600 திரு இருதயங்களின் ஆலயம், சருகணி

              

திரு இருதயங்களின் ஆலயம் (அன்னை மாமரி & இயேசு கிறிஸ்து) 

இடம் : சருகணி

மாவட்டம் : சிவகங்கை

மறைமாவட்டம் : சிவகங்கை

மறைவட்டம் : தேவகோட்டை

பங்குத்தந்தை : அருட்பணி.

C.A. ஜேம்ஸ்

நிலை : பங்குத்தளம் 

கிளைப் பங்குகள்: 17

நாகமதி

சீனமங்கலம்

உடையாகுளம்

அங்கலாங்கோட்டை

போரடப்பு

பொன்னலிக்கோட்டை

உருவாட்டி

செபஸ்தியார் நகர்

திருவேகம்பத்தூர்

பழனிவயல்

இரவியமங்கலம்

செங்கற்கோவில்

பின்னலாங்கோட்டை

சித்தூர்

வெற்றியாளங்குளம்,

விஜயாபுரம்,

கோபாலபுரம்.

குடும்பங்கள் : 375

அன்பியங்கள் :12

வழிபாட்டு நேரங்கள் : 

•தினமும் காலை 05.30மணிக்கு திருப்பலி, மாலை 06.30மணிக்கு ஜெபமாலை

•ஞாயிறு காலை 05.30 மற்றும் 08.30 மணிக்கு திருப்பலி,

•மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை திருப்பலி மற்றும் நற்கருணை ஆராதனை

•ஒவ்வொரு மாதமும் 21 ஆம் தேதி லெவேல் தினமாக சிறப்பிக்கப்படுகிறது.

அன்று அவரது கல்லறையில் திருச்ஜெபமாலையும், மன்றாட்டு மாலையும் அதனைத் தொடர்ந்து பங்கு ஆலயத்தில் சிறப்பு திருப்பலியும் குணமளிக்கும் ஆராதனையும், லெவேல் தந்தையிடமிருந்து பெற்றுக் கொண்ட நேரடி அனுபவ சாட்சியப் பகிர்வும் நடைபெறும்.

திருவிழாக்கள் :

பங்குத்திருவிழா : ஜூன் மாதம்

அருட்தந்தை ஜேம்ஸ் தாமஸ் ரோஸி நினைவு நாள்: அக்டோபர் 12

புனித சவேரியார் திருவிழா: டிசம்பர் 2 & 3

இறை ஊழியர் லூயி மரி லெவே விண்ணகப் பிறப்பு விழா: மார்ச் 21

மண்ணின் இறையழைத்தல்கள்: 

 அருட்தந்தையர்கள்;

1. அருட்பணி. லாரன்ஸ் சேவியர் (late)

2. அருட்பணி. புஷ்பராஜ்

3. அருட்பணி. அற்புதராஜ், SSS

4. அருட்பணி. சேவியர்

5. அருட்பணி. R.S இருதயராஜ் 

6. அருட்பணி. லியோ ரெக்ஸ்

7. அருட்பணி. பெலிக்ஸ் மதுரம், OCD

8. அருட்பணி. சகாய அமல ராஜன், SSS (late)

9. அருட்பணி. மரிய லூயிஸ், MC

10. அருட்பணி. பிரான்சிஸ்

11. அருட்பணி. செல்வகுமார், HGN

12. அருட்பணி. செல்வகுமார், SDB

13. அருட்பணி. சந்தோஷ், CM

14. அருட்பணி. அசோக் லாரன்ஸ், SDB

15. அருட்பணி. ஆரோக்கியராஜ்

16. அருட்பணி. டிரோசி, SDB

17. அருட்பணி. ஆரோக்கியசாமி (ஆரோன்)

18. அருட்பணி. ஸ்டீபன்

19. அருட்பணி. பிரபு, OCD

20. அருட்பணி. A. லூயி ஆல்பர்ட், SJ

அருட்சகோதரர்கள்:

21. அருட்சகோ. S. சூசைமுத்து, SHJ (late) 

22. அருட்சகோ. தவமணி, SHJ (Late)

23. அருட்சகோ. ராஜா, SJ

24. அருட்சகோ. கஸ்பார், SHJ

25. அருட்சகோ. சுரேஷ் பாபு, SHJ

26. தி. தொ. குழந்தை, SDC

27. அ. சகோ. தேவதாஸ், SJ

28. அ. சகோ. சேசு

29. அ. சகோ. ஆலன் ராஜ்

30. அ. சகோ. கிங்ஸ்டன், SDB

31. சகோ. இதயன்

32. சகோ. கிளின்டன்.

