715 புனித அருளானந்தர் ஆலயம், காளையார்கோவில்

    

புனித அருளானந்தர் ஆலயம்

இடம்: காளையார்கோவில்

முகவரி: காளையப்பன் தெரு, காளையார்கோவில், சிவகங்கை, 630551

மாவட்டம்: சிவகங்கை

மறைமாவட்டம்: சிவகங்கை

மறைவட்டம்: சிவகங்கை

பங்குத்தந்தை: அருள்பணி. சூசை ஆரோக்கியசாமி

தொடர்புக்கு: 9655277224

உதவிப் பங்குத்தந்தை: அருள்பணி. கென்னடி, IVD

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்:

1. புனித அடைக்கல அன்னை ஆலயம், புலிக்கண்மாய்

2. புனித சந்தியாகப்பர் ஆலயம், சீகூரணி

3. புனித செபஸ்தியார் ஆலயம், வலையம்பட்டி

4. புனித வனத்து அந்தோனியார் ஆலயம், மத்திக்கண்மாய்

5. புனித வனத்து அந்தோனியார் ஆலயம், ஆண்டூரணி

6. புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், பருத்திக்கண்மாய்

7. புனித அடைக்கல அன்னை ஆலயம், பெரிய நரிக்கோட்டை

8. புனித சூசையப்பர் ஆலயம், மோர்குழி

9. புனித அடைக்கல அன்னை ஆலயம், துவரலங்கண்மாய்

10. புனித சவேரியார் ஆலயம், செவல்புஞ்சை

11. புனித வனத்து அந்தோனியார் ஆலயம், உசிலங்கண்மாய்

12. புனித பதுவை அந்தோனியார் ஆலயம், அய்யனார்குளம்

13. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், சிலையாவூரணி

14. புனித சவேரியார் ஆலயம், காஞ்சிப்பட்டி

15. புனித சந்தியாகப்பர் ஆலயம், கல்லணை

16. மேட்டுப்பட்டி

17. அழகாபுரி & கொல்லங்குடி

குடும்பங்கள்: 747 (கிளைப் பங்குகள் சேர்த்து 747+608=1355)

திருவழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி: காலை 06:30 மணி மற்றும் காலை 08:30 மணி

நாள்தோறும் திருப்பலி மாலை 05:30 மணி

புதன்கிழமை மாலை 05:30 மணிக்கு புனித அருளானந்தர் நவநாள் திருப்பலி

சனிக்கிழமை மாலை 05:30 மணிக்கு புனித சகாய மாதா நவநாள் திருப்பலி

மாதத்தின் முதல் வியாழக்கிழமை மாலை 05:30 மணிக்கு சிறப்பு நற்கருணை ஆராதனை திருப்பலி

மாதத்தின் இரண்டாம் வெள்ளிக்கிழமை மாலை 05:30 மணிக்கு அருங்கொடை ஒப்புரவு, சிறப்பு வழிபாடு, திருப்பலி 

திருவிழா: பிப்ரவரி மாதத்தின் முதல் சனி, ஞாயிறு. அதற்கு 9 நாட்களுக்கு முன் கொடியேற்றப்பட்டு நவநாட்கள் சிறப்பிக்கப்படும்.

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருள்பணி. M. ஆசீர்வாதம், Sivagangai Diocese

