இடம் : வேங்கோடு
மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.
நிலை : பங்குதளம்
கிளை : புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், வெட்டுவிளை.
குடும்பங்கள் : 600
அன்பியங்கள்: 19
பங்குத்தந்தை : அருட்பணி பெர்க்மான்ஸ் மைக்கிள் கென்னட்
இணை பங்குத்தந்தை : அருட்பணி மிக்கேல்.
ஞாயிறு திருப்பலி : காலை 05.30 மணி மற்றும் காலை 07.00 மணி.
திருவிழா : ஏப்ரல் மாதத்தில் ஈஸ்டர் பண்டிகைக்கு பின்னர் வருகின்ற முதல் வெள்ளிக்கிழமை ஆரம்பித்து பத்து நாட்கள் நடைபெறும்.
வரலாறு :
முக்கடலும் சங்கமிக்கும் குமரி மாவட்டத்தில் தென்றல் தவழும் இயற்கை எழில் சூழ்ந்த பழமையும் பெருமையும் நிறைந்த தொன்மையான பங்கு வேங்கோடு.
தூய தோமையார் கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து காரங்காடு, திருவிதாங்கோடு, வேங்கோடு ஆகிய இடங்களில் கற்சிலுவைகள் நிறுவி ஜெபித்து வந்திருக்கின்றனர் என்பது மரபு வழிச் செய்தி. தெற்கில் காரங்காடும் வடக்கில் வேங்கோடும் கத்தோலிக்கர்களின் தலைமையிடங்களாக ஏற்றம் பெற்றுள்ளன. இங்கிருந்து பிற உள்நாட்டு கிராமங்களுக்குக் கத்தோலிக்க கிறிஸ்தவம் விரைவாக பரவியது.
கோட்டார், காரங்காடு, வேங்கோடு என்னும் மூன்று உள்நாட்டு பங்குகளே இன்றைய குமரி மாவட்டத்தில் இருந்ததாகவும். விளவங்கோடு வட்டத்தில் உள்ள அனைத்து பங்குகளிலும், விளவங்கோடு வட்ட எல்கையைத் தாண்டி பாறசாலை உட்பட 22ஊர்கள் வேங்கோட்டை தலைமைப் பங்காகக் கொண்டு இயங்கி வந்ததாக கூறப்படுகின்றது.
1930 ம் ஆண்டு மே 26ல் கொல்லம் மறை மாவட்டத்திலிருந்து கோட்டார் தனி மறை மாவட்டமாக பிரிக்கப் பட்டது. ஏற்கனவே வேங்கோட்டில் பங்குப் பணியாளராக பணியாற்றிய அருட்பணி லாரன்ஸ் பெரைரா வை திருத்தந்தை கோட்டார் மறை மாவட்ட முதல் ஆயராக நியமித்தார்.
பங்கின் பழமை :
1329 ம் ஆண்டு கொல்லம் மறை மாவட்டம் உருவாக்கப் பட்டது. சமூக அரசியல் சூழ்நிலையின் காரணத்தால் கொல்லத்தோடு இணைந்து நின்ற குமரி கிறிஸ்தவர்கள் கொல்லம் மறை மாவட்டத்தினர் ஆயினர். கொல்லம் மறை மாவட்டத்தின் முதல் ஆயரான யோர்தான் கத்தானி செலராக் என்னும் தோமினிக்கன் சபை குருவின் பணிக்காலத்தில் குமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ மக்களுக்கு நல்ல பயன்களைத் தந்தது. இவ்வாறு 1329 ம் ஆண்டு முதல் செயல்பட்டுக் கொண்டிருந்த கொல்லம் மறை மாவட்டத்தில், கேரளாவை உள்ளடக்கிய 8 முக்கியமான பணித்தளங்களில் வேங்கோடு ம் ஒன்று என்பது தனிச்சிறப்பு.
வற்றாத நீர் ஊற்றாகிய வலிய வாய்க்கால் இந்த ஊருக்கு செழிப்பைத் தருவதோடு இருமருங்கிலும் தென்னை மரங்களும் நெல் பயிரிடும் வயல் வெளியாகவும் இருப்பது இப்பகுதிக்கு இதமான காலநிலையைக் கொடுக்கின்றது. இதனால் வெளிநாட்டு மிஷனரிகளும் கேரளாவைச் சார்ந்த குருக்களும் இங்கு தங்கி அல்லது வந்து சென்று மறை பரப்பியுள்ளனர் என்பது இன்னும் இப்பங்கின் பழமையையும் பெருமையையும் வெளிப்படுத்துகிறது.
