851 புனித மங்கள அன்னை ஆலயம், காட்டுவிளை

             

புனித மங்கள அன்னை ஆலயம்

இடம்: காட்டுவிளை, வெள்ளிச்சந்தை அஞ்சல்

மாவட்டம்: கன்னியாகுமரி

மறைமாவட்டம்: கோட்டார்

மறைவட்டம்: முட்டம்

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்கு: புனித அந்தோனியார் ஆலயம், தளவாய்புரம், கணபதிபுரம் அஞ்சல்

பங்குத்தந்தை அருட்பணி. B. மைக்கேல் ராஜ்

உதவிப் பங்குத்தந்தை அருட்பணி. ஆல்வின் மதன் ராஜ்

குடும்பங்கள்: 320

அன்பியங்கள்: 10

வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 06:30 மணி

நாள்தோறும் திருப்பலி காலை 06:00 மணி

புதன்கிழமை மாலை 05:30 மணி நவநாள் திருப்பலி

திருவிழா: மே மாதம் முதல் வாரத்தில் ஆரம்பித்து பத்து நாட்கள் நடைபெறும்

புனித மங்கள அன்னை திருவிழா: மார்ச் மாதம் 25 -ஆம் தேதி

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. ஜான் அகஸ்டஸ், கோட்டார் மறைமாவட்டம்

2. அருட்சகோதரி. ஹெலன், ICM (late)

3. அருட்சகோதரி.‌ கார்மலா மேரி, (late)

4. அருட்சகோதரி. ஜேசுதங்கம், SC

5. அருட்சகோதரி. ஜாஸ்மின், SCSA

6. அருட்சகோதரி. டெஸ்லின், ICM

ஆலய வரலாறு:

500 ஆண்டுகளுக்கு முன்னர் காட்டுவிளை தன் பெயருக்கேற்ப புன்னை மரங்களும், மா மரங்களும் நிறைந்த காடாகக் காட்சியளித்தது. அப்போது ஒரு சில கிறிஸ்தவ குடும்பங்களே இங்கு வாழ்ந்து வந்தனர். பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து, முட்டத்திற்கு மகாராஜா பல்லக்கில் செல்லும் முக்கிய வழியாக காட்டுவிளை திகழ்ந்து வந்தது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் மொட்டவிளை நாடான் என்பவர் வைத்து வணங்கியக் கல்குருசு (கற்சிலுவை) பற்பல புதுமைகளைச் செய்து, கொள்ளைநோய்கள் மற்றும் எந்தவித கேடுகளும் இல்லாமல் மக்களை முன்னேற்றப் பாதையில் வளர வைத்தது. காலம் செல்லச் செல்ல புதுமைகள் நிறைந்த அந்த குருசைச் சுற்றி மக்கள் சிறிய குருசடி ஒன்றைக் கட்டினர். அதில் தினமும் செபித்தும் வந்தனர்.

1860-ஆம் ஆண்டு மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் பங்கின் ஓர் அங்கமாக காட்டுவிளை செயல்பட்டு வந்தது. பல்வேறு மாற்றங்கள் பின்னணியில் சிற்றாலயம் ஒன்று கட்ட பங்குத்தந்தையின் வழிகாட்டுதலின்படி மக்கள் தீர்மானித்தனர்.  கொல்லம் மறைமாவட்ட ஆயர் மேதகு. பென்சிகர் அவர்களால் 1871 ஆம் ஆண்டு காரங்காடு பங்கோடு காட்டுவிளை இணைக்கப்பட்டது. 

11-08-1931 அன்று அருட்பணியாளர் இஞ்ஞாசியார் அவர்களால் சிற்றாலயம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 1933-ஆம் ஆண்டு அருட்பணி. வர்க்கீஸ் அடிகளாரின் காலத்தில் சிறிய ஆலயம் ஒன்று கட்டப்பட்டு, புனித மங்கள மாதாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. புதிய ஆலயத்தில் அருட்பணி. இம்மானுவேல் அவர்கள் முதல் திருப்பலி நிறைவேற்றினார்கள். 

