரோஸ் அவர்கள் தலைமையில் பல அருட்சகோதரர்கள் மற்றும் அருட்சகோதரிகளை பெருவழிக்கடவு பகுதிக்கு அனுப்பி வைத்தார். இவர்கள் விசுவாசிகளின் இல்லங்களை சந்தித்து ஜெபித்து வந்ததுடன், பெருவழிக்கடவு மக்களின் ஆன்மீகத் தேவையை பூர்த்தி செய்வதற்காக அருட்தந்தை ஜோசப் பத்ரோஸ் அவர்களின் பெருமுயற்சியால் இப்பகுதியில் 21 1/4 சென்ட் நிலம் வாங்கப்பட்டு, தூய பிரான்சிஸ் அசிசியாரை பாதுகாவலராக கொண்டு ஒரு சிறு ஆலயம் அமைத்து 27.12.2007 அன்று மாலை மேதகு ஆயர் யூகானோன் மார் கிறிஸோஸ்டோம் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு செருப்பாலூர் பங்கின் கிளை பங்காக உருவெடுத்தது. முதல் பங்குத்தந்தையாக அருட்தந்தை. ஜோசப் பத்ரோஸ் அவர்கள் பணி பொறுப்பேற்றார்.
ஓராண்டு காலம் அருட்தந்தை அவர்கள் ஞாயிறு காலை மற்றும் வியாழன் மாலை ஆகிய நாட்களில் திருப்பலி நிறைவேற்றியதுடன் ஆன்மீக தேவைகளையும் பூர்த்தி செய்து வந்தார். அதன்பின் தொடர்ந்து பணியாற்றிய அருட்தந்தை. ஸ்டீபன் செண்பகத்தோப்பு , அருட்தந்தை சிபி, அருட்தந்தை ஜார்ஜ் தாவரத்தில் ஆகியோர் அருள்வாழ்வியம், MIDS இயக்கம், பக்த சபை இயக்கங்களை உருவாக்கி ஊக்கப்படுத்தியுள்ளார்கள்.
இறைப்பணியில் ஆழப்பட கோல்பிங், இளைஞர் இயக்கம், பாலர் சபை இயக்கம் தொடங்கப்பட்டது. அருட் தந்தையர்களுடன் இணைந்து அருட்சகோதரி ரெஞ்சனா, அருட்சகோதரி சிறில் மற்றும் பல அருட்சகோதரிகள், அருட் சகோதரர்கள் மக்களை ஆன்மீகப் பாதையில் வழிநடத்தி வந்தனர்.
தொடர்ந்து 2015 -ஆம் ஆண்டு பணி பொறுப்பேற்ற பங்குத்தந்தை அருட்தந்தை. ஜோஸ் பென்னட் மற்றும் உதவி பங்குத்தந்தையர்கள் அருட்தந்தை ஜோஸ் பாறவிளை, அருட்தந்தை வினு இம்மானுவேல், அருட்தந்தை சஜின் ஏசுதாஸ் ஆகியோர் மக்களின் வளர்ச்சியில் தனி கவனம் செலுத்தினார்கள்.
ஆலயம் இருக்கும் இடம் பள்ளமாக இருப்பதால் பங்கு மக்களின் ஆலோசனையின் அடிப்படையில், புது ஆலயம் அமைக்க பங்குத்தந்தை அவர்களின் தலைமையில் தீர்மானிக்கப்பட்டது.
2.8.2016 அன்று மேதகு ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் ஆண்டகை அவர்களால் புது ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. மக்களின் உதவி மற்றும் பல நல்லுள்ளங்களின் நன்கொடைகளால் ஆலய கட்டுமானப் பணி தற்போது நடந்து வருகிறது. தற்போது அருட்சகோதரி ரீட்டா பிரான்சிஸ் அவர்கள் ஆன்மீகத் தாயாக இருந்து வழி நடத்தி வருகின்றார்கள்.
இவ்வாறு இறைவனின் அருளாலும், தூய பிரான்சிஸ் அசிசியார் பாதுகாப்பாலும், மக்களின் ஆன்மீகத்திலும் வளர்ச்சியிலும் அதிகம் அக்கறை கொண்ட பங்குத்தந்தையின் வழிநடத்துதலாலும் பங்கு மக்களின் ஒத்துழைப்பாலும் பெருவழிக்கடவு பங்கானது வளர்ச்சி கண்டு மறுமலர்ச்சி பாதையில் தன் பயணத்தைத் தொடர்ந்து வருகிறது .
பாசத்துடன் அருட்தந்தை. ஜோஸ் பென்னட்.
பங்கில் உள்ள சபைகள் மற்றும் இயக்கங்கள் :
1. பாலர்சபை
2. மரியாயின் சேனை
3. புனித வின்சென்ட் தே பவுல் சபை
4. தாய்மார் சங்கம்
5. மலங்கரை கத்தோலிக்க இயக்கம்
6. மலங்கரை கத்தோலிக்க இளையோர் இயக்கம்
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:
1. அருட்தந்தை. ஜோசப் பத்ரோஸ்
2. அருட்தந்தை. ஸ்டீபன் சென்பகத்தோப்பு
3. அருட்தந்தை. ஷிபி
4. அருட்தந்தை. ஜார்ஜ் தாவரத்தில்
5. அருட்தந்தை. ஜோஸ் பென்னட் (தற்போது..)
இணைப் பங்குத்தந்தையர்கள்:
1. அருட்தந்தை. ஜோஸ் பாறவிளை
2. அருட்தந்தை. வினு இம்மானுவேல்
3. அருட்தந்தை. சஜின் ஏசுதாஸ்.
புதிதாக கட்டப்பட்டு வரும் இவ்வாலய பணிகள் எவ்வித தொய்வுமின்றி, வேண்டிய உதவிகள் கிடைத்திடவும் விரைவில் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று அர்ச்சிக்கப்படவும் இறைவனிடம் நாம் இணைந்து ஜெபிப்போம்.
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்தந்தை. ஜோஸ் பென்னட் அவர்கள்.