277 புனித சலேத் மாதா திருத்தலம், மறவபட்டிபுதூர்

 

புனித சலேத் மாதா திருத்தலம்

இடம் : சலேத்நகர், மறவபட்டிபுதூர்

மாவட்டம் : திண்டுக்கல்
மறை மாவட்டம் : திண்டுக்கல்
மறை வட்டம் : மாரம்பாடி

நிலை : (திருத்தலம்) கிளைப்பங்கு

பங்கு : புனித அடைக்கல மாதா ஆலயம், மறவபட்டி

பங்குத்தந்தை : அருட்தந்தை லியோ ஜோசப்

குடும்பங்கள் : 150
அன்பியங்கள் : 3

ஞாயிறு திருப்பலி : காலை 05.30 மணிக்கு

மாதத்தின் முதல் புதன்கிழமை இரவு 07.00 மணிக்கு திருப்பலி, குணமளிக்கும் ஆராதனை, நோயிற்பூசுதல்.

திருவிழா : மே மாதத்தில் மூன்று நாட்கள் (வைகாசி மாதம் 07,08,09 தேதிகளில்)

வரலாறு :

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்து அமைந்துள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்த நெல் வயல்கள் சூழ்ந்த அழகிய கிராமம் மயில்ரங்கம். இங்கு வாழ்ந்த கிறிஸ்தவ சகோதரர்கள் நான்கு பேர் குடும்ப சூழ்நிலை, வெள்ளப்பெருக்கு மற்றும் சில சமூக மோதல்கள்கள் காரணமாக மயில்ரங்கத்தை விட்டு தங்கள் குடும்பத்தினருடன் திண்டுக்கல் நோக்கி 17-ஆம் நூற்றாண்டு வாக்கில் வந்தனர்.

திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு அருகில் மறவபட்டியில் தங்கள் குடும்பத்துடன் குடியேறினர். நான்கு சகோதரர்களுள் ஒருவரான மிக்கேல் சேர்வை என்பவர் தனது ஆறு மகன்களுடன் மறவபட்டிக்கு வெகு அருகில் ஒரு இடத்தை தேர்வு செய்து குடியேறினர். அவ்விடத்திற்கு சலேத்புரம் எனப் பெயரிட்டு வாழ்ந்து வந்தனர்.

தாங்கள் ஏற்படுத்திய சலேத்புரம் என்கிற ஊரில் சிறு ஓலைக் குடிசையில் சிலுவைக்கோவிலை அமைத்தனர். அதற்கு புனித சலேத் மாதா ஆலயம் எனப் பெயரிட்டு இறைவனை வணங்கி வந்தனர்.

பின்னர் மிக்கேல் சேர்வை தனது ஆறு மகன்கள், உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்களின் உதவியுடன் புனித சலேத் மாதாவுக்கு செங்கல், சுண்ணாம்புக்காரை, கரும்புச்சாறு, கோழிமுட்டை கலந்த கலவையில் ஆலயம் ஒன்றை கட்டியெழுப்பினர்.

1887 -ஆம் ஆண்டு வரை மிக்கேல் சேர்வை ஆலயம் மற்றும் ஊர் நிர்வாகத்தை கவனித்து வந்தார்.

1892 -ஆம் ஆண்டு பங்குத்தந்தை அருட்தந்தை நீதியநாதர் சுவாமிகளால் இவ்வூருக்கு புனித சலேத் மாதாவின் சொரூபம் வெளிநாட்டிலிருந்து வாங்கி, திண்டுக்கல் புனித சூசையப்பர் தேவாலயத்தில் வைக்கப்பட்டது. இவ்வூருக்கு என கொண்டுவரப்பட்ட புனித சலேத் அன்னையின் சோரூபம் புனித சூசையப்பர் தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த போது, அவ்வாலயத்தில் இறைமக்களின் வேண்டுதல்கள் பல நிறைவேறியதாலும், அன்னை அங்கு பல புதுமைகளை செய்து வந்ததாலும் அங்கேயே சொரூபத்தை வைத்துக் கொண்டு தர மறுத்தனர்.

ஆனால் இவ்வூர் மக்கள் அப்போதைய அருட்தந்தையர்களிடம் வேண்டுகோள் வைத்து கடும் முயற்சிகளுக்கு பின்னரே சொரூபம் புனித சூசையப்பர் ஆலய அருட்தந்தையர்களால் வைகாசி மாதம் 07 -ஆம் தேதி இவ்வூருக்கு வழங்கப்பட்டது.

