316 புனித அந்தோணியார் ஆலயம், நற்கருணை ஆண்டவர் ஆராதனை ஆலயம், அலவந்தான்குளம்

        

புனித அந்தோணியார் ஆலயம் மற்றும் நற்கருணை ஆண்டவர் ஆராதனை ஆலயம்.

இடம் :அலவந்தான்குளம்

மாவட்டம் : திருநெல்வேலி 

மறைமாவட்டம் : பாளையங்கோட்டை

மறைவட்டம்: பாளையங்கோட்டை

நிலை : பங்குத்தளம் 

பங்குத்தந்தை : அருட்பணி. அருள் ஆன்றனி மைக்கேல்  

குடும்பங்கள் : 505

அன்பியங்கள் : 16

ஞாயிறு திருப்பலி : காலை 09:00 மணி 

செவ்வாய், வெள்ளி திருப்பலி : மாலை 07:00 மணி. 

திங்கள், புதன், வியாழன், சனி திருப்பலி : காலை 05:30 மணி. 

திருவிழா: மே மாதம் முதல் வாரத்தில் ஆரம்பித்து 13 நாட்கள் நடைபெறும். 

மண்ணின் இறையழைத்தல்கள்:

அருட்பணியாளர்கள் & அருட்சகோதரர்கள்:

1. Fr. Maria Nathan, SJ

2. Fr. Dhanasekar

3. Fr. Antonysamy, SVT

4. Fr. P.S. Antony, SJ

5. Fr. J. Antony Robinson, SJ

6. Fr. Antony Raj, OFM Cap

7. Fr. Stephen Ramesh, CR

8. Fr. Maria Antony, OFM Cap

9. Fr. Varghese Antony, SJ

10. Fr. John Michael, SJ

11. Br. Joseph Sundar Raj, SHJ

12. Fr. Arokia Julian, SJ

13. Br. Jeyakumar, SHJ

14. Fr. Rahu Antony, SJ

15. Fr. William Charles, SJ

16. Br. Vasanth, OFM Cap

அருட்சகோதரிகள்:

1. Sr. Clemencia Mary

2. Sr. Benedetta, MC

3. Sr. Christalyn, CSST

4. Sr. Roseline Mary Antony, JMJ

5. Sr. Sahaya Mary, CSST

6. Sr. Vida Mary, MC

7. Sr. Daisy Michael Antony, SCCG

8. Sr. Alouis Maria, MC

9. Sr. Anupa, SCCG

10. Sr. Amirtha Antony, SCCG

11. Sr. Juliet Beaula, CIC

12. Sr. Antoniammal, CIC

13. Sr. Stella Michael, SAL

14. Sr. Cruz Antoniammal, CIC

15. Sr. Arokia Mary Philip

16. Sr. Anitha, CIC

17. Sr. Felsiya Mary, BS

18. Sr. Amala, CIC

19. Sr. Sesammal Gnana Santiago, SCCG

20. Sr. Vanaja Marianathan, SCCG

21. Sr. Gnana Antoniammal

22. Sr. Leela Mary, SMA

23. Sr. Punitha, CIC

24. Sr. Antoinette, CSST

25. Sr. Jaculine Mary, CIC

26. Sr. Deepa, MSI

27. Sr. Rubini, CSST

28. Sr. Priya Mary, CIC

29. Sr. Shiny, CIC

30. Sr. Alphonsa, CIC

வழித்தடம்:

திருநெல்வேலி -அலவந்தான்குளம். 

திருநெல்வேலி -தெற்கு செழியநல்லூர். 

பேருந்துகள்: 33A, 33 E, N33, 23B, 5L, 10L, 3G. 

Location map: https://goo.gl/maps/iLZxLkrSqtstUauW7

வரலாறு:

அலைவாயுகந்தன்குளம் தோற்றம்:

அலைவாயுகந்தன்குளம் கி.பி.18-ஆம் நூற்றாண்டில் தோன்றியதாக பல்வேறு ஆவணங்கள் வழியாக அறியப்படுகிறது.

முற்காலத்தில் இம் மண்ணில் வாழ்ந்த மக்கள் சைவ சமயக் கடவுளான முருகன் மீது தீராத பக்தி கொண்டதனாலும், மேலும் குளங்களை வெட்டி விவசாயம் செய்து வந்ததாலும், திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள்ள நான்கு உற்சவர்களில் ஒருவரான சுவாமி "அலைவாயுகந்த பெருமான்" அவரது நாமத்தை உச்சரிக்கும் பொருட்டு "அலைவாயுகந்தன்குளம்" என்று இந்த ஊருக்கு பெயர் சூட்டினர். நாளடைவில் இந்தப் பெயரானது மறுவி “அலைவாயுகந்தான்குளம்" என்றாகி, பின்னர் தற்போது "அலவந்தான்குளம்" என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது. 

அலைவாயுகந்தன் + குளம் இணைக்கபட்டதன் விளக்கம்:

இம்மண்ணின் முன்னோர்கள் விவசாயத்தின் மூலம் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் குளங்களை உருவாக்கினர். மக்கள் பெரும்பான்மையோரின் தொழில்களாக விவசாயமும் அதைச்சார்ந்த பிற தொழில்களும் இருந்தன. அதனால் குளத்தைச் சூழ பல விவசாயக் கிராமங்கள் தோற்றம் பெற்றதுடன், குளத்தை அண்மித்த ஊர்களின் பெயரும் குளத்தின் பெயராகவே வைக்கப்பட்டன.

இது நீரின் முக்கியத்துவத்தையும், விவசாயத்தையும் மையமாகக் கொண்டு அப்போதைய சமூகம் எவ்வாறு கட்டமைக்கப்பட்டிருந்தது என்பதையும் நமக்கு உணர்த்துகிறது. அலைவாயுகந்தன்குளம் என்ற பெயர் வெறும் ஊரின் அடையாளமல்ல. அது, இந்த மண்ணின் மைந்தர்களான மருத நிலக் குடிகளின் ஆழமான வரலாற்றையும், அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையையும் உரக்கச் சொல்லும் சாட்சியாகும்.

அலைவாயுகந்தன்குளம் பகுதியில் வாழ்ந்த குடும்பர்கள், அவர்கள் பின்பற்றி வந்த ஆன்மீகத்தையும், வாழ்வியலையும் இணைத்து இவ்வாறு பெயரைச் சூட்டியுள்ளனர்.