 அருட்சகோதரிகள்

33. Sr. அகஸ்டின் மேரி, OSM (Late)

34. Sr. சல்வினா மேரி, OSM 

35. Sr. ஜோதி மேரி, OSM

36. Sr. பாத்திமா மேரி, OSM (Late)

37. Sr. பியூரீட்டா மேரி, OSM (Late)

38. Sr. சுசிலா மேரி, OSM

39. Sr. சலோமி மேரி, OSM

40. Sr. குழந்தை மேரி, OSM

41. Sr. பிரகாசி மேரி, OSM

42. Sr. மரிய குழந்தை, OSM

43. Sr. பிரான்சிஸ் சோபியா, OSM

44. Sr. லில்லி மேரி, FSPM

45. Sr. கிரேசி, FSPM

46. Sr. விஜிலா, CSM

47. Sr. அமுதா, CIC

48. Sr. ரீட்டா, CIC

49. Sr. அனிட்டோ, FIHM

Location :

Sarugani

https://maps.google.com/?q=Home+Sarugani&ftid=0x0:0xa500baad24f9e50c

 வரலாறு 

"வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களினும் உம் கோவில் முற்றங்களில் தங்கும் ஒருநாளே மேலானது."

(தி.பா 84:10)

" கச்சணிந்த பொற்கை மாதர் கால் சலங்கை சலசலக்கும் சிவகங்கை சீமையில்" 

மதுரை -தொண்டி சாலையில், தேவகோட்டைக்கு தெற்கே 16கி.மீ தூரத்தில், சிவகங்கையிலிருந்து நேர் கிழக்கே 30கி.மீட்டரில்   அமைந்துள்ளது சருகணி.

குறிப்பாக ஆங்கிலேயர் சிவகங்கை சீமையை ஆண்ட மருது மன்னர்களின் வரலாற்றோடு தொடர்புடைய ஊர் சருகணி.

இந்த வட்டாரத்தில், ஓரியூரில் தலை வெட்டுண்ட புனித அருளானந்தர் விட்டுச்சென்ற மறைப்பணியை, 1708 இல் பீட்டர் மார்ட்டின் என்ற இயேசு சபை அருட்பணியாளர் செய்துள்ளார்.

ஆங்கிலேயர் காலத்தில் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய சிவகங்கை சீமை மருது சகோதரர்கள் வரலாற்றில் போற்றப்பட வேண்டியவர்கள்.

ஆங்கிலப்படை ஒன்று சின்ன மருதுவைப் பிடிக்க வந்தபோது, சின்ன மருது சருகணியில் வாழ்ந்த ஜேம்ஸ் டி ரோஸி என்ற பாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த தாகவும், அவர் மருதுவை தன் இருப்பிடத்திற்கு கீழே மறைத்து வைத்து பாதுகாப்பு கொடுத்ததற்கு, நன்றிக்கடனாக சின்னமருது அவர்கள், மாறணி என்ற கிராமத்தை சர்வகானியாக  வாக்குறுதி கொடுத்தார். சர்வகானியாக வழங்கப்பட்ட கிராமம் தான் இன்று சருகணியாக உள்ளது. அதற்கான அத்தாட்சி செப்புப்பட்டயம்.

இன்று சருகணியில் புகழ்பெற்று விளங்கும் திரு இருதயங்களின் ஆலயம்,  மக்களால் சின்ன சவேரியார் என்று அழைக்கப்பட்ட  அருட்பணி. ஜேம்ஸ் டி ரோஸி அவர்களால் 1753 ம் ஆண்டில் முதலில் கட்டப்பட்டது. பின்பு பல்வேறு காலங்களில் புதுப்பிக்கப்பட்டு இன்று விண்ணக எருசலேம் ஆக காட்சியளிக்கிறது.

இக்கோவிலில் 16, 17ஆம் நூற்றாண்டில் மதுரை மிஷனில் கோவா மிஷனரிகள் அதாவது போர்த்துகீசிய அருட்பணியாளர்கள் மறைப்பணி செய்துள்ளார்கள். அந்த நாட்டின் கலை நயத்துடன் கட்டப்பட்ட கோவில் இது. ஆகவே கோவில் முகப்பு இன்றும் அழிக்கப்படாமல் இருக்கிறது. 

