578 புனித வின்சென்ட் தே பவுல் ஆலயம், குளப்பாறை


புனித வின்சென்ட் தே பவுல் மலங்கரை கத்தோலிக்க ஆலயம் 

இடம் : குளப்பாறை, வெள்ளச்சிபாறை (PO), 629152

மாவட்டம் : கன்னியாகுமரி 

மறைமாவட்டம் : மார்த்தாண்டம் 

மறைவட்டம் : பனச்சமூடு

நிலை : பங்குத்தளம் 

பங்குத்தந்தை : அருட்தந்தை. அபின்சன் அலெக்ஸ் 

குடும்பங்கள் : 20

அன்பியங்கள் : 4

வழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு காலை 10.30 மணிக்கு காலை ஜெபம், தொடர்ந்து திருப்பலி. 

வியாழன் மாலை 06.00 மணிக்கு ஜெபமாலை மாலைஜெபம், திருப்பலி, தொடர்ந்து மரியன்னை நவநாள். 

பக்த இயக்கங்கள் :

மறைக்கல்வி : ஞாயிறு காலை 09.30 -10.30 மணி வரை. 

சிறார் இயக்கம் : ஞாயிறு திருப்பலியைத் தொடர்ந்து நடைபெறும்.

மரியாயின் சேனை : ஞாயிறு திருப்பலியைத் தொடர்ந்து நடைபெறும். 

இளைஞர் இயக்கம் : மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது ஞாயிறு மதியம் நடைபெறும். 

தாய்மார் சங்கம் : ஞாயிறு திருப்பலியைத் தொடர்ந்து நடைபெறும். 

புனித வின்சென்ட் தே பவுல் சபை : ஞாயிறு திருப்பலியைத் தொடர்ந்து நடைபெறும். 

கோல்பிங் இயக்கம் : மாதத்தின் இரண்டாம் மற்றும் நான்காம் ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெறும். 

பாடகற்குழு : மாதத்தின் இரண்டாம் ஞாயிறு மதியம் நடைபெறும். 

பீடச்சிறுவர் இயக்கம் : மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும். 

பங்குப்பேரவை : ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். 

திருவிழா : புனித வின்சென்ட் தே பவுல் தினமாகிய செப்டம்பர் 27 ம் தேதி. 

மண்ணின் இறையழைத்தல்:

அருள்சகோதரர். அனஸ்ட் ராஜ். 

வழித்தடம் :

மார்த்தாண்டம் -பனச்சமூடு -வெள்ளச்சிபாறை -குளப்பாறை சந்திப்பு.

வரலாறு :

குமரி மாவட்டத்தில் மாங்கோடு கிராமத்தில் மரங்களாலும் பாறைகளாலும் சூழப்பட்ட இயற்கை எழில் கொஞ்சும், அழகிய குளப்பாறை கிராமத்தில் அன்போடும், தோழமையோடும் வாழும் மக்களுக்கிடையே அமைந்துள்ள ஏழைகளின் தோழன் புனித வின்சென்ட் தே பவுல் மலங்கரை கத்தோலிக்க ஆலய வரலாற்றைத் காண்போம். 

மலங்கரை கத்தோலிக்க திருச்சபையின் மார்த்தாண்டம் மறைமாவட்டம், பனச்சமூடு மறைவட்டத்தின் ஒரு வழிபாட்டுத் தலமாக இவ்வாலயம் அமைந்துள்ளது. 

பிறப்பால் அனேக குடும்பங்கள் கத்தோலிக்க விசுவாசிகளாக இருந்தும், ஒரு ஆலயம் இல்லாத காரணத்தால் மக்கள் ஆலயங்களுக்கு செல்லாமலும், கத்தோலிக்க சபையை சாராத பிறசபை ஆலயங்களுக்கு சென்று, அந்த சபைகள் கற்பிக்கின்ற விசுவாசத்தில் வாழ்ந்து வந்தனர். 

கத்தோலிக்க ஆலயத்திற்கு செல்ல விரும்புவோர் காஞ்சியோடு தூய அலோசியஸ் மலங்கரை கத்தோலிக்க ஆலயத்திற்கு செல்ல வேண்டும். சாலை வசதியும் போக்குவரத்து வசதியும் இல்லாத நிலையில் மக்கள் இவ்வாலயத்திற்கு சென்று வர சிரமப்பட்டனர். 

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் தங்கள் பகுதியிலேயே ஒரு ஆலயம் அமைக்க வேண்டும் என்பது மக்களின் கனவாகவும் வேண்டுதலாகவும் அமைந்தது. 

அருட்தந்தை. ஜான்சன் காரிக்குந்நில் அவர்கள் காஞ்சியோடு பங்குத்தந்தையாக பணியாற்றிய போது, குளப்பாறை ஊரில் உள்ள 20 கத்தோலிக்க குடும்ப உறுப்பினர்கள் இணைந்து மேதகு ஆயர் யூகானோன் மார் கிறிஸ்ஸோஸ்டோம் ஆண்டகையின் ஒப்புதலோடு, குளப்பாறை புனித வளனார் மசிக நடுநிலைப் பள்ளியில் வைத்து திருப்பலி நிறைவேற்ற அனுமதி கிடைத்தது. 