2. அருள்பணி. ஜோசப், MSFS

3. அருள்பணி.‌ செபஸ்தி L. ராஜ், SJ

4. அருள்பணி.‌ ஸ்டாலின், MIC

5. அருள்பணி.‌ ஆல்பர்ட், MSFS

6. அருள்பணி.‌ அந்தோணி ஆல்பர்ட் சுரேஷ், SJ

7. அருள்பணி.‌ ஆரோக்கியதாஸ், Vincentian

8. அருள்பணி.‌ கிறிஸ்டோபர், Vincentian

9. அருள்பணி.‌ திரவியம், Sivagangai Diocese

10. அருள்பணி.‌ பிரான்சிஸ், OCD

11. அருள்பணி. ஜேம்ஸ், Jhabua Diocese, MP

12. அருள்பணி. ராஜா ஜெகன், Sivagangai Diocese

13. அருள்பணி. லாரன்ஸ் கென்னடி, Aizwal diocese, Mizoram

14. அருள்பணி. லாரன்ஸ், MSFS

15. அருள்பணி. லியோ அலெக்ஸ், SVD

16. அருள்பணி. மைக்கேல், SJ

17. அருள்பணி.‌ நிக்கோலஸ், SJ

18. அருள்பணி.‌ பன்னீர் செல்வம், Baruitur diocese, Kolkatta

19. அருள்பணி. செபாஸ்டின், Sivagangai Diocese

20. அருள்பணி.‌ ஸ்டீபன், MSFS

21. அருள்பணி. சூசை, Gowhathi diocese, Assam

22. அருள்பணி. தாமஸ், MMI

23. அருள்பணி. ஜோசப் செங்கோல், IVD

24. அருள்பணி.‌ ஜோசப் ஜான் கென்னடி, Sivagangai Diocese

25. அருள்பணி. சாமிநாதன், Sivagangai Diocese

26. அருள்பணி. மரிய சூசை, Delhi Diocese

27. அருள்பணி. டோமினிக் ஆரோக்கியம், SJ 

28. அருள்பணி. ஜான் பிரிட்டோ, Baruitur diocese, Kolkatta

29. அருள்பணி. பிரிட்டோ மைக்கேல் செல்வம், MSFS

மற்றும் 100-க்கும் மேற்பட்ட அருட்சகோதரிகள்.

Location map:

https://g.co/kgs/4o58uU

வரலாறு:

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முக்கியமான இடங்களில் காளையார்கோவில் வரலாற்று சிறப்பு மிக்க ஊர் ஆகும். சுதந்திர போராட்ட வரலாற்றில் அழியாத தடம் பதித்த மருது பாண்டியர்களால் கட்டப்பட்ட, உயர்ந்த கோபுரம் கொண்ட காளீஸ்வரர் கோவிலும், மருது சகோதரர்களின் நினைவிடமும் கொண்ட ஊர். 

அமைவிடம்:

காளையார்கோவில் மதுரையில் இருந்து தொண்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், சிவகங்கையில் இருந்து 18கி.மீ கிழக்கில் அமைந்துள்ளது.‌ இவ்விடம் சுற்றுப்புற கிராமங்களுக்கு மையமாக திகழ்ந்து வருவதால், அதிவேகமாக வளர்ச்சியுடன் ஒரு நகரமாக வளர்ந்து வருகிறது.

ஊர் சிறப்புகள்:

இங்கு வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், அரசு நூற்பாலை, மாவட்ட அரசு ஆசிரியப் பயிற்சி நிறுவனம், மேம்படுத்தப்பட்ட அரசு சுகாதார நிலையம், காவல் நிலையம், வட்டாரக் கல்வி அலுவலகம், அரசு மேல்நிலைப் பள்ளி, இரண்டு ஊராட்சித் தொடக்கப் பள்ளிகள், அனல் மின்நிலையம் போன்ற அரசு பணியகங்கள் உள்ளன. மேலும் மறைமாவட்ட அருளானந்தர் தொழில் கல்வி நிறுவனம், தனியார் பொறியியல் கல்லூரி, 5 தனியார் ஆங்கிலவழி கல்வி நிறுவனங்கள், 4 தனியார் மருத்துவமனைகள், ஒரு செவிலியர் பயிற்சி நிறுவனம் போன்றவை இருப்பதால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது.

மக்களின் வாழ்க்கை நிலை:

காளையார்கோவிலில் இந்து, கிறித்தவ, இஸ்லாமிய சமங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 14,000 மக்கள் வாழ்கின்றனர்.‌ பெரும்பாலான மக்கள் விவசாயிகளே. குறிப்பாக நெல், கரும்பு, கடலை, மா, மிளகாய், காய்கறிகள், தென்னை, வாழைத் தோட்டங்கள் வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் வியாபாரிகள், ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள், இராணுவம், வெளிநாடு படிப்பு மற்றும் போக்குவரத்து வசதிக்காகவும் பலர் இங்கு குடியிருக்கின்றனர்.

காளையார்கோவிலும் கிறிஸ்தவ வரலாறும்:

காலம்தொட்டு பிறசமய மக்களின் வாழ்விடமாகவே இருந்த காளையார்கோவிலில், சிவகங்கை மறைமாவட்ட பாதுகாவலரான புனித அருளானந்தருக்கு சிறப்பு இடம் உண்டு. 