அன்னை மாமரியின் இருதயமும், இயேசுவின் திரு இருதயமும் முகப்பு கோபுரத்தில் காணலாம். இருபுறங்களிலும் தேவதூதர்கள் வணங்குவது போன்று சுரூபங்கள் அமைக்கப்பட்டுள்ள,

இவ்வாலயம் கொச்சியில் பணியாற்றிய ஆயர் ஒருவரால் திருநிலைப்படுத்தப் பட்டது.

அருட்திரு ஜேம்ஸ் டி ரோஸி கட்டிய தேவாலயத்தின் பீடமும், மண்டபமும் 1929ல் இடிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு, விரிவாக்கம் செய்யப்பட்டது.  

தமிழகத்தில் திரு இருதயங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதல் ஆலயம் சருகணி தேவாலயம் என்பது தனிச்சிறப்பு.

சருகணி பங்கில் பணியாற்றிய இறைவனால் அருட்பொழிவு செய்யப்பட்ட இரண்டு தூய அருட்பணியாளர்கள், தங்கள் உயிரை இறைவனுக்காகக் கொடுத்து நற்செய்தியை அறிவித்து, அதே ஊரில் துயில் கொண்டுள்ளதே இவ்வூரின் மறு சிறப்பு. இறை ஊழியர் அருட்தந்தை. லூயி மரி லெவே அடிகளார் (சின்ன அருளானந்தர்)

அருட்தந்தை. ஜேம்ஸ் தாமஸ் தி ரோசி (சின்ன சவேரியார்)

இறை ஊழியர் லூயி மரிய லெவே: 

பிரான்ஸ் நாட்டில் பிரிட்டனி மகாணத்தில் ரென்ஸ் மறைமாவட்டத்தில் லாலியர் என்னும் கிராமத்தில் 06.04.1884 அன்று பிறந்தார் தந்தை லெவே. பிறந்த பாலகன் உடல் எடை குறைவாக மெல்லியதாக இருந்ததால் இறந்து விடக்கூடும் என உறவினர்களும் பெற்றோரும் அஞ்சினர்.

எனவே பிறந்த அன்றே ஞானஸ்தானம் தந்தைக்கு வழங்கப்பட்டது. ஞானப் பெற்றோர்கள் இருவரது பெயரை இணைத்து லூயி மரிய லெவே  என்று பெயர் சூட்டப்பட்டது.

ஆரம்பக் கல்வி, உயர்நிலை கல்வி அனைத்தையும் முடித்து ரென்ஸ் மறைமாவட்டத்தில் உள்ள இளம் குருமடத்தில் ஓராண்டு தத்துவ பயிற்சிக்காக சேர்ந்தார்.

1906 -ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆறாம் நாள் ட்ரவுலோஸ் மகாணத்தில் உள்ள இயேசு சபையின் நவ துறவு பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 

நவ துறவுகாலத்தில் ஒரு உத்தம குருவாக வாழ்ந்து இயேசுவின் நற்செய்தியை உலகமெங்கும் சென்று போதிக்க வேண்டும் என்ற ஆசையோடு காணப்பட்டார்.

அவ்வேளையில் தான் தமிழகத்தில் மதுரை மிஷனில் இருந்து ஒரு குருவானவர், லெவே தங்கிப் பயிலும் நவ துறவு இல்லத்தில் மிஷினரி வாழ்வு பற்றி பாடம் நடத்தினார். புனித சவேரியார், புனித அருளானந்தர் இவர்களது வாழ்க்கை வரலாற்றை படித்ததால் அவர்களிடம் ஏற்பட்ட தாக்கம், நற்செய்தி அறிவிப்பின் ஒளி மதுரை மிஷினில் அருள் பணிபுரிய வேண்டும் என்று அர்ப்பண வாழ்வுக்கு அவரை அழைத்தது.

1908 -ஆம் ஆண்டு அக்டோபர் 14 அன்று இந்தியா வந்து சேர்ந்தார். கொடைக்கானலில் இயேசு சபையின் உருவாக்கும் தளத்தில் சேர்ந்து குருத்துவ படிப்பிற்கான பயிற்சிகளைப் பெற்றார். பின்னர் பயிற்சிக்காக பாளையங்கோட்டை தூய சவேரியார் உயர்நிலைப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். அதன்பிறகு இமயமலை அடிவாரத்தில் உள்ள கர்சியூங் என்ற இடத்திற்கு அனுப்பப்பட்டார்.

அங்கே இறையியல் படித்தார்.

