235 புனித தோமையார் மலை திருத்தலம், மலையடிப்பட்டி

   

புனித தோமையார் மலை திருத்தலம்

இடம் : மலையடிப்பட்டி

மாவட்டம் : திருச்சி 

மறைமாவட்டம் : திருச்சி 

மறைவட்டம் : மணப்பாறை 

பங்குத்தந்தை : அருட்பணி. ஜேம்ஸ்

நிலை : திருத்தலம் 

பங்கு : புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், மலையடிப்பட்டி

ஞாயிறு திருப்பலி : காலை 05.30 மணி, காலை 08.00 மணிக்கும் (பங்கு ஆலயத்தில்) 

காலை 11.00 மணிக்கு புனித தோமையார் மலை திருத்தலத்தில் 

சனிக்கிழமை திருப்பலி : மாலை 06.00 மணிக்கு (கெபியில்) 

வியாழன் மலையில் சிறப்பு ஆராதனை காலை 11.00 மணிக்கு திருப்பலி 

திருவிழா : ஜூலை மாதம் 03 ம் தேதி. 

வரலாறு:

கிறிஸ்தவ மக்கள் முதன் முதலாக, முள்ளிப்பாடியிலிருந்து மலையடிப்பட்டிக்கு அருகில் குடியேறிய போது, 1662-இல் பணியாற்றிய Fr. இம்மானுவேல் ரோட்ரிகஸ் அவர்களால் ஒரு மரச் சிலுவை, மலை உச்சியில் நிறுவப்பட்டது (இச்சிலுவை இன்று வரை அழியாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது).

புனித தோமையார் திருத்தல உருவாக்கம் குறித்த குறிப்பிடத்தகுந்த வரலாறு ஏதும் வரலாற்றுக் குறிப்புகளில் காணக்கிடைக்கவில்லை. கிடைத்த தகவல்களின் படி, 1714-ஆம் ஆண்டில் (பனிமய அன்னை ஆலயம் கட்டப்பட்ட காலம்), ஒரு கூரை வேய்ந்த சிற்றாலயமானது, தோமையார் மலை உச்சியில் கட்டப்பட்டது. 

காலக்கோட்டின் படி, Fr. அந்தோணி டயஸ் (கர்த்த நாதன்), அல்லது அவருக்குப் பின் பணியாற்றிய Fr. அந்தோனி ரிக்கார்டி அடிகளார் இதனைக் கட்டியிருக்க வேண்டும். மக்களின் தன்னெழுச்சியான பக்தி முயற்சியின் விளைவாக, அவர்களாகவே இச்சிற்றாலயத்தை கட்டியிருக்கலாம் என்ற ஒரு கோணமும் உள்ளது. எனினும், வரலாற்று ஆவணங்களில் ஆண்டு குறித்த தகவல் தவிர வேறெந்த குறிப்புகளும் கிடைக்கவில்லை.

கல் சிற்றாலயம்

பின்னர் இச்சிற்றாலயம் 1840-இல் சற்று பெரியதாக கற்களால் கட்டப்பட்டது. காலக்கோட்டின் படி, இயேசு சபையின் ‘புதிய மறைத்தளப்’ பணிகள் மலையடிப்பட்டியில் காலூன்றியபோது பணியாற்றிய ஒரு குருவானவர் இதனைக் கட்டியிருக்க வேண்டும்; Fr. பெரின் அடிகளாருக்கு முன்பாக பணியாற்றிய இம்மூன்று குருக்களின் பெயர்கள் வரலாற்று ஆவணங்களில் கிடைக்கப் பெறவில்லை. இதே சமயத்தில், கோவா பதுருவாதோ குருக்களும் புனித பனிமய அன்னை பங்கில் பணியாற்றி வந்துள்ளனர்; ஆனால் இவர்கள் இதனைக் கட்டியிருக்க வாய்ப்பில்லை. வரலாற்றின்படி இவர்களின் பணிகள் ஏதும் சரியாக இல்லாததால், மக்கள் இவர்களை வெறுத்ததாகவே அறிகிறோம்.

1843-இல் பணியாற்றிய தந்தை விக்டர் கொரிங்கோன் அடிகளார் இச்சிற்றாலயத்தை சற்று விரிவுபடுத்தி, செபிப்பதற்கும், திருப்பலி நிறைவேற்றுவதற்கும் உகந்த அழகிய சிற்றாலயமாக்கினார். தற்போது வரை இந்த சிற்றாலயமானது, ஆலயத்தின் மையப்பகுதியாக பாதுகாக்கப்பட்டு, ஆலய பீடம் இதன் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.

