342 மரியன்னை ஆலயம், முளகுமூடு


மரியன்னை ஆலயம்.

இடம் : முளகுமூடு

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை
மறை வட்டம் : முளகுமூடு

நிலை : பங்குத்தளம்

கிளை : தூய அமலோற்பவ அன்னை ஆலயம், விலவூர்

பங்குத்தந்தை : அருட்பணி டோமினிக் கடாட்ச தாஸ்
இணை பங்குத்தந்தை : அருட்பணி தாமஸ்

ஞாயிறு திருப்பலி : காலை 05.30 மணி, காலை 07.30 மணி

வார நாட்களில் திருப்பலி : காலை 06.15 மணிக்கு

புதன் மாலை 06.15 மணிக்கு ஜெபமாலை, சகாய மாதா நவநாள்

குடும்பங்கள் : 1700
அன்பியங்கள் : 32

திருவிழா : செப்டம்பர் மாதத்தில் முதல் வெள்ளிக்கிழமை ஆரம்பித்து பத்து நாட்கள்.

மண்ணின் மைந்தர்கள் :

1. Fr D. டேவிட்
2. Fr C. வென்சஸ்லாஸ் (late)
3. Fr P. சுரேஷ்குமார்
4. Fr S. லதீஸ் போஸ்கோ
5. Fr S காட்வின் செல்வ ஜஸ்டஸ்
6. Fr A. ஜோஸ் ஸ்டாலின்
7. Bro C. சிங்காராயர் (late)

அருட்சகோதரிகள்:

1. Sis அதரியானா
2. Sis ஜூலியட்
3. Sis றோஸ்ஹரிட்டாஸ்
4. Sis ஹீபர்ட் மேரி
5. Sis புஷ்பா
6. Sis பெர்னதத்
7. Sis சீலியா மேரி
8. Sis நிர்மலா குளோரி
9. Sis எலிசபெத்
10. Sis ஜெயா
11. Sis அல்போன்ஸ் மேரி
12. Sis நட்சத்திரம் (late)
13. Sis பிளாறிஸ்
14. Sis ஜேம்ஸ் ராணி
15. Sis செலஸ்றின்
16. Sis அல்போன்ஸ் மேரி
17. Sis தெரஸ் ஜூலியா மேரி
18. Sis பெல்லா
19. Sis மேரி மார்சல்
20. Sis பிளவர் லெட்
21. Sis அமலி

அருட்சகோதரர்கள்:

1. Bro. அருண் ஷாஜி
2. Bro ஷெபின் இனியன்
3. Bro ஜான் ஜிஜோ
4. Bro பிருத்வி தாமஸ்
5. Bro ஷெரில் சாம்
6. Bro அபிஷ் ரோஜின்
7. Bro பிரேம்
8. Bro சுபின்
9. Bro பெர்பின் பியோ

வழித்தடம் :
நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் முளகுமூட்டில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

வரலாறு :

கடல்வளமும், நீர்வளமும், நிலவளமும் நிறையப்பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில், கன்னியாகுமரி - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தூய மரியன்னை ஆலயம் அமைந்துள்ளது. குழித்துறை மறை மாவட்டத்தின் கீழ் செயல்படும் திரித்துவபுரம், புத்தன்கடை, காரங்காடு, மாத்திரவிளை, வேங்கோடு இவற்றுடன் 6 வது மறை வட்ட தலைமையிடமாக முளகுமூடு விளங்குகிறது.

பெயர் காரணம் :
நல்லமிளகு (மிளகு) அதிகம் விளையும் ஊராக இருந்ததால் 'மிளகுமூடு' எனவும், பின்னர் முளகுமூடு என மருவியது என்று கூறப்படுகிறது. இதனை அருட்தந்தை P. ஆண்டிரியாஸ் OCD அவர்கள், 1929 -ஆம் ஆண்டு முளகுமூட்டின் முதல் பங்குத்தந்தை அருட்தந்தை விக்டர் OCD (பணிக்காலம் 1860-1897) -அவர்களைக் குறித்து டச்சு மொழியில் எழுதிய சரிதை நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முளகுமூடு சந்திப்பு அருகே முளைகூட்டம் (மூங்கில்) அதிகமாக வளர்ந்திருந்தது. மாட்டு வண்டியில் செல்பவர்கள் முளைமூட்டில் இதன் நிழலில் வண்டிகளை நிறுத்தி ஓய்வெடுத்துச் செல்வது வழக்கம். முளைமூடு பின்னர் முளகுமூடு என திரிவு பெற்றதாகவும் கூறப்படுகிறது.