13.01.1920 அன்று இயேசு சபையின் குருவாக அருட்பொழிவு பெற்றார். 1921 -ஆம் ஆண்டு மதுரை மிஷனில் ஆண்டாவூரணியில் பங்கு குருவாக நியமனம் பெற்றார்.

ஆண்டாவூரணி (1921-1943): 

புனித அருளானந்தர் உயிர் கொடுத்த ஓரியூருக்கு மிக அருகில் உள்ள ஆண்டவூரணி அந்த நாட்களில் ஒரு அமைதியற்ற பங்காக திகழ்ந்தது. 

தூய தந்தையே நாம் ஒன்றாய் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்களித்த உன் பெயரின் ஆற்றலால் அவர்களை காத்தருளும் என்ற இயேசுவின் ஜெபத்திற்கு செயல்வடிவம் கொடுக்க திட்டம் தீட்டி, களத்தில் இறங்கினார்.

⛪ஒரு புதிய ஆலயம் கட்டி

1928 -இல் மேதகு பசந்தி ஆண்டகையால் புனிதப் படுத்தப்பட்டது. அங்கு கட்டப்பட்ட

இரக்க நாயகி ஆலயம், இரு பிரிவினராக இருந்த இறைமக்களை ஒன்றிணைக்கும் இறை இல்லமாக திகழ்ந்தது.

"ஆண்டவர் தாம் திருப்பொழிவு செய்தவருக்கு வெற்றி தருகின்றார். தமது தூய வானத்திலிருந்து அவருக்குப் பதிலளிக்கின்றார். வெற்றியளிக்கும் தமது வலக்கையின் ஆற்றலைக் காட்டுகின்றார்"

திருப்பாடல்கள் 20: 6

-என்ற இறை வார்த்தைக்கு இணங்க, இன்று அந்த ஊரில் ஒரே ஆயனும், ஒரே மந்தையுமாக வாழ்ந்து வருகின்றனர்.

அங்கு அருட்தந்தை அவர்கள் பணியாற்றும் பொழுது கல்வி நிலையங்கள், விடுதிகள், மருத்துவமனைகள் என கட்டி மக்களுக்கு பயன்படும் வகையில் உதவினார். 

இன்றைய நாட்களில் நாம் செல்கிற ஓரியூர் திருப்பயணத்தை அருட்தந்தை லெவே அவர்கள் ஆரம்பித்து வைத்தார் என்பதும் சிறப்புக்குரியது. புனித அருளானந்தர் புனிதராக உயர்த்த கடும் பாடுபட்டார். 1947 ஜூன் 22 இல் அருளானந்தர் புனிதராக அறிவிக்கப்பட்டார். இந்நாள்  தந்தையின் வாழ்வில் ஒரு புனிதமான நாள் ஆகும்.

 ராமநாதபுரம் (1943-1956): 

அருட்தந்தை லெவே அவர்கள், ராமநாதபுரத்தில் பல புதிய முன்னெடுப்புக்களை எடுத்தார். கல்விப்பணி, சமூகப்பணி, நற்செய்திப் பணி ஆகிய துறைகளில் மக்களுக்கு பயன்படும் வகையில் பல உதவிகள் புரிந்தார். ஆன்மாக்களைத் தேடி அலைவதே தந்தையின் முதன்மையான பணியாக அமைந்தது. பல தூரத்திலுள்ள கிராமங்களுக்கு மழையிலும் வெயிலிலும் நடந்தே சென்று நற்செய்தியை அறிவிப்பார்.

தூய ஆவியின் துணை கொண்டு தன்னுடைய பணியை செவ்வனே செய்தார். அவர் வாழ்ந்த காலத்தில்

அற்புதங்களும் அடையாளங்களும் நிகழ்ந்தன. 

1954 இல் அவரது வயது 70 ஆகிவிட்டது. 13 ஆண்டுகள் ராமநாதபுரத்தில் அயராது உழைத்த அருட்தந்தை லெவே உடல் தளர்ந்து மெலிந்து போனார். அவரது 72 வது வயதில் ஓய்வு எடுக்க சருகணிக்கு மாற்றப்பட்டார்.

சருகணி ஆன்மீக குரு (1956-1973): 

1956 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் நாள் அருட்தந்தை லெவே சருகணிக்கு வந்தார். பங்கு பொறுப்புக்கள் அவருக்கு கொடுக்கப்படவில்லை. ஆன்மீக வழிகாட்டியாகவும், ஒப்புரவு அருட்சாதனம் கேட்டு வருவோருக்கு பாவ மன்னிப்பு வழங்கவுமே அவருக்கு வாய்மொழியாக சொல்லப்பட்ட பணி.