பிற்கால வரலாறு:

புனித தோமையார் திருத்தலத்தின் அனைத்து வளர்ச்சிப்பணிகளும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின் பகுதிகளிலேயே நடைபெற்றுள்ளது. அதுவரையில் மலை மீதிருந்த சிற்றாலயத்திற்கு செல்வதற்கு எந்தவிதமான பாதை வசதிகளும் இல்லாமலிருந்தது. கோவில் மட்டும் மலை உச்சியில் கரடுகளுக்கு மத்தியில் அமைந்திருந்தது. 

பிந்தைய நாட்களில், பழைய சிற்றாற்றாலயத்தின் முன்பாக மக்கள் அமர்வதற்கு ஏதுவாக ஒரு சிறியகோவில் முகப்பு அமைப்பானது கட்டப்பட்டது. இது கட்டப்பட்டதன் காலம் தெரியவில்லை. எனினும் இந்த முகப்பூச்சு ஏதும் பேசாமல் செங்கற்களால் கட்டப்பட்டிருந்தது. தரையானது தளம் எதுவும் இல்லாமல், மணலால் நிரப்பப்பட்டிருந்தது. வருடத்திற்கு ஒருமுறை திருவிழா கொண்டாடும் பொழுது,இந்த செங்கல் சுவற்றில் சுண்ணாம்பு பூசி, திருவிழா திருப்பலியை நிறைவேற்றி வந்தனர்.

தோமையார் திருத்தலத்திற்கு செல்வதற்கு படிக்கட்டு அமைப்போ, அல்லது சாலை வசதியோ எதுவும் இல்லை. மக்கள் பாறைகளையும் திண்டுகளையும் பயன்படுத்தி மேலே ஏறி ஜெபித்து வந்துள்ளனர். (தற்போது கேரளாவில் அமைந்துள்ள குருசு மலையில் இதுபோன்ற ஓர் அமைப்பை நாம் காணமுடியும்). 

இந்நிலையில், திருச்சி மறைமாவட்டத்தின் கீழ் வந்த மலையடிப்பட்டியின், முதல் குருவாக பணியேற்ற Fr. A. தாமஸ் அவர்களின் பணிக்காலத்தின் போது (1938-1949), மலைமீது ஏறிச் செல்வதற்காக, கரடு முரடான அமைப்பிலான படிக்கட்டுக்கள் முதல் முதலில் அமைக்கப்பட்டது. முத்தப்புடையான்பட்டியைச் சார்ந்த திரு. அருளாந்து உடையார் அவர்கள், தன் வாழ்வில் தூய தோமையார் வழியாக பெற்ற ஒரு புதுமையின் நேர்த்திக் கடனாக, இந்த அரிய பணியை முழுஉபயமாக செய்து கொடுத்தார். இப்படிக்கட்டு 05-04-01938 அன்று திறந்து வைக்கப்பட்டு, இறைமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. இதற்கான சான்றாக ஒரு கல்வெட்டானது, மலைப்படிக்கட்டு மேல் நோக்கி வளையும் மூலையில் அமைந்த பகுதியில் பதிக்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம். 

Fr. A. மரியானந்தம் (மண்ணின் மைந்தர்) பங்குத்தந்தையாக பணியாற்றியபோது (1962-1973), முன்பு அமைக்கப்பட்ட கரடு முரடான படிக்கட்டுகள் சீராக்கப்பட்டு, புதிதாக பதிக்கப்பட்டன. 1972-இல் அர்ச்சிக்கப்பட்டு, திறக்கப்பட்ட இப்படிக்கட்டுகள் எவ்வித மாற்றமுமின்றி இன்று வரை பயன்பாட்டில் இருந்து வருகிறது.

அதுவரை, கோவிலின் எதிர்ப்புறம் இரண்டு பெரிய ஆலமரங்கள் இருந்தன. அந்த இரு ஆல மரங்களும் வெட்டப்பட்டு, கோவிலின் முன்புறம் முழுவதும் சமன் செய்யப்பட்டு மக்கள் அமர்வதற்கு ஏதுவாக ஒரு திறந்த வெளி மைதானமாக மாற்றப்பட்டது. மேலும் இந்த மைதானம் அமைப்பு நிலையாக இருப்பதற்கு ஏதுவாக, கோவிலை சுற்றிலும் உயரமான கருங்கற்களால் மதில்சுவர் அரண் அமைக்கப்பட்டது. இந்த அரண் இல்லையெனில் நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்புண்டு.