கிறிஸ்தவமும் குமரி மாவட்டமும் :

கிறிஸ்துவின் 12 சீடருள் ஒருவரான புனித தோமையார் கி.பி 52 -இல் இந்தியாவிற்கு வந்து கேரளாவிலும், பின்னர் தமிழகத்தில் குமரி முதல் சென்னை வரையிலும் கிறிஸ்தவ கோட்பாடுகளை பறைசாற்றினார்.

அவருக்குப் பின் மறைப்பரப்பு நாடுகளின் பாதுகாவலர் என போற்றப்படும் ஸ்பெயின் நாட்டு, இயேசு சபை துறவி புனித பிரான்சிஸ் சவேரியார் (1506-1552) இந்தியா வந்து மறைப்பரப்பு பணி செய்தார். 1544 -இல் உண்ணி கேரளவர்மா மன்னன் காலத்தில், அவரது அனுமதியுடன் கோட்டாற்றில் அன்னை மரியாவிற்கு அழகிய ஆலயம் ஒன்றை கட்டினார்.

கோட்டார் மறை மாவட்டம் :

1930 -க்கு முன்புவரை குமரி மாவட்டப் பகுதிகள் கொல்லம் மறை மாவட்டத்துடன் இணைந்திருந்தது. 26-05-1930 -இல் கோட்டார் மறை மாவட்டம் உருவானது. 1956 -இல் மொழிவரி மாநிலம் பிரிக்கப்பட்ட போது தமிழர்கள் அதிகம் வாழும் கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.

முளகுமூடு ஆலய தோற்றம் :

முளகுமூடு என்னும் ஊருக்கு புது வரலாறு படைத்தவர்கள் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த அருட்தந்தை விக்டர் OCD அவர்களும், அவரது தம்பி அருட்தந்தை யூஜின் OCD அடிகளுமாகும்.

அருட்தந்தை விக்டர் அவர்கள் திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தின் (அப்போது கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைந்திருக்கவில்லை) பழைய தலைநகர் திருவிதாங்கோட்டிற்கு மறைப்பணிக்கு அனுப்பப்பட்டார். அவர் அங்கிருந்து அண்டை ஊராகிய முளகுமூட்டில் தனது ஆருட்பணியைத் தொடங்கினார். குழந்தை இயேசுவை தலைவராகவும், அன்னை மரியாவை விண்ணரசியாகவும் முன்னிறுத்தி தமது அறப்பணிகளை செய்து வந்தார்.

அருட்தந்தை அவர்கள் முளகுமூட்டின் இயற்கை அழகை உணர்ந்து 40 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கினார். குறுகிய காலத்தில் அதை ஏதேன் தோட்டம் போல பொலிவுறச் செய்தார்.

முதலில் வாங்கிய நிலத்தில் தனது தம்பியான அருட்தந்தையுடன் தங்குவதற்காக மணவாளன்பாறையில் ஒரு வீட்டைக் கட்டினார். பின்னர் பெரியவிளை தோட்டத்தில் நான்கு மாடிகள் கொண்ட கோபுர வீடு ஒன்றைக் கட்டி குடியேறினார். தோட்டத்தில் சிறந்த வகை பலா மரங்களை நட்டு வளர்த்தார். பின்னாளில் முளகுமூடு வருக்கை பலாப்பழம் பிரபலமாக அவர் காரணமாக இருந்தார்.

