956 புனித ஆரோக்கிய மாதா ஆலயம், கருவேப்பம்பூண்டி மடம்

              

புனித ஆரோக்கிய மாதா ஆலயம்

இடம்: கருவேப்பம்பூண்டி மடம்

முகவரி: புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், கருவேப்பம்பூண்டி மடம், ஒழுகறை அஞ்சல், மாகரல் வழி, உத்திரமேரூர் தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம், 631603.

மாவட்டம்: காஞ்சிபுரம்

மறைமாவட்டம்: செங்கல்பட்டு

மறைவட்டம்: பள்ளியாகரம் 

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித அந்தோனியார் ஆலயம், மல்லிகாபுரம்

பங்குத்தந்தை அருட்பணி. S. வினோத் ராஜ்

தொடர்புக்கு வேதியர் T. தயாளன் +91 96558 24888

குடும்பங்கள்: 57

அன்பியங்கள்: 4

சனிக்கிழமை மாலை 06:00 மணி திருப்பலி

மாதத்தின் முதல் சனிக்கிழமை மாலை 06:00 மணி தேர்பவனி, திருப்பலி, திவ்யநற்கருணை ஆசீர்

ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி மாலை 06:00 மணி ஜெபமாலை, திருப்பலி, ஆராதனை, திருஎண்ணெய் பூசுதல், அன்னதானம். மறைசாட்சியர்கள் நினைவு தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

திருவிழா: செப்டம்பர் மாதம் 8-ம் தேதி

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. Fr. S. Amulraj

2. Sr. Sujatha, Bonsecours

3. Sr. Jenifer, St. Anne's

4. Sr. Juliee, Presentation

வழித்தடம்: காஞ்சிபுரம் -உத்திரமேரூர் கீழ்ரோடு -கருவேப்பம் பூண்டி மடம்

உக்கத்துறை -உத்திரமேரூர் 

மதுராந்தகம் -எண்டத்தூர் வழி

Location map:

https://g.co/kgs/sLEmqqx

வேதசாட்சிகளின் வருகையும் இறைப்பணி தொடக்கமும்:

அருட்தந்தை. மோதூயி (MAUDIYT PIERRE, SJ.)

அருட்தந்தை. டெக்குரியே (எ) மாக்ஸிமில்யு தே கூர்ப்வில், SJ.

வருகை: 1695 இந்தியா, பாண்டிச்சேரி வருகை.

கருவேப்பம்பூண்டி வருகை : 1699 செப்டம்பர் 21-ம் தேதி, இறப்பு: 1711

1664 ஜனவரி 22-ல் பிரான்ஸ் நாட்டின் போய்தியர்ஸில் பிறந்த அருட்பணி. மோதூயி (Manudiyt Pierre) 1679-ல் இயேசு சபையில் சேர்ந்தார். 1695ல் இந்தியாவின் பாண்டிச்சேரி வந்த அவர், 1699 ஆம் ஆண்டு செப்டம்பர் 21-ம் தேதி கருவேப்பம்பூண்டியில் மடம் அமைத்து; தக்கோலம், புலியூர், காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய இடங்களில் உள்ள 150 பேர்களுக்கு, கருவேப்பம்பூண்டியில் வைத்து திருமுழுக்கு தந்திருக்கிறேன் என்று மோதூயி அவர்கள் ஒரு குறிப்பில் எழுதியுள்ளார்.

கருவேப்பம்பூண்டியிலும் (காஞ்சிபுரம் -உத்திரமேரூர் இடையே உள்ளது). தக்கோலத்திலும் முதல் ஆறு மாதங்களுக்குள் ஆலயங்களை எழுப்பினார். அதுவும் கருவேப்பம்பூண்டியில் தான் முதல் ஆலயமும், தங்குவதற்கான இல்லமும் (மடம்) நிறுவினார். அதனால் "கர்நாட்டிக் ஆலயங்களின் தாய்" என கருவேப்பம்பூண்டி வரலாற்றில் போற்றப்படுகிறது.

1701 மார்ச் 23 அன்று சந்திரக்கிரகணம் நேரயிருந்தது. மாற்று மதத்தினருடைய ஆதிக்க வர்க்கத்தின் அறிவாளிகளைவிட, வெகு துல்லியமாக இத்தினத்தினை முன்னரே குறிப்பிட்டு அருட்தந்தை மோதூயி அறிவித்தார். ஆகவே மாற்று மதத்தினர்கூட இவரிடம் மதிப்பு கொண்டு, அடிக்கடி வந்து கலந்துரையாட ஆரம்பித்தனர்.

தெலுங்கு மொழியினை இன்னமும் பயிலவும், அதன் மூலமாக மேலும் பல பணித்தலங்களை அமைக்கும் எண்ணத்துடனும், 1701 செப்டம்பர் 3-ம் தேதியன்று கருவேப்பம்பூண்டியிலிருந்து காவி உடை அணிந்து, வேதியர் மற்றும் மாற்று மதத்தினரையும் கொண்ட தொண்டர் படைசூழ ஆந்திரா சென்றார். அங்கு முதல் இரு மாதங்களிலேயே 400 மைல்களுக்கு மேல் பாதயாத்திரை செய்து, ஆங்காங்கே இறையரசை எடுத்துரைத்தார். அச்சமயம் புங்கலூரில் நாலு குழந்தைகள் கொண்ட விதவைத் தாய் ஒருவருக்கு திருமுழுக்கு தந்தார். அதுதான் ஆந்திராவில் நடந்த முதல் திருமுழுக்கு. இதன் நிமித்தம் "புங்கலூரானது", "தெலுங்கு கிறிஸ்துவர்களின் தொட்டில்" என வர்ணிக்கப்படலாயிற்று.

