984 புனித அகுஸ்தீனார் ஆலயம், குலசேகரம்

        

புனித அகுஸ்தீனார் ஆலயம்

இடம்: குலசேகரம்

மாவட்டம்: கன்னியாகுமரி

மறைமாவட்டம்: குழித்துறை

மறைவட்டம்: புத்தன்கடை

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள் 

1. புனித லூர்து அன்னை ஆலயம், செறுதிக்கோணம்

2. தூய ஆவியார் ஆலயம், பாய்க்காடு

பங்குத்தந்தை அருட்பணி. பிறிம்மஸ் சிங்

குடும்பங்கள்: 700

அன்பியங்கள்: 20

ஞாயிற்றுக்கிழமை காலை 05:45 மணி முதல் திருப்பலி, காலை 08:00 மணி இரண்டாம் திருப்பலி

திங்கள் காலை 06:15 மணி திருப்பலி (கன்னியர் இல்லம்)

செவ்வாய், வியாழன், சனி திருப்பலி காலை 06:15 மணி 

புதன் மாலை 06:00 மணி ஜெபமாலை, மாலை 06:30 மணி சகாய மாதா நவநாள் திருப்பலி

வெள்ளி மாலை 06:00 மணி ஜெபமாலை, மாலை 06:30 மணி புனித அகுஸ்தீனார் நவநாள் திருப்பலி 

முதல் வெள்ளி மாலை 06:00 மணி ஜெபமாலை, மாலை 06:30 மணி இறை இரக்க வழிபாடு

திருவிழா: ஆகஸ்ட் 28-ம் தேதியை மையமாகக் கொண்டு 10 நாட்கள்.

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. பெலிக்ஸ், HGN

2. அருட்சகோதரி. டெய்சி பிரமிளா, SCC

3. அருட்சகோதரி. ஜெறின் ஷிஜி

4. அருட்சகோதரி. லாரன்சியா

5. அருட்சகோதரி. ஜோஸ்பின்

6. அருட்சகோதரி. பிரான்சிஸ் மேரி

வழித்தடம்: நாகர்கோவில் -தக்கலை -அழகியமண்டபம் -குலசேகரம்

நாகர்கோவில் -தக்கலை அழகியமண்டபம் -மார்த்தாண்டம் -குலசேகரம்

திருவனந்தபுரம் -குழித்துறை -மார்த்தாண்டம் -குலசேகரம்

Location map: https://g.co/kgs/74yWrnJ

வரலாறு:

குலசேகரம், இந்தப் பெயரை கொஞ்சம் சுருக்கமாக குலசை நகரம் என்றும் சொல்வதுண்டு. நமது கன்னியாகுமரி மாவட்டம் இயற்கை எழில் கொஞ்சும் பூமி என்றால், அதில் பூமழை பொழியும் நிலம் குலசேகரம் என்றால் மிகையில்லை. மாவட்டத்தில் அரசியல், ஆன்மீகம், தொழில், சுற்றுலா, கல்வி, மருத்துவம், போராட்டம் என எல்லாத் தளங்களிலும் தனித்து ஒலிக்கும் பெயராக இந்த நகரத்தின் பெயர் இருக்கிறது.

இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் நல்லிணக்கத்தோடு வாழும் இந்நகருக்கு ஏன் குலசேகரம் என பெயர் வந்தது என்பது தொடர்பான பல்வேறு கருத்தாக்கங்கள் இந்த ஊர் மக்கள் மத்தியில் தீராத விவாதமாகவே இருந்து வருகிறது. இதற்குரிய விடையைத் தேடி, வரலாற்றின் படிக்கட்டுகள் வழியாக இறங்கி நாம் பயணிப்போமானால், அதற்குரிய விடையைக் குறித்து ஒரு முடிவுக்கு நம்மால் வந்து விடமுடியும். பொதுவாக ஒரு ஊரின் பெயருக்குப் பின்னால் வரலாறு, அரசியல், ஆன்மீகம் இவற்றோடு பின்னிப் பிணைந்த கதைகள் இருக்கும் ஏன் மன்னர்களும், பெயரழிந்து போன மக்களும் கூட இருப்பார்கள். அந்த வகையில் குலசேகரம் நகரின் பெயருக்குப் பின்னால் பண்டைய மன்னர்களின் பெயர்கள் இருப்பதை வரலாற்றின் பக்கங்களை புரட்டும் போது நாம் புரிந்து கொள்ள முடியும்.

குலசேகரர்கள் ஆண்ட குலசேகரம்:

இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் 9-ஆம் நூற்றாண்டு வரை ஆய் மன்னர்களின் ஆளுகையின் கீழ் ஆய் நாடாக இருந்தது. ஆய் மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் 9-ஆம் நூற்றாண்டிலிருந்து 12-ஆம் நூற்றாண்டு வரை வேணாட்டின் கீழ் வந்துள்ளது. வேணாடு இன்றைய கேரளத்தை உள்ளடங்கிய நாடாகும். வேணாட்டு அரசர்கள் சேர மரபில் வந்தவர்கள் என கூறப்படுகிறது. இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில், வேணாட்டின் பெரும் நிலப்பரப்பாக நாஞ்சில் நாடு மற்றும் இடை நாடு ஆகியன இருந்துள்ளன. இரண்டாம் சேர குல மரபில் வந்த வேணாட்டு அரசர்களை குலசேகர வம்சத்தினர் என்றும் கூறப்படுகிறது. குலசேகர வம்சத்தின் முதல் அரசனாக குலசேகர வர்மன் (கி.பி. 800 முதல் 820 வரை) இருந்துள்ளார். இந்த வம்சத்தின் கடைசி மன்னராக ராம வர்மா குலசேகரா (கி.பி1090 முதல் 1102 வரை) இருந்துள்ளார். ஆகவே குலசேகரரர்கள் இன்றைய குலசேகரத்தை உள்ளடக்கிய நிலத்தை ஆண்டதால் இந்த ஊருக்கு குலசேகரம் என பெயர் வந்திருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

