671 புனித விண்ணேற்பு அன்னை ஆலயம், கீழவைப்பாறு

       

புனித விண்ணேற்பு அன்னை ஆலயம்

இடம்: கீழவைப்பாறு

மாவட்டம்: தூத்துக்குடி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: குறுக்குச்சாலை

நிலை: பங்குத்தளம்

பங்குத்தந்தை: அருள்பணி. L. அந்தனி ஜெகதீசன்

குடும்பங்கள்: 469

அன்பியங்கள்: 29

வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 05.30 மணி காலை 07.00 மணி

நாள்தோறும் திருப்பலி: காலை 06.00 மணி

முதல் வெள்ளிக்கிழமை காலை 06.00 மணி மற்றும் மாலை 06.00 மணிக்கு இறை இரக்க வழிபாடு

முதல் சனிக்கிழமை காலை 06.00 மணிக்கு திருப்பலி‌. மாலை 06.00 மணிக்கு மாதா நவநாள் திருப்பலி

திருவிழா: ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை

மண்ணின் இறையழைத்தல்கள்:

5 அருட்பணியாளர்கள் மற்றும் 2 அருட்சகோதரிகள்

வழித்தடம்: தூத்துக்குடி -கடற்கரை சாலை

தூத்துக்குடியிலிருந்து இராமேஸ்வரம் செல்லும் பேருந்தில் பயணித்து வைப்பாறில் இறங்க வேண்டும்

பேருந்து எண்: 53A, 53B, 53C & RBS bus service

மதுரை -குறுக்குச்சாலை -குளத்தூர் -கீழ வைப்பார்

Location map: https://g.co/kgs/PNjUQy

வரலாறு:

முற்காலத்தில் திராவிட நாட்டின் தென்பகுதியை பாண்டிய அரசு ஆண்டு வந்தது. இந்த நாட்டின் பாண்டிய குல சத்ரியனாக மீன் கொடி ஏந்தி நெய்தல் நிலத்து பரதவர்கள் ஆட்சியாளர்களாக, தளபதியாக, வீரர்களாக வாழ்ந்து வந்தனர். உலகப் புகழ் பெற்ற கொற்கை துறைமுகத்திலிருந்து முதன்முதலாக மேலைநாடுகளுக்கு இவர்கள் வணிகத் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். சீர்மிகு மீனவ பரதவ இனமக்கள் வாழ்ந்து வந்த ஊர்களில் ஒன்று தான் வைப்பாறு. தென்தமிழகத்தில் பாயும் வைப்பாறு நதியின் பெயரிலேயே இவ்வூரின் பெயரும் விளங்கலாயிற்று. பழையாறு, மஞ்சக்கழியாறு, கச்சடப்பு, பெரியாறு என நான்குப் பகுதிகளாக வைப்பாறு கடலில் கலக்கிறது.

முற்காலத்தில் சிறந்து விளங்கிய நகரங்கள், துறைமுகங்கள் அனைத்தும்  ஆற்றையடுத்தே உருவாயின. எனவே வைப்பாறு பெரிய நகராக வளமான மேய்ச்சல் பகுதிகளை உள்ளடக்கி "சிறிய வங்காளம்" என அழைக்கப்பட்டது. 13-ம் நூற்றாண்டில் பாண்டிய அரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, விஜயநகர பேரரசு ஆட்சியின் கீழ் குறுநில மன்னர்களாலும், பாளையக்காரர்களாலும், நாயக்கர்களாலும் இப்பகுதி ஆளப்பட்டது. எனவே ஆண்ட பரதவ இனம் அடிமை இனமானது.

முத்துக்குளித்தல், சங்கு குளித்தல், மீன் பிடித்தல், உப்புத்தொழில், வேளாண்மை, ஏற்றுமதி என தொழில்வளத்தில்  சிறந்து விளங்கியது வைப்பாறு. மாதத்திற்கு 2 அல்லது 3 சரக்குக் கப்பல்கள் வைப்பாறு துறைமுகத்திற்கு வந்து போகும். இவ்வேளையில் ஆட்சியாளர்களும், முகம்மதியரும் சேர்ந்து இவர்களை ஒடுக்கினர். முத்துக்குளித்தல் உரிமையை பறித்துக் கொண்டனர். ஏராளமான வரிச்சுமையை மக்கள் மேல் திணித்தனர். அரசியல், சமூக, பொருளாதார நிலையில் அடிமைப்பட்டுக் கிடந்த இம்மக்கள் விடியலை எதிர்நோக்கி வாழ்ந்தனர்... 