1862- இல் முளகுமூட்டில் புகழ்பெற்ற அனாதைகள் மடத்தை (ஆதரவற்றோர் இல்லம்) அருட்தந்தை விக்டர் அவர்கள் தோற்றுவித்தார். அக்காலத்தில் காலரா, கொள்ளை நோய்களின் தாக்குதலால் ஆயிரக்கணக்கானோர் அனாதைகளாயினர். அருட்தந்தை அவர்களுக்கு தாயாக தந்தையாக இருந்து வாழ்வளித்தார்.

ஓட்டு தொழிற்சாலை :
அருட்பணி விக்டர் அவர்கள் 1883 -இல் ஒரு ஓட்டு தொழிற்சாலையை முளகுமூட்டில் நிறுவி, பால் பர்ணாண்டோ என்னும் இலங்கையைச் சார்ந்தவரை பெங்களூருக்கு அனுப்பி ஓடு தயாரிக்கும் தொழில் நுட்பத்தைக் கற்றுவரச் செய்தார். ஓலைக்கூரைகள் ஓட்டுக் கூரைகளாக மாறக்காரணமாக இருந்தார். வேலை வாய்ப்பும் பெருகியது. பத்மநாபபுரம் அரண்மனையில் வேயப்பட்ட ஓடுகள் இங்கு உருவாக்கப்பட்டவை ஆகும்.

அக்கால கட்டத்தில் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஓடு வேய்ந்த வீடு கட்டக்கூடாது என்று உயர்சாதியினர் விதித்திருந்த கட்டளையை உடைத்து சமத்துவம் பேணியவர் அருட்தந்தை விக்டர் அவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

I.C.M சகோதரிகள் :

ஆதரவற்ற மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க, ஆதரவற்ற இல்லத்திற்கு சேவைபுரிய அருட்சகோதரிகளின் தேவையை உணர்ந்த அருட்தந்தை விக்டர் அவர்கள், 1887 -இல் தனது தாய் நாடான பெல்ஜியம் நாட்டிலிருந்து அகஸ்தீனியம் சபையை சார்ந்த அருட்சகோதரிகள் மரிய லூயிஸ், மரிய ஊர்சூல் ஆகியோரை வரவழைத்து, ICM சபையை (Imaraculate Cordis Maria) தோற்றுவித்தார்.

அருட்தந்தை விக்டர் அவர்களின் 39 ஆண்டு கால மறைப்பணி வாழ்வில் 35 ஆண்டுகளை முளகுமூட்டில் செலவிட்டார். தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இம்மண்ணுக்கு தந்தார்.

இவர் அனாதைகள் இல்லம், பள்ளிக்கூடம், ஓட்டு தொழிற்சாலை, அன்னை மரியாவிற்கு பங்கு ஆலயம், மடத்தில் குழந்தை இயேசுவிற்கு ஒரு ஆலயம் ஆகியவற்றை நிறுவினார். 27-07-1897 அன்று இறைவனடி சேர்ந்தார். அருட்தந்தை விக்டர் அவர்கள் தென்னிந்தியாவின் அப்போஸ்தலர் என்று போற்றப்படுகிறார். அவரது விருப்பப்படி உடலானது முளகுமூடு தூய மரியன்னை ஆலயத்தில் நல்லடக்கம் செய்யப் பட்டது. தொடர்ந்து பல அருட்பணியாளர்களின் அயராத உழைப்பாலும் பங்கு மக்களின் ஒத்துழைப்பாலும் முதல் பங்குத்தந்தை விட்டுச் சென்ற நற்பணிகள் தொடர்ந்தன.

ஆலயம் :

முளகுமூடு தூய மரியன்னை ஆலயம் 1910-ஆம் ஆண்டு கட்டத் துவங்கி 1912-இல் நிறைவு பெற்றது. (157 ஆண்டுகளுக்கு முன் இவ்விடத்தில் சிறிய ஆலயம் ஒன்று இருந்தது).