1703ல் கன்காமா என்னும் இடத்தில் சிறிது காலம் சிறையிடப்பட்டும், துவண்டு விடாது தீவிரமாகவே பணியாற்றினார் மோதூயி. 1705 முதல் இறப்புவரை தெலுங்கு மிஷன் தலைவராகவும் இருந்தார்.

1702ல் அருட்தந்தை. பெட்டித் கில்பர்ட், சே.ச. என்பவர் கருவேப்பம்பூண்டி வந்து, 1709 வரை அருட்தந்தை மோதூயி உடன் சேவை செய்தார். பெட்டித்தின் பணித்தளங்களாக கருவேப்பம்பூண்டியும், பிண்ணைப்பூண்டியும் (அச்சரப்பாக்கம் அருகே) இருந்தன. 1709ல் பெட்டித் பிரான்ஸ் திரும்பி விடவே, 1710 ஆகஸ்ட் 11 அன்று பிரான்சிலிருந்து அருட்பணி மாக்ஸிமில்யு தே கூர்ப்வில் சே.ச. அவர்கள் பாண்டிச்சேரி வந்து, அங்கிருந்து கருவேப்பம்பூண்டி வந்தார். தமது துறவறவாழ்வின் நிரந்தர வார்த்தைப் பாட்டினை இந்த ஆலயத்தில் 1710 செப்டம்பர் 8ம் தேதி அன்று எடுத்து விட்டு, அருட்தந்தை பெட்டித் விட்டுச் சென்ற பணியினை தொடர்ந்தார் தே கூர்ப்வில்.

அருட்தந்தையர் மோதூயி, தே கூர்ப்வில் -ஆகியோரின் அரிய சாதனைக்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் திட்டத்துடன், 1711-ல் இரண்டு ஆதிக்க வகுப்பினர்கள் இவர்களை விருந்துக்கு வருந்தி அழைத்து, விருந்திலேயே விஷம் வைத்தனர். நேசத்துடன் தரப்பட்ட உணவென உண்ட அருட்தந்தையர்கள், உணவு உண்ட 15-நிமிட இடைவெளியில், ஒருவர்பின் ஒருவராக இறந்தார்கள்.

இந்த இரு வேத சாட்சிகளின் திருஉடல்கள், கருவேப்பம்பூண்டி மடம் கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. மடம் கிராமத்தார்கள் மூலம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அருட்தந்தை. மோதூயி அடிகளார் கட்டிய ஆலயம் பழுதடைந்து போனதால், 1971 ஆம் ஆண்டு தற்போது காணப்படும் ஆலயமானது, சென்னை -மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் மேதகு அருளப்பா அவர்களால் கட்டப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.

ஆலய 325-வது யூபிலி ஆண்டு நினைவாக 26.01.2024 அன்று புதிய நுழைவாயில் கதவு அர்ச்சித்து, யூபிலி ஆண்டை பேரருட்தந்தை முனைவர் ஜான் போஸ்கோ (செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயரின் பொது பதில் குரு) அவர்கள் துவக்கி வைத்தார்.

கருவேப்பம்பூண்டி மடம் ஆலய அதிசயங்கள்:

கிறிஸ்துவின் திரு இரத்தம்:

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதியன்று இறை இரக்க பெருவிழா திருப்பலியில், பங்குதந்தை அருட்பணி. ச. வினோத் ராஜ் அவர்கள் திருப்பலி  நிறைவேற்றும் பொழுது, இயேசுவின் திருஉடலாகவும் இரத்தமாகவும் மாறிய அதிசயம் நிகழ்ந்தது.

மறைசாட்சியர்களால் பயன்படுத்தப்பட்ட 325 ஆண்டுகள் பழமையான கதிர் பாத்திரம் (1699-2024) ஆலயத்தில் உள்ளது. 

மறைசாட்சிகள் பயன்படுத்தி வந்த பூ ஜாடிகள், மெழுகுவர்த்தி ஜாடிகள், இடைக் கச்சை ஆகியனவும் ஆலயத்தில் பாதுகாக்கப் பட்டு வருகின்றன.

புனித சவேரியார், புனித அருளானந்கர் ஆகியோரின் பாதம் பட்ட புண்ணிய பூமியாகவும், இங்கு காணப்படும் பழைமையான கல்வெட்டுகளே இதற்கு சான்றாக உள்ளது. 

புனித அந்தோனியாரின் புனித பண்டமும் ஆலயத்தில் உள்ளன.

மறைசாட்சிகள் கல்லறை:

அருட்தந்தை. மோதூயி, அருட்தந்தை. தே கூர்ப்வில் ஆகியோரின் கல்லறைகள் ஆலய வளாகத்திலேயே அமைந்துள்ளது. தற்போது இது புதுப்பிக்கப்பட்டு, இறைமக்கள் ஜெபிக்கும் புனித இடமாக விளங்குகிறது. இங்கு வந்து ஜெபித்து பலர் அற்புத சுகம் பெற்றுள்ளனர்.

தகவல்கள்: பங்குத்தந்தை அருட்பணி. S. வினோத் ராஜ் அவர்கள்.

ஆலய வரலாறு மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை யின் வழிகாட்டலில் ஆலய வேதியர் திரு. T. தயாளன் அவர்கள். 

மண்ணின் இறையழைத்தல்கள் தகவல்கள்: மண்ணின் மைந்தர் அருட்பணி. அமுல்ராஜ் அவர்கள்.