1686 ஆம் ஆண்டு மே 5-ம் நாளில் பனங்குடி என்னும் இடத்தில் அதாவது மறவ நாட்டு எல்லைக்குள், மறைப்பணிக்காக நுழைந்தார் புனித அருளானந்தர். இவர் சூராணம் பகுதியில் உள்ள வெள்ளைக்குளம் என்னுமிடத்தில் தங்கி தோக்கனேந்தல், அரண்மனைக்கரை, சேத்தூர் ஆகிய கிராமப்பகுதிகளில் கிறிஸ்தவ மறையை மக்களிடம் போதித்தார். அதன் பயனாக 2070 பேர் திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவ மறையில் இணைந்தனர்.

அப்போது, பாகனேரி பகுதியில் ஆட்சி செய்த குமாரப்பிள்ளை (இராமநாதபுரம் மன்னர் சேதுபதியின் அமைச்சர்) இச்செய்தியைக் கேள்விப்பட்டு புனிதரை கைது செய்ய விரைந்தார். 1686 ஆம் ஆண்டு ஜூலை 17-ம் நாள் மறவமங்கலம் அருகில் புனிதரையும் அவரது 6 சீடர்களையும் முதல் முறையாக கைது செய்து, மரத்தில் கட்டி வைத்து துன்புறுத்தி, கிறிஸ்தவ விசுவாசத்தை மறுதலிக்கக் கட்டாயப்படுத்தினர். 

மறுதினம், அதாவது ஜூலை 18-ம் நாள் மாலையில் திருக்கானப்பேர்  என்ற காளையார்கோவிலுக்கு அவர்களை கொண்டு வந்தனர்.‌ பின்பு மரங்கள் அடர்ந்த பகுதியான 'புளியந்தோப்பு' என்னுமிடத்தில், புனித அருளானந்தரை இரு மரங்களுக்கு இடையே வில் போன்று கட்டி தொங்க விட்டு துன்புறுத்தினர். புனிதரின் இப்புனித வியர்வை, இரத்தத் துளிகள் விழுந்த இந்த இடத்தில் புனித அருளானந்தருக்கு ஆலயம் எழுப்பப் பட்டுள்ளது என்பது தான், காளையார்கோவில் ஆலயத்தின் தனிச் சிறப்பு.

பின்பு புனிதரையும், அவரது 6 சீடர்களையும் காளையார்கோவில் சின்னக்கோபுர வாயில் வழியாக அழைத்துச் சென்று, உள்ளே உள்ள நிலவறைச் சுரங்கத்தில் சிறை வைத்தனர். அப்போது பசி, பட்டினி, தாகம், இருள், உடல் காயங்கள் என பல்வேறு துன்பங்களுக்கு ஆளானார்கள். அவர்கள் அனைவரும் இந்த கொடுமையான தண்டனையால் இறந்து போயிருப்பார்கள் என தீர்மானித்து, 10 நாட்களுக்குப் பிறகு நிலவறையை திறந்து பார்த்தவர்கள் அதிர்ந்து போயினர்... காரணம் புனித அருளானந்தரும் அவரது சீடர்களும் உயிருடன் செபித்துக் கொண்டிருந்தனர். மட்டுமல்லாமல் முகமலர்ச்சியோடு இருந்ததைக் கண்டு அதிசயித்து சிலுவை நாயகராம் கிறிஸ்து இயேசுவின் மாட்சிமையைக் கண்டு, புனிதரிடம் ஏதோ ஒரு இறைசக்தி இருப்பதாக மக்கள் பேசிக் கொண்டனர். 

அதன் பிறகு ஓரியூரில் புனித அருளானந்தர் தலைவெட்டுண்டு வேதசாட்சியானார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே...

புனித அருளானந்தர் ஆலயம் கட்டப்பட்ட வரலாறு:

சூசையப்பர்பட்டணம் பங்கின் கிளை கிராமமாக காளையார்கோவில் இருந்து வந்தது.‌ அப்போது 6 கத்தோலிக்க குடும்பங்களே இங்கு வாழ்ந்து வந்தனர். தொலைநோக்கும் சமூக சிந்தனையும் கொண்டிருந்த அப்போதைய பங்குத்தந்தை அருள்பணி.‌ வேதமுத்து அடிகளார், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் காளையார்கோவிலில் தற்போது ஆலயம் அமைந்துள்ள இடத்தை, கல்விப் பணிக்கு தேவையென விலைக்கு வாங்கினார். 