மேலும், மலையடிவாரத்தில் புனித தோமையாரின் இந்திய வருகையின் 19-ஆம் நூற்றாண்டின் நினைவாக ஓர் அலங்கார வளைவும், புனித தோமையார் திருச்சிலுவை பொறித்த புனித தோமையார் குருசடியும் கட்டப்பட்டன.

அருட்தந்தை பத்திநாதர் அவர்கள் முதல் முறை பங்குத்தந்தையாக (1973-1977) பணியாற்றியபோது, கோவிலுக்கு செல்வதற்கு மலையைச் சுற்றி ஒரு மண் சாலை அமைத்தார். கோவிலின் பின்புறம் வாகனங்கள் நிறுத்துமிடமாக சமன் செய்யப்பட்டு, இந்த சாலை அந்த இடம் வரை செல்லுமாறு அமைக்கப்பட்டது. மேலும், முதியவர்கள் ஆலயத்திற்கு செல்லும் வகையில், ஒரு சறுக்கு பாதை நேரடியாக ஆலய முகப்பிற்கே செல்லும் வகையில் அமைக்கப்பட்டது.

இந்த மைதானத்தின் கடைக்கோடியில், கோவிலின் எதிர்புறமாக, கிழக்கே நோக்கியவாறு ஒரு சிறிய தற்காலிக கீற்று மேடை அமைக்கப்பட்டு, திருவிழா திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டு வந்தன. சில வருடங்களுக்கு பின்பு, அந்த இடத்தில் ஒரு சிறிய மேடை நிலையானதாக, கற்களால் அமைக்கப்பட்டது. எனினும் மைதானம் முழுக்க சிறந்தவெளியாகவே இருந்தது. திருவிழா சமயத்தில் மட்டும், தென்னங்கீற்று பந்தல் அமைக்கப்பட்டு, திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டு வந்ததன. 

மறைமாவட்ட திருத்தலம்

மேதகு ஆண்டகை தாமஸ் பெர்னாண்டோ அவர்கள் திருச்சி ஆயராக பணியாற்றிய பொழுது (1971-1990),  தன் பெயர் கொண்ட இவ்வாலயத்தின் மீது கொண்ட ஆர்வத்தினாலும்,  இம்மறைத்தளத்தின் பழமையை பறைசாற்றும் நோக்கிலும், இவ்வாலயத்தை மறைமாவட்ட திருத்தலமாக உயர்த்தினார். மேலும், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 3ஆம் தேதி இத்திருத்தல விழாவானது, மறைமாவட்ட விழாவாக அனுசரிக்கப்பட்டு வந்தது. (திருச்சி மறைமாவட்டத்திற்கு சொந்தமான பள்ளிகள் அனைத்திலும் அன்றைய தினம் விடுமுறை விடப்பட்டது. இவ்வாறாக இந்த தோமையார் திருவிழா களைகட்டத் தொடங்கியது. எனினும், பின்னாட்களில் இந்நடைமுறை சில காரணங்களால் கைவிடப்பட்டது).

Fr. S. R. அந்தோணிசாமி அவர்கள் காலத்தில் (1977-1980), திருவிழாவின் 9.00 மணி திருப்பலி மண்ணின் மைந்தர்கள் திருப்பலியாக அறிமுகம் செய்யப்பட்டு, இந்நடைமுறை இன்றுவரை ஒரு பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

மண்ணின் மைந்தரான, அருட்தந்தை I. ஆரோக்கியம் அவர்கள் திருச்சி மறைமாவட்டத்தில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு, அமெரிக்காவில் பல ஆண்டுகாலமாக மறைப்பணியாற்றி வந்தார். 

தந்தையவர்களுக்கு தூய தோமையார் மீதும் இத்திருத்தலத்தின் மீதும் அலாதி பற்று உண்டு. இத்திருத்தல மேம்பாடுகளுக்காக தாமாக முன்வந்து மனமுவந்து தாராளமாக பல்வேறு வகைகளில் உதவியுள்ளார். 

அருட்தந்தை மரிய அற்புதம் அவர்கள் பங்குத்தந்தையாக இருந்த சமயத்தில் (1995-1998) அருட்தந்தை I. ஆரோக்கியம் அவர்களின் தாராள உதவியால், மக்கள் அமரும் கோவில் முகப்பு அமைப்பு முழுவதும் சிமெண்டால் பூசப்பட்டு, காங்கிரீட் கூரை இடப்பட்டது.  கோவிலின் உட்புறமும், சிறிது சீரமைக்கப்பட்டது. இதே காலகட்டத்தில்,  அரசாங்க உதவியுடன் மலையைச் சுற்றியுள்ள மண் சாலையானது தார் சாலையாக அமைக்கப்பட்டது.

