தூய சந்தியாகப்பர் திருத்தலம்
இடம் : திருவைகுண்டம் (ஸ்ரீவைகுண்டம்), 628601
மாவட்டம் : தூத்துக்குடி
மறை மாவட்டம் : தூத்துக்குடி
நிலை : திருத்தலம்
கிளைகள் :
1. தூய மத்தேசியார் ஆலயம், திருக்களூர்
2. தூய அன்னம்மாள் ஆலயம், ஆழ்வார்திருநகரி
3. தூய தோமையார் ஆலயம், மணல்குண்டு
4. தூய சுவாமிநாதர் ஆலயம், சுவாமிநாதபுரம்
5. தூய சவேரியார் ஆலயம், அதலிகுளம்
6. தூய சூசையப்பர் ஆலயம், மலவரயானதம்
பங்குத்தந்தை : அருட்தந்தை மரியவளன்.
குடும்பங்கள் : 170 (கிளைப்பங்குகள் சேர்த்து)
அன்பியங்கள் : 5
ஞாயிறு திருப்பலி : காலை 07.45 மணிக்கு
வார நாட்களில் திருப்பலி : காலை 06.15 மணிக்கு
செவ்வாய், சனிக்கிழமைகளில் திருப்பலி : மாலை 06.15 மணிக்கு
திருவிழா : ஜூலை மாதம் 16 -ஆம் தேதி முதல் 25 -ஆம் தேதி வரையிலான பத்து நாட்கள்.
வழித்தடம் : திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் திருவைகுண்டத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
புனித சந்தியாகப்பர் ஆலய வரலாறு :
பங்குத்தந்தை Fr. மரியவளன் அவர்கள் கூறிய தகவல்கள். வயலோர வரப்புகளில் சாத்திவைக்கப்பட்டுள்ள மரக் கலப்பைகளை கூட துளிர்விட்டு தளிர்க்கச் செய்யும் ஆற்றல் பெற்ற வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றின் கடைசி அணைக்கட்டு ஸ்ரீவைகுண்டத்தில் அமைந்துள்ளது.
அழகிற்கு அழகு சேர்ப்பது போல் ஸ்ரீவைகுண்டத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக குருசுகோவில் என்றழைக்கப்படும் புனித சந்தியாகப்பர் ஆலயம் அமைந்துள்ளது. மும்மதத்தினரும் வாழ்ந்தாலும் மதத்தின் பெயரால் பிரிவினை இன்றி ஒற்றுமையுடன் வாழும் ஸ்ரீவைகுண்டம் பகுதி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் திருவிழா குருசுகோவில் என்றழைக்கப்படும் புனித சந்தியாகப்பர் திருவிழாவாகும். இத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 16ம் தேதி கொடியேற்றப்பட்டு ஜூலை 25 வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
இத்திருவிழாவில் பங்கேற்க கடலோர பகுதி மக்கள் திரளாக வந்து திருவிழா நடைபெறும் 10 தினங்களும் கோவில் வளாகத்திலேயே குடிசைகள் அமைத்து தங்கி புனித சந்தியாகப்பரை வழிப்பட்டு செல்வார்கள். இத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக ஜூலை 25ம் தேதி காலையில் தேர்பவனி நடைபெறுவதையும் அன்றைய தினம் மாலையில் நடைபெறும் நிகழ்வுகளுக்கும் பங்கு மக்கள், கடற்கரைப் பகுதி மக்கள் மட்டும் இன்றி அனைத்து மதத்தினரும் திரளாக கலந்து கொள்வார்கள்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழா இந்த ஆண்டு பவளவிழா ஆண்டாக கொண்டாடப்படுகிறது.
சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர், ஞானத் தந்தை புனித சவேரியாருக்குப் பிறகு தமிழக கடலோரங்களில் பணியாற்ற வந்த இயேசு சபைக்குருக்கள் புன்னைக்காயலைத் தலைமையிடமாக அமைத்து இருந்தனர்.
1600ம் ஆண்டில் ஸ்ரீவைகுண்டத்தில் இயேசு சபைக்குருக்களால் முதல் ஆலயம் எழுப்பப்பட்டது. இந்த ஆலயம் சிலுவை (குருசு) வடிவில் இருந்ததால் குருசு கோவில் என்று அழைக்கப்பட்டது.
பெரும்பாலானவர்கள் உலர் மீன் வியாபாரத்திற்காக கடலோரக் கிராமங்களிலிருந்து குடிபெயர்ந்து வந்த மீனவ மக்கள் என்று 1644ம் ஆண்டு இயேசு சபை அறிக்கையில் அருட்திரு ஆண்ட்ரு லோப்பஸ் அடிகளார் குறிப்பிடுகிறார்.
1814இல் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுவாமி லூயிஸ் துராங்கே திருத்தலத்தின் பொறுப்பேற்று அரும்பணிகள் செய்தார்.1843ல் காலரா நோயினால் பாதிக்கப்பட்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி தன்னுடைய 38 -ஆம் வயதில் மரணமடைந்தார். இவரது கல்லறை இன்றைக்கும் ஆலயத்தில் புனிதமாக போற்றப்படுகிறது.
1938 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் நாள் சனிக்கிழமை ஸ்ரீவைகுண்டம் திருத்தலம் தனிப்பங்காகியது. முதல் பங்குத்தந்தையாக ஞானப்பிரகாசம் சுவாமிகள் நியமிக்கப்பட்டார். அவருக்குப்பின் வந்த சிங்கராயர் சுவாமிகள் 1942ல் புதிய ஆலயத்தை எழுப்பினார். இந்த ஸ்ரீவைகுண்டம் திருத்தலத்தில் 400 ஆண்டுகளுக்கும் மேலாக அருள் பொழிந்து வரும் சந்தியாகப்பர், பலரது வாழ்வில் வசந்தமும் வளர்ச்சியும் அளித்துள்ளார்.
மொழி, இனம்,மதம் கடந்து எல்லாருமே புனித சந்தியாகப்பரைத் தேடி வருவது அவர் தன்னை நாடி வரும் எல்லோருக்குமே இவர் பிரியமானவராக இருந்தாலும் கடலோரங்களில் வாழும் மீனவ மக்கள் சந்தியாகப்பர் மீதும், ஸ்ரீவைகுண்டம் திருத்தலத்தின் மீதும் அளவிட முடியாத பாசம் வைத்திருக்கின்றனர். விழாக்கால பத்து நாட்களும் புனிதர் அருகே தங்கி, தங்களது உயர்தர விசுவாசத்தை புதுப்பித்துக் கொள்கிறார்கள்.