இந்த ஆலயம் உரோமபுரி ஆர்ச் வடிவ கட்டடக்கலை அடிப்படையில் கட்டப்பட்டது ஆகும். 120 அடி நீளமும், 40 அடி அகலமும் 85 அடி உயரமும் கொண்ட இரண்டு அடுக்கு ஓட்டுக்கூரை ஆலயத்தை, 1982-இல் அருட்பணி J. ஜார்ஜ் அடிகள் ஓட்டுக்கூரையை மாற்றி, கான்கிரீட் கூரையாக மாற்றினார்.

தற்போது 100 அடி உயரத்தில் கூண்டு வடிவ கோபுரமும் அமைக்கப் பெற்று ஆலயம் புதுப்பிக்கப்பட்டு அழகுற காட்சியளிக்கின்றது.

ஆலய மணி :
1891 -இல் அருட்பணி விக்டர் அவர்களால் பிரான்ஸ் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட இனிய நாதம் கொண்ட ஆலய மணி காணப்படுவது தனிச்சிறப்பு.

மேலும் ஆண்டுதோறும் தேரில் பவனியாக எடுத்து வரப்படும் அன்னையின் சுரூபமானது பெல்ஜியம் நாட்டிலிருந்து அருட்பணி விக்டர் அவர்களால் கொண்டு வரப்பட்டது ஆகும்.

ஆலய பீடத்தின் வலப்பக்கம் அமையப்பெற்ற அன்னையின் திருவுருவ எண்ணெய் கலவை ஓவியமானது, பெல்ஜியம் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டது.

2008-இல் அருளாளர் தேவசகாயம் பிள்ளையின் திருவுருவப்படம் ஆலய வளாகத்தில் வைத்து புகழ்பெற்ற சிற்ப சித்திரக் கலைஞர் B. K கங்கன் அவர்களால் வரையப் பெற்று ஆலய இடப்பக்க பீடத்தில் நிறுவப்பட்டது. இது திருத்தந்தையால் அங்கீகரிக்கப்பட்ட இறை ஊழியர் தேவசகாயம் பிள்ளையின் முதல் ஓவியம் ஆகும்.

புனித அந்தோணியார் குருசடி :
1972- இல் முளகுமூடு சந்திப்பு அருகே புனித அந்தோணியார் குருசடி கட்டப்பட்டது. இக்குருசடியில் செவ்வாய்க்கிழமைகளில் புனிதரின் நவநாள் நடைபெறுகிறது.

கொடிமரம் :
80 ஆண்டுகள் பழமையான கொடிமரம் வலுவிழந்ததால் 53 அடி உயர புதிய கொடிமரம் வைக்கப்பட்டு 09-09-2012 அன்று அர்ச்சிக்கப்பட்டது.

அருட்பணி விக்டர் நினைவகம் :
அருணங்கால் மணவாளன் பாறையில் அருட்பணி விக்டர் அவர்களும், அவரது தம்பி அருட்பணி யூஜின் அவர்களும் வாழ்ந்த பாறைவீடு 08-08-2011 இல் முளகுமூடு பங்கிற்கு வாங்கப்பட்டு, அருட்தந்தை விக்டர் திருவுருவப்படம் மற்றும் குழந்தை இயேசு சுரூபமும் வைக்கப்பட்டது. வியாழன் தோறும் குழந்தை இயேசு நவநாள் நடைபெறுகிறது. பலர் இங்கு வந்து ஜெபித்து இறைவனின் அருள் வரங்களை பெற்றுச் செல்கின்றனர்.

லூர்து மாதா கெபி மற்றும் புனித குழந்தை தெரசாள் குருசடி :
லூர்து மாநகரில் அன்னை காட்சி கொடுத்ததின் 150 -வது ஆண்டு நினைவாக, ஆலயத்தின் வலது பக்கத்தில் அருட்பணி சகாயதாஸ் அவர்களின் பணிக்காலத்தில் 2008 -ஆம் ஆண்டில் லூர்து மாதா கெபி கட்டப்பட்டது.

அருட்பணி தாமஸ் மத்தியாஸ் பணிக்காலத்தில் ஆலயத்தின் முன்புறம் 1949 -இல் புனித குழந்தை தெரசாள் குருசடி கட்டப்பட்டது.