ஆயினும் அதனைப் பொருட்படுத்தாமல், சருகணியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு நடந்தே சென்று நற்செய்தியை அறிவித்தார்.

நடக்க முடியாத போது, எவராவது சைக்கிளில் அவரை கொண்டு செல்வர்.

புனித அருளானந்தரால் மனம் திருப்பப்பட்ட கிறிஸ்தவ மக்கள் காலப்போக்கில் தடம்புரண்டு போனதை அறிந்து, அந்தக் குடும்பங்களை தேடிச் சென்று நற்செய்தியை அறிவித்து மீண்டும் அவர்களை நல்ல கத்தோலிக்க மக்களாக மாற்றினார். இவ்வாறு நற்செய்தி கூறும் நல்லாயன் ஆக திகழ்ந்தார். 

ஏழை எளிய மக்கள் மீதும், நோயாளிகள் மீதும் மிகுந்த பரிவும் பாசமும் காட்டினார்.

கைவிடப்பட்ட அனாதைகள், விதவைகள், உயர் கல்வி பெற முடியாமல் தவிக்கும் பிள்ளைகள் ஆகியோருக்கு உதவிகளை தாராளமாக செய்து வந்தார். சருகணி பங்கு குருக்கள் இல்லத்தின் முன்பக்கம் இவரை சந்திக்க மக்கள் கூட்டமாக எப்போதும் காத்து நிற்பார்கள். மட்டுமன்றி நோய்வாய்ப்பட்ட ஆடுகள், மாடுகள், வளர்ப்பு பிராணிகளையும் ஓட்டி வருவர். இவரிடம் ஜெபித்து ஆசீர்வாதம் பெற்றுச் செல்லும் போது, இறைவனின் ஆசீர்வாதத்தால் உடனடியாக நோயிலிருந்து முற்றிலும் விடுதலை கிடைக்கும்.  

அருட்தந்தை லெவேயிடம் விவசாயத்திற்காக மக்கள் துணை வேண்டி வருவர். பூச்சிகளாலும் விஷப் பிரச்சனைகளாலும் நெற்பயிர் வாடி விடுகின்றது, விவசாயம் செழிக்க வில்லை என்று அண்டி வருவோருக்கு தந்தை லெவே பனை ஓலையில் ஒரு சிறிய ஜெபத்தை எழுதிக் கொடுப்பார்.

அந்தப் பனை ஓலையை வயலின் நான்கு புறமும் ஊன்றி வைத்தால் பூச்சிகளும் விஷ பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.

85 வயது ஆகிவிட்ட நிலையில் அவரால் முன்பு போல் செயல்பட முடியவில்லை. அடிக்கடி உடல்நலம் இழந்தார். இதனால் பங்குத்தந்தையர்கள் அவரை மிகுந்த அக்கறையுடன்  பராமரித்து பாதுகாத்து வந்தனர். ஆனாலும் தந்தை சோர்ந்து விடவில்லை. மழை வேண்டி தவ ஊர்வலம் நடத்தினார்.

நண்பகல் 12:00 மணிக்கு ஊர்வலத்தை ஆரம்பித்த அருட்தந்தை லெவே, முடிவில் ஆலயத்தின் முன்பு முழந்தாள் படியிட்டு, இரு கைகளையும் உயர்த்தி வானகத் தந்தையை நோக்கி ஜெபிப்பார். அப்படி ஒரு புதுமை நடந்துவிடும். எங்கிருந்துதான் கருமேகம் வருமோ தெரியாது, அப்படி ஒரு மழை வெளுத்து கட்டும். இறுதியில் தந்தை அனைவரையும் ஆலயத்திற்குக் கூட்டிச் சென்று ஆண்டவருக்கு நன்றி செலுத்துவார். தமது மரணம் நெருங்கி வருவதை அவரே உணர்ந்தார். எனவே தனது கல்லறைக்கான இடத்தை அவரே தேர்ந்தெடுத்தார். சருகணி கோயிலில் புனித குழந்தை தெரசாள் பீடத்தின் முன்புறம், லூர்து அன்னை கெபி எதிர்ப்புறம் தன்னை அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மண்வெட்டியால் அந்த இடத்தை அவரே முதன் முதலில் குழி நோண்டி ஆசீர்வதித்தார்.

புனித லூர்து அன்னை மீதும், புனித குழந்தை தெரசாள் மீதும் அளவற்ற பக்தியுடன் விளங்கினார்.

