878 புனித பரலோக மாதா ஆலயம், நடுக்காரங்காடு

      

புனித பரலோக மாதா ஆலயம்

இடம்: நடுக்காங்காடு, காரங்காடு அஞ்சல், நாங்குநேரி தாலுகா,  627108

மாவட்டம்: திருநெல்வேலி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: வடக்கன்குளம்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: கிறிஸ்து அரசர் ஆலயம், நாங்குநேரி

பங்குத்தந்தை: அருட்பணி. டென்சில் ராஜா

குடும்பங்கள்: 75

வழிபாட்டு நேரங்கள்: 

ஞாயிறு திருப்பலி காலை 07:00 மணி

மாதத்தின் கடைசி சனி மாலை 06:30 மாதா சப்பர பவனி, மாலை 07:00 மணி திருப்பலி தொடர்ந்து அசனம்.

திருவிழா: ஆவணி மாதம் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை (ஆகஸ்ட் மாதத்தில்)

வழித்தடம்: நாங்குநேரி -திசையன்விளை ரோட்டில் பெருமாள் நகர் பஸ் நிறுத்தத்தில் இருந்து வடக்கே சுமார் 1 கி.மீ தொலைவில்...

Location map: Paraloga Matha Church

https://maps.app.goo.gl/ASrMqDXoHti8NC3R9

வரலாறு:

கி.பி 1875 -1900 காலகட்டங்களில் வெளியூரில் இருந்து மக்கள் இந்த நடுக்காரங்காடு பகுதிகளில் வந்து குடியேறினார்கள். ஆரம்ப கால கட்டங்களில் பனையேற்றத்தை தொழிலாக கொண்டு,  மக்கள் வாழ்ந்து வந்தனர். காலப்போக்கில் விவசாயம், ஆடு, மாடு வளர்ப்பதையும் இணைத்துக் கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தினர். பனையேற்றம் நிறைவுபெறும் மாதமான ஆடி மாதம் முடிந்ததும், ஆவணி மாதம் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை, உழைக்க உறுதியும், ஊக்கமும், பாதுகாப்பும் தந்த இறைவனுக்கு 10 நாட்கள் திருவிழா எடுத்து மக்கள் நன்றி தெரிவித்தனர். 

ஆரம்ப காலத்தில் மண் ஓடு, பனை கம்பு வைத்து சிறிய ஆலயம் அமைத்து இறைவனை வழிபட்டனர். காலப்போக்கில் சுமார் 1950-52 காலக்கட்டத்தில் கல் சுவர், மண் ஓடு, பனை மரம் கொண்டு உயர்ந்த ஆலயம் ஒன்றை இறைஅன்னை தேவ மாதாவுக்காக அமைத்தனர். 

ஆலயத்தில் புனித மிக்கேல் அதிதூதர் மூலமாக இறைவாக்கு வெளிப்பட்டது. பல ஊர்களில் இருந்தும் மக்கள் வந்து வழிபட்டு நோய், பேய், பில்லி சூனியம், மனநோய், தொழில் முன்னேற்றம், மன அமைதி என தங்களுக்கு வேண்டியதை பெற்றுக் கொண்டு இறைவனுக்கும், மாதாவுக்கும் தவறாமல் நன்றி சொல்லி வந்தனர்.

மிக்கேல் தூதர் ஆலயம் என்றால் தான் ஆரம்ப காலங்களில் மக்களுக்கு தெரியும். கடற்கரை ஊர்களில் இருந்து மக்கள் மாட்டுவண்டி கட்டிக் கொண்டு வந்து இறைவனை தரிசித்து செல்வார்கள். இந்த ஆலயம் வந்து வழிபட்டு, வேண்டுதல் செய்து சென்றால் அது நிச்சயம் நடக்கும் என்பது மக்களின் முழு நம்பிக்கை. அதிதூதர் மிக்கேல் மூலம் இறைவன் செய்து, மக்கள் பெற்ற அற்புதங்கள் ஏராளம் ஏராளம். இன்று வரை காரங்காடு மிக்கேல் தூதர் ஆலயம் என்றால் மக்களுக்கு ஒரு நம்பிக்கையூட்டும் ஒரு இடம். மிக்கேல் தூதர் பெயரில் விளங்கிய ஆலயம் காலப்போக்கில் தேவ மாதா பரலோக அன்னை பெயரில் ஆண்டுதோறும் திருவிழா எடுத்து சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இன்று அன்னைக்கு பெரிய ஆலயம் அமைத்து வானுயர்ந்த கோபுரம் அமைத்து, ஆலயம் மூலமாக வந்தோர் அனைவருக்கும் இறையருளை நிறைவாக தந்து காத்து வழிநடத்திவருகிறார் தேவ அன்னை பரலோக தாய்.