கிபி 1535 ஆம் ஆண்டு பரதவ குல மீனப் பெண்ணை, மூர்முகமதியன் தகாத வார்த்தைகளால் ஏளனமாகப்பேச, தனக்கு நேர்ந்த அவமானத்தை, அவள் தனது கணவனிடம் தெரிவிக்க, அவனும் அநியாயத்தை தட்டிக் கேட்க, கோபம் கொண்ட முகமதியன், மீனவனின் காதில் நீண்டு தொங்கிய வடிகாதினை கத்தியால் அறுத்து அதிலிருந்து முத்து பதித்த தங்க வளையத்தை பறித்துச் சென்றான். பரத குலத்திற்கே இது அவமானம் எனக் கருதப்பட்டது. தூத்துக்குடியில் பரதவர்களுக்கும் முகமதியர்களுக்கும் இனப்போர் நடந்தது. இருபுறமும் ஏராளமான உயர்ச்சேதம் ஏற்பட்டது. ஆட்சியாளர்கள் பரதவர்களுக்கு கடுமையான வரிகளை விதித்துக் கொண்டேயிருந்தனர். 

இவ்வேளையில் கேரளாவின் மலபார் பகுதியைச் சேர்ந்த ஜான் டி குரூஸ் என்ற வியாபாரியின் யோசனைப்படி, போர்த்துக்கீசியர்களின் ஆதரவைப் பெற பரதவ மக்கள் கிறிஸ்தவ திருமறையைத் தழுவவும், நிரந்தர பாதுகாப்பிற்கு இதுவே தீர்வு எனவும் எண்ணி

உறுதி கொண்டனர். முதலில் 15 பேர் அதன்பிறகு 70 பேர் (வைப்பாறு ஊரில் இருவர்) என பரதவ சமுதாயத்தின் எல்லா ஊர்களிலிருந்தும் பெரிய குரு மிக்கேல் வாஸ் என்பவரின் திருக்கரங்களால் திருமுழுக்குப் பெற்றனர்.  தொடர்ந்து எல்லா கடற்கரை ஊர்களிலும் திருமுழுக்கு நடைபெற்று மக்கள் கிறிஸ்தவம் தழுவினர். 

கி.பி 1537 ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் வைப்பாறு மக்கள் திருமுழுக்குப் பெற்றனர். "ஒரு வடிகாதினைக் கொண்டு ஆயிரக்கணக்கான ஆன்மாக்களை மீட்டார்" என இந்நிகழ்வை சுவாமி தேக்ஸயிரா கி.பி.1580 ஆம் ஆண்டில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே ஒரு இனம் முழுவதும் திருமறையைத் தழுவியதென்றால் அது பரதவ இனமேயாகும். 

புனித பிரான்சிஸ் சவேரியார் வருகை:

கி.பி 1542-ம் ஆண்டு மே 6ம் நாளில் கோவா வந்தடைந்த புனித பிரான்சிஸ் சவேரியார், அதன் பிறகு முத்துக்குளித்துறை பகுதி முழுவதும் குறிப்பாக "ஏழுகடல்துறையில்" (வேம்பாறு, வைப்பாறு, தூத்துக்குடி, புன்னைக்காயல், வீரபாண்டியன்பட்டணம், திருச்செந்துர், மணப்பாடு) மறைப்பணிகளில் ஈடுபட்டார். குறிப்பாக வைப்பாறில் 20 நாட்களுக்கு மேலாகத் தங்கியிருந்து  ஏராளமான மக்களுக்கு திருமுழுக்கு வழங்கினார். ஏராளமான புதுமைகளையும் இங்கு நிகழ்த்தினார். அந்நாட்களில் வைப்பாறில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வந்தனர். 

ஆலயம்:

கி.பி 1549 ஆம் ஆண்டு முதல் ஆலயம் அமைக்கப்பட்டது. வடுகர்களால் இவ்வாலயம் அழிக்கப்பட்டது. பின்னர் 1551-ம் ஆண்டு இரண்டாவது ஆலயம் கட்டப்பட்டது. இந்த ஆலயமும் சிதிலமடைந்து போகவே, கி.பி. 1599-ம் ஆண்டு தற்போது உள்ள ஆலயம் கட்டப்பட்டு கி.பி. 1600 ஆம் ஆண்டு மாதாவின் பெயரில் புனிதப்படுத்தப் பட்டது.