குலசேகரம் மக்கள்

குலசேகரம் நகரம் மற்றும் அதனைச் சுற்றி வசிக்கும் மக்கள் இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்களை சேர்ந்தவர்களாகவும் பல்வேறு ஜாதிகள் சார்ந்த சமூகங்களாகவும் காணப்படுகின்றனர். இம்மக்களை இங்குள்ள பூர்வ குடிமக்கள், பேச்சிப்பாறை அணை கட்டப்பட்ட போது வெளியூர்களிலிருந்து வந்து குடியேறியவர்கள், அரசு ரப்பர் கழகம் உருவாக்கத்தின் போது காட்டு மரங்களை வெட்டுவதற்கு கொண்டு வரப்பட்டவர்கள், கேரளாவிலிருந்து இங்குள்ள ரப்பர் தோட்டங்களுக்கு கங்காணிகளாக, பால்வடிப்புத் தொழிலாளர்களாக வந்தவர்கள், பிற பகுதிகளிலிருந்து விவசாய கூலிகளாக வந்தவர்கள் என வகைப்படுத்தலாம்.

பழங்குடிகளின் மையப் பகுதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்றில் ஒரு பகுதி வனக்காடுகளாகும். இந்த காடுகளுக்குள் 48 காணிபழங்குடி குடியிருப்புகள் உள்ளன. பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளுக்கு அப்பால் வாழும் பழங்குடி மக்களுக்கு குலசேகரம் நகரமே மையப் பகுதியாக இருந்து வந்திருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு பழங்குடி மக்கள் நகர்புற வாசனையை அறியாமலேயே வாழ்ந்து வந்தனர். காடுகளில் கிடைக்கும் கிழங்குகளையும், கனிகளையும் உண்டு அவர்கள் வாழ்ந்து வந்தனர். குலசேகரத்திலிருந்து மக்கள், துணி, அரிசி, கருப்புக்கட்டி, மீன் கருவாடு என பொருள்களைக் காணி பழங்குடி குடியிருப்புகளுக்கு கொண்டு செல்வதும்; அங்கிருந்து பண்ட மாற்றாக தேன், கிழங்கு, மிளகு போன்றவற்றை வாங்கி வருவதும் நடந்துள்ளது. 

ரப்பர் நகரம்

பனையும், தென்னையும், மரவள்ளியும், வாழையும், பலாவும் முந்திரியும் (கொல்லாவு), நெல்லும் தான் குலசேகரம் நிலத்தின் விவசாயப் பயிர்களாக இருந்துள்ளன. அதே வேளையில் நிலங்கள் அனைத்தும் குறிப்பிட்ட சமூகத்தின் கைகளில் இருந்துள்ளன. உணவுப் பஞ்சம் ஏற்பட்டு பட்டினி கோரத்தாண்டவமாடிய காலங்களில் மக்கள் மூங்கில் மரங்களின் கீழே உதிர்ந்து கிடக்கும் மூங்கில் அரிசியை சேகரித்து, சமைத்து உண்டு பசியாறியதும் உண்டு. 'முளை அரிப்பஞ்சம்' என்றும் இக்காலங்களை முன் தலைமுறையினர் நினைவு கூருகின்றனர். ஏறக்குறைய 75 ஆண்டுகளுக்கு முன்பு இந்நகரத்தைச் சுற்றி ரப்பர் மரங்கள் நடவு செய்யப்பட்டதும், பிற்பாடு அது பரவலாகக்கப்பட்டு பெரும்பாலான சமூகங்களின் கரங்களில் வந்ததும், ரப்பர் சார்ந்த இதர தொழில்களும் தான் இந்த நகரத்தின் வறுமை குறிப்பிட்ட அளவுக்கு அழிந்து போக காரணமாக இருந்துள்ளது. ஆம், ரப்பர் மரங்களிலிருந்து வடிந்த அந்த வெண் திரவம் தான் இந்நிலத்தின் பொருளாதாரத்தை ஓரளவுக்கு சமநிலைப் படுத்தியது என்றும் கூறலாம். இன்று தென்னிந்தியாவில் முக்கிய ரப்பர் வணிகத் தலங்களில் குலசேகரமும் ஒன்றாக இருக்கிறது. இதனால் இந்த நகரம் ரப்பர் சிட்டி (Rubber City) என்றும் அழைக்கப்படுகிறது.

பெண் கல்வியில் சிறந்த ஊர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்வியில் முன்னணியில் நிற்கும் நகரங்களில் குலசேகரமும் ஒன்றாகும். இந்நகரத்தில் கல்வி கற்றவர்களின் சதவிகிதம் 90 சதவிகிதமாகும். குறிப்பாக பெண் கல்வியில் இந்த நகரம் முன்னிலையில் உள்ளது. இதன் பின்னணியில் புனித ஊர்சுலாள் தொடக்கப்பள்ளி மற்றும் மகளிர் உயர் நிலைப் பள்ளியின் பங்கு மகத்தானது. இன்றைக்கு ஏறக்குளாக 100 ஆண்டுகளுக்கு முன்பு குலசேகரத்தை பணித்தளமாக ஏற்று, இங்கு மறைபணி செய்ய வந்த பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த கன்னியர்கள் மரிய டெல்பின், மரிய அல்போன்சின் மற்றும் மரிய எமின், மரிய ஜெரால்டின் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட புனித ஊர்சுலாள் தொடக்கப்பள்ளியும், சித்திரப் பூ தையல் நிலையமும், இந்நகரின் கல்விக்கு குறிப்பாக பெண் கல்விக்கு அடித்தளமாய் இருந்துள்ளன. அத்துடன் இங்குள்ள தொடக்கப்பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவு, குழந்தைகளின் பசியைப் போக்கி அவர்களை பள்ளிக்கு வருவதற்கு கூடுதல் காரணமாக இருந்துள்ளது. மட்டுமின்றி ஏழைக் குடும்பங்களுக்கு இங்குள்ள கன்னியர் இல்லத்திலிருந்து தரப்பட்ட கோதுமை, பால்பொடி, எண்ணெய் போன்றவை அம்மக்களின் பசியைப் போக்கியது என்பதும் மறக்க முடியாததாகும்.