அதைத் தொடர்ந்து பணி புரிந்த மூன்று பங்குத்தந்தையர்களுக்குப் பின் பொறுப்பேற்ற அருள்பணி.‌ ஜோசப் சேவியர் அவர்கள், எதிர் வந்த பல எதிர்ப்புகளை முறியடித்து, சுற்றுச்சுவர் எழுப்பி நர்சரி பள்ளிக்கூடம் கட்டினார். இந்த கட்டிடமானது மதுரை பேராயர் மேதகு ஜஸ்டின் திரவியம் அவர்களால் 16.04.1975 அன்று திறந்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து பணிபுரிந்த அருள்பணி.‌ பீட்டர் குழந்தை அவர்கள், சூசையப்பர்பட்டணம் கிராமத்தில் இருந்து இறைமக்கள் பங்கேற்புடன் ஊர்வலமாக புனித அருளானந்தர் சுரூபத்தை காளையார்கோவில் கொண்டு வந்து நிறுவினார். ஞாயிறு தோறும் மாலையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது.‌ குடும்பங்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது. மேலும் அருள்பணி.‌ பீட்டர் குழந்தை அவர்கள், சூசையப்பர்பட்டணத்தில் இருந்து தேர் அலங்காரம் செய்து கொண்டு வந்து, அனைவரின் ஒத்துழைப்புடன் ஆண்டுப் பெருவிழா எடுத்து சிறப்பித்தார்.

அதன் பிறகு காளையார்கோவிலில் ஒரு ஆலயம் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற, அருள்பணி. பாத்திமாநாதன் பணிக்காலத்தில், இங்கிருந்த 16 குடும்பங்களின் ஒத்துழைப்புடன், பல நல் உள்ளங்களின் நிதி உதவியுடன் 1982 ஆம் ஆண்டு புனித அருளானந்தர் ஆலயத்தைக் கட்டினார்.

தொடர்ந்து தங்களின் தேவைகளுக்காக கிராமங்களில் இருந்து பலர் காளையார்கோவில் பகுதியில் குடியேறினர். இறைமக்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. தற்போது பங்கில் 747 கத்தோலிக்க குடும்பங்கள், கிளைப் பங்குகளில் 608 குடும்பங்கள் என மொத்தம் 1355 கத்தோலிக்க குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

30.08.1987 அன்று சிவகங்கை மறைமாவட்டம் உதயமான போது, இப்பகுதி வாழ் இறைமக்களின் ஆன்மீக வசதிக்காக, காளையார்கோவில் தனிப் பங்காக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இக்கோரிக்கையை கருத்தில் கொண்டு, மறைமாவட்ட பாதுகாவலர் புனித அருளானந்தரின் 300-வது ஆண்டு மறைசாட்சி விழாவின் நினைவாக, மேதகு ஆயர் எட்வர்ட் பிரான்சிஸ் அவர்களால், சூசையப்பர்பட்டணம், ஆண்டிச்சூரணி பங்குகளில் இருந்து 18 கிளை கிராமங்கள் பிரிக்கப்பட்டு,  காளையார்கோவில் பங்காக 16.06.1993 அன்று உருவாக்கப் பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருள்பணி. S. R.  இக்னேஷியஸ் அவர்கள் பொறுப்பேற்று சிறப்பாக வழிநடத்திச் சென்றார்.

ஆலய விரிவாக்கம்:

இறைமக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே அருள்பணி.‌ சேவியர் பணிக்காலத்தில் ஆலய முன்பகுதி விரிவாக்கம் செய்யப்பட்டது. சாலையோரத்தில் மணிக்கூண்டு, புனித ஆரோக்கிய அன்னை கெபி ஆகியன கட்டப்பட்டு மேதகு ஆயர் எட்வர்ட் பிரான்சிஸ் அவர்களால் 24.05.2001 அன்று அர்ச்சிக்கப்பட்டது.

அதன் பிறகு அருள்பணி. அற்புத அரசு பணிக்காலத்தில், இறைமக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே இடப்பற்றாக்குறையை போக்க, ஆலயத்தின் முன்புறம் ஆஸ்பெஸ்டாஸ் கூடாரம் அமைத்து, ஆலய பலிபீடம் புதுப்பிக்கப்பட்டு, ஆலய முன்புற கோபுரம் அமைத்து புதுப் பொலிவு பெறச் செய்து, 26.11.2017 அன்று மேதகு ஆயர் சூசை மாணிக்கம் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது. 