அருட்பணி லாரன்ஸ் பெரைரா 1908 ல் பங்குப் பணியாளராக இருந்த காலத்துக்கு முன்னரே, புதிதாக அமைந்துள்ள ஆலயத்தின் திருப்பீடம் அமைந்துள்ள பகுதியில் 20 அடிகள் நீளத்தில் தெற்கு வடக்காக ஒரு ஓலை வேயப்பட்ட சிற்றாலயம் இருந்தது. பிற்காலத்தில் கெட்டியான ஓடு வேயப் பட்டிருந்தது. ஆலயத்தின் கிழக்குப் பகுதியில் தூய லூர்து அன்னை கெபி இருந்தது அக்காலத்திலேயே நமது முன்னோர்கள் மரியன்னை மீது பக்தி கொண்டு வாழ்ந்திருக்கின்றனர் என்பதை வெளிப்படுத்துகிறது.
ஆரம்ப காலத்தில் ஓலை வேயப்பட்ட பழமையான ஆலயமானது மரியன்னையின் பெயர் கொண்ட ஆலயமாக இருந்தது. பிற்காலத்தில் தூய சவேரியார் இந்தியா வந்த காலத்திற்கு பின் இவ்வாலய முன்னோர்கள் தூய சவேரியார் மீது கொண்ட பற்றுதல் காரணமாக புனித சவேரியார் ஆலயமாக மாற்றம் பெற்றது. 1871 ல் பல கிளைப் பணித் தளங்களை உள்ளடக்கிய வேங்கோடு பணித்தளத்தில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 4000 மாக இருந்தது. பெல்ஜியம் நாட்டைச் சார்ந்த கார்மல் துறவற சபையினர் கொல்லம் மறை மாவட்டத்தின் ஆட்சிக்குரித்தான கோட்டாற்றுக்கு நற்செய்தி அறிவிப்பவர்களாக வந்து கோட்டார், முளகுமூடு, வேங்கோடு போன்ற உள்நாட்டுப் பங்குகளில் பணியாற்றியுள்ளனர். மேற்கூறிய பின்புலன்களை பார்க்கும் போது வேங்கோடு பங்கானது பல்வேறு பங்குகளின் உருவாக்கத்திற்கு வழி வகுத்த மிகப் பழமையான பங்கு என்பது குறிப்பிடத் தக்கது.
வேங்கோட்டின் தற்போதைய புதிய ஆலயத்திற்கு முன்பிருந்த ஆலயமானது அருட்பணி பீட்டர் லாசர் கிறிஸ்டியன் அடிகளாரின் பணிக்காலத்தில் கட்டப்பட்டு 25-05-1956 ல் அன்றைய கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு T. R ஆஞ்சி சாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவுறாத நிலையில்அருட்பணி பீட்டர் லாசர் கிறிஸ்டியன் அவர்கள் தமக்குரிய குடும்ப சொத்தில் ஒரு பகுதியை விற்று கிடைத்த பணத்தில் பணிகளை நிறைவு செய்தார் என்பதும், அருட்தந்தை அவர்களின் பணிக்காலத்தில் வெள்ளையம்பலத்திலிருந்து வேங்கோடு வரைக்கும் சாலை அமைத்து இந்த ஆலயத்தை வெளியுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
அருட்பணி லாரன்ஸ் அவர்கள் வேங்கோட்டிற்கு மின்சார வசதி ஏற்படுத்தியதோடு ஆலயத்தையும் மின்விளக்கு களால் அலங்கரித்து பழைய ஆலயத்தின் முகப்பையும் கட்டினார். பக்தசபைகள் இயக்கங்களைத் துவங்கி மக்களை ஆன்மீக வாழ்வில் வழிநடத்தி இறை அழைத்தலில் ஓர் மறுமலர்ச்சியை உருவாக்கி பல அருட்பணியாளர்களும் அருட்சகோதரிகளும் இப் பங்கிலிருந்து உருவாக வழி வகுத்தார். 15 ற்கும் மேற்பட்ட அருட்பணியாளர்கள் இப் பங்கிலிருந்து உருவாகி உள்ளனர் என்பது சிறப்பு வாய்ந்தது.
புதிய ஆலயம்
அருட்பணி பீட்டர் லாசர் கிறிஸ்டியன் அடிகளாரால் கட்டப்பட்ட பழைய ஆலயமானது தற்போதுள்ள மக்கட்தொகைக்கு ஏற்ப இட வசதியின்மையால் அருட்பணி மரிய சூசை வின்சென்ட் பணிக்காலத்தில் புதிய ஆலயம் கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அருட்பணி சந்திரசேகர் பணிக்காலத்தில் 25-06-2010 அன்று கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியூஸ் அவர்கள் அடிக்கல் நாட்டப்பட்டு எழிலுடன் கூடிய தற்போதைய புதிய ஆலயமானது 05-04-2013 வெள்ளிக்கிழமை மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.
(ஆலய வரலாறு புதிய ஆலய அர்ச்சிப்பு விழா மலரிலிருந்து எடுக்கப்பட்டது ஆகும்)