அன்னை எமின்

குலசேகரம் ஐசிஎம் கன்னியர் இல்ல கன்னியரான எமின் அவர்களின் தியாகம் நிறைந்த ஆன்மீக, சமூகப்பணிகளை வரலாறு வரும் தலைமுறைகளுக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது. பிற்பாடு "அன்னை எமின்" என்றும் "கூனித் தாயார்" என்றும் மக்களால் அழைக்கப்பட்ட இவர், இங்குள்ள புனித ஊர்சுலாள் தொடக்கப்பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளும், பள்ளிக்கு வராத குழந்தைகளை வீடு தேடிச் சென்று அழைத்து வருவதும் அவர்களின் மகத்தான பணியாக இருந்தது. நோய்கள் மற்றும் மூட நம்பிக்கைகளில் சிக்குண்டு கிடந்த மக்களுக்கு சிகிச்சை அளித்ததையும் மக்கள் நினைவுகளில் வைத்திருக்கின்றனர்.

புனித அகுஸ்தினார் ஆலயம்

புனித ஊர்சுலாள் தொடக்கப்பள்ளி மற்றும் உயர் நிலைப் பள்ளிகள் கல்வியின் விதைகளை இந்த நகரத்தில் விதைத்ததைப் போன்று, புனித அகுஸ்தினார் ஆலயம் இங்குள்ள மக்கள் மத்தியில் இறை நம்பிக்கையை கட்டி எழுப்புவதிலும், சமூக மேம்பாட்டு செயல்பாடுகளிலும் முக்கியப் பங்காற்றி வருகிறது.

குறிப்பாக, குலசேகரம் ஒரு தாய் திருச்சபையாக இருந்து, கிறிஸ்தவ இறை நம்பிக்கையை மக்கள் மத்தியில் கட்டியெழுப்பியதுடன், மக்களின் கல்வி, வேலைவாய்ப்புக்கு காலம் தோறும் உதவிக் கொண்டே வந்திருக்கிக்கிறது. இன்றைக்கும் குலசேகரத்தில் சமூகங்களுக்கிடையே ஒற்றுமை, மத நல்லிணக்கம் போன்றவற்றை இந்த ஆலயம் முன்னின்று பேணிக்காத்து வருகிறது. அது போன்று நல்ல ஆளுமைகளை உருவாக்கி குலசேகரம் நகரின் பெயரைக் கட்டி காப்பதில் இந்த ஆலயம் தனித்துவ அடையாளம் பெற்றுத் திகழ்கிறது.

போராட்டங்களின் பூமி

ரப்பர் காடுகளை அதிகம் கொண்ட இந்நகரில் தொழிலாளர்கள் அதிகாலையில் எழுந்து, கடும் குளிரில் ரப்பர் காடுகளில் உழைப்பைப் கொடுப்பது ஒருபுறமென்றால் மறுபுறம் தொழிற்சங்க செயல்பாடுகளுக்கும், போராட்டங்களுக்கும் இங்கு பஞ்சமில்லை என்று தான் கூற வேண்டும். தோட்ட நிர்வாகங்களிடம் கூலி உயர்வு, வேலை நிரந்தரம், போனஸ், தொழிலாளர் உரிமை கேட்டு வேலை நிறுத்தங்களும், போராட்டங்களும் இங்கு அடிக்கடி நடைபெற்றுக் கொண்டிருக்கும். போராட்டங்ளின்போது, காவல் துறையினரின் தடியடி பட்டவர்கள், சிறை சென்றவர்கள் இங்கு ஏராளம். இது போன்ற தியாகங்களால் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் பெற்ற உரிமைகள் அதிகம் என்பதை தொழிலாளர்கள் நினைவு கூறுகின்றனர்.

சுற்றுலாவின் சொர்க்க பூமி

ஏற்கனவே தொடக்கத்தில் குறிப்பிட்டது போல் கன்னியாகுமரி மாவட்டம் என்பது இயற்கை எழில் கொஞ்சும் பூமி என்றால், அதில் பூமழை பொழியும் நிலம் குலசேகரம் என்பதைப் போல், இந்த ஊரைச் கற்றி ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் திற்பரப்பு அருவி, இயற்கை அன்னையின் தொட்டில் என வர்ணிக்கப்படும் மாத்தூர் தொட்டிப்பாலம், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு நீர்த் தேக்கங்கள் அமைந்துள்ளன. பேச்சிப்பாறை அணை கட்டப்படும் போது, அதற்கான ஒரு களப்பணி அலுவலகம் குலசேகரம் ஊரில் இப்போது அரசு மருத்துவமனை இருக்கும் இடத்தில் தான் இருந்துள்ளது. இங்கிருந்து தான் இந்த அணையைக் கட்டிய ஆங்கிலேய பொறியாளர் அலெக்சாண்டர் மிஞ்சின் தனது குதிரை வண்டியில் சென்று வந்துள்ளார். பேச்சிப்பாறை அணையின் கால்வாயான கோதையாறு இடது கரைக் கால்வாயும், சிற்றாறு அணையின் கால்வாயான சிற்றாறு பட்டணம் கால்வாயும், குலசேகரம் நகருக்கு மையமாய் பாய்ந்து வளம் சேர்க்கின்றன. நகரின் கிழக்கில் உயர்ந்து காணப்படும் முகளியடிமலை நகருக்கு அழகு சேர்க்கிறது.