அலைவாயுகந்தன்குளம் அமைவிடம் மற்றும் அமைப்பு:

அலைவாயுகந்தன்குளம் கிராமம் தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில், மானூர் ஒன்றியம், பல்லிக்கோட்டை பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. இக்கிராமமானது திருநெல்வேலி சந்திப்பிலிருந்து சுமார் 24 கி.மீ தொலைவில் உள்ளது. இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் தங்கள் குடியிருப்பை வடிவமைக்கும் போது, மேற்குப் பக்கம் குளமானதும், வடக்குத் திசையில் குளத்தின் மறுகால் (மடையடி) வழியாக தண்ணீர் ஓடும்படியும் பார்த்துகொண்டனர். குளத்திற்கு அருகாமையில் ஊரை செவ்வக வடிவில் வடிவமைந்தனர். ஊரின் தென் மேற்கில் சைவ சமயக் கோயில், ஊரின் கிழக்குப் பகுதியில் மயானமும் அமைக்கப்பட்டிருந்தது.

இயற்கையாகவே இப்பகுதியில் நீரோட்டமானது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்வதை உணர்ந்த குடும்பர்கள், குளங்களை அமைத்தும், பருவமழையைக் கணக்கிட்டும் தங்களது விவசாயப் பணியை மேற்கொண்டு வந்தனர். மேலும் சைவ சமயக் கோவில் இருக்கும் இடத்தின் கீழ்பக்கம் தொடங்கி ஊரின் கிழக்குப் பகுதி வரையிலாக, வேளாண்மை செய்ய ஏதுவாக நிலங்களைப் பண்படுத்திக் கொண்டு, அந்நிலங்களில் நெல் சாகுபடியை முப்போகம் விளைவித்து வந்துள்ளனர்.

இப்படியாக வேளாண் குடிகள் விவசாயம் செய்து, தங்களது நிலங்களில் பச்சைப் போர்வை போர்த்தியது போல எப்போதுமே பசுமையாகக் காட்சியளிக்கும் வண்ணம், தங்களது வேளாண்மைத் தொழிலை செய்துள்ளனர்.

மேலும் வடக்கு, வடமேற்கு ஆகிய பகுதிகளில் வேளாண்மை செய்ய ஏதுவாக நிலங்களைப் பண்படுத்தி, அங்கே விவசாயம் செய்ய வழிவகை செய்தனர். மேலும் அது வழியாகவே ஊருக்குள் வந்து செல்லும் பாதையை வடிவமைத்துக் கொண்டனர்.

பின்னர் நாளடைவில் கத்தோலிக்க வளர்ச்சியினாலும், கத்தோலிக்க மக்கள் தொகை பெருக்கத்தினாலும் கிராமம் விரிவடையத் தொடங்கியது. மேலும் புனிதருக்கு திருவிழா எடுக்கும் பொருட்டும், புனிதர்களின் சப்பரம் மற்றும் தேர்ப்பவனி எந்தவித சிரமம் இன்றி நடைபெற ஏதுவாக நான்கு புறமும், நான்கு திசைநோக்கிச் செல்ல தெருக்களை உருவாக்கினார்கள்.

இப்படி மிகச் சரியாக திட்டமிட்டு உருவாக்கப்பட்டதினால் இன்றளவும் திருவிழாக் காலங்களில், மக்கள் கூட்டத்தினர் திரளாக கலந்துகொள்வதில் எந்தவித சிரமம் இன்றியும் மற்றும் கனரக வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாகவும் தெருக்கள் உள்ளது.

அலைவாயுகந்தன்குளம் குடும்பர்கள்:

அலைவாயுகந்தன்குளம் என்ற ஊரைத் தோற்றுவித்த மண்ணின் முதல் குடிகள் தற்போது தெற்குத்தெரு என அறியப்படும் பகுதியில் வசித்து வந்துள்ளனர். இந்த மண்ணின் மூத்த குடியானவர்களாக குறிப்பிடப்படுபவர்கள் தெய்வத்திருவாளர்களான பலவேசக்குடும்பன், சொரிமுத்து குடும்பன் (புதுஅருளப்பன்), பெரியகுட்டையன், புதியவக்குடும்பன் மற்றும் சேர்வைகரைக்குடும்பன் ஆவார்கள். இவர்களும், இவர்களின் முன்னோர்களும் அலைவாயுகந்தன்குளத்தின் தோற்றத்திற்கும் குறிப்பாக தெற்குத்தெரு ஆரம்பகால குடியிருப்புக்கும் அடிப்படையாக அமைந்தவர்கள்.

வடக்கூர் (அலைவாயுகந்தன்குளம்):

அலைவாயுகந்தன்குளம் என்பது தெற்குத்தெரு மட்டுமே குடியிருப்புப் பகுதியாக இருந்தது. அந்தப் பகுதி ஊர் குடும்பு முறையை பின்பற்றி வந்த குடும்பர்களின் வாழ்விடமாக இருந்து வந்துள்ளது. வடக்கூர் என்று அழைக்கப்பட்ட பகுதியானது ஊரின் வடதிசையில் அமைந்துள்ளது.

பூர்வீக குடும்பர்களின் தெற்குத்தெரு குடியிருப்பை சுற்றியுள்ள பகுதிகளில் வேளாண்மையும் சிறப்பாக நடைபெற்று வந்துள்ளது. எனவே பூர்வீக குடும்பர்கள் அவர்களின் வேளாண்மைத் தொழிலுக்கு உதவியாகவும், ஆடு மாடுகளின் மேய்ச்சலுக்காகவும், விவசாய உபகரணங்கள், மண்பாண்டங்கள் மற்றும் பனைத் தொழில் செய்யவும் பல்வேறு தமிழ் சமூக மக்களை வடக்கூர் என்று அழைக்கப்பட்ட ஊரின் வடதிசையில் குடியமர்த்தினர். இந்த மண்ணின் பூர்வக்குடிகள் நிலச்சுவான்தார்களாக இருந்த காரணத்தினால் அவர்களுடைய நிலங்களில் வேலைக்கு கொண்டுவரப்பட்ட மக்கள் மட்டும் இங்கு மட்டுமல்லாமல், பல்லிக்கோட்டை கிராமத்தில் இருந்த பிராமணர்களுடைய நிலங்களிலும் பண்ணை வேலைக்கு சென்று வந்துள்ளார்கள். வடக்கூரிலிருந்த மற்ற சக தமிழ் குடி மக்கள் பல்வேறு ஊர்களுக்கு குடி பெயர்ந்து விட்ட போதிலும், இவர்கள் மட்டும் இந்த மண்ணிலேயே தங்களது வாழ்வியலை அமைத்துக் கொண்டனர் அவர்கள்தான் இன்றளவும் மக்களால் வடக்கூரார்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

கிறிஸ்தவ சமய வருகை:

சிவந்திப்பட்டி, திருநெல்வேலியிலிருந்து சுமார் 19.கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. ஆந்திராவில் இருந்து வந்தவர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கொடிக்குளம் தென்பாகம் என்ற ஊர், சிவந்திப்பட்டி என்று 18-ம் நூற்றாண்டில் சிவந்தி நாயக்கரால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

கி.பி. 19-ம் நூற்றாண்டின் பிற்காலங்களில் சிவந்திப்பட்டியைச் சேர்ந்த ஒரு சில குடும்பத்தினர் தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் பெண்கள், குழந்தைகள் உட்பட குடும்பத்தினர் மற்றும் தங்களின் ஆடு, மாடுகளுடன் நடைபயணமாக வந்து, தற்போது இருக்கும் பிராஞ்சேரிப் பகுதியான சுமைதாங்கி (செமதாங்கி) அருகில் உள்ள காட்டுத்தொழுவம் என்று அழைக்கப்பட்ட பகுதியில், தங்களது இருப்பிடங்களை அமைத்துக் கொண்டனர். அது காடுகள் சூழ்ந்த பகுதியாகவும், கொடிய மிருகங்களின் வாழ்விடமாகவும் இருந்ததால் அவர்களுக்குப் பாதுகாப்பற்றதாக இருந்தது.

அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு அவர்கள் கொண்டுவந்த கால்நடைகளை அந்த காட்டுப்பகுதியில் மேய்ச்சலில் ஈடுபடுத்தினர். அவர்கள் கொண்டு வந்த தானியங்களை வைத்து தங்களுடைய அன்றாட உணவிற்கு பூர்த்தி செய்து கொண்டு, வாழ்ந்து வந்தனர். அதே வேளையில், பூர்வீகக் குடிகளான குடும்பர்கள் அப்பகுதியில் விவசாயம் செய்து வந்ததை அறிந்து, அவர்களின் உதவியை நாடினர். அப்பகுதியில் இருந்த பெரும்பாலான விளைநிலங்கள் ஏற்கனவே பெரும் நில உடமையாளராகத் திகழ்ந்த வாக்குடையான் குடும்பன் மற்றும் அவரது உறவினர்களுக்குப் உரிமையானதாக இருந்தன. இதன் காரணமாக இந்த மக்கள், அவர்களுடைய நிலங்களில் விவசாயப் பணிகளுக்காகப் பணியமர்த்தப்பட்டனர்.

இவ்வாறாக சில மாதங்கள் கடந்த பிறகு, அவர்களின் நடத்தையின் பொருட்டு நம்பிக்கை ஏற்பட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த குடும்பர்கள் முன்வரலாயினர். எனவே குடும்பர்களின் உதவியுடன் கிராமத்தின் கிழக்கு பகுதியில் (தற்போது நெல்லைதிருத்து) அவர்கள் குடியமர்த்தப்படுகின்றனர்.

அப்பகுதியிலேயே (தற்போது நெல்லைதிருத்து) ஓலையால் வேயப்பட்ட குடிசை அமைத்து, முதன் முதலாக அவர்கள் கொண்டு வந்த ‘சிறிய அந்தோணியார் சொரூபத்தை ஒரு மண்பானைக்குள் வைத்து’ வழிபட்டு வந்துள்ளனர்.

நெல்லைதிருத்துப் பகுதியில் முடுக்கு வீட்டார் குடியிருந்த அலைவாயுகந்தன்குளம் பூர்வீக குடும்பர்களுக்கு சொந்தமான இடமானது அரசாங்க ஆவணங்களில் மாதா கோவில் இடம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

(குறிப்பு: அன்றைய காலங்களில் பொதுவாக அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களும் மாதா கோவில் என்றே மக்களால் அழைக்கப்பட்டது)

இதன் பின்னர் சிறிது காலம் கழித்து, தற்போது பழைய ஆலயம் இருக்கும் பகுதிக்குப் பின்புறம் உள்ள குறுகிய முடுக்கான பகுதியில் குடியமர்த்தப்பட்ட காரணத்தால் இவர்கள் முடுக்குவீட்டார் என்ற புனைப் பெயரில் அழைக்கப்பட்டனர்.

சொரிமுத்து குடும்பன் கிறிஸ்தவம் தழுவுதல்:

அலவை மண்ணின் பூர்வீகக் குடிகளில் ஒருவராகிய பலவேசக் குடும்பனின் இளையசகோதரர் சொரிமுத்து குடும்பன், தீவிர சைவ சமயப் பற்றாளர். கிறிஸ்தவத்தின் மீது அவருக்கு இருந்த வெறுப்பின் காரணமாக கிறிஸ்தவ மக்களை தொடர்ந்து தாக்கித் துன்புறுத்தி வந்துள்ளார். ஆனால் கிறிஸ்து இயேசுவின் அருளால் அவரது மனதில் மாற்றம் ஏற்பட்டு, சவுல் கிறிஸ்தவ மக்களை துன்புறுத்தி பின்னர், பவுலாக மாறி இறை இயேசுவின் சீடராக வலம்வந்தது போல சொரிமுத்து குடும்பனும், கிறிஸ்தவத்தின் மீது ஏற்பட்ட பற்றால் பூர்வீக சைவ மதத்தில் இருந்து கிறிஸ்தவம் தழுவினார்.

அலைவாயுகந்தன்குளத்தில் சைவ மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதம் மாறிய முதல் நபர் என்பதால், இவருக்கு புதுஅருளப்பன் எனப் பெயர் சூட்டப்பட்டது.

இதன் காரணத்தினால் கடுமையான ஊர் குடும்பு முறைக் கட்டுபாடுகளைக் கொண்ட அவருடைய சகோதரர்கள் அனைவரும் சேர்ந்து அவரை ஒதுக்கியதோடு மட்டுமில்லாமல், அவருடைய சொத்து உரிமையும் பறிக்கப்படுகின்றது.

இதனைக் கண்டு வருத்தம் அடைந்த அவருடைய தாயார், உன் சகோதரர்களுடன் உனக்கு எந்த பிரச்சனையும் வேண்டாம் உன் பிழைப்பை நீ தனியாக சென்று கவனித்துக் கொள் மகனே என்று கூறி, தன்னுடைய தங்க நகைகளை விற்பனை செய்து, அவருக்கு புதிய விவசாய நிலத்தை வாங்கிக் கொடுத்தார். எதற்கும் கலங்காத புதுஅருளப்பன் அவர்கள் தனது தாயார் வாங்கிக் கொடுத்த இந்த நிலத்தில் விவசாயம் செய்து, தனது வாழ்வாதாரத்தை நடத்தி வந்தார்.

புது அருளப்பன் அவர்கள் கிறிஸ்தவ மதத்தை தழுவியதைத் தொடர்ந்து, வடக்கூர் பகுதியில் குடியிருந்து வந்த சில குடும்பங்கள் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினர்.

அன்றைய காலகட்டத்தில் இருந்த குடும்பு முறைக் கட்டுப்பாட்டின் காரணத்தால் கிறிஸ்தவ மக்கள் ஊருக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனால் தான் முடுக்கு வீட்டார் ஊரின் கிழக்குப் பகுதியில் குடும்பர்களால் குடியமர்த்தப்பட்டனர்.

