140 புனித செபஸ்தியார் ஆலயம், செபஸ்தியார்புரம்

  

புனித செபஸ்தியார் ஆலயம் 

இடம் : செபஸ்தியார்புரம் (ஓச்சவிளை), புதுக்கடை அஞ்சல், 629162 

மாவட்டம் : கன்னியாகுமரி 

மறை மாவட்டம் : குழித்துறை 

மறைவட்டம்: வேங்கோடு

நிலை : கிளைப்பங்கு

பங்கு : புனித ஆரோக்கிய மாதா ஆலயம், முன்சிறை 

பங்குத்தந்தை: அருட்பணி. S. ஜெயபிரகாஷ்

குடும்பங்கள்: 140

அன்பியங்கள்: 6

ஞாயிறு திருப்பலி : காலை 09:30 மணி

வியாழன் மாலை 05:30 மணி திருப்பலி

திருவிழா : ஜனவரி மாதத்தில் பத்து நாட்கள். 

மண்ணின் இறையழைத்தல்:

அருட்பணி. S. லிபின் ராஜ், குழித்துறை மறைமாவட்டம்

வழித்தடம்: மார்த்தாண்டம் -முஞ்சிறை. முஞ்சிறையிலிருந்து வலது புறமாக 1கி.மீ  சென்றால் செபஸ்தியார்புரத்தை அடையலாம்.

Location Map: St. Sebastian's Church

https://maps.app.goo.gl/dnB6ED66YoiqQM3i7

வரலாறு:

ஆலய உதயம்:

1897-ம் ஆண்டு ஏராளமான பிறசமய மக்கள் மத்தியில், ஒருசில கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து ஓர் ஓலைக் கொட்டகையின் கீழ் இறைவழிபாட்டை ஆரம்பித்தார்கள். அன்றைய காலகட்டத்தில் இங்கு வர சரியான வழித்தடம் இல்லாதிருந்த போதும், 

வேங்கோடு பங்குத்தந்தை நடந்து வந்து திருப்பலி நிறைவேற்றினார். முதலில் திருப்பலி மாதத்திற்கு ஒருமுறையும், பின்னர் 15 நாட்களுக்கு ஒருமுறை இலத்தீன் மொழியில் நிறைவேற்றப்பட்டது. வழித்தடம் இல்லாத காலத்தில் இன்று ஆலயத்தில் அமைந்திருக்கும் தூய செபஸ்தியார் சுரூபமானது, அன்றைய உபதேசியாரால் சுமந்துவரப்பட்டு அன்றைய பங்குத்தந்தையால் அர்ச்சிக்கப்பட்டது.

29.03.1911 ல் புதுக்கடை தனிப் பங்காக மாறியதிலிருந்து, செபஸ்தியார் புரம் இறைமக்களின் ஆன்மீகத் தேவைகளை புதுக்கடை பங்குத்தந்தையர் கவனித்து வந்தனர்.

பின்னர் 1917-ம் ஆண்டு ஆலயத்திற்கு தனியாக நிலம் கொல்லம் மறைமாவட்ட ஆயர் பெயரில் வாங்கப்பட்டது. அதில் சிறிய கற்கோயில் அமைக்கப்பட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. திருப்பலி நிறைவேற்ற புதுக்கடை ஆலய பங்குத்தந்தை மற்றும் அருட்சகோதரிகள் வருகை தந்து, மறைக்கல்வி ஆரம்பித்து வழிநடத்தி வந்தார்கள்.

ஆலய வளர்ச்சி:

20.01.1984 அன்று பங்குத்தந்தை A. ஆசீர்வாதம் அவர்களால் புதிய ஆலயம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு, பங்கு மக்களின் பொருள் உதவி, மறைமாவட்ட உதவி மற்றும் ஜெர்மன் நாட்டு உதவியுடன் திருப்பணிகள் ஆரம்பமானது. புதிய ஆலயம் அன்றைய பங்குத்தந்தை M. ஆல்பர்ட் ராஜ் காலத்தில், அன்றைய கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு லியோன் அ. தர்மராஜ் அவர்களால் 09.04.1989 அன்று அர்ச்சிக்கப்பட்டது. சுமார் 35 குடும்பங்களுடன் கிளைப் பங்காக உதயமான ஆலயம் இன்று 160 குடும்பங்களுடன் செயல்பட்டு வருகிறது.

புனித ஜார்ஜியார் குருசடி:

ஆலயத்திற்கென்று ஓச்சவிளை பகுதியில் நல்லுள்ளம் கொண்ட நன்கொடையாளர் உதவியுடன் புனித ஜார்ஜியார் குருசடி  01.05.1978 அன்று அழைக்கப்பட்டது. ஆண்டுதோறும் மே மாதத்தில் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

ஆலய கோபுரம் அமைத்தல்:

கோபுரம் இன்றி அமைந்திருந்த ஆலயத்தில் பங்கு மக்கள் மற்றும் மறைமாவட்ட உதவியுடன் அன்றைய புதுக்கடை பங்குத்தந்தை I. கார்மல் அவர்களின் தலைமையில் (1995-2000), ஆலய கோபுரம் மற்றும் மணிக்கூண்டு அர்ச்சிக்கப்பட்டது.

இயக்கங்கள் மற்றும் பக்தசபைகள்:

1992-ம் ஆண்டு அன்றைய பங்குத்தந்தை S. பீட்டர் அருள்ராஜ் அவர்களால் பெண்கள் இயக்கம் மற்றும் கிராமமுன்னேற்ற சங்கம் ஆகியவை தொடங்கப்பட்டு இன்றளவும் செயல்பட்டு வருகின்றன. அருட்பணி. I. கார்மல் அவர்களால் வின்சென்ட் தே பவுல் சபை மற்றும் கோல்பிங் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டன. 