பல குலத்தவர்கள் வாழும் நகரம்

இந்த ஊருக்கு ஏன் குலசேகரம் என்று பெயர் வந்தது என்று வயது மூத்தவர்களிடம் கேட்டால், இங்கு பல குலத்தவர்கள் ஒன்று சேர்ந்து வாழ்கிறார்கள். அதனால் இந்த ஊருக்கு குலசேகரம் என்று பெயர் வந்தது என்றும் கூறுவதுண்டு. முன்காலங்களில் குலசேகரம் சந்தையில் நிறைய வாழைக்குலைகள் விற்பனைக்கு சேகரமாகும். அதனால் இது குலைசேகரம் என்றும் பின்னர் குலசேகரம் என்றும் ஆனது என்று சொல்பவர்களும் உண்டு. ஆனாலும் வரலாறு இதனை குலசேகரரர்கள் ஆண்ட பூமி என்றே பதிவு செய்து வைத்திருக்கிறது. இந்த நிலத்தில் குலசேகரம் புனித அகுஸ்தினார் ஆலயம் தனித்துவ அடையாளமாகவே திகழ்கிறது.

வளர்ச்சிப் படிகள்:

1916: கொல்லம் மறைமாவட்டத்தின் கீழ் பணிபுரிந்து வந்த பெல்ஜியம் நாட்டைச் சார்ந்த, புனித அகுஸ்தின் சபை (தற்போதைய ICM சபை) அருள்சகோதரிகள் மரிய டெல்பின் மற்றும் மரிய அல்போன்ஸ் குலசேகரம் வருகை புரிந்தனர்.

அக்டோபர் 19ஆம் நாள் மூன்று ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு, ஓலை குடிசை அமைக்கப்பட்டு தையல் பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டது. எழுத்தறிவு கல்வி நிலையம் ஆகவும் அந்த ஓலை குடிசை பயன்படுத்தப்பட்டது

1917: அருள்சகோதரிகள் மரிய எமின் மற்றும் ஜெரால்டு அவர்களும் குலசேகரத்திற்கு வருகை தந்தார்கள்.

முதல் கத்தோலிக்க கிறிஸ்தவர் திருமுழுக்குப் பெற்றார். அவர் பணவிளை பொன்னுமங்கலத்தை சார்ந்தவர்.

1918: கன்னியர் இல்ல வளாகத்தில் ஓலை குடிசை அமைக்கப்பட்டு, திருப்பலி நிறைவேற்றப்பட்டது. ஆறு குடும்பங்கள் மட்டுமே அதில் பங்கேற்றனர். திருப்பலி நிறைவேற்ற புத்தன்கடை-யிலிருந்து அருட்தந்தையர்கள் வருகை புரிந்தனர்.

1919: திருநந்திகரையில் ஆரம்பப்பள்ளி துவங்கப்பட்டது. பின் நாட்களில் அது கன்னியர் இல்லத்திற்கு மாற்றப்பட்டது.

கோட்டூர்கோணத்தில் 3.5 ஏக்கர் நிலம் ICM சகோதரிகளால் வாங்கப்பட்டது.

1920: கோட்டூர்கோணத்தில் 20 நபர்களுக்கு திருமுழுக்கு கொடுக்கப்பட்டது.

1922 : குலசேகரத்தில் 52 குடும்பங்கள் திருமுழுக்கு பெற்று திருமறையில் சேர்ந்தனர்.

1924: குருவிக்காடு மக்களுக்கு அருட்சகோதரி மரிய எமின் அவர்களால் மறையறிவு போதிக்கப் படுகிறது.

நாகக்கோடு காட்டுக்குளத்தில், தும்பாலியை சேர்ந்த ராயன் என்பவர் சிலுவை நட்டு வைத்து, குருசடி கட்டினார்.

1925: தும்பகோட்டில் ஆலயம் கட்டுவதற்காக இரண்டு ஏக்கர் நிலம் கன்னியர்களால் வாங்கப்பட்டது.

கடையாலில் ஆலயம் கட்ட, மூன்று ஏக்கர் நிலம் அருட்சகோதரி மரிய எமின் அவர்கள் முயற்சியால் வாங்கப்பட்டது.

1927: அருள்சகோதரி பெல்சியான் அவர்கள் வருகை. அருட்பணியாளர் தாமஸ் ரெபேரா அவர்கள் தலைமையில் ஆலய கட்டுமானப் பணி துவக்கம்.

1930: கொல்லம் மறைமாவட்டத்திலிருந்து கோட்டாறு மறைமாவட்டம் உதயமானது.

செப்டம்பர் 30-ஆம் நாள் குலசேகரம் புனித அகுஸ்தினார் ஆலயம் திருநிலைபடுத்தப்பட்டது.

1931 மே மாதம் புனித அகுஸ்தினார் ஆலயம் பங்கு கோவிலாக அறிவிக்கப்பட்டது.

அருள்பணியாளர் தனிஸ்லாஸ் மரியா அவர்கள் முதல் பங்கு தந்தையாக பொறுப்பேற்றார்.

1933 : இரண்டாவது பங்கு பணியாளர் தனிஸ்லாஸ், OCD பொறுப்பேற்றுக் கொண்டார்.

புனித ஜார்ஜியார் குருசடி கட்டப்பட்டது. 

1934: திரு. ஞானகண் அவர்கள் கொல்வேல் ஆலயத்திற்கு என ஒரு ஏக்கர் நிலம் நன்கொடையாக வழங்கினார்.

1935: குருவிக்காட்டில் புனித அந்தோனியார் குருசடி அருட்பணி. தனிஸ்லாஸ், OCD அவர்களால் கட்டப்பட்டது.

1936: குருவிக்காடு புனித அந்தோனியார் குருசடி விரிவாக்கம் செய்யப்பட்டது.

கொல்வேலில் கார்மல் மாதா ஆலயம் கட்டப்பட்டு, புத்தன்கடை பங்கின் கிளை சபையாக மாற்றப்பட்டது.

1940: கல்லறை தோட்டத்திற்கு ஒன்றரை ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது.

அருட்பணியாளர் தர்மநாதர் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.

1946: அருட்பணியாளர் வின்சென்ட் ஜெயாவர்த்தனே (இலங்கை) பங்கு தந்தையானார். 

1949 : அருட்பணியாளர் I. தனிஸ்லாஸ் பங்குத் தந்தையாக பொறுப்பேற்றார்.