சிறிது காலம் சென்ற பின்னர் சைவ சமயத்தைப் பின்பற்றி வந்த குடும்பர்களுக்கும், கிறிஸ்தவ மக்களுக்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த விரும்பிய புது அருளப்பன் அவர்கள், தனது அண்ணன் மகனும், மேலும் ஊர்க் குடும்பருமான வாக்குடையான் குடும்பரிடம் ஒப்புதல் பெற்று கிறிஸ்தவ மக்களை ஊர் பகுதிக்குள் குடியமர்த்தினார்.

ஆயினும், அப்பகுதியிலிருந்த குடும்பர்களின் செல்வாக்கினால், கிறிஸ்தவ வழிபாடுகளை வெளிப்படையாகச் செய்ய இயலவில்லை. பின்னாள்களில் கிறிஸ்தவ மக்களின் வருகை அதிகமானதாலும், குறிப்பாக புதுஅருளப்பனின் தொடர் முயற்சிகளாலும், கிறிஸ்தவ வழிபாடுகள் வெளிப்படையாக முன்னெடுக்கப்பட்டன. இதன்பின்னர் சொரிமுத்து என்ற புதுஅருளப்பன் கிறிஸ்தவத்தின் மீது கொண்ட தீராத தாகத்தினாலும், அவருடைய பேராதராவும், ஒத்துழைப்பும் இருந்ததால் கிறிஸ்தவம் அலவை மண்ணில் வளர்ச்சிநோக்கிப் பயணிக்க காரணமாக அமைந்தது.

ஆலயத் திருப்பணியும், எதிர்ப்பும்:

கிறிஸ்தவ வழிபாடு நடத்தும் பொருட்டு சிறிய பீடம் அமைக்க முடுக்கு வீட்டுக்காரர்கள் எண்ணினர். ஆனால் அக்காலத்தில் பூர்வீகக் குடும்பர்களின் செல்வாக்கு அதிகமாக இருந்ததால், கிறிஸ்தவ மக்கள் சொரிமுத்து என்ற புதுஅருளப்பனின் உதவியை நாடினர். அவருடைய ஆதரவுடன் பீடம் அமைக்கும் திருப்பணிக்கு ஒப்புதல் பெறப்பட்டு, கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, அதன் பணியும் செவ்வனே நிறைவேறியது. மற்ற இடங்களில் இருந்து அலவை மண்ணிற்கு குடிபெயர்ந்த மக்களும் இந்தத் திருப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.

பின்னர், கி.பி. 1890-ஆம் ஆண்டில் இந்தப் பீடத்தைச் சுற்றி ஒரு சிறிய ஆலயத்தைக் கட்ட முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.

ஆலயம் காட்டுவது தொடர்பான திருப்பணி நடைபெறும் வேளையில், எதிர்ப்பலைகள் வரத் தொடங்கிய போது, சொரிமுத்து என்ற புதுஅருளப்பன் அவர்களின் ஆதரவு இருந்த காரணத்தினாலும் ஆலயம் கட்டும் திருப்பணியானது செவ்வனே நிறைவேறியது. இதுவே கிறிஸ்தவ மக்கள் கிறிஸ்தவ வழிபாட்டை வெளிப்படையாக முன்னெடுத்த காலமாகும்.

கிறிஸ்தவ மக்களின் எழுச்சி:

சைவ சமயத்தை பின்பற்றக்கூடிய பூர்வக்குடிகளின் செல்வாக்கு நிறைந்த காலங்களில், கிறிஸ்தவ மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக நீர்பாய்ச்சி அந்தோணி மகன் கித்திரியான் அவர்கள் நாட்டாமையாக பொறுப்பேற்ற பிறகு அலவை மண்ணில் மக்களின் மனங்களில் மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தது.

இவர் தலைமைப் பொறுப்பில் இருந்த காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பு அரணாய் இருந்ததோடு மட்டுமில்லாமல், ஏழு கிராமங்களை ஒன்றிணைத்து நாட்டுக் கூட்டத்தை நடத்தி, கிறிஸ்தவர்களுக்கு வாழ்வாதாரமாய் இருந்த ஆடு, மாடு மேய்க்கும் உரிமையைப் பெற்றுக்கொடுத்தார்.

சைவசமயத்தைப் பின்பற்றி வந்த பூர்வக்குடிகளுடன் நல்ல இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தியும், சாதியக் கொடுமைகளில் இருந்து மக்களைக் காப்பாற்றியும், கிறிஸ்தவம் வளர மிக முக்கியக் காரணியாக இருந்தார்.

பழைய ஆலயமானது இவர் நாட்டாமையாகத் தலைமையேற்ற பிறகு மூன்றாவது முறையாக விரிவுபடுத்தப்பட்டு, முழுமையாக கட்டமைக்கப்பட்டது. பழைய ஆலயத்தில் மேல் பக்கம் இருக்கும் கூரை அமைப்பும், கீழ் பக்கம் இருக்கும் கூரை அமைப்பும் உயரத்தில் மாறுபட்டிருக்கும். இதுவே பழைய ஆலயமானது வெவ்வேறு காலகட்டங்களில் கட்டப்பட்டதற்குச் சான்றாகும்.

மேலும் வெறும் இறை வழிபாட்டோடு நிறுத்தாமல், முதன் முதலாக புனிதருக்கு திருவிழா கொண்டாடும் வழக்கமும் உருவானது.

கிளைப் பங்கின் தொடக்கம்:

கிறிஸ்தவத்தின் வேர் அலவை மண்ணில் பரவத்தொடங்கிய காலகட்டத்தில், மக்களை கத்தோலிக்க விசுவாசத்தில் ஈடுபடுத்தும் பொருட்டு 1903-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பன்னீர்குளம் பங்கின் கிளைப்பங்காக, அலவந்தான்குளம் ஆனது.

தனிப் பங்கு:

தளவாய்புரம், இலந்தைக்குளம், ஈரவன்பட்டி, கல்லத்திகிணறு, பொம்மையாபுரம். கானார்பட்டி, தென்கலம், துறையூர் என பல்வேறு ஊர்களில் இருந்து வந்த மக்களின் குடியேற்றத்தால் அலவை மண்ணில் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் தொகை பெருகியது.

எனவே மக்களின் ஆன்மீகத் தேவையைப் பூர்த்தி செய்ய, புதிய பங்குத்தலம் உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கத்தோலிக்க குருக்களின் ஆதரவில், 01/09/1943 அன்று அலவந்தான்குளம் ஒரு புதிய பங்காக அறிவிக்கப்பட்டு, அருட்தந்தை டல்மேடா அடிகளார் அவர்கள் அலவந்தான்குளம் மண்ணின் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றுக்கொண்டார். அலவந்தான்குளம் பங்கின் கீழ் பல்வேறு கிளைப்பங்குகள் இருந்தன. இதில் புளியம்பட்டி மிகவும் குறிப்பிடத்தக்க மறைப்பணித்தலம் ஆகும்.