தேவ அன்னைக்கு ஒரே கல்லிலான கொடிமரம் அமைக்கப்பட்டுள்ளது. ஆலய வளாகம் அமைக்கப்பட்டு, அதற்கு உள்ளாக இயேசுவின் திருஇருதயம் புகழ் பரவ இருதய ஆண்டவர் ஆட்சி செய்கிறார். அந்த கெபியில் தான் இத்தனை புதுமைகளும் நடந்துள்ளது.

புதிய ஆலயம்: 

சுமார் 2016 ஆம் ஆண்டு பங்குத்தந்தை அருட்திரு. மணி அந்தோணி அவர்கள் தலைமையில் ஊர்மக்கள் அனைவரும் இணைந்து புதிய ஆலயம் அமைப்பதென முடிவெடுத்தனர். 17.08.2016 திருவிழா கொடியேற்றம் அன்று பங்குத்தந்தை அருட்திரு. மணி அந்தோணி அவர்களால் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பங்குத் தந்தையின் முழு ஒத்துழைப்பாலும், மக்களின் கடின உழைப்பாலும் ஆலய பணிகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வந்தது. மக்கள் பங்கத்தந்தையோடு இணைந்து, அருகில் உள்ள பங்கு ஊர்களுக்கு சென்று நன்கொடை வசூலித்தும், நிதி மற்றும் பொருள் கொடுத்தும் ஆலய பணிகள் நடக்க முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். அதனால் ஆலயப் பணிகள் முழுவதுமாக நிறைவு பெற்ற நிலையில் பங்குத்தந்தை மணி அந்தோணி அவர்கள் 2019 மே மாதம் பங்கு பணிமாற்றம் பெற்றுச் சென்றார்கள். 

எனவே புதிதாக வந்த பங்குத்தந்தை அருட்பணி. டென்சில் ராஜா மூலமாக ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திருவிழாவின் போது 24.08.2019 அன்று தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு ஸ்டீபன் அந்தோனி ஆண்டகை அவர்களால் ஆலயம் மந்திரித்து, பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இன்று வானுயர்ந்த கோபுரத்தில் இறைவன் புகழ் அன்னை வழியாக ஓங்கி விளங்கி வருகிறது. கோயிலில் திருப்பயணிகளின் பயன்பாட்டிற்காக புதுமை கிணறு உள்ளது.

திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் காலை திருப்பலி மாலை நற்கருணை ஆசீர். 8 ஆம் திருவிழா அன்று நற்கருணை பவனி, 9&10 ஆம் திருவிழா நாட்களில் அன்னையின் அலங்கார தேர்பவனி என திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். திருவிழா காலங்களில் பெரியதாழை, மணப்பாடு, கூட்டபனை, கூடுதாழை மக்கள் என கடற்கரை பகுதிமக்கள் மற்றும் சுற்றியுள்ள ஊர்மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடும், பக்தியோடும் அன்னைக்கு நன்றி சொல்ல இன்று வரை தவறாமல் வருகிறார்கள். 

பரிந்துரைப்பார் அன்னை, பாதுகாப்பார் மிக்கேல் தூதர் என்பது ஆலய விருதுவாக்கு ஆகும்.

ஆலய பங்கேற்பு அமைப்புகள்:

பாலர் சபை

நற்கருணை வீரர் சபை

இளைஞர் இயக்கம்

மாதா சபை

திருக்குடும்ப சபை.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: ஆலய பொறுப்பாளர்கள்.