கோட்டூர்கோணத்தில் ஓலை குடிசை அமைத்து திருப்பலி நிறைவேற்றினார்.

அருட்பணியாளர் வின்சென்ட் ஜெயாவர்த்தனே (இலங்கை) மற்றும் அருட்பணியாளர் அந்தோணி முத்து ஆகியோர் பேச்சிப்பாறை பயணியர் இல்லத்தில் திருப்பலி நிறைவேற்றினர்.

1950 : அருட்பணியாளர் வாலண்டின் பயஸ் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார்.

பாத்திமா அன்னை சுரூபம், பாத்திமா நகரில் இருந்து இந்தியா வந்தபோது குலசேகரத்திற்கு கொண்டுவரப்பட்டது. அப்போது மிகப்பெரிய வரவேற்பு ஆடம்பரமாக வழங்கப்பட்டது. 

புனித அகுஸ்தீனாரின் சுரூபம் ஆலயத்தில் நிறுவப்பட்டது.

1951 : அருட்பணியாளர் அந்தோணிமுத்து பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார்.

ஆயர் ரோக் ஆஞ்ஞிசாமி குலசேகரத்திற்கு முதல் முறையாக வருகை புரிந்து, 491 பேருக்கு உறுதி பூசுதல் வழங்கினார்கள்.

1954: புனித ஊர்சுலா பள்ளிக்கு அரசு அனுமதி கிடைத்தது.

1955: அருட்பணி. அந்தோணி முத்து அவர்களால், இட்டகவேலியில் ஆலயம் அமைக்க நிலம் வாங்கப்பட்டது

1956: பொன்மனை புனித அமல அன்னை ஆலயம் கட்டப்பட்டது.

1957: முதலமைச்சர் K. காமராஜ் அவர்கள் புனித ஊர்சுலா பள்ளிக்கு வருகை தந்ததோடு, நடுநிலை பள்ளியாக உயர்த்தி அரசு ஆணை வழங்கினார்.

ஆயர் ரோக் ஆஞ்ஞிசாமி குலசேகரத்திற்கு வருகை புரிந்து, 592 பேருக்கு உறுதி பூசுதல் வழங்கினார்கள்.

கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு பஜனை பாடும் வழக்கம் துவங்கப்பட்டது

கூட்ட அரங்கம் கட்டப்பட்டது (Meeting hall).

1958: கத்தோலிக்க சேவா சங்கம் மற்றும் மாதா சபை துவங்கப்பட்டது.

1959: வருடத்திற்கு இரண்டு திருவிழா கொண்டாடும் முறையை முடிவுக்கு கொண்டு வந்தார் அருட்பணி அந்தோணி முத்து அவர்கள்.

அருட்பணியாளர் லாசர் அவர்கள் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார்.

நாகக்கோடு ஆலயத்திற்கு 19 சென்று இடம் வாங்கப்பட்டது. புதிய அந்தோணியார் குருசடியும் கட்டப்பட்டது

1960: அருட்பபணியாளர் லாசர் அவர்கள் முயற்சியினால் பேச்சிபாறையில் ஆலயம் கட்ட நிலம் வாங்கப்பட்டது.

1961: சிறிய புஷ்பபுரத்தில் ஆலயம் கட்ட அருட்பணி லாசர் அவர்களால் நிலம் வாங்கப்பட்டது.

1962: பேச்சிப்பாறை புனித சூசையப்பர் ஆலயம் கட்டப்பட்டு திருநிலைப்படுத்தப்பட்டது.

சிறிய புஷ்பபுரத்தில் ஓலை குடிசையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

1963: சிறிய புஷ்பபுரத்தில் புதிய ஆலயம் அருட்பணியாளர் லாசர் அவர்கள் தலைமையில் கட்டப்பட்டு திருநிலைப்படுத்தப்பட்டது.

கோதையாரில் அரசு அனுமதி பெற்று அரசு பள்ளி வராண்டாவில், திருப்பலி அருட்பணி லாசர் அவர்களால் நிறைவேற்றப்பட்டது.

1964: ஆலயம் கட்டுவதற்காக ஆலஞ்சோலையில் அருட்பணி. லாசர் அவர்களால் நிலம் வாங்கப்பட்டது.

அன்னை எமின் துறவற பொன்விழா நினைவாக ஆலயத்தின் முன் கெபி கட்டப்பட்டது.

1965 : அருட்பணியாளர் சார்லஸ் பொரோமியோ பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார்.

கடையால் ஆலயம் தனிப் பங்காக உயர்த்தப் பட்டது.

நாகக்கோடு புனித அந்தோணியார் குருசடி ஆலயமாக கட்டி எழுப்பப்பட்டது.

மரியின் சேனை துவங்கப்பட்டது.

1966: கோதையாரில் ஆலயம் கட்ட அருட்பணி சார்லஸ் பொரோமியோ அவர்களால் நிலம் வாங்கப்பட்டது. திருப்பலி நிறைவேற்ற ஓலை குடிசையும் அமைக்கப்பட்டது.

ஈஞ்சக்கோட்டில் ஆலயம் அமைக்க அருட்பணி சார்லஸ் பொரோமியோ அவர்களால் நிலம் வாங்கப்பட்டது.

1968: ஈஞ்சக்கோட்டில் சதா சகாய மாதா ஆலயம் அருட்பணி. சார்லஸ் பொரோமியோ அவர்களால் கட்டப்பட்டு திருநிலைபடுத்தப்பட்டது.

அருப்பாணியாளர் வின்சென்ட் பெரேரா பங்கு பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.

1969: அருட்பணியாளர் வென்செஸ்லாஸ் பங்கு பொறுப்பேற்றுக் கொண்டார்.

1970: அம்பாங்காலையில் ஆலயம் அமைக்க நிலம் வாங்கப்பட்டது.

1971: அருட்பணி வென்சஸ்லாஸ் அவர்களால் கோதையாறு கிறிஸ்து அரசர் ஆலயம் கட்டப்பட்டு திருநிலைபடுத்தப்பட்டது.