இதன்பின் அருட்தந்தை திருத்துவதுவ தாஸ் அடிகளார் பங்கு குருவாக பணியாற்றியபோது (1998-2003) அருட்தந்தை I. ஆரோக்கியம் அவர்கள் மீண்டும் நிதியுதவி செய்து கோவிலுக்கு முன்பாக உள்ள மைதானத்தில் ஒரு நீண்ட திறந்தவெளி அரங்க அமைப்பை ஏற்படுத்தி கான்கிரீட் கூரை அமைத்தார். இது கோவிலின் முன்புறத்திலிருந்து நீண்டு திருப்பலி நிறைவேற்றும் சிறிய மேடை வரை அமைக்கப்பட்டது. மேலும் இதே காலகட்டத்தில், பழைய கோவிலுக்கு பின்புறமாக ஒரு புதிய கோபுரம் அமைக்கும் பணி நடந்தது. எனினும் கோபுர வேலை முழுமை பெறவில்லை.

மேலும், Fr. ஜேம்ஸ் செல்வநாதன் அடிகளாரின் பணிக்காலத்தின் போது தந்தை I. ஆரோக்கியம் அடிகளார் அளித்த நிதியுதவியைக் கொண்டு, மலையின் மையப்பகுதியின் உச்சியில் ஓர் உயர்ந்த இரும்பு சிலுவை ஒன்று 2010-இல் நிறுவப்பட்டது. வெகு தொலைவில் இருந்து நோக்கினாலும், இச்சிலுவையின் தரிசனம் கிடைக்கும் என்பது இதன் சிறப்பு. (தோமையார் மலை மூன்று பகுதிகளைக் கொண்டது முதல் பகுதியில் மட்டுமே ஆலயம் மற்றும் பிற புனித தலங்களும் அமைந்துள்ளது. மலையின் மேற்கு எல்லையின் மூன்றாம் பகுதி, அக்காலத்தில் வனத்து சின்னப்பர் பக்தி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. பின்னாட்களில் இது கைவிடப்பட்டது. மேலும் புனித தோமையார் மைலாப்பூர் செல்லும் வழியில் இப்பகுதியில் தான் தவம் செய்ததாக மக்களால் செவிவழிச் செய்தியாக நம்பப்படுகிறது) 

இத்தோடு நில்லாமல், பாஸ்கா மேடையின் பின்புற பொருட்கள் வைக்கும் அறைக்கும் இவரே நிதியுதவி அளித்தார் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. மேலும் இங்கு அமைந்துள்ள மூன்று கோவில்களுக்கும் முதல் முதலாக மின் இணைப்பு பெறுவதற்கான முன் வைப்புத்தொகையையும் கட்டி, மின் இணைப்பைப் பெற்றுத் தந்தார். மேலும் கிளைப்பங்கில் கோவில் கட்டவும் நிதியுதவி செய்தார்.

தந்தையவர்கள் இறையடி அடைந்த பின், அவரது விருப்பத்திற்கிணங்க, அவரது உடல் வீரமாமுனிவர் பெயர் கொண்ட கல்லறைக்கு அருகில், இவர் மிகவும் நேசித்த மலையடிவாரத்தில் 22-03-2015 அன்று அடக்கம் செய்யப்பட்டது.

தூய தோமையார் திருத்தல வரலாற்றில் அருட்தந்தை T. யூஜின் அவர்கள் பங்குத்தந்தையாக பணியாற்றிய (2003-2007) காலகட்டம், இத்திருத்தலத்தின் பொற்காலம் என்றே கூற வேண்டும். 