அலவந்தான்குளம் மறைப்பணித் தளத்தில் பல்வேறு சேசு சபை குருக்களும், பாளை மறைமாவட்ட குருக்களும் பணி செய்துள்ளனர். 2013-ம் ஆண்டுக்குப் பிறகு பாளை மறைமாவட்ட குருக்களே தொடர்ந்து மறைப்பணி செய்து வருகின்றனர்.

இவ்வாறு மக்கள் அனைவரும் பல்வேறு கத்தோலிக்க குருக்களின் வழிகாட்டுதலின்படி தங்களை ஆன்மீகப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டு, பல்வேறு நற்காரியங்களை செய்து கத்தோலிக்கம் வளர பெரும் உறுதுணையாக இருந்தனர்.

புதிய ஆலயம்:

தொடர்ச்சியான மக்கள் தொகைப் பெருக்கத்தின் காரணமாக புதிய ஆலயம் கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டது. எனவே பங்குத்தந்தை அருட்திரு. R.S. அமல்ராஜ் அடிகளார் அவர்களின் பணிக்காலத்தில் மக்களின் ஆதரவுடன், 04-03-1967 அன்று ஆலயத் திருப்பணிக்கு அருட்திரு. டொமினிக் டையஸ் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. தொடங்கப்பட்ட புதிய ஆலயத் திருப்பணியானது பங்குத்தந்தை அருட்திரு. R.S. அமல்ராஜ் அடிகளார் அவர்கள் மாறுதலாகிச் சென்ற பிறகு அடித்தளம் அமைத்ததோடு பணி தொடரப்படாமல் இருந்தது.

இதன் பின்னர் 1984-ம் ஆண்டு அப்போது பங்குத்தந்தையாக இருந்த அருட்திரு. ஜோசப் பன்னூர் அடிகளார் அவர்கள் ஆலயத்தைக் கட்டி முடிக்க முயற்சி மேற்கொண்டார். ஊர் மக்கள் பலரும் கட்டுமானப் பணியில் ஈடுபட்டனர். ஊர் மக்கள் கொடுத்த பல்வேறு பங்களிப்பின் மூலம் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு, 17.05.1984 அன்று பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் மேதகு. Dr. S. இருதயராஜ் அவர்களால் புனிதப்படுதப்பட்டது.

புதிய ஆலயக்கோபுரம்:

2003-ஆம் ஆண்டு புதிய ஆலயத்தின் கோபுரம் இடி தாக்கி சேதமடைந்த காரணத்தால், இரண்டாவது முறையாக கோபுர பணிக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது பங்குத்தந்தையாக இருந்த அருட்திரு. ஜோசப் பன்னூர் அடிகளார் ஊர் மக்களின் ஆதரவுடன் 2004-ஆம் ஆண்டு கோபுரத் திருப்பணி நிறைவேற்றப்பட்டது.

மாதா கெபி:

2017-ம் ஆண்டு பல்வேறு மக்கள் கொடுத்த நன்கொடையின் பலனாக பங்குத்தந்தை அருட்திரு. எரிக் ஜோ அவர்களின் முயற்சியில், மாதா கெபி கட்டி முடிக்கப்பட்டு, 05.06.2017 அன்று புனிதப்படுதப்பட்டது. 

புதிய கொடிமரம்:

2017-ம் ஆண்டு பங்குத்தந்தையாக இருந்த அருட்திரு. எரிக் ஜோ அவர்களால் புதிய கொடிமரம் நிறுவப்பட்டு, 02.05.2017 அன்று புனிதப்படுதப்பட்டது.

பழைய ஆலயம் புதுப்பித்தல்: (நற்கருணை ஆலயம்)

1984-ல் புதிய ஆலயத்தில் வழிபாடு தொடங்கப்பட்ட பிறகு, பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்த இந்த பழைய ஆலயமானது, அலவந்தான்குளம் பங்கு உருவான 75-வது ஆண்டு (1943 -2018) பவளவிழா நினைவாக 2018-ஆம் ஆண்டு பங்குத்தந்தை அருட்திரு. இம்மானுவேல் பிரான்சிஸ்ராஜ் மற்றும் பங்குமக்களால் நற்கருணை ஆலயமாக புதுபிக்கப்பட்டு,

இயேசுவின் தூய்மைமிகு திரு உடல், திருஇரத்தப் பெருவிழா நாளாகிய 23.06.2019 அன்று பொதுமக்களின் வழிபாட்டிற்காக பாளை மறைமாவட்டத்தின் மேனாள் ஆயர் மேதகு ஜூடு பால்ராஜ் அவர்களால் புனிதப்படுத்தப்பட்டு, அலவை மண்ணின் மைந்தர்களில் முதல் குரு அருட்திரு. மரியநாதன், சே.ச. அவர்களால் திறந்து வைக்கப்பட்டது..

புதிய பலிபீடம்:

ஆலயத்தின் புகழ் மற்றும் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, பங்குத்தந்தை அருட்திரு. சா. அந்தோணி வியாகப்பன் அவர்களின் அயராத முயற்சியில், ஊர் மக்களின் ஆதரவுடன் மிகவும் நுட்பமான வேலைப்பாட்டுடன் புதிய பலிபீடம் அமைக்கப்பட்டு, 14.04.2023 அன்று பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோணிசாமி D.D, D.C.L. அவர்களால் புனிதப் படுத்தப்பட்டது.

பதுவா அரங்கம்:

பங்குத்தந்தை அருட்திரு. சா. அந்தோணி வியாகப்பன் அவர்களின் முயற்சியில் நன்கொடையாளர்களின் உதவியில் பதுவா அரங்கம் மக்களின் பயன்பாட்டுக்காக கட்டமைக்கப்பட்டு 14.03.2023 அன்று பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோணிசாமி D.D, D.C.L அவர்களால் புனிதப் படுத்தப்பட்டது.

புனிதரின் திருப்பண்டம்:

பங்குத்தந்தை அருட்திரு. சா. அந்தோணி வியாகப்பன் அவர்கள் புனித அந்தோணியாரின் திருப்பண்டத்தை அலவை மண்ணுக்கு கொண்டுவர முயற்சி மேற்கொண்டு, புனிதரின் திருநாளன்று, 13.06.2023 அன்று பங்குத்தந்தையின் கரங்களால் புனிதரின் திருப்பண்டம் ஆலயத்தில் வைக்கப்பட்டது.

அருட்தந்தை ஜோசப் பன்னூர் அடிகளார்:

23.03.1969 அன்று சேசு சபையில் குருப்பட்டம் பெற்ற அருட்தந்தை ஜோசப் பன்னூர் அடிகளார் அவர்கள், 1973 முதல் 1984 வரை மற்றும் 1991 முதல் 2010 வரை மொத்தம் 29 ஆண்டுகள் அலவை மண்ணில் பங்குத்தந்தையாகப் பணியாற்றினார்.