1972: பிரான்சிஸ்கன் சபை சகோதரர்கள் இறை பணிக்காக ஈஞ்சக்கோடு வருகை புரிந்தனர்.

1973: அருட்பணியாளர் ஆண்ட்ரூ M. செல்வராஜ் அவர்கள் பங்குத்தையாக பொறுப்பேற்றார்

1975: நாகக்கோட்டில் புதிய ஆலயம் கட்டப்பட்டு திருநிலைபடுத்தப்பட்டது .

கத்தோலிக்க சேவா சங்க கட்டிடம் ஆலயத்தின் முன் கட்டப்பட்டது. 

1976: கோட்டாறு மறைமாவட்டத்தில் முதன்முறையாக பங்கு பேரவை குலசேகரத்தில் அமைக்கப்பட்டது.

கோட்டூர்கோணத்தில் குழந்தை இயேசு குருசடி கட்டப்பட்டது.

மறைமாவட்ட பொன்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அனைத்து கிளைப் பங்குகளிலும் பாதுகாவலர் விழா விமரிசையாக கொண்டாடும் பழக்கம் கொண்டுவரப்பட்டது.

பாய்க்காட்டில் ஆலயம் கட்ட 36 சென்ட் நிலம், அருட்பணி ஆண்ட்ரூ M. செல்வராஜ் அவர்களால், பிரான்சிஸ்கன் சகோதரர்களின் உதவியுடன் வாங்கப்பட்டது.

1978 நவம்பர் 5: அருள்சகோதரி. பெல்சியான் அவர்களின் துறவற வாழ்வின் வெள்ளி விழா ஆண்டு நினைவாக, முதன்முறையாக ஆலயம் விரிவாக்கப்பட்டு சிலுவை வடிவம் பெற்றது. இதற்கான நிதி பங்களிப்பு பெல்ஜியத்தை சார்ந்த அவரது குடும்பத்தினரால் வழங்கப்பட்டது. ஆலயம் சிலுவை வடிவம் பெற்றது. ஐக்கிய கிறிஸ்தவ இயக்கம் துவங்கப்பட்டது.

இட்டகவேலி இறை பராமரிப்பு ஆலயம் அருட்பணி. ஆண்ட்ரூ செல்வராஜ் அவர்கள் தலைமையில் கட்டி முடிக்கப்பட்டு திருநிலை படுத்தப்பட்டது.

1981: அருட்பணி. தேவசகாயம் அவர்கள் பங்கு பொறுப்பு ஏற்றுக் கொண்டார்கள்.

ஈஞ்சக்கோட்டில் பிறர் அன்பு சபை சகோதரிகள் பணித்தளத்தை அமைத்தார்கள்.

1982: ஆலய முன்புறம் இருந்த கத்தோலிக்க சேவா சங்க கட்டடத்தின் முதல் தளம் அருட்பணி தேவசகாயம் அவர்களால் கட்டப்பட்டது. மேலும், பாய்க்காடு தூய ஆவி ஆலயம் திருநிலை படுத்தப்பட்டது.

அருட்சகோதரி சிசிலி அந்தோணி முத்து அவர்களின் சிறப்பான பணியால், குலசேகரம் மற்றும் அதன் கிளை பங்குகளில் மறைக்கல்வி புது எழுச்சி பெற்றது.

1983: குலசேகரம் பங்கு, பலோட்டின் சபை (SAC) குருக்களின் பணித்தளமானது.

முதல் பங்கு பணியாளராக அருட்பணி. சூசையன், SAC அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.

பங்கேற்பு திருச்சபை உருவானது. அனைத்து பக்த சபைகள், இயக்கங்கள் முறை படுத்தப் பட்டது. பங்கு கோயில், கிளை கோயில்களில் பங்கு பேரவை உருவாக்கப்பட்டது.

பங்கு பேரவை ஒருங்கிணையம் உருவாக்கப் பட்டது.

அருட்பணி. லியோ பெலிக்ஸ் அவர்கள் தலைமையில் ஜெபக்குழு மிகச் சிறப்பாக செயல்பட்டது

1984: அருட்பணி. சூசையன் அவர்களால் வலியஏலாவில் நிலம் வாங்கப்பட்டு பாலர் பள்ளி துவங்கப்பட்டது.

1987: அருட்பணியாளர் சூசையன் அவர்கள் தலைமையில் பலோட்டியகம் திருமண மண்டபம் கட்டப்பட்டது.

அருட்பணி. தேவராஜ் அவர்கள் பங்கு பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.

இவ்வாண்டு இறுதியில் அருட்பணி. சில்வெஸ்டார் ஜாண் பங்கு பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஆலய பின்புற மதிற்சுவர் அருட்பணி. சில்வெஸ்டர் ஜான் அவர்களால் கட்டப்பட்டது.

1990: அருட்பணி. சில்வெஸ்டர் ஜான் அவர்களால் பொன்மனை ஆலயம் விரிவு படுத்தப்பட்டது.

1992: கோட்டூர்கோணத்தில் புதிய ஆலயம் அருட்பணி. சில்வஸ்டர் ஜான் அவர்களால் கட்டப்பட்டு திருநிலைபடுத்தப்பட்டது.

அருட்பணி. பிரிட்டோ ஆண்டனி அவர்கள் பங்கு பொறுப்பேற்றுக் கொண்டார்கள். இவரது முயற்சியால் நாகக்கோட்டில் கல்லறை தோட்டம் வாங்கப்பட்டது.

1993: குலசேகரத்தில் மரியாயின் சேனை ஆண்கள் பிரசிடியம் உருவானது.

1994: அருட்பணி. தாமஸ் குருசப்பன் அவர்கள் பங்கு பொறுப்பேற்றார்கள். ஆலயத்தை ஒட்டிய வணிக வளாகத்தை தலைமையேற்று கட்டி முடித்தார்.

1995: நாகக்கோடு தனிபங்காக உயர்த்தப்பட்டது. அருட்பணி. ஆண்ட்ரூ M. செல்வராஜ் அவர்கள் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார்கள்.