தந்தையவர்களின் பணிக்காலத்தின் இறுதி இரண்டு ஆண்டுகளில், திருத்தல சீரமைப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. கோவிலின் முன்புறம் உள்ள அரங்கமானது அதன் இருபுறங்களிலும் விரிவுபடுத்தப்பட்டது. அரங்கம் முழுவதும் தளம் அமைக்கப்பட்டு சிமெண்ட் தளம் அமைக்கப்பட்டது.  மேலும், கோவிலின் எதிர்புறமுள்ள, சிறிய மேடை நீக்கப்பட்டு, அவ்விடத்தில் தற்போதுள்ள அழியாத மரச்சிலுவை ஒரு கண்ணாடிப் பேழைக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இதே இடத்தில் தான், இச்சிலுவை முதன் முதலாக 1662 -இல் மக்கள் மலையடிப்பட்டியில் குடியேறிய போது நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு புதிய மேடையானது, கோவிலின் முன்புறம் மேற்கு நோக்கியவாறு சற்று உயரமாக அமைக்கப்பட்டது. இவ்வாறாக இது ஒரு முழுமை பெற்ற அரங்கமாக உருமாற்றம் செய்யப்பட்டது. 

மக்களின் தாராள நிதி உதவியினால், அரங்கத்தை சுற்றிலும் புதிய சிலுவைப் பாதைகள் நிலைகள் அமைக்கப்பட்டன. கோவிலின் பின்புறம் கோபுர வேலை முழுமை அடைந்தது. கோவிலின் உட்புறம் முழுவதும் டைல்ஸ் பதிக்கப்பட்டது. திருத்தலத்திற்கு தேவையான புனித பொருட்கள், மின்சாதன பொருட்கள், ஒலிபெருக்கி கருவிகள், இசைக்கருவிகள் வாங்கப்பட்டன. கோவிலின் பின்புறம் கீழ்ப்புறமாக உள்ள திறந்தவெளி வாகனங்கள் நிறுத்தும் பகுதியாக சீரமைக்கப்பட்டு சிமெண்ட் தளங்களால் மூடப்பட்டது; அதன் அருகிலேயே கழிவறைகள் அமைக்கப்பட்டன கோவிலுக்கு மின்சார வசதிக்காக ஜெனரேட்டர் ஒன்று பொருத்தப்பட்டது. மலைப்படிக்கட்டுகளுக்கு கைப்பிடிகள் அமைக்கப் பட்டன. மேலும் அதனருகில் ஒரு புதிய ஆழ்துளை கிணறு இடப்பட்டு, அது புனித நீராக மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. 

இவ்வாறாக, திருத்தல மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஜூலைத் திங்கள் 2005 தொடங்கி மே திங்கள் 2006 வரை செய்திட்ட பணிகள் அனைத்தையும் 25-05-2006 அன்று, மேதகு ஆயர் அந்தோணி டிவோட்டா அவர்கள் திருத்தலத்தின் 39ஆம் வார நவநாள் தினத்தன்று திருத்தல பக்தர்களின் ஆன்மீக நலனுக்காக அர்ப்பணம் செய்தார்.

தந்தை அவர்களின் சீரிய முயற்சியினால் தோமையார் நவநாள் பக்தி முயற்சிகள் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் நடைபெற தொடங்கியது. ஒவ்வொரு வியாழக்கிழமையும் 10.30 மணிக்கு நவநாள் திருப்பலியும், அதனைத் தொடர்ந்து நற்கருணை ஆசீர்வாதமும், குணமளிக்கும் வழிபாடும் நடைபெற்றது. மாலையிலும் ஒரு திருப்பலி நிறைவேற்றப் பட்டது. மக்களின் உதவியுடன் தோமையார் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வந்தது. அந்த காலகட்டத்தில் தோமையார் பக்தர்கள் நூற்றுக்கணக்கில் சுற்றுப்புற ஊர்களில் இருந்து வரத்தொடங்கினர். இந்த முயற்சிகள் அனைத்தும் மூன்று ஆண்டுகளாக மிக வேகமாக நடந்தேறியது. தந்தையவர்களின் இப்பணிகள் அனைத்தும், இத்திருத்தலத்தின் பொன்னான நாட்கள் என்று மொழிந்தால் அது மிகையாகாது.

அருட்தந்தை லூயிஸ் பிரிட்டோ (2007-2009) அவர்கள் அரங்கத்தின் கீழாக மேற்குபுறம், சறுக்கு தளத்திற்கு அருகிலுள்ள காலியான பகுதியை (தந்தை யூஜின் அவர்களால் ஆழ்துளைக் கிணறு இடப்பட்ட இடம்) சமன்செய்து, ஒரு திருப்பண்ட அறையை அமைத்து புனித பொருட்கள் விற்கும் அங்காடியாக்கினார். அதற்கு முன்பாக ஒரு தோமையார் சுரூபத்தையும் நிறுவினார். 