மேலும் தற்போதைய பங்குத்தந்தை அருள்பணி. ச.‌ சூசை ஆரோக்கியசாமி அவர்களின் முயற்சியால், இறைமக்களின் பங்களிப்புடன் ஞாயிறு மறைக்கல்வி வகுப்புகள் மற்றும் திருப்பலிக்கு வசதியாக பழைமையான பள்ளிக்கூடத்தை புதுப்பித்தார். மேலும் 75 அடி நீளம் 27 அடி அகலம் கொண்ட பெரிய அரங்கம் அருள்பணி. வேதமுத்து அவர்கள் பெயரில் அமைக்கப்பட்டது. இறைமக்களின் பங்களிப்புடன் ஆலயத்தின் முன்பு பேவர் பிளாக் அமைத்து, புதிய நுழைவு வாயில் அமைக்கப்பட்டு 11.07.2021 அன்று திறந்து வைக்கப்பட்டது.

இவ்வாலயத்தில் வந்து ஜெபித்து பலனடைந்தோர் ஏராளம்.. ஏராளம்... ஆகவே ஆலயம் புதுப்பொலிவு பெற வேண்டும் என்ற எண்ணம் தொன்றிய போது இறைமக்கள் தாராளமாக கொடுத்து உதவியது சான்றாக அமைந்தது.‌ தவக்காலங்களிலும், விழாக் காலங்களிலும், வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை செல்லும்போதும் இறைமக்கள் இவ்வாலயத்தில் தங்கி ஜெபிப்பதும், நேர்ச்சை செய்து நன்றியோடு வருவதும் இன்றுவரை தொடர்கிறது..

பங்கில் பணிபுரியும் அருட்சகோதரிகள்:

காளையார்கோவில் பங்கு சீகூரணி யில் தூய ஆவியார் சபை அருட்சகோதரிகள் 01.06.1996 முதல் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்து Holy Spirit Matric Higher Secondary School அமைத்து கல்விப்பணியாற்றி வந்தனர். பின்னர் 28.11.1996 ல் அருட்சகோதரிகள் இல்லம் கட்டப்பட்டு தொடர்ந்து கல்விப்பணி, ஆன்மீகப் பணியையும் நிறைவேற்றி வருகின்றனர்.

பங்கில் உள்ள பள்ளிக்கூடங்கள்:

1. R. C நடுநிலைப் பள்ளி, புலிக்கண்மாய்

2. R. C நடுநிலைப் பள்ளி, துவரலங்கண்மாய்

3. R. C தொடக்கப் பள்ளி, வலையம்பட்டி

பங்கில் உள்ள பணிக்குழுக்கள்:

1. மறைக்கல்வி

2. புனித வின்சென்ட் தே பவுல் சபை

3. மரியாயின் சேனை

4. குடும்ப நலவாழ்வு பணிக்குழு

5. நற்செய்திப் பணிக்குழு

6. இளையோர் பணிக்குழு

7. பாடகற்குழு

8. பெண்கள் பணிக்குழு

9. அன்பியப் பணிக்குழு

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. அருள்திரு. S. R.  இக்னேஷியஸ் (1993-1998)

2. அருள்திரு. V. சேவியர் (1998-2003)

3. அருள்திரு. அகஸ்டின் (2003-2008)

4. அருள்திரு. தாமஸ் (2008-2013)

5. அருள்திரு. அற்புத அரசு (2013-2018)

6. அருள்திரு. ச.‌ சூசை ஆரோக்கியசாமி (2018 முதல்...)

சிறப்பு வாய்ந்த புதுமைகள் நிறைந்த, புனித அருளானந்தரின் இரத்தமும் வேர்வையும் சிந்திய புண்ணிய பூமியாம் காளையார்கோவில் ஆலயம் வாருங்கள்.. புனிதரின் வழியாக இறையாசீர் பெற்றுச் செல்லுங்கள்..

வாருங்கள்.. கேளுங்கள்.. வாழ்வடைவீர்கள்..

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருள்பணி. ச. சூசை ஆரோக்கியசாமி அவர்கள்.