1996: அருட்பணியாளர் லூர்து ராஜ் அவர்களால், பெருஞ்சாணியில் நிலம் வாங்கப்பட்டு, மழலையர் பள்ளிக்கூட கட்டிடம் கட்டப்பட்டது. அந்த கட்டிடத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வருகிறது.

மேலும் பாய்க்காடு ஆலயம் பழுது நீக்கப்பட்டது. 

மரியாயின் சேனையினரால் லூர்து மாதா கெபி புனரமைக்கப்பட்டு, திருப்பலி நிறைவேற்றப்பட்டு வருகிறது.

1998: பேச்சிப்பாறை தனி பங்காக உயர்த்தப்பட்டது. அருட்பணி. சத்தியநேசன் அவர்கள் முதல் பங்கு பணியாளராக பொறுப்பேற்றார்.

அருட்பணி. சத்தியநேசன் அவர்களால், வலிய ஏலாவில் புனித வின்சென்ட் பலோட்டி ஆலயம் கட்டப்பட்டு திருநிலைபடுத்தப்பட்டது.

2002: அருட்பணி. சூசையன் அவர்களால் ஈஞ்சக்கோடு ஆலயம் புனரமைக்கப்பட்டு திருநிலைபடுத்தப் பட்டது.

கோட்டூர்கோணம் தனி பங்காக உயர்த்தப் பட்டது. முதல் பங்கு தந்தையாக அருட்பணி. ராபர்ட் பொறுப்பேற்றார்.

2003: அருட்பணி. சூசையன் அவர்களால் செறுதிக்கோணத்தில், 32 சென்ட் நிலம் ஆலயம் கட்டுவதற்காக வாங்கப்பட்டது.

2004: அருட்பணி. சூசையன் அவர்கள் தலைமையில் புனித அகஸ்தினார் ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டு, கோபுரம் அமைக்கப்பட்டது. ஆலய கூரை கான்கிரீட் தளமாக மாற்றப்பட்டது

2009: அருட்பணி. இருதய பால்ராஜ் அவர்களால் செறுதிகோணத்தில் புதிய ஆலயம் கட்டப்பட்டு திருநிலைப்படுத்தப்பட்டது.

ஆலய முன்புறம் இருந்த குருசடி அகற்றப்பட்டு, புதிய குருசடியானது, தொழிலாளர் இயக்கத்தினர் பொறுப்பில் கட்டப்பட்டது.

கல்லறை தோட்டத்தை ஒட்டிய நிலம் வாங்கப்பட்டது.

2013: அருட்பணி. மோசஸ் அவர்கள் தலைமையில் கல்லறை தோட்டத்திற்கு முன் வணிக வளாகம் கட்டப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது.

2015: அருட்பணி. சிலுவை எட்வின் அவர்கள் தலைமையில் ஆலய சுற்றுப்புறம் முழுமையும் தரையில் கற்கள் பதிக்கப்பட்டு, புதிய கொடிமரம் அமைக்கப்பட்டது. மேலும் ஆராதனை ஆலயம் கட்டப்பட்டது. கோவில் வளாகத்தை சுற்றி சிலுவை பாதை தலங்கள் அமைக்கப்பட்டது. கத்தோலிக்க சேவா சங்க கட்டிடம் வணிக வளாகமாக மாற்றம் பெற்றது.

2017: உபதேசியாராக 58 ஆண்டுகள் பணியாற்றிய திரு. செல்வராஜ் அவர்கள் காலமானார்கள்.

2018: அருட்பணி, சூசையன் அவர்களால் வணிக வளாகம் மேல்தளம் கட்டப்பட்டு, அன்னை எமின் வணிக வளாகம் என பெயர் சூட்டப்பட்டது.

2018: ஆலயம் அதைச் சார்ந்த சொத்துக்கள் அனைத்தும் பங்கு பேரவையின் பராமரிப்பின் கீழ் வந்தது. பலோட்டின் சபை குருக்களிட மிருந்து மறைமாவட்டத்தின் நேரடி கண்காணிப்பில் பங்கு வந்தது.

அருட்பணி. ஆன்றனி சேவியர் அவர்கள் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார்.

2019: அருட்பணி. J. கிளீட்டஸ், IVD பங்குப் பணியாளராக பொறுப்பேற்றார். அவர் தலைமையில் கல்லறை தோட்டத்தின் முன் பகுதியில் கடைகள் கட்டப்பட்டது. ஆலயத்தின் பக்கத்தில் செட் அமைக்கப்பட்டது.

2021: பெரும் மழையால் ஆலய கோபுரம் சாய்ந்தது.

2022: மே மாதம் 15-ம் தேதி புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

2024: இயற்கை சீற்றத்தால் பழுதான ஆலய முன்புற கட்டுமானம் முழுவதுமாக அகற்றப்பட்டு, ஆலய இருபக்க சுவர்களும் விரிவாக்கம் செய்யப்பட்டு, முன்புற கோபுரம் 108 அடி உயரத்துக்கு அமைக்கப்பட்டு, ஆலய பீடம் மாற்றி அமைக்கப் பட்டது. இதை தலைமை தாங்கி நடத்தியவர் அருட்பணி J. கிளீட்டஸ், IVD அவர்கள் ஆவார்.

2024 மே 26-ம் தேதி புதிய ஆலயம் மேதகு ஆயர் ஆல்பர்ட் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

2024 ஜூன்: அருட்பணி. பிறிம்மஸ் சிங் அவர்கள் பங்குத்தந்தையாக பொறுப்பேற்று வழிநடத்தி வருகின்றார்.

ஓலை குடிசையில் இருந்து உயர் கோபுரமாக மாற்றம் பெற்றுள்ள குலசேகரம் புனித அகுஸ்தீனார் ஆலயம், ஆலயத்தின் கிளை பங்குகள், பங்கு கோயிலாக உயர்த்தப்பட்ட ஆலயங்கள் எல்லாம் உருவாவதற்கும் கட்டி எழுப்பப்படுவதற்கும் நூற்றுக்கு மேற்பட்ட பொதுநிலையினர் பலரின் அர்ப்பணிப்பு, ஈகை முக்கிய காரணியாக உள்ளது.