அருட்தந்தை ஜோசப் பன்னூர் அவர்கள், அலவை மக்களின் விவசாயத் தொழிலில் பூ சாகுபடியை அறிமுகப்படுத்தினார்.

மக்களின் மருத்துவத் தேவையை உணர்ந்த தந்தை அவர்கள், அலவை மண்ணில் லெவே மருத்துவமனையை தொடங்கி வைத்தார்.

அருட்தந்தை. R.S. அமல்ராஜ் அவர்கள் புதிய ஆலயம் கட்ட அடிக்கல் நாட்டினார். அவருக்குப் பின் பொறுப்பேற்ற அருட்தந்தை. ஜோசப் பன்னூர் அவர்கள் பெருமுயற்சி மேற்கொண்டு ஆலயத்தை சீரும் சிறப்புமாக கட்டிமுடித்தார்.

தந்தை அவர்கள் இரண்டாவது முறையாக பொறுப்பில் இருந்த காலத்தில் தான் புதிய ஆலயத்தின் கோபுரம் இரண்டாவது முறையாக 2004 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

29 ஆண்டுகள் அலவை மண்ணில் பணியாற்றிய தந்தை அவர்கள் 22.04.2021 அன்று இயற்கை எய்தினார். தந்தையின் திருஉடலை அலவை மண்ணில் அடக்கம் செய்ய, அலவை மக்கள் பங்குத்தந்தை அருட்திரு. சா. அந்தோணி வியாகப்பன் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர். எனவே பங்குத்தந்தை அருட்திரு. சா. அந்தோணி வியாகப்பன் அவர்கள் பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோணிசாமி D.C.L அவர்களிடம் அனுமதி பெற்றுக் கொடுத்தார். அதனைத் அதனைத் தொடர்ந்து தந்தையின் திருஉடலானது அலவை புனித அந்தோணியார் ஆலயத்திற்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி:

அலவந்தான்குளம் பங்கு பன்னீர்குளம் பங்கின் கீழ் கிளைப் பங்காக இருந்த போது, அலவை மக்களை கல்வியின் பாதையில் வழிநடத்த எண்ணிய கத்தோலிக்க குருக்கள், 28.11.1936 அன்று இம்மண்ணில் தமது கல்விப் பணியை தொடங்கினர். ஆனால் அன்றைய காலகட்டத்தில் முழுமையான பள்ளிக் கட்டிட அமைப்பு இல்லாமல் வெறும் மரத்தடிக் கல்வி மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

01.09.1943 அன்று அலவந்தான்குளம் தனிப்பங்காக அறிவிக்கப்பட்ட பின்னர் அப்போதைய பங்குத்தந்தை அருட்தந்தை. டல்மேடா அவர்கள் 1949 ஆம் ஆண்டு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தம் வகுப்பு வரை புனித அந்தோணியார் தொடக்கப் பள்ளியை அதிகாரப்பூர்வமாக நிறுவினார்.

30.12.1953 அன்று அப்போதைய பங்குத்தந்தை அருட்தந்தை. யுவானா அவர்கள் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளியை நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி, அரசாங்க அங்கீகாரமும் பெற்றார்.

இவ்வாறு வளர்ச்சி பெற்று வந்த பள்ளியில், அதிகமான மாணவர் சேர்க்கையின் காரணமாக புதிய வகுப்பறைக் கட்டிடம் தேவைப்பட்டது. எனவே பங்குத்தந்தை அருட்திரு. அந்தோணி குரூஸ் அவர்களுடைய முயற்சியில் புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு 10.12.1988 அன்று பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் மேதகு Dr. S. இருதயராஜ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

06.08.1994 அன்று அருட்சகோதரி. அமலராணி அவர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியையாக பொறுப்பேற்ற பிறகு பள்ளியின் வளர்ச்சி பல மடங்காக உயர்ந்தது. இந்தப் பள்ளியில் தொடக்க கல்வியை முடித்த பல்வேறு மாணவ/மாணவிகள் உயர்நிலை மற்றும் மேல்நிலை படிப்பிற்காக வெவ்வேறு ஊர்களுக்கு சென்று படிக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. பள்ளி செயல்பட போதிய கட்டிட வசதியும் இல்லாமல் இருந்தது. எனவே அருட்சகோதரி. அமலராணி அவர்கள் நிதி திரட்டி பள்ளிக் கட்டிடத்தைக் கட்டி முடித்தார். மேலும் அருட்சகோதரி. அமலராணி அவர்கள் மேற்கொண்ட முயற்சியால், 01.06.1996 அன்று புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியாகவும், பின்னர் 01.07.1999 அன்று புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.

19.12.1999 அன்று பள்ளியின் பொன்விழா நடைபெற்றது. அருட்சகோதரி. அமலராணி அவர்கள் பள்ளியின் வளர்ச்சிக்காக செய்த அரும் பணிகளை விளக்கிக் கூற வார்த்தைகள் கிடையாது. அவரது அயராத முயற்சியால் வளர்ச்சி கண்ட இந்தப் பள்ளி, 75 ஆண்டுகள் கடந்து செயல்பட்டு வருகிறது.

லெவே மருத்துவமனை:

பங்குத்தந்தை அருட்தந்தை. ஜோசப் பன்னூர் அடிகளார் அவர்களின் முயற்சியில் 16.07.1974 அன்று லெவே மருத்துவமனை தொடங்கப்பட்டது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோசப் பன்னூர் அடிகளார் அவர்கள், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சருகணி என்ற ஊரில், அருட்தந்தை லெவே அவர்களிடம் பயிற்சி பெற்றதால், மருத்துவமனைக்கு இந்தப் பெயரை அவரது நினைவாக சூட்டினார்.

16.07.1974 அன்று மருந்தகமானது, அமலவை அருட்சகோதரிகள் மடத்தின் வராண்டாவில், முதன் முதலில் பங்குத்தந்தை அருட்தந்தை ஜோசப் பன்னூர் அடிகளார் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. அருட்சகோதரி. குளோரி தெரஸ் அவர்கள் மருத்துவமனையின் பொறுப்பை ஏற்றுச் செயல்படத் துவங்கினார்கள்.

அதனைத் தொடர்ந்து 04.05.1975 அன்று அருட்சகோதரி. குளோரி தெரஸ் அவர்கள் பொறுப்பில் மூன்று முழு நேரப் பணியாளர்கள் ஒத்துழைப்புடன் தாய், சேய் நலத்திட்டம் தொடங்கப்பட்டது. 