இங்கு இறைமக்களின் விடிவெள்ளியாக புனித மங்கள அன்னை திகழ்ந்து வருகிறார். கொள்ளை நோயின் பிடியிலிருந்தும், பயத்திலிருந்தும் மக்களைக் காப்பாற்ற கார்த்திகை மாதம் 1-ஆம் தேதி முதல் வீடு வீடாக சென்று பஜனைப் பாடினார்கள். மேலும் நிறைவு நாளில் சப்பரப்பவனி நடைபெற்று வருவது வழக்கம். தற்போதும் ஆண்டுதோறும் பஜனை மற்றும் சப்பரப்பவனி நடைபெற்று வருகிறது.

மேலும் மேதகு ஆயர் T.R. ஆஞ்ஞசாமி அவர்கள் 28-04-1940 அன்று காரங்காடு பங்கிலிருந்து சரல் புனித இராயப்பர் சின்னப்பர் ஆலயத்தை தனிப்பங்காகப் பிரித்து காட்டுவிளையையும், சரல் பங்கோடு இணைத்தார். அப்போது சரல் பங்குப்பணியாளராக அருட்பணி. ஜேக்கப் லோப்பஸ் நியமிக்கப்பட்டார். மாதத்தில் ஒரு ஞாயிறு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

1950-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற ஊர்ப் பொதுக்கூட்டத்தில், சிற்றாலயத்தை மாற்றி புதிய ஆலயம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. மே மாதம் ஆலய பாதுகாலவர் திருநாளின் போது புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போதைய ஊர்த்தலைவர் மற்றும் பங்கு மக்களின் அயராத உழைப்பாலும், ஒத்துழைப்பாலும் புதிய ஆலயம் அருமையாகக் கற்களால் எழுப்பப்பட்டது. அருட்பணி. தனிஸ்லாஸ் காலத்தில் 1953-ஆம் ஆண்டு மே மாதம் பாதுகாவலர் விழா திருக்கொடியேற்ற நாளில் மேதகு ஆயர் ஆஞ்ஞசாமி அவர்களால் புதிய ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது.

16-05-1969 அன்று அருட்பணி. A.J. அகஸ்டீன் அடிகளாளின் பணிக்காலத்தில், அருட்பணியாளர் தங்குவதற்கான மேடையும், கோயில் கொடிமரமும் அமைக்கப்பட்டு புனிதப்படுத்தப்பட்டன.

மக்களை பார்த்து திருப்பலி நிறைவேற்ற 1969-ல் பீடம் மாற்றி அமைக்கப்பட்டது. மாதம் இரண்டு ஞாயிறு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. அதோடு நற்கருணை பேழை (திருப்பிரசன்னம்) ஆலயத்தில் வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து புதன்கிழமை மாலைத் திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது.

18-12-1987-ல் அருட்பணி. A. செல்வராஜ் அவர்களின் பணிக்காலத்தில், பிரான்ஸ் தொண்டு நிறுவன உதவியுடன் குடிநீருக்கான பெரிய கிணறும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் அமைக்கப்பட்டு, மக்களுக்கும் ஆலய தென்னைமரத் தோப்புக்கும் பயன்படுத்தப்பட்டது.

பங்கு அருட்பணிப்பேரவை:

கோட்டாறு மறைமாவட்ட விதிமுறைப்படி அருட்பணி. பெஞ்சமின் லடிஸ்லாஸ் அவர்களின் பணிக்காலத்தில் 08-09-1996-ல் முதல் பங்கு அருட்பணிப்பேரவை அமைக்கப்பட்டது.  14-05-1999-ல் பாதுகாவலர் திருவிழாவின் 8-ஆம் திருநாள் அன்று கோயிலின் முன் பக்கம் மண்டபம் அமைக்கப்பட்டு புனிதப்படுத்தப்பட்டது. மண்டபத்தோடு சேர்த்து மணிக்கோபுர வேலைகளும் தொடங்கப்பட்டன. 2001-ஆம் ஆண்டு அருட்பணியாளர் டேவிட் மைக்கேல் அவர்களின் பணிக்காலத்தில், 85 அடியாக இருந்த மணிக்கோபுரம் உயரம் சில அடிகள் உயர்த்தப்பட்டு பேரருட்தந்தை. ஜாண்குழந்தை அவர்களால் புனிதப்படுத்தப்பட்டது.