இப்படிப்பட்ட புனித மிக்க அருட்தந்தை தனது 89 வது வயதில் 21.03.1973 அன்று சரியாக மாலை 05.10 மணிக்கு மரணமடைந்தார். மறுநாள் மாலை 04.00 மணிக்கு அன்றைய மதுரை பேராயர் ஜஸ்டின் திரவியம் ஆண்டகை அவர்களால் திருப்பலி நிறைவேற்றப்பட்டு, தவ ஊர்வலம் நடத்திய தந்தை, இறுதி ஊர்வலமனது ஊரை சுற்றி வரப்பட்டு, அவர் குறிப்பிட்ட இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

இன்றும் சாதி சமய வேறுபாடின்றி ஏராளமான மக்கள் அவரது கல்லறையைத் தேடி வந்து, அவரது நினைவிடத்தில் ஜெபித்து புதுமைகள் பெற்றுச் செல்வதை நாம் காணலாம்.

அருட்தந்தையைத் தேடி வாருங்கள், அவரது பரிந்துரையால் இறைவனின் ஆசியைப் பெற்றுச் செல்லுங்கள்.

ஓ! இயேசுவே அன்பின் அரசரே! உமது அன்புள்ள இரக்கத்தை நம்புகிறேன்.

அருட்தந்தை. ஜேம்ஸ் தாமஸ் தி ரோஸி: 

1701 -ம் ஆண்டு இத்தாலி நாட்டில்

அப்பூலியா என்ற மாவட்டத்தில் நாலாவூர் என்ற இடத்தில் அருட்தந்தை பிறந்தார். புனித சவேரியாரின் மேல் கொண்ட ஆழ்ந்த பக்தியின் விளைவாக இந்தியா வந்து, ஆன்மீக பணியாற்ற வேண்டும் என்ற தணியாத தாகம் கொண்டவராய் 1736 இல் இந்தியாவிற்கு வந்து, மதுரை மிஷனில் சேர்ந்து 1740 வரை இடையில் சருகணியில் தன் பணியைத் தொடங்கி பல இடங்களில் அரும்பணியாற்றினார்.

அவர் வாழ்ந்த காலத்தில் அவர் அனுபவித்த துன்பங்கள் துயரங்கள் சோதனைகள் எண்ணிலடங்கா. 

அன்றைய ராமநாதபுரத்தை ஆண்ட அரசன் அருட்தந்தைக்கு பல தொல்லைகள் கொடுத்தான். அடி உதைகள் ஏராளம்.. ஏராளம்... இரவோடு இரவாக பட்டுக்கோட்டைக்கு நாடுகடத்தப்பட்டார். நாடுகடத்தப்படும் அந்த இடத்தில் தன் ஆன்மீகப் பணியை தொடர்ந்தார். அச்சமயத்தில் இச்சம்பவத்தை கேட்ட அரசனின் மனைவி தந்தையிடம் வந்து மன்னிப்பு கேட்டார். அதுமட்டுமல்லாமல் தந்தையை இராமநாதபுரத்திற்கு அழைத்து அவரை வாழ்த்தி கவுரவித்தார். மருது சகோதரர்களுடன் நட்புறவு கொண்டார். பிரெஞ்சுப் படை தலைவரிடம் நட்பு கொண்டு அவரின் ஆலோசனையைக் கேட்டு ராமநாதபுரத்தில் ஆலயத்தைக் கட்டினார்.

1753 ம் ஆண்டு சருகணியில் திரு இருதயங்களின் ஆலயத்தைக் கட்டி இரு இதயங்களின் ஆலயமாக இன்று சான்று பகர செய்தார்.

தன் மறைப்பணியை செய்ய குதிரையில் பல்வேறு இடங்களுக்கு சென்றதாக வரலாறு கூறுகிறது. பிற மதத்தினர் கிறிஸ்துவை நம்ப பெரும் பாடமாக இருந்தார். சருகணியில் 33 ஆண்டுகள் பணியாற்றி காடுமேடாக இருந்த இடத்தை, மக்கள் மகிழ்வுடன் வாழும் ஊராய் மாற்றினார். எதிரிகள் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு அன்னை மரியின் துணையிலும், புனித சவேரியாரின் புனித தீர்த்த விசுவாசத்திலும், புனித அருளானந்தர் ஆசிராலும் எண்ணற்ற புதுமைகளை செய்தார். ஜேம்ஸ் டி ரோஸியின் தொடக்க காலகட்டத்தில் தமிழகத்தின் வடபகுதியில் பணியாற்றியவர் தமிழ் மாமுனிவர் வீரமாமுனிவர்.