புதிய மருத்துவமனைக் கட்டிடம் கட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டு 02.07.1975 அன்று மேற்கு ஜெர்மனி மிசரேயோர் உதவியுடன், பாளை மறை மாவட்ட ஆயர் மேதகு. இருதயராஜ் ஆண்டகை அவர்கள் முன்னிலையில் புதிய மருத்துவமனைக் கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.

02.03.1976 அன்று பாளை மறைமாவட்ட ஆயர் மேதகு. இருதயராஜ் ஆண்டகை அவர்கள், பங்குத்தந்தை அருட்தந்தை ஜோசப் பன்னூர் அடிகளார் அவர்கள், சவேரியார் கல்லூரி குருக்கள். TSSS அமைப்பின் இயக்குனர்கள், பல்வேறு சபைகளைச் சேர்ந்த அருட்சகோதரிகள் மற்றும் ஊர் மக்கள் முன்னிலையில் புதிய கட்டிடம் ஆனது திறந்து வைக்கப்பட்டது.

22.06.1983 அன்று அருட்சகோதரி. மோட்ச அலங்காரம் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.

18.06.1984 அன்று லெவே மருத்துவமனையானது மதுரை புனித அமலோற்பவ மாதா கன்னியர் சபையின் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டது.

மதுரை புனித அமலோற்பவ மாதா கன்னியர் சபை:

அலவை மண்ணில் ஆன்மீகத்தையும், மக்கள் தொண்டையும் மேம்படுத்தும் பொருட்டு 26.05.1968 அன்று பங்குத்தந்தை அருட்தந்தை. R. S. அமல்ராஜ் அவர்களின் முயற்சியில் மதுரை புனித அமலோற்பவ மாதா கன்னியர் சபையைச் சேர்ந்த அருட்சகோதரிகள் தங்கள் பணித்தளத்தை முதன்முதலாக நிறுவினர்.

முதலில் அருட்சகோதரி. அருள் தெரஸ் அவர்கள் தலைமை பொறுப்பேற்றார் அவருடன் சேர்ந்து அருட்சகோதரி. யோவான்னி ஜெர்மன் மற்றும் அருட்சகோத.ரி மேரி மார்சல் அவர்களும் ஒன்றாக இணைந்து அலவை மறைப்பணித்தளத்தில் தங்கள் சேவையை முதன்முதலாக தொடங்கினர்.

தொடக்கத்தில் அருட்சகோதரிகளுக்கு என்று தனிப்பட்ட இல்லம் தயாராக இல்லாததால் ஊர் மக்களின் முயற்சியில் பள்ளி வளாகத்திலேயே செப்பனிடப்பட்ட ஒரு சிறிய வீட்டில் தங்கினர்.

15.08.1971 அன்று புதிய கன்னியர் இல்லம் கட்ட பங்குத்தந்தை அருட்தந்தை. R.S. அமல்ராஜ் அவர்கள் அடிக்கல் நாட்டினார். இவ்வாறு தொடங்கப்பட்ட பணியானது 18.03.1972 அன்று கட்டி முடிக்கப்பட்டு மூன்று சிறு அறைகள் கொண்ட இல்லமாக உருவானது. சபை அதிபர் அருட்சகோதரி.எர்னெஸ்டின் மேரி அவர்கள் தலைமையில் புதிய இல்லத்தின் திறப்பு விழா நடைபெற்றது.

பின்னர் அதனைத் தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு அருள் சகோதரிகளின் அயராத முயற்சியில், கன்னியர் இல்லமானது தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டது.

சரியான போக்குவரத்து வசதி இல்லாத காலகட்டங்களிலும், பங்குத்தந்தைக்கு பக்கபலமாக இருக்கும் பொருட்டு பல்வேறு இடங்களுக்கு நடந்தே சென்று மக்களோடு மக்களாக உண்டு, உறவாடி அருட்சகோதரிகள் கிறிஸ்தவத்தைப் பற்றி அறியாத மக்களுக்கும் மறைக்கல்வியை போதித்தனர்.

உலகோடு ஒட்டி வாழ வேண்டியவர்கள் என்ற கூற்றுக்கிணங்க அலவை மண்ணில் காலூன்றிய அருட்சகோதரிகள் தங்கள் சபையின் நோக்கப்படி ஆன்மீகப்பணி, கல்விப்பணி, மருத்துவப்பணி போன்றவற்றை பல்வேறு தடைகளைத் தாண்டியும் இன்றுவரை திறம்பட செய்து வருகின்றனர்.

சமூக சேவையை குறிக்கோளாகக் கொண்டு அதன் வழியில் ஆன்மீக சேவையையும் புரியும் நல்ல நோக்கம் கொண்ட அமலவை அலவந்தான்குளத்தில் சீரும் சிறப்புடன் தனது பணியைத் தொடர ஆண்டவர் அருள் புரிவாராக.

திருச்சிலுவை ஆலய வரலாறு:

ஊரின் கிழக்கு திசையில் உள்ள காட்டுப்பகுதியில், 'S' வளைவு என்று அறியப்பட்ட இடத்திற்கு அருகில் சிலுவை வைத்து மக்கள் வழிபட்டு வந்தனர். நாளடைவில், அவ்வழிபாட்டுத் தலம் அன்றைய அலவந்தான்குளம் மக்களால் ‘கல்வாரிமலை' என அழைக்கப்பட்டது. இருப்பினும், அப்பகுதி அடர்ந்த காட்டுப் பகுதியாகவும், காட்டு விலங்குகள் நடமாட்டம் மிகுந்ததாகவும் இருந்ததால், அங்கு சென்று வழிபாடு செய்ய மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும், மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடு, மாடுகளால் சிலுவை சேதமடைவதைக் கண்ட முன்னோர்கள், அங்கிருந்து சிலுவையை எடுத்து வந்து தற்போது கோவில் அமைந்துள்ள இடத்தில் நட்டு, அதைச் சுற்றிலும் கற்களால் பாதுகாப்பு அரணை ஏற்படுத்தினர். பல ஆண்டுகள் கடந்த பிறகு, 1961 முதல் 1973 வரை பங்குத் தந்தையாக இருந்த அருட்தந்தை R. S. அமல்ராஜ் அவர்களின் காலத்தில், கற்களைக் கொண்டு கல்வாரி மலை போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் மேல் சிலுவையும் ஆண்டவரின் சுரூபமும் நிறுவப்பட்டு மக்களின் வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டது.

சில ஆண்டுகளுக்குப் பின்னர், ஆண்டவரின் சுரூபம் வெயில் மற்றும் மழையால் சேதமடைவதை அறிந்த அலவந்தான்குளம் மக்கள், சிமெண்டால் ஆன நிழற் குடை அமைத்தனர். சிலுவை நாதரின் ஆசிர்வாதத்தால் பல்வேறு நோய்கள் தீர்க்கப்படுவதாக நம்பும் இம்மக்கள். அதற்கு நன்றிக்கடனாக இன்றளவும் இங்கு பக்தியுடன் வழிபட்டு வருகின்றனர்.

