புனித செபமாலை அன்னை ஆலயம்
இடம்: நிறைவாழ்வு நகர், விருதுநகர்
மாவட்டம்: விருதுநகர்
மறைமாவட்டம்: மதுரை உயர் மறைமாவட்டம்
மறைவட்டம்: விருதுநகர்
நிலை: பங்குத்தளம்
கிளைப்பங்குகள்:
1. புனித அந்தோனியார் ஆலயம், சூலக்கரை
2. புனித சவேரியார் ஆலயம், வெள்ளூர்
3. புனித செபஸ்தியார் ஆலயம், மூளிப்பட்டி
4. தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம், பர்மா காலனி
பங்குத்தந்தை: அருட்பணி. ஆ. அந்தோனி சாமி
குடும்பங்கள்: 340 கிளைப்பங்குகள் சேர்த்து
அன்பியங்கள்: 9
திருவழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி காலை 09:00 மணி
திங்கள், செவ்வாய், புதன் திருப்பலி காலை 06:00 மணி
வியாழன், வெள்ளி, சனி திருப்பலி மாலை 07:00 மணி
சனிக்கிழமை மாலை 07:00 மணி சகாய மாதா நவநாள் திருப்பலி
மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மாலை 07:00 மணி நற்கருணை ஆராதனை, திருப்பலி
திருவிழா: அக்டோபர் மாதம் 07ஆம் தேதியை அடுத்து வருகிற சனி, ஞாயிறு நிறைவு பெறும் வகையில் பத்து நாட்கள்.
ஆலய வரலாறு:
மதுரை உயர் மறைமாவட்டம் பெற்றெடுத்த 73-வது பணித்தளமான நிறைவாழ்வு நகர் புனித செபமாலை அன்னை ஆலயமானது, விருதுநகர் மறைவட்டத்தின் தாய்ப்பங்கான புனித இஞ்ஞாசியார் பங்கில் இருந்து பிறந்த புதிய பங்காகும்.
2006 ஆம் ஆண்டு பணியாற்றிய விருதுநகர் மறைவட்ட அதிபரும், பங்குத்தந்தையுமான அருட்பணி. அந்தோணி பாக்கியம் அவர்களின் முயற்சியால், விருதுநகர் பங்கு இறைமக்களின் ஆன்மீக வாழ்வை மேலும் வலுப்படுத்தும் வண்ணமாக 4 ஏக்கர் நிலம் வாங்கி அதில், 2 ஏக்கர் நிலத்தில் புதிய ஆலயம் எழுப்பவும், மீதமுள்ள 2 ஏக்கரில் இறைமக்களுக்கு மனைப்பிரிவுகளாக விற்கப்பட்டு, அதில் கிடைக்கும் வருவாயில் ஆலயம் கட்டுவது என திட்டமிடப்பட்டது.
விருதுநகரில் இருந்து சிவகாசி செல்லும் வழித்தடத்தில் உள்ள, ஆத்துப்பாலம் என்று அழைக்கப்படுகின்ற கௌசிகா நதியின் அருகே அமைதியான சூழலில் கவரப்பட்டு, 2 ஏக்கர் நிலத்தில் அறுங்கோண வடிவத்தில் நவீன கலைநயத்துடன் இந்த ஆலயமானது வடிவமைக்கப் பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 04ஆம் தேதி, மதுரை உயர் மறைமாவட்டத்தின் அப்போதைய பேராயர் மேதகு பீட்டர் பெர்னாண்டோ அவர்களால் ஆலயத்திற்கு அடிக்கல் அர்ச்சித்து நாட்டப்பட்டது.
2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆலய கட்டுமானப் பணிகள் தொடங்கப் பட்டன. 75% பணிகள் நிறைவுற்ற நிலையில், 8 ஆண்டுகள் பலவிதமான இடர்பாடுகள் மத்தியில், ஆலயப் பணிகள் தொய்வுடன் நடைபெற்று, பேராயர் அந்தோணி பாப்புசாமி அவர்களின் முயற்சியால் 2017 ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றது.
01.10.2017 அன்று இந்த ஆலயமானது புனித செபமாலை அன்னையை பாதுகாவலியாகக் கொண்டு மேதகு ஆயர் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு, நிறைவாழ்வு நகர் புனித செபமாலை அன்னை பங்காக பேராயர் அவர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. புதிய பங்காக அறிவிக்கப்பட்ட அந்த நாளிலேயே, பங்கின் முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. தாமஸ். பி. வெனிஸ் அவர்கள் நியமிக்கப்பட்டு, பணிப் பொறுப்பேற்று வழிநடத்தினார்.