ஜேம்ஸ் டிரோஸி (சின்ன சவேரியார்) ஆன்மீக நூல்களை மட்டும் அல்லாது மறவ நாட்டின் பல ஊர்களின் வரலாறுகளை ஓலைச்சுவடியில் எழுத்தாணி கொண்டு எழுதி, ஆவணப்படுத்தி இருப்பது தந்தையின் பணிக்கு பெரும் சான்றாகும்.

ஒவ்வொரு நாளும் நாம் தியானிக்க ஏழு கிழமை புதுமைப் புத்தகங்களை எழுதினார். அப்புத்தகங்கள் நமக்கு பெரும் சக்தியாக விளங்குகிறது.

அவர் அர்ச்சித்த சாதாரண தண்ணீர் நறுமண வாசனையுடன் இருந்ததைக் கண்டு பலரும் வியப்புற்று அவர் விசுவாசத்தின் தந்தை என்று வியந்து போற்றினர். அரசர்களிடம் உண்மையைப் பேசுவார். செய்த தவறை உணர வைப்பார். 

பல புதுமைகளையும் சிறப்புக்களையும் செய்த அருட்தந்தை 1774 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் நாள் இறைவனின் இல்லம் சேர்ந்தார்.

தந்தையின் மறைவுச் செய்தி அறிந்து மருதுபாண்டியர்கள் அருட்தந்தையின் அடக்க நிகழ்விற்கு வண்டிகளில் சந்தனக் கட்டைகளையும் நெய் குடங்களையும் எடுத்து வந்தனர். அருட்தந்தையின் கல்லறை சருகணியில் ரோகினி நதிக்கரையில் சிங்கார மணிமண்டபத்தில் அவரது ஆன்மீகப் பணிகளுக்கு சான்று பகர்ந்து கொண்டிருக்கிறது. இறந்து 250 ஆண்டுகள் ஆகியும் சிவகங்கை சீமையின் மக்கள் மத்தியில் நீங்காத இடம்பிடித்த தந்தையாக சின்ன சவேரியார் என்று பெயர் கொண்டு விளங்குகிறார்.

இவ்வளவு பெருமைகளையும் மாட்சியையும் உடைய இருபெரும் போற்றுதலுக்குரிய அருட்தந்தையர்கள் இயேசு சபையினர் ஆவர்.

தற்பொழுது சிவகங்கை மறைமாவட்டம் மற்றும் இயேசு சபையினர் இணைந்து இறை ஊழியர் லெவே அவர்களை அருளாளர்  நிலைக்கு உயர்த்துவதற்கான பணிகள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.

விரைவில் இறை ஊழியர் அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட நாம் அனைவரும் தொடர்ந்து ஜெபிப்போம்.

சருகணி தேவாலயம் கட்டப்பட்டு முதலில் சேசு சபை அருட்தந்தையர்கள் சீரும் சிறப்புமாக சருகணி பங்கை வழிநடத்தி வந்தனர். காலம் செல்ல செல்ல மதுரை உயர்மறைமாவட்டத்திடம் பங்கானது ஒப்படைக்கப்பட்டது. மதுரை உயர்மறைமாவட்ட குருக்களும் சருகணி பங்கை சரியான பாங்குடன் வழிநடத்திச் சென்றனர். சிவகங்கை மறைமாவட்டம் புதிதாக உயர்த்தப்பட்ட போது சருகணி பங்கானது, சிவகங்கை மறைமாவட்ட குருக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்பொழுது சிவகங்கை மறைமாவட்ட குருக்கள் இறை விசுவாசத்தில் வேரூன்றி, தொலைநோக்கு சிந்தனையுடன் சருகணி பங்கை வழிநடத்திச் செல்கின்றனர்.

பங்கின் அருட்சகோதரிகள் இல்லங்கள்: 

•மரியின் ஊழியர் சபை இல்லம்,

•அமலோற்பவ மாதா சபை இல்லம்,

•மரியன்னையின் தூய இதயா சபை இல்லம்.

நிறுவனங்கள்: 

தூய பவுல் தொடக்கப்பள்ளி,

தூய பவுல் உயர்நிலைப்பள்ளி,

புனித சூசையப்பர் நடுநிலைப்பள்ளி,

இவை மூன்றும் பங்குத்தந்தையின் கீழ் இயங்குகின்றது.