திருத்தல மேடையின் இரு புறங்களிலும் தோமையார் சாட்சி சொரூபங்களை அழகான கண்ணாடி மாடங்களில் நிறுவினார். மேலும், மலையின் மேற்குப் புறமாக செல்லும், ஒற்றையடிப் பாதையின் ஒரு பாறையில் மிகச்சிறிய திருக்குடும்ப கெபியானது தொன்றுதொட்டு இருந்து வந்தது. அது சிதிலமடைந்ததால், அப்பாறையின் தொன்றுதொட்ட புனிதத்தை பாதுகாக்கும் நோக்கில், அது விண்ணேற்பு ஆண்டவர் கெபியாக மாற்றப்பட்டது. 

இவ்வாறு தொடர்ச்சியாக மேம்படுத்துப்பட்டு வந்த இத்திருத்தலமானது, ஒரு புனித தலமாக மட்டுமல்லாது, தற்போது ஒரு சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது. கேரளாவிருந்து, வேளாங்கன்னி நோக்கி செல்லும் பக்தர்கள், இத்திருத்தலத்தில் இடைநின்று, ஓய்வெடுத்து, தூய தோமையாரின் ஆசி பெற்று செல்வது சமீபகால வழக்கமாகியிருக்கிறது. குறிப்பாக அவர்கள், இங்கு பாதுகாக்கப்பட்டுள்ள அழியாத மரச்சிலுவையைக் கண்டு வணங்குவதற்காக வருகின்றனர் (கேரளத்தின் குருசு மலையில் உள்ள சிலுவையுடன் இதனை ஒப்பிடுகின்றனர்).

அருட்தந்தை அம்புரோஸ் அடிகளாரின் பணிக்காலத்தின் போது, 01-07-2020 அன்று ஒரு இறை இரக்க ஆண்டவர் சொரூபம், தூய தோமையார் திருத்தலத்தின் முன்புற அரங்கத்தின் மேல் பகுதியில், கிராமத்தை நோக்கி ஆசீர்வதிக்கும் வகையில் நிறுவப்பட்டது; இதன் தொடர்ச்சியாகபுனித வீரமாமுனிவர், புனித அருளானந்தர், புனித சவேரியார் ஆகிய புனிதர்களின் சொரூபங்களும் நிறுவப்பட்டு, 15-08-2020 அன்று அன்னை மரியாளின் விண்ணேற்பு திருநாளன்று ஆசிர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. 

புனித தோமையார் கன்னியர் இல்லமானது இங்கு உள்ளது. 

இந்த இல்லமானது ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளை படிக்க வைத்து பராமரித்து வருவது தனிச் சிறப்பு வாய்ந்தது. 

புனித சவேரியார் ஆண்கள் தொடக்கப்பள்ளி மற்றும் புனித தெரசம்மாள் பெண்கள் தொடக்கப்பள்ளியும் இங்கு உள்ளன. 

முக்கிய நிகழ்வாக ஈஸ்டர் முடிந்த 8 ம் நாளில், அதாவது தோமையார் மலை ஆலயத்தில் உள்ள புனித தோமையார் சுரூபமனாது இரவு 07.00 மணிக்கு, அலங்காரத் தேரில் கீழே வந்து, பாஸ்கா அரங்கத்தில் ஞாயிறு அதிகாலை 01.00 மணிக்கு உயிர்த்த ஆண்டவருடன் சந்திப்பு என்கிற சிறப்பு வாய்ந்த வழிபாட்டு நிகழ்வு நடைபெறுகிறது. இந்த பாஸ்கா விழாவில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பல ஊர்களில் இருந்தும் வருகை தருவார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வதால் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை ஆலய மக்கள் செய்திருப்பார்கள். காவல்துறையினர் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வார்கள்.

மலையும், மரங்களையும் சுற்றிலும் கொண்ட அழகிய கிராமம் மலையடிப்பட்டி. மேலும் தனிச்சிறப்பு வாய்ந்த மூன்று ஆலயங்கள் காணப்படுவதால் ஆலய தரிசனம் செல்பவர்கள் தவறாமல் செல்ல வேண்டிய இடம் மலையடிப்பட்டி. 

வழித்தடம்: மணப்பாறையிலிருந்து திண்டுக்கல் சாலையில், மலைத்தாதம்பட்டி ஊரிலிருந்து இடப்புறமாக இரண்டு கிமீ உள்ளே சென்றால் மலையடிப்பட்டி ஆலயம் உள்ளது.

திருத்தல வரலாறு: மலையடிப்பட்டி மண்ணின் மைந்தர் அருட்பணி. ஜோசப் அற்புதராஜ், OFM Cap