நன்கொடையாளரின் உதவியால் தற்போது உள்ள சிலுவை ஆலயம் கட்டப்பட்டு 15.01.2003 அன்று பாளை மறைமாவட்ட ஆயர் மேதகு ஜூடு பால்ராஜ் அவர்களால் புனிதப்படுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

புனித அந்தோணியார் திருவிழாக் கொண்டாட்டங்கள்:

நீர்பாய்ச்சி அந்தோணி மகன் கித்திரியான் அவர்கள் நாட்டாமையாக பொறுப்பில் இருந்த காலகட்டத்தில், கோடி அற்புதர் புனித அந்தோணியாருக்கு திருவிழா கொண்டாட முடிவு செய்யபட்டு, அவ்வாறே நிறைவேற்றப்பட்டது. அன்று முதல் இன்று வரை மக்களின் பங்களிப்பால் புனிதரின் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது.

இந்திய அரசாங்கம் 1961 ஆம் ஆண்டு வெளியிட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பல்லிக்கோட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் விழாக்களில் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா மிகப்பெரிய விழாவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புனிதரின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் முதல் வாரம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு தொடர்ச்சியாக பதிமூன்று நாட்கள் சிறப்புத் திருப்பலி, புனிதர்களின் தேர்ப்பவனி, நற்கருணைப்பவனி, சிறார்களின் முதல் திருவிருந்து, மக்களின் கும்பிடு சேவை, ஆலயத்தை 13 முறை சுற்றி வருவது என பல்வேறு பக்தி முயற்சிகளுடன் சிறப்புற நடைபெறும். தூய மிக்கேல் அதிதூதர், புனித செபஸ்தியார், புனித சவேரியார், புனித அந்தோணியார், புனித சூசையப்பார், அன்னை மரியாள் ஆகியோர் தேரில் ஊரைச் சுற்றி பவனி வருவது பார்ப்பதற்கு மெய்சிலிர்க்கும் காட்சிகளாகும்.

திருவிழாவின் சிகர நாளான 12-ம் நாள் மின் அலங்கார தேர்பவனி நடைபெறும். 13-ம் நாள் திருவிழா அன்று காலை திருப்பலிக்கு பின் புனிதர்களின் தேர்ப்பவனி துவங்கி ஊரை சுற்றி வரும். அப்பொழுது மக்கள் அனைவரும் ஒவ்வொரு புனிதர்களின் தேருக்கும், உப்பு மிளகு நேர்ச்சை செலுத்தியும், பூமாலைகள் சாற்றியும், காணிக்கை செலுத்தியும், பதுவை புனிதர் தங்களுக்கு செய்த சகல காரியங்களுக்கும் நன்றி செலுத்துவார்கள். தேர்ப்பவனி முடிந்தபின் மாலை வேளையில் புனிதரின் கொடி இறக்கப்பட்டு நற்கருணை ஆசீருடன் திருவிழா நிறைவு பெறும்.

இந்தத் திருவிழாவின் போது ஒவ்வொரு வீடுகளும் உறவுகள் மற்றும் நண்பர்களால் நிரம்பி இருக்கும். பெரும்பாலும் பல மாதங்களாக சந்திக்காத உறவுகள் ஒன்றிணைந்து, தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும், நினைவுகளைத் தொகுத்து கூறவும் இந்த விழா நல்லதொரு வாய்ப்பாக அமையும்.

புனித செபஸ்தியார் திருவிழா:

அலவந்தான்குளம் கால்நடை வளர்ப்போர் சங்கத்தினர் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் புனித செபஸ்தியாருக்கு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. தங்களின் கால்நடைகள் நோய் நொடி இல்லாமல் பல்கிப் பெருக வேண்டும் என்ற வேண்டுதலோடு, அலவந்தான்குளம் கால்நடை வளர்ப்போர் சங்கத்தினர் தங்களுக்குள் வரி வைத்து, திருவிழாவை சிறப்பாக நடத்தி வருகின்றனர். இந்தத் திருவிழாவானது 1974 ஆம் ஆண்டு முதன் முதலில் கொண்டாடப்பட்டது. புனித செபஸ்தியார் திருவிழாவின் சிகர நிகழ்ச்சிகளாக நவநாள் திருப்பலியும், புனிதரின் சப்பரப்பவனியும் (தேர்பவனி) நடைபெறும். தூய மிக்கேல் அதிதூதர் மற்றும் புனித செபஸ்தியார் சப்பரங்கள் மட்டும் இந்தத் திருவிழாவின் போது பவனி வரும்.

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

1. பங்குப்பேரவை

2. அன்பியங்கள்

3. புனித செசிலியா பாடகற்குழு

4. இளையோர் இயக்கம்

5. மறைக்கல்வி மன்றம்

6. பீடச்சிறுவர்கள்

7. பாலர் சபை

8. நற்கருணை வீரர் சபை

9. மரியாயின் சேனை

10. பதுவா ஜெபக்குழு

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. Fr. Dalmeda, SJ (1943-1951)

2. Fr. C. Yuvana, SJ (1951-1958)

3. Fr. D. Francis Xavier, SJ (1958-1959)

4. Fr. V. D. Arulanandam (1959-1961)

5. Fr. R. S. Amalraj, SJ (1961-1973)

6. Fr. J. Joseph Pannoor, SJ (1973-1984)

7. Fr. G. J. Amalan (1984-1986)

8. Fr. S. L. Arulappan (1986-1988)

9. Fr. Antony A. Cruz (1988-1991)

10. Fr. J. Joseph Pannoor, SJ (1991-2010)

11. Fr. I. Arul Raj, SJ (2010-2012)

12. Fr. A. Ambrose, SJ (2012-2013)

13. Fr. T. Berchmans Antony, (2013-2014)

14. Fr. Eric Joe (2014-2017)

15. Fr. A. Immanuel Francis Raj (2017-2020)

16. Fr. C. Antony Viagappan (2020-2025)

17. Fr. I. Arul Antony Michael (27.05.2025......)

அலவை  பங்குமக்களின் விசுவாச  வரலாற்றின் ஆணிவேரும், அடித்தளமுமான  இந்த ஆலயத்திற்கு அனைவரும்  வாருங்கள், இறையாசீர் பெற்றுச் செல்லுங்கள்..

வரலாறு: பாளை மறைமாவட்ட ஆயரின் பங்கு விசாரணை நினைவு மலர் 2024.

தகவல்கள் சேகரிப்பில் உதவி மற்றும் புகைப்படங்கள்: முன்னாள் பங்குதந்தை அருட்பணி. அந்தோணி வியாகப்பன் மற்றும் ஆலய உறுப்பினர் சகோதரர். ஜெனின் ஜோசப் ஆகியோர்.