தனித்தன்மைகள்:

அருட்பணி விக்டர் அவர்கள் முளகுமூட்டில் விலைக்கு வாங்கிய நாற்பது ஏக்கர் நிலத்தில் இன்று பல்வேறு நிறுவனங்கள் சிறப்புற செயல்பட்டு, அருட்தந்தையின் கனவை நனவாக்கி வருகின்றன.

அவற்றில் முக்கியமானவை நாஞ்சில் பால் பதனிடும் நிலையம்,
போப் இரண்டாம் ஜான்பால் கல்வியியல் கல்லூரி,
புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி,
புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
ICM அருட்சகோதரிகளின் இல்ல தாய்மடம்,
குழந்தை இயேசு தொடக்க உயர்நிலைப் பள்ளி,
St Mary's International school (ICSE)
IJ Arts & Science college
குழந்தை இயேசு தையல் பயிற்சி நிலையம், என பல்வேறு நிறுவனங்களும் சிறப்புற செயல்பட்டு வருகின்றன.

முளகுமூடு ஆலய பங்குத்தந்தையர்கள்:

1. Fr விக்டர் OCD (Belgium) - 1860 முதல் பங்குத்தந்தை
2. Fr யூஜின் (Belgium) (Fr விக்டரின் தம்பி இணை பங்குத்தந்தையாக செயல்பட்டார்)
3. Fr டொனிஷியன் (Fr விக்டரின் மறைவுக்குப்பின் பொறுப்பேற்றார்)
4. Fr டென்னிஸ்
5. Fr பவுலின்
6. Fr லூயிஸ்
7. Fr கொனேரியஸ்
8. Fr வின்சென்ட்
9. Fr அம்புறோஸ்
10. Fr A. இக்னாசியஸ் மரியா
11. Fr S. கோர்ஸ்குட்
12. Fr ஸ்தனிஸ்லாஸ்
13. Fr வல்லேரியான்
14. Fr ஹென்றி பயஸ்
15. Fr மிக்கேல்
16. Fr லூக்காஸ்
17. Fr A. அந்தோணிமுத்து
18. Fr பால் ஸ்டீபன்
19. Fr Y. B பீட்டர்ஸ்
20. Fr மார் இவானிஸ்
21. Fr P. B ரெபேரா
22. Fr தாமஸ் மத்தியாஸ்
23. Fr வர்கீஸ்
24. Fr ஆந்தோணிமுத்து
25. Fr J. ஜார்ஜ்
26. Fr மரியதாசன்
27. Fr கபிரியேல்
28. Fr R. லாரன்ஸ்
29. Fr ஜோசப் ராஜ்
30. Fr சேவியர் புரூஸ்
31. Fr அமிர்தராஜ்
32. Fr யேசுரெத்தினம்
33. Fr பெர்க்மான்ஸ்
34. Fr சகாயதாஸ்
35. Fr மரிய வில்லியம்
36. Fr டோமினிக் கடாட்சதாஸ் (தற்போது..)

இவ்வாறு சிறந்த வரலாற்றைக் கொண்ட, சமூகத்தில் பல்வேறு வளர்சி மாற்றங்களுக்கும் வித்திட்ட முளகுமூடு ஆலயமானது, தூய மரியன்னையின் திருவிழாவை 06-09-2019 ஆகிய இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, 15-09-2019 அன்று ஆடம்பர கூட்டுத் திருப்பலியுடன் இனிதே நிறைவு பெற இருக்கின்றது. அனைவரையும் இத் திருவிழாவில் பங்கு பெற்று அன்னையின் வழியாக இறைவனின் ஆசீர்வாதங்களை பெற்றுச் செல்ல அன்புடன் அழைக்கின்றோம்..!

பதிவு : புனித காணிக்கை மாதா ஆலயம், மாதாபுரம், குமரி மாவட்டம், குழித்துறை மறை மாவட்டம்.

மின்னஞ்சல் : joseeye1@gmail.com

https://www.facebook.com/permalink.php?story_fbid=2474872452747399&id=2287910631443583&__tn__=K-R