கி.பி. 2000 ஆம் ஆண்டில் ஆலயத்தின் 400-வது ஆண்டுவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மாதாவின் சுரூபம்:

இம்முன்னோர்கள் கிறிஸ்தவ திருமறையைத் தழுவிய பின்னரும் கூட பிற பெண் தெய்வங்களை வணங்கி வந்தனர். இந்த நிலையிலிருந்து இவர்களை மனம்மாற்ற மணிலாவிலிருந்து 1555-ம் ஆண்டு தூத்துக்குடி பேராலயத்திற்கு மாதா சுரூபம் கொண்டுவரப் பட்டது போல, இத்தாலி நாட்டின் லொரோற்றா நகரிலிருந்து இயேசு சபை குருக்களால் 1557-ம் ஆண்டு மாதாவின் சுரூபம் வைப்பாறு கொண்டு வரப்பட்டது. 463 ஆண்டுகளாக மாதாவின் சுரூபம் வர்ணம் பூசப்படாமலே வனப்போடும், வளமையோடும் காட்சியளிப்பது தனிச்சிறப்பு. வனப்போடு வீற்றிருக்கும் மாதாவை இறைமக்கள் பரலோக மாதா, மோட்ச இராக்கினி, மோட்ச அலங்காரி, விண்ணக அரசி, விண்ணேற்பு அன்னை எனப்பல சிறப்புப் பெயர்களால் அழைக்கின்றர்.

பங்கு உதயம்:

கி.பி 1532 ஆம் ஆண்டு முதல் போர்த்துக்கீசியர் ஆளுகையின் கீழும்,1658 ஆம் ஆண்டு டச்சுக்காரர்கள் ஆளுகையிலும், 1782 ஆம் ஆண்டு முதல் ஆங்கிலேயர்கள் ஆளுகையிலும் இருந்த இப்பகுதி மக்கள், கத்தோலிக்க விசுவாசத்தில் நிலைத்து இருப்பது வியப்புக்குரியது. கி.பி 1537-ல் கோவா மறைமாநில ஆளுகையில் வைப்பாறு இருந்தது. கத்தோலிக்க குருவானவர் என்ற முறையில் முதலில் புனித பிரான்சிஸ் சவேரியார், இரண்டாவதாக அருள்பணி. அந்தோணி கிரிமினாலி மூன்றாவதாக அருள்பணி. என்றி என்றிக்ஸ் ஆகியோரது மேற்பாற்வையில் வைப்பாறு இருந்தது. குருக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று திருப்பலிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டு வந்தது. ஆலய உபதேசியார் ஞாயிறு செப வழிபாட்டை நடத்தி வந்தார். ஞாயிறு காலையில் ஆண்களும், மாலையில் பெண்களும் ஞான உபதேசம் பெற்று வந்தனர். கி.பி 1603 ம் ஆண்டு அருள்பணி.‌ பெர்னார்டு டி அல்மெய்தா என்பவர் முதல் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார். இயேசுசபை குருக்களே தொடர்ந்து பணியாற்றி வந்தனர்.

திருத்தேர் பவனி:

கி.பி 1700 ஆம் ஆண்டிலிருந்து மாதாவின் தேர் கடந்த 320 ஆண்டுகளாக ஊரை வலம் வந்து கொண்டிருக்கிறது. ஒருசில ஆண்டுகளில் மட்டுமே (பஞ்சம், ஊர் பிரச்சனை, கொள்ளை நோய், கொரோனா -2020ம் ஆண்டு) தேர்பவனி நடைபெறவில்லை.

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

1. திருக்குடும்ப சபை

2. புனித அமல அன்னை இளம்பெண்கள் சபை

3. நற்கருணைவீரர் சபை

4. பாலர்சபை

5. மரியாயின் சேனை

6. புனித வின்சென்ட் தே பவுல் சபை

7. புனித விண்ணேற்பு அன்னை இளைஞர் இயக்கம்

8. மோட்சராக்கினி மாதா பாடகற்குழு

9. திருவழிபாட்டுக் குழு

10. புனித பிரான்சிஸ் சவேரியார் மறைக்கல்வி மன்றம்

11. அன்பிய பொறுப்பாளர்கள் கூட்டமைப்பு

12. ஆலயப் பணியாளர்கள்

பங்கில் உள்ள கெபி/ சிற்றாலயம்:

1. புனித அந்தோனியார் சிற்றாலயம்

2. புனித சவேரியார் கெபி

3. புனித இஞ்ஞாசியார் கெபி

பங்கில் உள்ள கல்வி நிறுவனங்கள்:

1. புனித லூயிஸ் பாலர் பள்ளி

2. புனித லூயிஸ் RC தொடக்கப்பள்ளி

3. புனித லூயிஸ் மேல்நிலைப் பள்ளி

பங்கில் உள்ள இல்லம்/ மருத்துவமனை:

1. இயேசுவின் திருஇருதய சபை துறவற இல்லம் (Sacred Heart Sisters convet)

2. புனித மோட்ச அலங்காரி மருத்துவமனை

பங்கில் பணிபுரிந்த பங்குத்தந்தையர்கள்:

முதல் பங்குத்தந்தை அருட்திரு. பெர்னார்ட் டி அல்மெய்தா (1603-)

அருட்திரு. C. நாசரேத், மயிலை உயர் மறைமாவட்டத்திலிருந்து கீழவைப்பாறில் பணியாற்றிய கடைசி பங்குத்தந்தை ஆவார்.

1930-ம் ஆண்டு முதல் தூத்துக்குடி மறைமாவட்டத்துடன் கீழவைப்பாறு பங்கு இணைந்தது.

1. அருட்திரு. F. M. பாக்கியர் (1930)

2. அருட்திரு. மத்தேயு பர்னாந்து (1930-1933)

3. அருட்திரு. மரியதாசன் (1933-1935)

4. அருட்திரு. பயாப்பள்ளி (1935-1939)

5. அருட்திரு. அந்தோனி. S. பர்னாந்து (1939-1946)

6. அருட்திரு. பால் பாண்டியன் (1947-1951)

7. அருட்திரு. L. K. பர்னாந்து (1951-1953)

8. அருட்திரு. J. அகஸ்தீன் (1953-1955)

9. அருட்திரு. T.  மஸ்கரனாஸ் (1955-1960)

9. அருட்திரு. M. வியாகுலம் (1960-1962)

10. அருட்திரு. ரிச்சர்ட் ரோட்ரிகோ (1963-1967)

11. அருட்திரு.‌சேசு அருளப்பன் (1967-1970)

12. அருட்திரு. J. S. லோபோ (1970-1971)

13. அருட்திரு. T. P. அலங்காரம் (1972)

14. அருட்திரு. வெனான்சியுஸ் பர்னாந்து (1973-1974)

15. அருட்திரு.‌ சேவியர் இக்னேசியஸ் (1974-1978)

16. அருட்திரு. ஜெபமாலை பிச்சை (1978-1982)

17. அருட்திரு. தாசன் தல்மெய்தா (1982)

18. அருட்திரு. சேசு அருளப்பன் (1982)

19. அருட்திரு. கருணாகரன் கோமஸ் (1983-1985)

20. அருட்திரு. அன்றன் குரூஸ் (1985-1988)

21. அருட்திரு. ஆர்தர் ஜேம்ஸ் (1988-1990)

22. அருட்திரு. A. J. ரெக்ஸ் (1990)

23. அருட்திரு. ஜோசப் இசிதோர் (1991)

24. அருட்திரு.‌ குரூஸ் மரியான் (1992)

25. அருட்திரு. அமலதாஸ் (1993-1994)

26. அருட்திரு. ரூபர்ட் அருள்வளன் (1994-2000)

27. அருட்திரு.‌ T. ஸ்டார்வின் (2000-2002)

28. அருட்திரு. ரவீந்திரன் பர்னாந்து (2002-2007)

29. அருட்திரு. மரிய வளன் (2007-2010)

30. அருட்திரு. R. பிரதீப் (2010-2012)

31. அருட்திரு. விளாட்மிர் டிக்ஸன் (2012-2017)

32. அருட்திரு. அலாய்சியஸ் (2017-2019)

33. அருட்திரு. L. அந்தனி ஜெகதீசன் (2019 ஜூன் முதல்..)

மிகவும் பழைமையான, புதுமைகள் நிறைந்த கீழவைப்பாறு புனித விண்ணேற்பு அன்னை ஆலயம் வாருங்கள்.. இறையாசீர் பெற்றுச் செல்லுங்கள்..

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்திரு. அந்தனி ஜெகதீசன் அவர்கள்

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் உதவி: பங்கின் இளைஞர்