517 புனித அந்தோணியார் ஆலயம், மேட்டுமாநகர்

   

புனித அந்தோணியார் ஆலயம் 
இடம் : மேட்டுமாநகர், மப்பேடு அஞ்சல்

மாவட்டம் : திருவள்ளூர் 
மறைமாவட்டம் : சென்னை -மயிலை உயர் மறைமாவட்டம்
மறைவட்டம் : திருவள்ளூர் 

நிலை : கிளைப்பங்கு 
பங்கு : புனித சூசையப்பர் ஆலயம், காந்திப்பேட்டை
பங்குத்தந்தை : அருட்பணி. கிரீத் மேத்யூஸ் 

குடும்பங்கள் : 75
அன்பியங்கள் : 2

ஞாயிறு திருப்பலி காலை 07.00 மணிக்கு 

செவ்வாய் மற்றும் வியாழன் மாலை 07.00 மணிக்கு திருப்பலி. 

மாதத்தின் முதல் செவ்வாய் மாலை 06.30 மணிக்கு புனித அந்தோணியார் தேர்பவனி, திருப்பலி, நற்கருணை ஆசீர். 

திருவிழா : ஜூன் மாதம் 5 ஆம் தேதி கொடியேற்றம் 13 ஆம் தேதி திருவிழா. 

வழித்தடம் :
பூந்தமல்லி - அரக்கோணம்.
பேருந்து நிறுத்தம் - வெள்ளக்கால்வாய். 
பேருந்துகள்: 591, 107, 591C
பாரதி, APS.

Location map : ST ANTONY CHURCH Mettuchery, Mappedu, Tamil Nadu 631402
https://maps.app.goo.gl/TQwTnEiCwcR11Us27

வரலாறு :

காந்திப்பேட்டை பங்கின் ஒரு அங்கமாக விளங்கும் மேட்டுமாநகர் புனித அந்தோணியார் ஆலயம் பழைமையான வரலாற்றைக் கொண்டது. 

கி.பி 1932 ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் பிரான்சிஸ்கன் மிசனரியான அருட்சகோதரர். ரோமுலஸ் அவர்களால் மேட்டுமாநகர் பகுதியில்  கிறிஸ்தவம் விதைக்கப் பட்டதுடன், கல்விப் பணியும் நடைபெற்று வந்தது. அப்போது வழிபாட்டிற்கென சிறிய குடிசை ஆலயம் கட்டப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆலயமானது கீழச்சேரி பங்குடன் இணைக்கப்பட்டது. 

1950 ஆம் ஆண்டிற்குப் பிறகு மேட்டுமாநகர் ஆலயமானது, பிஞ்சிவாக்கம் பங்குடன் சேர்த்துக் கொள்ளப் பட்டது. 

1965 இல் இங்கு புதிய சிற்றாலயம் கட்டப்பட்டு, அப்போதைய சென்னை மயிலை பேராயர் மேதகு மத்தியாஸ் ஆண்டகை அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. 

அதன்பிறகு 2005 ஆம் ஆண்டு கீழச்சேரி பங்கின் கிளைப் பங்காகிய காந்திப்பேட்டை புனித சூசையப்பர் ஆலயமும், 

மேட்டுமாநகர் புனித அந்தோணியார் ஆலயமும் இணைக்கப்பட்டு, காந்திப்பேட்டையை மையமாகக் கொண்டு புதிய பங்கு உருவானது. புதிய பங்கின் முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. அமலதாஸ் அவர்கள் பொறுப்பேற்று வழிநடத்தினார்கள். தொடர்ந்து அருட்பணி. ஜூடு ராஜேஷ் அவர்கள் பணியாற்றினார். 

தொடர்ந்து பணியாற்றிய அருட்பணி. ஆல்பர்ட் பெனடிக்ட்நாதன் அவர்களின் முயற்சியால் கொடிமரம் கட்டப்பட்டு 04.06.2010அன்று திறந்து வைக்கப்பட்டது. மேலும் மக்களின் நன்கொடை மற்றும் பங்குத்தந்தையின் முயற்சியால் அழகிய மணிக்கூண்டும், அதற்கு கீழே அனைத்து மக்களும் ஜெபிக்க நற்கருணை சிற்றாலயமும் கட்டப்பட்டு 08.05.2014 அன்று சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது. 

தொடர்ந்து பணியாற்றிய அருட்பணி. ஹாரி வில்லியம்ஸ் பணிக்காலத்தில், அவரது முயற்சியால் சென்னை மயிலை உயர் மறைமாவட்ட முதன்மைப் பணியாளர் அருட்பணி. அருள்ராஜ் அவர்கள் 13.06.2015 அன்று கோடி அற்புதர் புனித அந்தோணியாரின் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 2018 நவம்பர் மாதத்தில் கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டு, பங்குத்தந்தை, பங்கு மக்கள் மற்றும் பல்வேறு நன்கொடையாளர்களின் உதவியுடன் ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 18.08.2019 அன்று சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களால் புதிய ஆலயம் மற்றும் ஆலயத்தின் முன்புறம் அன்னை வேளாங்கண்ணி மாதா கெபி ஆகியவை அர்ச்சிக்கப் பட்டது. 

ஆலயத்தின் பலிபீடத்தில் புனித அல்போன்சா அவர்களின் திருப் பண்டம் பதிக்கப்பட்டு புனிதப்படுத்தப் பட்டுள்ளது. 

தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி. கிரீத் மேத்யூஸ் அவர்கள் மக்களை ஆன்மீகப் பாதையிலும், இளைஞர்களை ஒருங்கிணைத்து, ஆற்றல் மிக்க இறைப்பணி செய்யும் இளைஞர்களாக சிறப்பான முறையில் வழிநடத்திச் செல்கிறார். 

புனித அந்தோணியாரின் புதுமைகள் :

நோயுற்றோர் நோய்நீங்கி நலம் பெற்று செல்கின்றனர். 

பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் இவ்வாலயம் வந்து ஜெபித்து, குழந்தை வரம் பெற்று செல்கின்றனர். 

சொத்து பிரச்சினைகள் நீங்கி மகிழ்வான வாழ்வை பெற்றுச் செல்கின்றனர். 

திருமணதடை நீங்கி, திருமணம் நடைபெறுகிறது. 

பல்வேறு சமயத்தினர் புனிதரின் புதுமையால், மனமாற்றம் பெற்று இறைவனை ஏற்றுக் கொண்டு திருமுழுக்குப் பெறுகின்றனர். 

செய்யும் தொழிலில் தடைநீங்கி வளர்ச்சி காண்கின்றனர். 

தீய ஆவிகளிடமிருந்து விடுதலை பெற்றுச் செல்கின்றனர். 

வேலைவாய்ப்பு இல்லாதோர் இங்கு வந்து ஜெபித்து வேலைவாய்ப்பு பெறுகின்றனர். 

இவ்வாறு எண்ணற்ற அற்புதங்கள் கோடி அற்புதர் புனித அந்தோணியார் வழியாக நாள்தோறும் நடந்து வருகின்றன. வாருங்கள் புனித அந்தோணியார் வழியாக இறைவனின் ஆசீர் பெற்றுச் செல்லுங்கள்.. 

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. கிரீத் மேத்யூஸ் மற்றும் பங்குப்பேரவை.