1500 கிறிஸ்தவ குடும்பங்களை உள்ளடக்கியிருந்த தாய்ப்பங்கான புனித இஞ்ஞாசியார் ஆலய பங்கில் இருந்து, 250 குடும்பங்கள் இந்த புதிய பங்கான நிறைவாழ்வு நகர் பங்கின் கீழ் கொண்டுவரப்பட்டன. அதன்படி ஆணைக்குழாய் மற்றும் பாலம்மாள் நகர் ஆகியன இப்பங்கின் பகுதிகளாகவும், சூலக்கரை புனித அந்தோனியார் ஆலயம், வெள்ளூர் புனித சவேரியார் ஆலயம், மூளிப்பட்டி புனித செபஸ்தியார் ஆலயம் மற்றும் பர்மா காலனி தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம் ஆகியவை, நிறைவாழ்வு நகரின் கிளைப்பங்குகளாக அறிவிக்கப்பட்டது.
அருட்பணி. தாமஸ் பி. வெனிஸ் அவர்களின் முயற்சியால் ஆலய சுற்றுச்சுவர், புதிய கொடிமரம், திருப்பண்ட அறை, சுகாதார வளாகம் ஆகியவை அமைக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. நன்கொடையாளரின் நிதியுதவியுடன், ஓணான் ஓடையைக் கடந்து இறைமக்கள் ஆலயம் வந்து செல்ல பாலம் கட்டப்பட்டது. நன்கொடையாளரின் நிதியுதவியுடன் 2020 டிசம்பர் மாதத்தில் ஆலய தூயகம் (பீடம்) புதுப்பிக்கப்பட்டது. மேலும் ஆலய வளாகத்தில் சிமெண்ட் கற்கள் பதிக்கப்பட்டு, ஆலயம் புதுப்பொலிவு பெற்றது.
2019 ஆம் ஆண்டு கிளைப்பங்கான சூலக்கரையில் புதிதாக புனித அந்தோனியார் ஆலயம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு, விருதுநகர் மற்றும் நிறைவாழ்வு நகர் பங்கு இறைமக்களின் நிதி பங்களிப்புடன் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 2021 ஆம் ஆண்டு அர்ச்சிக்கப்பட்டது.
தற்போது அருட்பணி. அந்தோனிசாமி அவர்கள் 2022 ஜூன் மாதம் பங்கின் இரண்டாவது பங்குத்தந்தையாக பொறுப்பேற்று, புதிய பங்குப் பேரவை, நிதிக்குழுவை உருவாக்கி பொதுநிலைப் பங்கேற்பை உற்சாகப்படுத்தி, பங்கை தற்சார்பு நிலைமை நோக்கி வழிநடத்திச் செல்கிறார். புனித செபமாலை அன்னையின் பாதுகாவலில், பங்கு மக்கள் இறையருளில் வளர தொடர்ந்து செபிப்போம்.
புதுமைகள்:
திருமணம் வரன் அமைய வேண்டி பலர் இவ்வாலயம் வந்து ஜெபித்து, திருமணம் முடிந்து ஆலயத்தில் வந்து புடவை காணிக்கையாக செலுத்துகின்றனர். குழந்தை வரம் வேண்டியும் பலர் தூய செபமாலை அன்னையிடம் செபித்து, குழந்தை வரம் பெறுகின்றனர்.
பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:
1. மரியாயின் சேனை
2. நற்செய்தி பணியாளர்கள்
3. பாடகற்குழு
4. பீடப்பணியாளர்கள்
5. பங்குப் பேரவை
6. பங்கு நிதிக்குழு
7. மறைக்கல்வி
பங்கில் பணிபுரிந்த பங்குத்தந்தையர்கள்:
1. அருட்பணி. தாமஸ் பி. வெனிஸ் (2017-2022)
2. அருட்பணி. ஆ. அந்தோனி சாமி (2022 ஜூன் முதல்...)
வழித்தடம்: விருதுநகர் -ஆத்துப்பாலம்
Location map: St. Holy Rosary Church
https://maps.app.goo.gl/6GTDg3wpadTmceDa9
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்:
பங்குப்பணியாளர் அருட்பணி. ஆ. அந்தோனி சாமி அவர்கள்.