07-10-2000-ல் முஞ்சிறை பங்கு புதுக்கடையில் இருந்து பிரிந்து தனிப்பங்காக ஆனபோது, செபஸ்தியார்புரம் அதன் கிளைப்பங்காக மாறியது. அருட்பணி. A. ஜோக்கிம் முஞ்சிறையின் முதல் பங்குப்பணியாளராக நியமனம் பெற்றார். அவரால் அன்பியங்கள் தொடங்கப்பட்டு 6 அன்பியங்களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

அருட்பணி. F. செபாஸ்டின் அவர்களால் அடித்தள முழுவளர்ச்சி சங்கம் மற்றும் இளைஞர் இயக்கம், பாலர்சபை, சிறுவழி இயக்கம் ஆகியவை ஆரம்பிக்கப்பட்டன.

அருட்பணி. A. பிரைட் சிம்சராஜ் அவர்களால் மரியாயின் சேனை ஆரம்பிக்கப்பட்டது. மேலும் அவரோடு பங்கு மக்களின் ஒத்துழைப்பால் ஆலயத்திற்குள் தரையில் சலவைக்கல் போடப்பட்டது. மேலும் ஆலயத்திற்கு நிலம் வாங்கப்பட்டது.

அருட்பணி. P. அகஸ்டின் காலத்தில் கொடிமரம் 17-01-2014-ல் அர்ச்சிக்கப்பட்டது. மக்களின் முழு முயற்சியாலும், அவரது ஊக்கத்தாலும் பெரிய அளவில் பங்குப்பணியாளர் இல்லம் கட்டியெழுப்பி 16-01-2017-ல் அர்ச்சிக்கப்பட்டது. குழித்துறை மறைமாவட்டம் 22-12-2014-ல் உதயமாகி ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் 24-02-2015-ல் திருநிலைப்படுத்தப்பட்டார். அருட்பணி. P. அகஸ்டின் மறைமாவட்ட பொருளாளராக ஆனார்.

குழித்துறை மறைமாவட்டம் ஆறு மறைவட்டங்களாக பிரிக்கப்பட்டு, அதில் ஒன்றாக புதிதாக உதயமான வேங்கோடு மறைவட்டத்தின் முதல்வராக 06-01-2016-ல் முஞ்சிறை பங்குத்தந்தையான, அருட்பணி. D. பெஞ்சமின் அவர்கள் கூடுதல் பெறுப்பேற்றதில் செபஸ்தியார்புரம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவரது பணிச்சுமை காரணமாக பங்கில் இணைப்பணியாளர்கள் செயல்பட்டனர். அத்துடன் மறைமாவட்ட பள்ளிக் கூடங்களின் கண்காணிப்பாளராக செயல்பட்ட அருட்பணி. P. சுரேஷ்குமார் ஓராண்டளவாக (22-02-2017 முதல் 25-06-2018 வரை) இங்குள்ள புதிய பங்குப்பணியாளர் இல்லத்தில் தங்கியிருந்து, மக்களின் ஆன்மீகத் தேவைகளை கவனித்து வந்தது எல்லோருக்கும் நிறைவைத் தந்தது. 

2018-லிருந்து அருட்பணி. R. சேவியர் புரூஸ் பங்குத்தந்தையாக சிறப்புற பணியாற்றிச் சென்றுள்ளார். எல்லா அருட்பணியாளர்களும் பங்கை சீரும் சிறப்புமாக வழிநடத்தி வந்துள்ளனர்.

26.09.2022 அன்று சமூகநலக் கூடம் கட்டுமானப் பணிகள் ஜெபத்துடன் தொடங்கப்பட்டது.

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் பாதுகாவலர் தூய செபஸ்தியார் திருவிழா 10 நாள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. திருவிழாவின்போது அன்பு விருந்தில் இப்பகுதிமக்கள் ஜாதி, மத பாகுபாடு இன்றி கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்கள்.

ஆலய பங்கேற்பு அமைப்புகள்:

1. மறைக்கல்வி

2. பாலர்சபை

3. சிறுவழி இயக்கம்

4. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்

5. பீடப்பூக்கள்

6. இளைஞர் இயக்கம்

7. பாடகர் குழு

8. புனித வின்சென்ட் தே பால் சபை

10. கத்தோலிக்க சேவா சங்கம்

11. மரியாயின் சேனை

12. கிராம முன்னேற்ற சங்கம்

13. திருவழிபாட்டுக் குழு

14. அன்பிய ஒருங்கிணையம்

15. நிதிக்குழு

16. பங்கு அருட்பணிப் பேரவை

17. அடித்தள முழுவளர்ச்சி சங்கம்

18. திருத்தூது கழக ஒருங்கிணையம்.

ஆலய உபதேசியார்கள்:

1. திரு. J. செல்வமுத்து

2. திரு. S. தனிஸ்லாஸ்

3. திரு. A. லூக்காஸ்

4. திரு. C. குமார்

செபஸ்தியார் புரம் வாருங்கள்... புனித செபஸ்தியாரின் வழியாக இறையாசீர் பெற்றுச் செல்லுங்கள்...

ஆலய வரலாறு: முன்சிறை புனித ஆரோக்கிய மாதா பங்கு ஆலய நூற்றாண்டு பெருவிழா சிறப்புமலர்.