ஆடவருக்கு இணையாக மகளிரும், மறைபரப்பு பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள் என்றால் அது மிகையல்ல. 

பங்கின் கெபி, குருசடி:

புனித லூர்து மாதா கெபி

புனித ஜார்ஜியார் குருசடி

St Ursalas Convent Sisters:

வனப்பகுதிகள் நிறைந்த குலசேகரம் வட்டாரத்தில் காலரா, மலேரியா, காசநோய் (சயரோகம்), கண்டமாலை போன்ற நோய்களால் அவதியுற்று, வறுமை வாட்டி வதைக்க, கல்வியறிவும், இறையறிவும் இல்லாது வாழ்ந்த காலத்தில் 1916-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 19-ஆம் நாள் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த மரியடெல்பின், மரிய அல்ப்போன்ஸ் என்ற இரு அருட்சகோதரிகள் குலசை மண்ணில் கால்தடம் பதித்தனர். இவர்கள் தற்போது கன்னியர் இல்லம் இருக்கும் இடத்தில், ஓலைக்குடிசை அமைத்து தொழிற்கல்விக்குத் தையல் வகுப்பும், மாலைநேர கல்விப் பயிற்சிகளும் நடத்தத் தொடங்கினர்.

இந்நிலையில் பெல்ஜியம் நாட்டில் பிறந்து, இளம் வயதிலேயே கன்னியர் இல்லம் சென்று தன்னை அர்ப்பணித்த மரிய எமின் என்ற அன்பு சகோதரி தன் பெற்றோர் உற்றார் உறவினரை விட்டு, நம் மண்ணில் பணிபுரிய 1917-ம் ஆண்டு வந்தார். இவர் இரவு பகல் பாராது, காடுமேடு, மழை வெயில் பாராமல் கால்நடையாகச் சென்று நோய்வாய்ப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வந்தார்.

இவ்வேளையில் பெல்ஜியம் நாட்டிலிருந்து பெலிசியான் சகோதரி குலசை மக்களுக்குத் தன்னை அர்ப்பணித்து பணி செய்ய, 1919-ஆம் ஆண்டு அன்னை மரிய எமினுடன் இணைந்தார். அன்னை மரிய எமின், அன்னை பெலிசியான் இருவரின் உழைப்பே குலசை ஊரின் வளர்ச்சிக்கு உரமானது.

இவர்களின் தொடர்ச்சியாக பல கன்னியர்கள் இங்கு பணி புரிந்துள்ளனர். 

வளமான வாழ்க்கைக்கு கல்வியே அடித்தளம்; ஒருபெண் கல்வி கற்றால், ஒரு குடும்பமே கற்றது போல என்பதை உணர்ந்து, கல்வி களத்தில் சீரிய பணியாற்றி வருகிறார்கள் ஐ.சி.எம். சகோதரிகள். மேலும் குலசையின் பல ஊர்களுக்கும் சென்று, மறை அறிவையும் ஊட்டினர்.

இவ்வாறு இன்று குன்றின் மேலிட்ட விளக்காகத் திகழும் குலசைத் திருச்சபை இம்மட்டும் வளர, பெண்கல்வி சிறக்க எரியும் விளக்காக மட்டுமின்றி எண்ணெயாகவும், திரியாகவும், தூண்டுகோலாகவும் இருந்தவர்கள், இருப்பவர்கள் ஐசிஎம் கன்னியர்களே! அவர்கள் பணிகளை நன்றியோடு நினைத்து நெஞ்சார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறனர் குலசை இறைசமூகத்தினர்.

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

1. பங்குப்பேரவை

2. நிதிக்குழு

3. அன்பிய ஒருங்கிணையம்

4. பக்தசபை ஒருங்கிணையம்

5. பீடச்சிறார்

6. பாலர்சபை

7. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்

8. இளைஞர் இயக்கம்

9. மரியாயின் சேனை (4 பிரசீடியங்கள்)

10. இயேசுவின் திருஇருதய சபை

11. கிறிஸ்தவ வாழ்வு சமூகம்

12. கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கம்

13. புனித வின்சென்ட் தே பவுல் சபை

14. கோல்பிங் இயக்கம்

15. கத்தோலிக்க சேவா சங்கம் (ஆண்கள்/பெண்கள்)

16. அடித்தள முழுவளர்ச்சி சங்கம்

17. மறைக்கல்வி மன்றம்

18. வழிபாட்டுக்குழு

19. பாடகர் குழு

20. கிராம முன்னேற்ற சங்கம்

21. பெண்கள் இயக்கம்

22. உள்நாட்டு மீனவர் சங்கம்

23. கைகள் இயக்கம்

24. கத்தோலிக்க சங்கம்

ஆலய உபதேசியார்கள்:

திரு. பரமானந்தம்

திரு S. ஞானபிரகாசம் 

திரு. செல்வராஜ் 

திரு. சார்லஸ் கிறிஸ்த்தோம் (தற்போது..)

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பழம்பெருமை வாய்ந்த ஊர்களில் ஒன்றான குலசேகரத்தில் அமைந்துள்ள புனித அகுஸ்தீனார் ஆலயம் வாருங்கள்... அளவற்ற ஆசீர்வாதங்களை பெற்றுச் செல்லுங்கள்...

ஆலய வரலாறு: ஆலய அர்ச்சிப்பு விழா மலர் 2024.

தகவல்கள்: ஆலய உபதேசியார் திரு. சார்லஸ் கிறிஸ்த்தோம் அவர்கள்.

தகவல்கள் சேகரிப்பில் உதவி: மண்ணின் மைந்தர் அருட்பணி. பெலிக்ஸ், HGN அவர்கள்.

கூடுதல் புகைப்படங்கள்: திரு. அருள் ஸ்டாலின் அவர்கள்.