மகிழ்சியுடன் சொரூபத்தை பெற்றுக் கொண்ட மக்கள், வாகன வசதியற்ற அக்காலத்தில் தலைச்சுமையாக அன்னையின் சொரூபத்தை தூக்கி வந்தனர்.

அன்னையின் சொரூபம் இவ்வூருக்கு வந்து கொண்டிருப்பதை கேள்விப்பட்ட சுற்றுப்பகுதி மக்கள் பேராவல் கொண்டு தற்போதைய கல்லறைத் தோட்டம் அருகே கூடினர்.

அக்காலத்தில் மக்கள் ஆடு மாடு மேய்த்தல், விவசாயம் போன்ற தொழில்களை செய்து வந்தனர். குறிப்பாக வைகாசி மாதம் வெள்ளைச்சோளம் அறுவடை காலம் ஆகும். எனவே விவசாய நிலங்களில் வெள்ளைச்சோளம் விளைந்து முற்றிய நிலையில் இருந்தன. அன்னையின் திருமுகத்தை தரிசிக்கும் ஆவலில் ஆங்காங்கே மேய்ச்சல் நிலங்களில் மேய்ந்து கொண்டிருந்த தங்களது ஆடு மாடுகளை அங்கேயே விட்டு விட்டு அன்னையின் திருமுகத்தை காண ஓடோடி வந்தனர். கவனிப்பாரற்று விடப்பட்ட ஆடு மாடுகள் விளைநிலங்களில் புகுந்து வெள்ளைச்சோள கதிர்களை வயிறுநிறைய மேய்ந்தன. இதனால் அவை வயிறு பெருகி சுகவீனம் அடைந்தன.

தங்கள் கால்நடைகளின் நிலையை எண்ணி மக்கள் கலங்கினர். முதியவர் ஒருவர் அன்னையை கொண்டு வந்து வைத்த இடத்தில் உள்ள காலடிமண்ணை எடுத்து ஆடுமாடுகளின் கழுத்தில் பூசிடுமாறு கூற, மக்களும் அவ்வாறே செய்ய கால்நடைகள் நலம் பெற்றன. இவ்வாறு அன்னையின் புதுமை இவ்வூரில் ஆரம்பிக்க இதனை அறிந்த பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் தங்கள் தேவைகளை அன்னையின் பாதத்தில் வைத்து செபிக்க, அன்னையின் பரிந்துரையால் இறைவனின் ஆசீர்வாதங்களை பெற்றுச் செல்கின்றனர்.

1990 -ஆம் ஆண்டு நூறு ஆண்டுகள் கடந்த இந்த ஆலயத்தை புதுப்பிக்க ஊர் பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டு, கோயில் வேலைக்கு ஊரில் வசிக்கும் பொதுமக்கள் தலைக்கட்டு வாரியாக வேலை செய்வது எனவும், பொருளாதாரத்தை நன்கொடைகள் மூலம் திரட்டுவது எனவும் முடிவு செய்யப்பட்டு, ஆலய புதுப்பிக்கும் பணிகள் அனைவரின் ஒத்துழைப்பு, ஊர்மக்கள், தாடிக்கொம்பு ஊரை சார்ந்தவர்கள் மற்றும் பலரும் நன்கொடை செய்ய சிறப்பாக நிறைவு செய்யப்பட்டது.

2005-ஆம் ஆண்டு மீண்டும் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கோதிக் கலை நுட்பத்தில் அழகிய இரண்டு கோபுரங்கள் கட்டப்பட்டன.

அன்னையின் சொரூபம் கொண்டு வரப்பட்ட வைகாசி மாதம் 07- ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

திருவிழாவின் போது பகலில் நடக்கும் சப்பரபவனியில் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்வார்கள். சப்பரபனி நிறைவு பெற்றதும் புனித சலேத் மாதா சொரூபம் இருக்கும் சப்பரைத்தை சுற்றி தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற்றப்பட்டதற்கு நன்றியாக மக்கள் முட்டி போட்டு நடந்து வந்து அங்க பிரதட்சணம் செய்வார்கள்.

இந்த திருத்தலத்தில் உள்ள இரண்டு புனித சலேத் மாதா சொரூபங்களும் பிரான்ஸ் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டதாகும்.

வழித்தடம் : திண்டுக்கல் - தாடிக்கொம்பு- மறவப்பட்டி.

காலையில் 07.30 மணிக்கும், மாலையில் 03.30 மணிக்கும் திண்டுக்கல்லிலிருந்து மறவப்பட்டி புதூர் க்கு நேரடியான அரசுப்பேருந்து (தடம் எண் 5) இயக்கப்படுகிறது.