பங்கு வரலாற்றின் பொற்காலம்:

16.05-2004-ல் தூய மங்கள அன்னை ஆலய 50-வது ஆண்டு பொன்விழா அருட்பணி. டேவிட் மைக்கேல் காலத்தில் மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்கள் தலைமையில் வெகு சிறப்பாக திருப்பலி நிறைவேற்றி கொண்டாடப்பட்டது. 

11-06-2004-ல் மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்கள் காட்டுவிளையை தனிப்பங்காக உயர்த்தி ஆணை பிறப்பித்தார்கள். காட்டுவிளை பங்கின் முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. L. புஷ்பராஜ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள்.

01-01-2006-ல் கலையரங்கம் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. 21-10-2007- ல் அருட்பணியாளர் தங்கும் இல்லம் கட்டப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. அருட்தந்தை புஷ்பராஜ் அவர்களின் பணிக்காலத்தில் லூர்து அன்னை கெபி பங்கு மக்களின் முயற்சியால் எழுப்பப்பட்டு, மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் 08-12-2008 அன்று புனிதப்படுத்தப்பட்டது.

ஈத்தங்காடு பகுதியில் மெயின்ரோட்டில் அருட்தந்தை V. ஜாண்போஸ்கோ அவர்களின் பணிக்காலத்தில் இரண்டு கடைகள் கட்டப்பட்டு 27-05-2009 அன்று திறந்து வைக்கப்பட்டது. மங்கள அன்னை ஆடிட்டோரியம் அடிக்கல் நாட்டப்பட்டு மண்டப பணிகள் தொடங்கப்பட்டன. 

அருட்பணி. ஸ்டான்லி சகாயம் பணிக்காலத்தில் மண்டபப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு 2015 மே மாதம் பாதுகாவலர் திருவிழாவின் 8-ஆம் நாள் அன்று இரவு திருப்பலிக்குப்பின் மண்டபம் திறந்து வைக்கப்பட்டது. 9-ஆம் திருவிழாவின் போது மதியம் அன்பு விருந்து மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.

அருட்சகோதரிகள் இல்லம்:

அருட்தந்தை. V. ஜாண்போஸ்கோ அவர்களின் பணிக்காலத்தில் உரோமை தலைமை இல்லமாகக் கொண்ட பியரிஸ்ட் கன்னியர்கள் இப்பங்கில் தங்கி பணியாற்ற விரும்பி விண்ணப்பித்தார்கள். இதன் விளைவாக மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் ஆண்டகையின் அனுமதியோடு 01-09-2011-ல் பியரிஸ்ட் கன்னியர் இல்லம் பங்கில் செயல்பட தொடங்கப்பட்டது. கன்னியர்கள் பங்கில் மறைக்கல்வி கற்பித்தல் உட்பட அருட்பணிகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றார்கள்.

பொலிவுடன் எழுப்பப்பட்டுள்ள புதிய ஆலயம்:

அருட்தந்தை. ஸ்டான்லி சகாயம் அவர்களின் பணிக்காலத்தில் புதிய ஆலயம் கட்டுவதற்கான தேவை உணரப்பட்டு 08-01-2016 முதல் இதற்கான நிதி தொடங்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு காணிக்கை ஆலய கட்டுமான பணிக்கான சிறப்பு காணிக்கையாக பிரிக்கப்பட்டு நிதி சேர்க்கப்பட்டது. அருட்தந்தை. ஸ்டான்லி சகாயம் அவர்களின் அருமையான திட்டமிடுதலாலும், வழிகாட்டுதலாலும் பங்கு மக்களின் ஒத்துழைப்பாலும் ஆலய கட்டுமான நிதி திரட்டுவதில் மக்கள் உற்சாகமாக செயல்பட்டார்கள். தொடர்ந்து பங்கில் பொறுப்பேற்ற அருட்பணி. B. மைக்கேல் ராஜ் அவர்கள் புதிய ஆலயம் கட்டுவதின் முக்கியத்துவத்தை உணர்ந்து கட்டுமான நிதி சேர்ப்பதில் சிறப்பாக ஈடுபாட்டுடன் உழைத்தார்கள். கட்டிட குழுவும் உருவாக்கப்பட்டது.

09-12-2019 அன்று மேதகு ஆயர் நசரேன் சூசை அவர்களால் புதிய ஆலயம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அன்னையின் பிறப்பு விழாவான 08-09-2020 அன்று ஆலய கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. இறைவனின் அருட்கரத் தொடுதலாலும், உடனிருப்பாலும், புனித அன்னையின் அரவணைப்பாலும், செயல்வீரர் பங்குத்தந்தை அருட்பணி. B. மைக்கேல் ராஜ் அவர்களின் தளராத தியாக வழிநடத்துதலாலும், பல நிலையிலும் பல்வேறு மக்கள் மற்றும் பங்கு மக்களின் பணிகளாலும், தாராளக் கொடைகளாலும், பிற பல பங்குகளின் உதவிக் கரங்களாலும், நல் உள்ளம் படைத்த நன்கொடையாளர்களாலும், அர்ப்பண உணர்வோடு பல பணிகளைச் செய்து தந்த  உறவுகளாலும், அர்ப்பண மனநிலையோடு உழைத்த பங்கின் தன்னார்வலர்களாலும், ஆண், பெண், சிறார், இளையோர் அனைவரின் இணைந்த செயல்பாடுகளாலும் ஆலயப் பணி நிறைவுக்கு வந்தது. 25-03-2023 அன்று புதிய ஆலயம்  மேதகு ஆயர் நசரேன் சூசை அவர்களால் அர்ச்சித்து புனிதப்படுத்தபட்டது. 

இறைவனுக்கே புகழ் ! இறைவனுக்கே நன்றி! மரியே வாழ்க!

பங்கில் உள்ள கன்னியர் இல்லம்:

Piarist Sisters convent 

பங்கில் உள்ள சபைகள் மற்றும் இயக்கங்கள்:

1. பங்கு மேய்ப்புப் பணிப்பேரவை

2. நிதிக்குழு

3. கல்விக்குழு

4. மறைக்கல்வி

5. கிறிஸ்தவ வாழ்வு சமூகம்

6. மரியாயின் சேனை 

7. கத்தோலிக்க சேவா சங்கம்

8. புனித வின்சென்ட் தே பவுல் சபை

9. பெண்கள் கிராம முன்னேற்றம் சங்கம்

10. பாலர் சபை

11. சிறுவழி இயக்கம்

12. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்

13. இளைஞர் இயக்கம்

14. கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கம்

15. தலித் பணிக்குழு

16. நற்செய்தி பணிக்குழு

17. அன்பிய ஒருங்கிணையம்

18. சபைகள் இயக்க ஒருங்கிணையம்

19. திருவழிபாட்டுக் குழு

20. பாடகற்குழு

வழித்தடம்: நாகர்கோவில் -ஆசாரிபள்ளம் -வெள்ளிச்சந்தை வழித்தடத்தில், வெள்ளிச்சந்தைக்கு முன்னர் அரசன்விளையிலிருந்து வலதுபுறத்தில் அரை கி.மீ சென்றால் காட்டுவிளை வந்தடையலாம்.

Location map: Our Lady of Annunciation Church, Kattuvilai

https://maps.app.goo.gl/MGRe6iMZp5RWSCN76

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. மைக்கேல் ராஜ் அவர்கள்.