2008 ஆம் ஆண்டு ஜனவரி 3ம் நாளில் அருட்தந்தை. ஜான்சன் காரிக்குந்நில் அவர்கள் தலைமையில் புனித வளனார் மசிக நடுநிலைப் பள்ளியில் அருட்சகோதரி. ரீத்தா அவர்களின் ஒத்துழைப்புடன் முதன் முதலாக திருப்பலி நிறைவேற்றப்பட்டது. 

அதன்பிறகு சனிக்கிழமை தோறும் மாலையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது. 

தொடர்ந்து பணிபுரிந்த அருட்தந்தை. ஜெனன் ஜெரால்டு அவர்கள் மக்களை ஆன்மீகத்திலும் ஜெபத்திலும் வழிநடத்தினார். 

அருட்தந்தை. ஜார்ஜ் தாவரத்தில் பணிக்காலத்தில் சனிக்கிழமை நடைபெற்று வந்த திருப்பலியானது, ஞாயிற்றுக்கிழமை காலையில் மாற்றியமைக்கப் பட்டது. 

தொடர்ந்து பணியாற்றிய அருட்தந்தை. ஜான் குமார் அவர்கள் மக்களை ஆன்மீகப் பாதையில் வழிநடத்தினார். 

அருட்தந்தை. பென்னட் (2013-2016) பணிக்காலத்தில் மதர் ஜெனரல் றோஸ்லின் DM அவர்கள் அனுமதியோடு, காஞ்சியோடு DM Convent அருட்சகோதரிகள் இணைந்து புதிய ஆலயம் கட்டுவதற்கு இடம் தந்து உதவினர். 

மேதகு ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் ஆண்டகை தலைமையில் 16.04.2014 அன்று புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டது. அருட்தந்தை அவர்கள் புதிய ஆலய கட்டுமான பணிக்காக முழுமூச்சுடன் பாடுபட்டார். பங்கு மக்களை ஒருங்கிணைத்து ஆலய கட்டுமானப் பணிக்கான நிதிதிரட்ட பல கூட்டு முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி கண்டார். இறைமக்களின் ஆன்மீக வாழ்வை ஆழப்படுத்த மாதத்திற்கு ஒருமுறை ஆடம்பர நற்கருணை ஆராதனையை அறிமுகப் படுத்தினார். 

அருட்சகோதரி. ரம்யா அவர்கள் மறைப்பணியாற்ற இம்மண்ணில் கடந்து வந்து, மறைக்கல்வி மரியாயின்சேனை, பாலர்சபை, இளைஞர் இயக்கம், தாய்மார் சங்கம், ஜெபவழிபாடு ஆகியவற்றை நடத்த உதவி புரிந்தார். ஏறத்தாழ பத்து ஆண்டுகள் குளப்பாறை பங்கில் பணியாற்றினார். 

அருட்தந்தை. பெர்னார்ட் (2016-2017) அவர்கள் மூன்று மாத காலம் இயன்ற அளவிலான பங்களிப்பு தந்து ஆலய வளர்ச்சிக்கு உதவி புரிந்தார். 

ஆலய கட்டுமானப் பணிகள் 75% முன்னேறிய நிலையில் அருட்தந்தை. ஜீன் ஜோஸ் (2017-2019) அவர்களின் வருகை ஆலய கட்டுமானப் பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற காரணமாக இருந்தது. அனைவரின் ஒத்துழைப்புடன் ஆலயப் பணிகள் நிறைவு பெற்று 04.05.2017 அன்று மேதகு ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் ஆண்டகை தலைமையில் அர்ச்சிக்கப் பட்டது. 

மேலும் அருட்தந்தை. ஜீன்ஜோஸ் பணிக்காலத்தில் அழகிய மாதா குருசடி கட்டப்பட்டு 30.11.2018 அன்று மேதகு ஆயர் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. 

தொடர்ந்து, அருட்தந்தை. மைக்கிள் முக்கலம்பாலத் அவர்கள் மூன்று மாத பணிக்காலத்தில் மக்களை ஆன்மீகப் பாதையில் சிறப்பாக வழி நடத்தினார். 

அருட்தந்தை. அபின்சன் அலெக்ஸ் (2019 முதல் தற்போது வரை) அவர்கள், 2020 ல் உலக மக்களை கொரோனா வைரஸ் ஆட்டிப் படைத்த   காலம் மக்கள் ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள் அடைபட்டுக் கிடந்த போது, பல்வேறு கரங்களிலிருந்து உதவி பெற்று ஏழை எளிய பாமர மக்களுக்கு உதவி செய்து, ஜெப வாழ்வினாலும்,  ஆன்மீக வழிகாட்டுதலினாலும் மக்களை சிறப்பாக வழி நடத்தி வருகிறார்கள். 

பங்கில் பணியாற்றிய அருட்சகோதரிகள்:

1. அருட்சகோதரி. ரீத்தா 

2. அருட்சகோதரி. மேரி புஷ்பம் 

3. அருட்சகோதரி. ரெம்யா

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருள்பணி. அபின்சன் அலெக்ஸ்.