இதயா மகளிர் கல்லூரி,

இதயா மருத்துவமனை,

முதியோர் இல்லம்,

மனநல காப்பகம்,

இவை அனைத்தும் இப்பங்கின்

தூய மரியன்னை இதயா சபை அருட்சகோதரிகளால் நடத்தப்படுகிறது.

அன்பியங்கள்:

புனித அன்னை தெரசா அன்பியம்,

புனித குழந்தை இயேசு அன்பியம்,

புனித அருளானந்தர் அன்பியம்,

புனித செபஸ்தியார் அன்பியம்,

புனித அந்தோணியார் அன்பியம்,

புனித ஆரோக்கிய அன்னை அன்பியம்,

ஜேம்ஸ் டி ரோசி அன்பியம்,

புனித அமல அன்னை அன்பியம்,

இறைஊழியர் லூயி லெவே அன்பியம்,

புனித அலங்கார அன்னை அன்பியம்,

புனித குழந்தை தெரசாள் அன்பியம்,

இம்மானுவேல் அன்பியம். 

-ஆகிய 12 அன்பியங்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. 

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

•பங்கு பேரவை

•வின்சென்ட் தே-பவுல் சபை

•திருக்குடும்ப சபை

•கிறிஸ்தவ வாழ்வு பணிக்குழு

•நற்செய்தி பணிக்குழு

•மரியாயின் சேனை

•லெவே நண்பர் குழு

•FSS. Friends of Servite Soceity

•ஜேம்ஸ் டி ரோஸி இளைஞர் இயக்கம்

•மாதா சபை 

•இளம்பெண்கள் இயக்கம்

•இயேசுவின் கண்மணிகள் இயக்கம்

•நற்கருணை வீரர் சபை. 

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் 

அருட்திரு. ஹெர்குலஸ் தெரோ செலி SJ,

அருட்திரு. ஹென்றி எலோர்ஷா SJ,

அருட்திரு. ஜோசப் ஹெர்லின் SJ,

அருட்திரு. கிளோடே பெடின் SJ,

அருட்திரு. பாப்டிஸ்ட்டாரிஸ் SJ,

அருட்திரு. கபிரியேல் SJ,

அருட்திரு. பெலிக்ஸ் போயர் SJ,

அருட்திரு. ரேப்ரே SJ,

அருட்திரு. ஜோசப் SJ,

அருட்திரு. அம்புரோஸ் SJ,

அருட்திரு. ஹென்றி SJ,

அருட்திரு. அம்புரோஸ் (2 ஆம் முறை),

அருட்திரு. பால் டெக்கோலி SJ,

அருட்திரு. மென்டோன்சா SJ,

அருட்திரு. ஜேம்ஸ் SJ,

அருட்திரு. ஜார்ஜ் போரோ SJ,

அருட்திரு. அடைக்கலம் SJ,

அருட்திரு. இருதயம்,

அருட்திரு. வேதமுத்து,

அருட்திரு. விசுவாசம்,

அருட்திரு. சாக்கோ,

அருட்திரு. மரியதாஸ்,

அருட்திரு. துரைராஜ்,

அருட்திரு. அருளானந்தம்,

அருட்திரு. பிரான்சிஸ் பிரிட்டோ,

அருட்திரு. பங்கிராசு,

அருட்திரு. அமல்ராஜ் SJ,

அருட்திரு. பாக்கியநாதன்,

அருட்திரு. அகஸ்டின்,

அருட்திரு. லூர்துராஜ் SAC,

அருட்திரு. அருள் ஜோசப்,

அருட்திரு. இருதயராஜ்,

அருட்திரு. ஜோசப்,

அருட்திரு. செபஸ்தியான்,

அருட்திரு. சார்லஸ் கென்னடி,

அருட்திரு. அம்புரோஸ் லூயிஸ்,

அருட்திரு. ஜேம்ஸ் (தற்பொழுது).

முகநூல்;

maria louis leveil

Sarugani parish

இவ்வாறு பழைமையும், புதுமைகளும் நிறைந்த திருஇருதயங்களின் ஆலயத்தை நமது ஆலயம் அறிவோம் வரிசையில் 600 -வது ஆலயமாக பதிவு செய்ய அருள்புரிந்த இறைவனுக்கு நன்றி செலுத்தி, அவரது பாதத்தில் இப்பதிவை சமர்ப்பிக்கின்றோம்.. 

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தையுடன், அருட்சகோ. ஆலன்ராஜ் (சிவகங்கை மறைமாவட்டம்) alanrikki14@gmail.com.